Thursday, January 27, 2011

வாக்களித்தபின் உறுதிச்சீட்டு - தேவையில்லாத முறை


இந்தியத் தேர்தல் ஆணையம் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய முறையைக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறது.

நம் வாக்கு யாருக்கு இயந்திரத்தில் பதிவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் வாக்களித்தபின் ஒரு சீட்டினில் அச்சிட்டு வெளியிடும் முறையை ஆய்வு செய்து வருவதாகச் சொல்லியிருக்கிறது.

ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யமுடியும் என்ற பிரச்சினை உள்ள நிலையில் நம் வாக்கு யாருக்குப் பதிவாகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால் அது நல்லதுதான்.

ஆனால் இதில் இன்னொரு முக்கியமான மறுபக்கமும் உள்ளது. இப்பொழுது எல்லாம் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பதற்கு கிராமங்களில் ஒரு வாக்கிற்கு ஆயிரக்கணக்கில் பணம் தரப்படுகிறது.

எனவே காசு கொடுத்த கட்சியினர் வாக்களித்தபின் இந்தச் சீட்டை வாங்கிப் பார்த்து தங்கள் கட்சிக்குத் தான் வாக்களித்திருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். காசு வாங்கிவிட்டு மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் 'டின்' கட்டிவிடுவார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும்.

வாக்காளர்களும் பலகட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு 'உங்களுக்குத் தான் போட்டேன்.. உங்களுக்குத் தான் போட்டேன்..' என்று ஏமாற்றவும் முடியாது :).

எனவே முதலில் எந்தக் கட்சி காசு தருகிறதோ - குறைவாக இருந்தாலும் - வாங்கிவிட்டால் அவர்களுக்கு ஓட்டு போட்டே ஆகவேண்டிய நிலை உருவாகும். 'ஏன் மாமு அவசரப்பட்ட ... ரெண்டு நாள் பொருத்திருந்தா இந்தக் கட்சி இரண்டு மடங்கு காசு கொடுத்திருப்பான்ல..' என்று அதிகம் காசு வாங்கியவர்கள் வெறுப்பேற்றுவார்கள். :)

குடும்பத்தில் கணவர் அரசு ஊழியர். திமுக ஆதரவாளராக இருப்பார். அவர் மனைவி எம்ஜிஆர் விசுவாசியாக அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டிருந்தாலும், கணவரிடம் 'கலர் டிவி தந்த கருணாநிதிக்குத் தான் போட்டேன்' என்று புருடா விட்டிருப்பார். கணவரின் கைக்கு இந்தச் சீட்டு கிடைத்தால் வீட்டிற்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் நடக்கும்.

நம் அளிக்கும் வாக்கு நமக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ரகசியமான ஒன்று. அதை அடுத்தவரும் பார்க்கும் வகையில் அச்சிட்டுத் தரத் தேவையில்லை. காசு வாங்கிய யாரும் தங்களை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகும் என்பதால் தான் அரசியல் கட்சிகள் எதுவும் இந்த முறையை எதிர்க்கவில்லை. மின்னணு வாக்குமுறையையே எதிர்த்தவர்கள் இப்போது மட்டும் வாய் மூடி இருப்பது ஏன்?

எனவே தேர்தல் ஆணையம் வேறு முறையை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

No comments: