Friday, April 25, 2008

அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


நம்ம ஊர்ல ஏகப்பட்ட வகையறா இருக்குதுங்க. ஒவ்வொரு வகையறாக்கும் ஒவ்வொரு குலசாமி. ஒவ்வொரு வகையறாக்கும் ஒரு ஒரு வித்தியாசமான பேரு இருக்கும். அதை வச்சுத்தான் எப்பவாவது பொது இடத்துல வச்சுக் கூப்பிட்டு கிண்டலடிப்பாங்க.

அந்தப் பேரு எல்லாம் ரொம்ப சிரிப்பா இருக்கும். அந்தந்த பரம்பரையில இருந்த முன்னோருங்க பண்ணிய சேட்டையையே பட்டப்பெயராக வைத்து தலைமுறைகள் கடந்தும் அந்தப் பேர் அவர்களின் சந்ததிகளையும் அழைக்கப் பயன்பட்டு வருகிறது.

சரி. சரி. அந்தப் பெயரெல்லாம் என்னன்னு பார்ப்போம்.

  • மத்தியானச்சோறு
  • கட்டுச்சோறுகளவாணி
  • அரைப்பனையேறி
  • குருத்துப்புடுங்கி
  • மட்டைநக்கி
  • ஆவாரங்கட்டை

இப்படி நிறைய இருக்கு. ஞாபகம் வரும்போது சொல்றேன். ஒன்னொண்ணுக்கும் பெயர்க்காரணம் பார்ப்போமா?

மத்தியானச்சோறு
எங்க ஊர்லயே அந்தக் காலத்துல பெரிய பணக்காரங்க. அரிசி சாதம் வைக்கிறதே பெரிய விசயமாம் அப்போ. ஆனா இவுங்க வீட்டுல மட்டும் தினமும் மதியம் அரிசி சாதம் தானாம். அதான் இந்தப் பேரு.

கட்டுச்சோறுகளவாணி
திருவிழாவுக்குப் போயிருந்த இடத்துல கட்டுச்சோத்தைக் களவாண்டு சாப்பிட்டு மாட்டிக்கிட்டாராம் இவுங்க பரம்பரையில ஒரு தாத்தா. பாவம் அவரால அவர் பேரப்புள்ளைங்க மத்தவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க.

அரைப்பனையேறி
நொங்கு திங்கிற ஆசையில விறுவிறுன்னு பனைமரம் ஏறிட்டு பாதி ஏறுனதும் கீழே குனிஞ்சு பார்த்திருக்கார். பயந்தே போயிட்டாரு. மேலேயும் ஏறத் தைரியம் இல்லை. கீழேயும் இறங்க முடியலை. பயந்து போய் ரொம்ப நேரமா பாதிப் பனைமரத்திலேயே இருந்திருக்கார். பாவம். மத்த ஆளுங்க எப்படியெல்லாம் ஓட்டியிருப்பாங்கன்னு நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது.

குருத்துப்புடுங்கி
குட்டிக் குட்டிப் பனை மரங்களில் குருத்தை மட்டும் உருவி எடுக்கிறதில கில்லாடிகளாம். என்ன ஒரு குரங்குச்சேட்டை இது?

மட்டைநக்கி
கள்ளு குடிக்க காசு இல்லாம குடிச்சுப் போட்ட மட்டையை நக்கி நக்கி போதை ஏத்திக்கிட்டாராம் ஒரு பெருசு.

ஆவாரங்கட்டை
சந்தைக்குப் போயிட்டு வர்றப்ப நம்ம ஆளுக்கு வயித்தைக் கலக்கியிருக்கு. ஆள் இல்லாத இடமா ஒதுங்கி அங்க இருந்த ஆவாரஞ்செடியை மடக்கி உட்கார்ந்திருக்கார். எல்லாம் முடிச்சிட்டு எந்திருச்சப்ப மடக்கியிருந்த ஆவாரஞ்செடி தடார்னு நிமிர்ந்து நம்ம ஆளு முதுகு பூரா ஷேம் ஷேம் பண்ணிடுச்சாம். சிங்கம் மாதிரி இருந்த நாம இப்படி அசிங்கமா ஆகிட்டோமேனெல்லாம் பீல் பண்ணாம, எந்திருச்சி நின்னாலும் முதுகுல ஒன்னும் ஒட்டலைன்னு நம்ம ஆளு துடைச்சுப் போட்டுட்டு போகப் பார்க்க சைடு வாக்குல ஒளிஞ்சிருந்த கூட்டாளிங்கலாம் பார்த்து கிண்டலடிச்சி ஊரைக் கூட்டாமலே விசயத்தைச் சொல்லிட்டாங்களாம் ஊருக்குள்ள.

இன்னிக்கும் ஊருக்குள்ளாற ஆவாரங்கட்டைன்னாலே ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான். இந்த வகையறாப் பசங்கள பொது இடத்துல் ஆவாரங்கட்டைன்னு கூப்பிட்டாலே நெளிவானுங்க. இன்னொரு முக்கியமான விசயம் எங்க ஊர்ல வீட்டுல முதன் முதல்ல டாய்லட் கட்டினது இந்த வகையறாதானுங்க.

இதுதாங்க நம்ம ரெண்டு வ.வா.சங்கப் போட்டிக்கு. இந்தப்பதிவுல எங்க ரெண்டு வருதுன்னு யோசிச்சீங்கன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்.


படம் நன்றி : http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.html

Thursday, April 24, 2008

இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க?



யாரா இருந்தாலும் சரி.. வெறிநாய்னா குலைக்கத்தான் செய்யும் !!

அடங்குடாடேய்! யோகா கத்துக்குற மூஞ்சியைப் பாரு !

நன்றி : சாம்

Saturday, April 12, 2008

சென்னையில் கால்வைக்கும் Times of India! வெற்றி பெறுமா?


Times of India ஆங்கில நாளிதழ் இப்போது தமிழகத்தில் கால் பதிக்கும் முயற்சியாக சென்னையில் ஏப்ரல் 14 அன்று தனது பதிப்பைத் துவங்குகிறது. தற்சமயம் பெங்களூரில் முன்னணி ஆங்கில நாளிதழாக இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் தடம் பதிப்பதால் முதலில் கவலை கொள்ளப்போவது தி ஹிந்துவாகத்தான் இருக்கும். ஏற்கனவே இரண்டு வருடங்கள் முன்பு Deccan Chronicle நாளிதழ் ஒரு ரூபாய்க்கு நாளிதழும், 99 ரூபாய்க்கு ஆண்டு சந்தாவும் அறிமுகச்சலுகையாக வழங்கி பெரும்பாலானோரை தன் பக்கம் இழுத்தது. படிக்கிறோமோ இல்லையோ சந்தா கட்டினால் ஒரு வருசம் கழித்து கணிசமான எடைக்கு காகிதம் சேரும் என்ற எண்ணத்துடன் சந்தா கட்டியவர்கள் பலர் என்றால் மிகையில்லை. Deccan Chronicle கொடுத்த அதிர்ச்சியில் தான் ஹிந்து நாளிதழ் தனது எழுத்துக்கள் மற்றும் வடிவத்தை உலகப் புகழ்பெற்ற ஒரு பத்திரிக்கை வடிவமைப்பாளர் கொண்டு மாற்றியமைத்தது.

பெங்களூரில் Times of India வை செய்திகளின் தரத்துக்காக வாங்குபவர்களை விட அதனுடன் வரும் Bangalore Times (சுருக்கமாக BT) என்ற இணைப்புக்காகவே நிறைய இளைஞர்கள் வாங்குவார்கள்(வோம்). முழுக்க முழுக்க திரைப்படத்துறை குறித்த செய்திகள் அதுவும் முழுக்க முழுக்க விருந்து, கேளிக்கை இந்தி திரைப்படச் செய்திகளே இடம்பெறும். கடைசிப்பக்கத்தில் கன்னடம் எப்பவாவது தமிழ்,தெலுங்கு,மலையாளத் திரைப்படச் செய்திகளும் இருக்கும். எனவே ஆங்கிலத்தில் படங்களுடன் தமிழ்த்திரைப்படச் செய்திகள் நிறைந்த Chennai Times இணைப்பு இருக்கும் என்பது உறுதி.

அதே நேரம் செய்திகளை நடுநிலையுடன் வெளியிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் Times of India குழுமத்தின் செய்தித் தொலைக்காட்சியான Times Now ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழக முதல்வர் பேசிய பேச்சின் ஒரு பகுதியினை மட்டும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வெறுப்பேற்றியது. 'எங்கள் எலும்புகளை உடைத்தாலும் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்பதை மட்டும் கன்னடர்களுக்கு வெறியேற்றும் விதமாக போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தது. முக்கியமாக கலைஞர் சொன்ன 'இந்திய இறையாண்மை கர்நாடகத்தால் கேள்விக்குறியாகிறது' என்பதை மறைத்துவிட்டார்கள். ஏன்? குற்ற உணர்ச்சியா? காரணமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது.

தற்போதைய சூழலில் உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஹிந்து நாளிதழ் நடுநிலை மறந்து தொடர்ந்து விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதால் Times of India நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டால் வெற்றிபெறும் என்பது நிச்சயம்.

Saturday, March 22, 2008

துரத்திய மரணம் ! அறியாத சுப்பு !

மரணம் மனிதனுக்கு இயற்கை தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அதை நேர்கொள்ளும் போது மரணிப்பவரைச் சார்ந்தவர்கள் தான் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். குடும்பத்தினர் ஒருபுறம் அவருக்கு வெளியில் பழக்கமானவர்கள் என மனரீதியான பாதிப்பும், நமக்கு எப்போது ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு அலைக்கழிக்கின்றன.

டிசம்பர் மாதம் பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் போது ஓசூர் தாண்டியதும் ஒரு விபத்து. 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையின் நடுவில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எதோ கனரக வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருந்தார். நான் சென்ற பேருந்து சம்பவ இடத்தைக் கடந்து சென்ற போது சம்பவம் நிகழ்ந்து 10 நிமிடங்களுக்குள் தான் இருக்கும். அன்றைய பயணம் முழுவதும் அதே நினைப்பிலேயே முடிந்தது. இந்த நினைப்பிலிருந்து விடுபடவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. அதன் பின்னர் செய்திகளில் விபத்து, மரணம் குறித்தவைகளைப் பார்க்கும் போது மனம் மிகவும் வருத்தப்பட்டது. முன்பெல்லாம் விபத்து, மரணச் செய்திகளைப் படிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட ஒரு மரணத்தை நேரில் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகவே இருந்தது.

அதன் பின்னர் சிலநாட்கள் கழித்து ஊரில் இருந்து பெங்களூர் திரும்பி வரும்போது எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணத்தையும் காண நேர்ந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்திருந்தார். தலையில் மட்டுமே அடி. தலைக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் முழுவதுமாக தலையை மறைக்காமல்,தொப்பி போல இருக்கும் தலைக்கவசம். ஒருவேளை தலைமுழுவதும் மறைக்கும் கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிர் தப்பியிருப்பாராயிருக்கும். 2,3 நொடிகளுக்கு மேல் அந்த இடத்தைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இந்த சம்பவத்தின் பாதிப்பும் சில நாட்கள் இருந்தது.


மேலே படத்தில் இருக்கும் பையனின் பெயர் சுப்பிரமணியன். ஊர் திருவண்ணாமலை. சென்னையில் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஃப்ரஷராக வேலைக்கு சேர்ந்தவன். வயது 23. நாங்கள் எல்லோரும் சுப்பு என்று அழைப்போம். நான் பெங்களூரில் வேலை கிடைத்ததும் அந்த அலுவலகத்தில் வேலையை விட்ட போது, என் பணிகள் அனைத்தையும் இவனிடம்தான் ஒப்படைத்துவிட்டு வந்தேன். மிகவும் அமைதியான பையன். அழகான சிரிப்பு. அதிர்ந்துகூட பேசமாட்டான். நான் செய்த எல்லா ப்ராஜக்ட்களையும் விளக்கிய போது கவனமாகவும், பொறுப்பாகவும் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டான். அதன்பின் குழுமடல்கள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்தோம்.

சுப்பு இப்போது உயிருடன் இல்லை. :(

அந்த அலுவலகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்த பின் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் இருக்கும் விப்ரோவில் (பழைய MPower) கடந்த டிசம்பரில் வேலைக்குச் சேர்ந்தான். போனமாதம் அலுவகத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இரத்த வாந்தி எடுத்திருக்கிறான். உடனே நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்திருந்திருக்கிறார்கள். எல்லா பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவர்கள் சொன்னது அவனுக்கு ப்ரைன் ட்யூமர் இறுதி நிலை. மறுநாள் சாயங்காலம் சுப்பு உலகை விட்டுச் சென்றுவிட்டான்.

சுப்புவின் மரணம் நண்பர்கள் மூலம் தெரியவந்தபோது ஏற்பட்ட மனச்சங்கடங்களுக்கு அளவே இல்லை. இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலையே பார்க்க முடியவில்லை. பழைய நினைவுகளே ஆட்கொண்டன. 23 வயதில் மரணமா? ஏன் இப்படி? என்ன என்ன கனவுகள் கண்டிருப்பான்? தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? சுப்புவின் மரணம் அவனை நம்பியிருந்த குடும்பத்துக்கு பேரிடி தான்.

ப்ரைன் ட்யூமர் முதல்நிலையிலேயே கண்டுபிடித்திருந்தால் சரிசெய்திருக்க முடியும் என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். அதன் அறிகுறி கடுமையான தலைவலி இருக்குமாம். சுப்புவுக்கும் அப்படி இருந்து அறியாமையால் கவனிக்காமல் இருந்துவிட்டானோ?

எல்லோரும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். மரணம் எல்லோரையும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
சிலரை ரொம்ப தூரத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. அது எப்பவும் சீரான வேகத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வேகம் குறையும் போது நம்மைப் பற்றிக் கொள்கிறது.
சிலரை ரொம்ப அருகில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம்.
சிலரை மரணம் எதிர்நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. இதை ஒன்றும் செய்ய முடியாது. விதி என்று கூட சொல்லிவிடலாம்.

ஆனால் தவிர்க்கக் கூடிய மரணங்களை ஏன் நம் உடல் நலத்தில் அக்கறை கொள்வதன் மூலம் தவிர்க்கக் கூடாது? நம் மரணத்தால் நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்வோம். எனவே உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் நண்பர்களே !!

Thursday, March 13, 2008

மழலையர் பாடல்கள் - அரும்புகளுக்காக



சிட்டு

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு !!


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>




சேர்ந்து செய்வோம் !

துண்டு தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன் !

துண்டு துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள் !

வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர் !
சின்னப்பையன் கண்டனர்
சேர்த்துப் பூக்கள் செய்தனர் !

சிறிய பொருளும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


மரம் வளர்ப்போம்

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறதே !
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறதே !

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வாபோல பழம் தருது !
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது !

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


நன்றி : சங்கீதா அக்கா

Wednesday, March 12, 2008

மிட்வீக் ஜொள்ளு

வீக்கென்டில் மங்களூரிலிருந்து சில ஜொள்ளுப்பார்ட்டிகள் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் ஜொள்ளுப்பார்ட்ட்டிகளுக்காக பதிவு போட்டு நம் கவனத்தை வேறெங்கும் சிதறவிடாமல் செய்வதால் இந்த மிட்வீக் ஜொள்ளு.

அஞ்சாதே படத்தின் 'கத்தாழைக் கண்ணாலே குத்தாதே நீ என்னை' குத்துப்பாட்டு.
சித்திரம் பேசுதடியின் வாள மீன் பாட்டைப் போலவே டான்ஸ், கானா உலகநாதனுக்குப் பதில் பாண்டியராஜன், அதே போல இருட்டில் மூன்று பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஜிப் போன மணிபர்ஸ் மாதிரி இந்த அம்மணி வாயை மூடாமல் குத்தாட்டம் போடுவதை என்ஜாய் பண்ணுவோமா?

Saturday, March 01, 2008

எழுத்தாளர் சுஜாதா - சில நினைவுகள்


சுஜாதா என்ற தமிழ் எழுத்துலகின் நட்சத்திரம் ஒன்று தன் ஒளியை நிறுத்திக் கொண்டுவிட்டது. வருத்தங்களும், சோகங்களும் நிரம்பிய முகங்களை தமிழ் வாசகர் வட்டத்தில் பார்க்கிறோம். இப்படிப்பட்ட மாமனிதரை நேரில் காணும் வாய்ப்பு ஒருமுறை சென்னையில் நான் பணிபுரியும் போது ஏற்பட்டது.

இரு வருடங்களுக்கு முன்பு சென்னையில் என் உடன் பணிபுரியும் நண்பனின் அண்ணனுக்குத் திருமணம். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் பாம்குரோவ் ஹோட்டலின் பின்புறம் உள்ள மண்டபத்தில்தான் திருமணம். அலுவலக நட்பு வட்டம் எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் போனது இரவு 7மணிக்கு மேல். எனவே உள்ளே போய் மணமக்களை வாழ்த்தி விட்டு சாப்பிடப் போகும் போது உடன் வந்திருந்த கேரளத்து டிம்சன் "கல்யாணத்துக்கு சுஜாதால்லாம் வந்திருக்கு"ன்னான். எங்க கிளையன்ட் ஒருத்தங்க பேரும் சுஜாதாதான். நாங்க பண்ற ப்ராஜட்க்கு யுஏடி எல்லாம் அவங்கதான் பண்ணுவாங்க. அதனால் நாங்க அவுங்கதான் வந்திருக்காங்க போல பொண்ணுக்கு சொந்தமா இருக்கும்னு நினைச்சிக்கிட்டோம்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்தால் மண்டபத்துக்கு வெளியே சேர் போட்டு எழுத்தாளர் சுஜாதா யார் கூடவோ பேசிக் கொண்டிருந்தார். நான் தான் முதலில் கவனித்தேன். "டேய் சுஜாதாடா"ன்னு சொல்ல நண்பர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். டிம்சன் "நான் தான் அப்பமே சொன்னனில்லை?"ன்னான். டக் இன் செய்த தொள தொள சட்டையுடன் எளிமையான தோற்றத்தில் உட்கார்ந்து ஒருவருடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். நாங்களும் அந்த இடத்தை விட்டுப் போக மனமில்லாமல் நாங்களும் அவருக்கு சற்று தள்ளி நாற்காலிகளில் அமர்ந்தோம்.

எனக்கு அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டுமென்று மிகுந்த ஆவல். ஆனால் கையில் பேப்பரோ, பேனாவோ இல்லை. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அல்லவா? ரொம்பவே வருத்தமாகப் போய்விட்டது. அவரும் எங்களை அடிக்கடி கூர்ந்து கவனித்தார். நான் "அவரிடம் எதாவது பேசுவோம்" என்று சொன்னேன். எல்லோருக்கும் கூச்சம். என்ன பேசுவது என்று. யாரும் வரவில்லை. வேறுவழியின்றி நானும் விட்டுவிட்டேன். ஒருமணிநேரத்துக்கு மேல் அங்கே இருந்தோம். நாங்கள் கிளம்பிய போது மணி 9:30. நாங்கள் கிளம்பும் வரை சுஜாதா கிளம்பவில்லை. இப்பொழுது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது.

போனவாரம் மதுரையிலிருந்து கிளம்பும் போது கொஞ்சம் நேரம் இருந்ததால் ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கும் சர்வோதய இலக்கியப் பண்ணைக்குச் சென்று சுஜாதா புத்தகங்களைத் தேடினேன். ஸ்ரீரங்கத்துக் கதைகளில் இரண்டு பக்கம் படித்து விட்டு "தள்ளுபடி ஏதும் இருக்கா?"ன்னு கேட்க அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று சொன்னார்கள். எனவே நண்பனிடம் சொல்லி செல்வியில் தள்ளுபடியுடன் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டே வந்துவிட்டேன்.

பின்னர் பொழுது போக்க கல்கி வாங்கிவிட்டு ரயிலில் வரும் போது படித்துக் கொண்டே வந்தேன். அதில் 'வாரம் ஒரு பாசுரம்' என்ற தொடரில் சுஜாதா எழுதிவருகிறார். அதைப் படிக்கும் போது சுஜாதா உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தேசிகனின் பதிவு நினைவுக்கு வந்தது. இந்த நிலையிலும் தவறாமல் எழுதி வருகிறாரே என்று நினைத்துக் கொண்டேன். அவரது கடைசிப் படைப்பைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோணவில்லை.

சுஜாதாவின் படைப்புகளில் 'கரையெல்லாம் செண்பகப்பூ', 'கற்றதும் பெற்றதும்', 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மட்டுமே படித்திருக்கிறேன். இருந்தாலும் அவர் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. இன்னமும் நிறையப் படிக்க வேண்டும் என்று ஆவல். என் அண்ணன் அவர் குமுதத்தில் எழுதிய அறிவியல் தொடரின் பக்கங்களையெல்லாம் சேகரித்து வைத்த ஞாபகம் இருக்கிறது. அவரின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டால் எல்லாத் தரப்பு மக்களையும் எளிதில் சென்று அடையும். சாத்தியமா என்று தெரியவில்லை.

அமரர் கல்கியைப் போல் அமரர் சுஜாதாவுக்கும் தமிழ்மக்களின் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் உண்டு. அந்த தமிழ்த்தாயின் அருந்தவப்புதல்வனின் ஆன்மா திருவரங்கனின் உள்ளத்துள் ஐக்கியமாக எல்லோரும் வேண்டுவோமாக!