Sunday, May 09, 2010

ராஜன் புரோட்டா ஸ்டால்



ஊரில் உத்தமராஜன் என்றால் எல்லோருக்கும் தெரியும். காரணம் அவர் கட்சியில் இருந்தார். அரசியல் என்றால் என்னவென்று தெரியுமுன்பே உத்தமராஜனையும் அவரது கட்சிப்பற்றையும் பார்த்து அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொண்டோம் என்றால் அது பொய்யில்லை.

உத்தமராஜன் என் வகுப்புத்தோழன் காந்திராஜனின் தந்தை. பிறக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைக் கையில் பிடித்தபடியே வந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு விசுவாசமான திமுக தொண்டர். வாட்டசாட்டமான உருவம். முறுக்கு மீசை. விரலில் கலைஞர் படம் போட்ட தடிமனான மோதிரம். தேய்த்த வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியில் கறுப்பு சிவப்பு கரை. அவரது ட்ரேட்மார்க் அடையாளம் ஒரு மிதிவண்டி. வண்டியின் ஹெட்லைட்டில் மஞ்சள் கலர் ஸ்கார்ப். இரண்டு ரிவர்வியூ கண்ணாடிகள். சக்கரத்தின் கம்பிகளில் கறுப்பு சிவப்பு மணிகள். சைக்கிளின் பின்புறம் சிவப்பு விளக்கின் மேலே உதயசூரியனின் படம். மிதிவண்டியின் கைபிடியின் இரண்டுபுறமும் ஒலிநாடாவைக் கொத்தாக வெட்டி காற்றடித்தால் சரசரவென சத்தத்துடன் செல்லுமாறு செய்திருந்தார். மிதிவண்டியின் செயின் கார்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று கறுப்பு சிவப்பு மையினால் எழுதப்பட்டிருக்கும்.

நாங்கள் எல்லோரும் ஒரே தெருதான். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தெருவில் விளையாடும் போது தண்ணீர் தவித்து காந்தியின் வீட்டுக்குப் போக நேர்ந்தால் வீட்டின் நடுப்பத்தியில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கலைஞர் படங்கள் ஒரு வித்தியாமான உணர்வை ஏற்படுத்தும். ராஜன் ஒன்றும் கட்சியின் பொறுப்புகள் எதிலும் இருக்கவில்லை. ஆனால் கட்சியின் உண்மையான விசுவாசி என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உத்தமராஜனுக்கு ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கின் எதிரில் ஒரு புரோட்டாக் கடை இருந்தது. சிறிய கடை என்றாலும் சுவையான சால்னாவுடன் புரோட்டா கிடைக்கும் என்பதால் கூட்டம் நிரம்பி வழியும். கடையிலும் எல்லா இடத்திலும் கலைஞர்தான். கடையின் பெயர் கூட கறுப்பு சிவப்பில்தான் எழுதப்பட்டிருக்கும்.

காந்தியிடம் பேசும்போதெல்லாம் "ஏண்டா உங்க அப்பாவுக்கு கருணாநிதின்னா ரொம்ப பிடிக்குமாடா? உங்க வீடு பூராம் கலைஞர் படமா இருக்கு??"ன்னு ஆச்சரியத்துடன் கேட்டோம். "அவருக்கு கலைஞரை மட்டும் யாராவது குறை சொன்னால் கெட்ட கோவம் வரும்டா.. அடிபின்னிருவார்" ன்னான். எங்கள் நண்பர் குழுவில் இருந்த துடுக்கு ரீகன் மட்டும் "டேய் உங்க அப்பா இன்னிக்கு மதியம் வீட்டில் இருக்கிறப்போ நான் 'கலைஞர் ஒழிக'ன்னு உங்க வீட்டு வாசலில் நின்னு கத்துவேன். உங்கப்பா என்ன செய்றார்னு பார்ப்போம்"ன்னு சவால் விட, எங்களுக்கும் ஆவல் அதிகமாகி நடப்பதைப் பார்ப்போம்னு கமுக்கமா இருந்துட்டோம்.

அன்னிக்கு மதியம் ரீகன் காந்தி வீட்டு வாசலில் நின்று "கலைஞர் ஒழிக" அப்படின்னு கத்த, நடுப்பத்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உத்தமராஜன் திடுதிடுவென வாசலுக்கு வந்து ரீகனின் பிடறியில் ஒரு அறைவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத ரீகன் பொறி கலங்கிப் போய் அழுது கொண்டே ஓட்டமெடுத்தான். பொன்னம்மாள் அக்கா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குப் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் குப்பென வேர்க்க ஆரம்பித்தது.

அதன்பின் சிவருடங்களில் உத்தமராஜனின் தம்பிகள் பெரிய ஆட்களாகிவிட அவர்களின் உழைப்பால் ராஜன் புரோட்டா ஸ்டால் ஊருக்குள் மேலும் நான்கு இடங்களில் கிளைகளைத் தொடங்கியது. வருடங்கள் அதிகமாக ஆக ராஜனின் கட்சிப்பற்று கூடிக்கொண்டே போனது. ஊருக்குள் கட்சியின் முக்கியமான நிதி ஆதாரமாக மட்டுமே இருந்த ராஜன், கட்சியில் எந்தப் பதவியும் கேட்டு வாங்கவில்லை. உண்மையான விசுவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்கும் ஒரு ஏணியாகவே இருந்தார்.

வருடங்கள் ஓடின. 2001 தேர்தல் நிதிக்கு கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோல்வி. விரக்தியாலும், தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையினாலும் அதிகமாகக் குடித்து விட்டு வந்து தன் வீட்டின் கூரை மேல் தானே கல்லை விட்டு எறிந்து சத்தம் போட்டு புலம்பிக் கொண்டிருந்தார். காந்தியும் காந்தியின் அம்மாவும் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்த போது சின்னக் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். காந்தியின் தம்பி ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது கூட அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தத் தேர்தல் முடிவினால் அவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.

ராஜனின் தம்பிகளுக்கு இந்த அரசியல் எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அண்ணனை எதிர்த்துப் பேசமுடியாமல் இருந்தனர். இப்போது தேர்தலுக்காக எக்குத்தப்பாகப் பணத்தைச் செலவு செய்ததால் கடுப்பான அவர்கள் "எங்களிடம் கேட்காமல் எப்படி பொதுப்பணத்தில் இருந்து கட்சிக்குக் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டு அவரவர்கள் தனித்தனியே கடைகளைப் பிரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ராஜனின் வணிகம் இப்போது ஒரு கடையுடன் சுருங்கிவிட்டது. மூன்று பெரிய பிள்ளைகள் வேறு. நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது காந்தி பள்ளிப்படிப்புடன் நின்று விட்டு கடையைப் பார்த்துக் கொண்டான்.

நானும் அதன்பின்னர் இளங்கலை, முதுகலை படிப்புகள் முடித்து ஊரையும் காலி பண்ணிப் போய்விட்டதால், நிறையப் பேருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று மாதங்கள் முன்பு துபாயில் இருக்கும் முத்துவிடம் இணைய அரட்டையின் போது எதேச்சையாக காந்தியைப் பற்றி விசாரிக்க "டேய் அவங்க அப்பா இப்பவெல்லாம் முந்தி மாதிரி இல்லடா .. ரொம்ப மாறிட்டார்டா .. ஊருக்குப் போய் ஒருதடவை காந்தியைப் பாருடா.. உன்னை ரொம்ப கேட்டான்" என்று சொன்னதும் எனக்கும் ஊருக்குச் செல்லும் ஆவல் ஒட்டிக் கொண்டது.

பங்குனிப் பொங்கல் விழாவிற்கு ரொம்ப வருடங்கள் கழித்து இந்த வருடம் போன போது காந்தியின் புரோட்டாக் கடைக்குப் போனேன். வெளியில் ராஜனின் ட்ரேட்மார்க் சைக்கிளைக் காணவில்லை. அதற்குப் பதில் ஒரு பழைய சைக்கிள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் செயின் கார்டில் வெள்ளைப் பெயிண்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று எழுதப்பட்டிருந்தது. கடையின் உள்ளே பெரிய பெரிய கலைஞர் படங்கள் எல்லாம் கழட்டப்பட்டு, ராஜன் இளைஞராக இருக்கும் போது கலைஞருடன் எடுத்துக் கொண்ட கறுப்பு வெள்ளைப் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. உள்ளே ராஜன் கல்லாவில் நின்று கொண்டிருந்தார். கரைவேட்டி இல்லை. ஆனால் கலைஞர் படம் போட்ட மோதிரம் போட்டிருந்தார். முறுக்கு மீசையில் ஏகப்பட்ட நரைமுடிகள். பார்த்ததும் "ஏய் வாப்பா வாப்பா என்ன ஆளையே காண்றதில்லை? சொந்த ஊரை மறக்கக் கூடாதுப்பா"ன்னு அறிவுரை கூறினார்.

"அப்படியெல்லாம் இல்லை அப்பா ! வேலை அதிகமாக இருப்பதால் வரமுடிவதில்லை"ன்னு மழுப்பி, "காந்தி எங்கே?" "பலசரக்கு வாங்கப் போயிருக்கான்பா. நீ சாப்பிடு அதுக்குள்ள வந்துருவான்"ன்னு சொல்லி அவரே இலை எல்லாம் எடுத்துப் போட்டு மூன்று புரோட்டாக்களை பிய்த்துப் போட்டு மணக்கும் சால்னாவை அதில் ஊற்றிவிட்டுப் போனார். ஒரு வெட்டு வெட்டிவிட்டு கல்லாவில் நின்று கொண்டிருந்த அவரிடம் "எப்படி அப்பா ! இப்படி மாறிட்டீங்க?" "எதைச் சொல்ற கட்சி வேட்டி கட்டுறதில்லையே அதையா? அட ஆமாம்பா கட்சிப்பாசம், கொள்கையெல்லாம் மனசளவில் மட்டுமே இருக்கு. ஓட்டு மட்டும் என் தலைவனுக்கு மறக்காம போட்டுடுறோம்". "எனக்கு விவரம் தெரிஞ்சதிலயிருந்து கட்சியில் இருக்கீங்களே அப்பா! கண்டிப்பா அதுக்கான பலன் ஒருநாள் கிடைக்கும். கவலைப்படாதீங்கப்பா". "ஹஹாஹா ! அதுவும் இன்னிக்கு நடந்திருச்சுப்பா !" அப்படின்னு சொல்லி அன்றைய முரசொலியை எடுத்துக் காண்பித்தார்.

'பத்து வருடங்களுக்கு மேல் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்காக பொற்கிழி வழங்கப்படும்' என்ற செய்தியுடன் மாவட்டவாரியாக அவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழே உத்தமராஜனின் பெயர் மூன்றாவதாக இருந்தது. நான் அவரைப் பெருமிதத்துடன் பார்த்தேன். அவர் கையில் இருந்த மோதிரத்தில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார்.

Saturday, May 01, 2010

பதிவு போட வச்ச பரபரப்பு செய்திகள்


ரொம்ப நாள் ஆகிட்டே போகுது பதிவு போட்டு.... சரி கிடைச்ச நேரத்துல சின்னதா ஒன்னு ... சமீபத்தில் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.

முதல்ல நித்யானந்தா. எனக்கு எப்ப்வுமே சாமியார்கள் மேல ஒரு கரிசனமோ ஈர்ப்போ இருந்ததே இல்லை. ஏன்னா நான் சின்னப்புள்ளயா (இப்போ மட்டும் வளந்துட்டமாக்கும்..ம்க்கும்..) இருந்தப்போ சங்கராச்சாரியார் என்ற ஜெயேந்திரர் வந்திருந்தார். கோவில்ல ஏதோ பிரசங்கமெல்லாம் பண்ணினார். 'சாமியை யாரும் தொடாதீங்கோ' என்ற அதட்டலுக்கு நடுவில் பக்தர்கள் ஆசிபெற துடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பக்கத்தில் ஏதோ வேன் இருக்கே என்று போய்ப் பார்த்தேன். சகல வசதிகள், ஏசி, படுக்கை, சமயலறை, இரு உதவியாளர்கள் கிட்டத்தட்ட மினி வீடு மாதிரி இருந்தது. சாமியார்னாலே கஷ்டப்படணும் ஓட்டாண்டியா நின்னு மக்களுக்கு அறிவுரை சொல்லணும்கிற பிம்பம் மனசுல பதிஞ்சு போனதால எனக்கு அப்பலருந்தே சாமியார்களைப் பார்த்தால் பிடிக்காமப் போச்சு. சரி அப்ப ஓட்டாண்டியா நிக்கிற சாமியார்களைப் பிடிக்குமான்னா அதுவும் இல்லை. சும்மா சாமி பேர சொல்லிட்டு பிச்சை எடுக்கிறானுக பாரு என்றுதான் தோணும். :‍)

நித்யானந்தா மட்டுமல்ல ... இந்த பணக்கார கார்ப்ரேட் சாமியார்கள் எல்லாருமே அழிக்கப்படவேண்டும். பக்தர்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் கல்கி, தான் போகும் இடமெல்லாம் பணக்காரர்களின் வீடுகளில் பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பணத்தைத் திருடும் அமிர்தானந்தமயி, (பங்காரு, ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ் எல்லாம் பிராடுகளான்னு தெரியல்.. யாராவது சொல்லுங்க) இன்னும் குறிசொல்றேன்னு போட்டி போட்டு ஆளுக்கு ஒரு அம்மனையும், கருப்பசாமியையும், அகத்தியரையும், ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லியும் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்களும் ஒழியவேண்டும்.

மனஅமைதி வேணும்னா கோவிலுக்குப் போ, கண்ட கருமம் பிடிச்ச நாய்கள்ட்டயும் ஏன் காசைக் கொண்டு போய் கொட்டுறீங்க. ரொம்ப பணம் இருந்தா என் அக்கவுன்ட் நம்பர் தாரேன் அதுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுங்க. வெட்டிப்!@#$$க....

சானியா‍‍ சோயப் மாலிக். ஏன் எல்லாரும் இந்தியா பாகிஸ்தான்னு சண்டை போடுறாங்கன்னு தெரியல.. இதே ஒரு பாகிஸ்தான் பொண்ணு இந்தியாவுக்கு கல்யாணமாகி வந்தா பத்திரிக்கைகள் 'மருமகளே வருக!' என எழுதியிருக்கும். அதே நேரம் சானியா சோயப் ஆயிஷா எல்லாமே அவங்க குடும்ப விசயம். அதுக்குப் போயி இந்த வ(ம)ட இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெருசு பண்றாங்கன்னு தெரியல. எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் சண்டையிட்டு விவாகரத்து பெற்று சோயப்பின் முகத்திரையைக் கிழத்த ஆயிஷா பாராட்டுக்குரியவர். வெட்கக்கேடான ஒருவிசயம் சானியா சோயப் விசயம் பீக்ல இருந்தப்போ நக்சல் தாக்குதலில் 53 ராணுவ சகோதர்கள் கொல்லப்பட்டது இந்த மட இந்திய மீடியா நாய்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டதுதான். நாசமாப் போக.

அடுத்து ஐபிஎல் லலித்மோடி. ஐயா செம கில்லாடி. கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு சின்னவிசயத்தையும் பைசாவாக மாற்றியவர். 'தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' பிசிசிஐக்கு 5000 கோடின்னா எனக்கு 500 கோடின்னு நல்லா கமிசன் அடிச்சு ஜமாய்ச்சிருக்கார். இப்போ போயி வருமானவரி சோதனை பண்றாங்களாம். ஒன்னியும் பண்ணமுடியாது. பின்னால ஏகப்பட்ட்ட கைகளுக்குப் பங்கு இருக்கு போல. ஐயா இவனுங்க இப்படி கோடிக்கணக்குல வ்ரி ஏமாத்தியிருக்கானுகளே, 2007ல் எனக்கு நீங்க 4200 ரூபா கூடுதலா செலுத்துன வரியை திரும்பத் தரணுமே எப்பத் தரப்போறீங்க?

தமிழ்நாட்டில் அழகிரி. சானசே இல்லை. திமுக தலைவர் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்னு சொல்லி குட்டையைக் குழப்பிட்டு ஜாலியா வெளிநாடு போயிட்டார். தமிழ்ல தான் நாடாளுமன்றத்துல பேசுவேன்னு அடம்பிடித்து தமிழுக்கு அங்கே இடம்வாங்கிக் கொடுத்தால் புண்ணியமாப் போகும்.

ஸ்டாலின் மேல் எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. இரு நாட்களுக்கு முன் தவறான சிகிச்சையால் கண்பார்வை பாதிக்கப்பட்ட தங்கை சுரேகாவின் சிகிச்சைக்கு முழுச் செலவையும் ஏற்று தான் ஒரு சிறந்த மனிதநேயமிக்க மனிதர் என்று உணர்த்தியிருக்கார். இதுபோல தன் பேர்கூட வெளிய வராம எவ்வளவோ பேர் உதவிகள் செய்றாங்க. அவங்களுக்கும் ஒரு வணக்கம்.

ஐபிஎல்ல சென்னை வென்றது மகிழ்ச்சி. அதிலும் 'வெற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' என்ற ஹைடன் பேச்சு ஹைலைட். தோத்துப் போன‌ மும்பை பசங்க மேட்ச் பிக்சிங்னு புலம்புறதெல்லாம் ஓவர். போனதடவை நாங்க ராஜஸ்தான்கிட்ட தோத்தப்ப இப்படியா புலம்பினோம். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... :)

இன்னும் இருக்கு ... அப்புறமா சொல்றேன்.

ஓட்டப் போட்டுட்டுப் போங்க சாமி ....