நேற்று தற்செயலாக சன் செய்திகள் தொலைக்காட்சியைப் பார்த்தபோது இரவு 9:30 மணிக்கு நிஜம் தொடரில் தமிழ்ப்பதிவர்கள் குறித்து நிகழ்ச்சி இருப்பதாகக் காட்டினார்கள். தவறாமல் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே மா.சிவக்குமார் பேசினார். மேலும் பங்கு பெற்றவர்கள் 'எண்ணங்கள்' பத்ரி, லக்கிலுக், பொன்ஸ், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சீனிவாசன். வலைப்பதிவுகள் சக்திமிக்க ஊடகமாக உருவாகி இருப்பதுதான் கரு.
* உலகில் தமிழில் தான் முதலில் வலைப்பதிவு திரட்டி உருவாக்கப்பட்டது என்று மா.சி கூறியது எனக்குப் புதிய தகவல்.
* எஸ்.ராமகிருஷ்ணன் பேசும் போது தின்மும் ஒரு மணி நேரம் வலைப்பதிவுகள் படிப்பதாகக் கூறினார். மேலும் பதிவுலகில் இருக்கும் பிரச்சினைகளான ஒருவரே வேறு சில ஐடிகளில் பின்னூட்டம் போடுவது போன்றவற்றைக் சுட்டுக் காட்டவும் தவறவில்லை.
* சீனிவாசன் 90% பதிவுகள் நல்ல பதிவுகளே எனவே புதியவர்கள் தயங்காமல் வரலாம் என்றும் சொன்னார்.
* லக்கிலுக் பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் மூலம் கோவையில் ஒருவர் மாதம் 6000 சம்பாதிப்பதாகக் கூறினார். யாருங்க அது? :)
* பொன்ஸ் இது மிகவும் சக்தி மிக்க ஊடகம் என்று சிம்பிளாக சொன்னதோடு முடித்துக் கொண்டார். ஏங்க? :)
பேட்டிகளின் இடையில் தமிழ்மணம், பொன்ஸின் பூக்கிரி.காம், பாலபாரதியின் விடுபட்டவை, தமிழில் பங்குவணிகம், மா.சியின் வலைப்பதிவு ஆகியவை காட்டப்பட்டன.
சக பதிவர்கள் இப்படிப் பலராலும் கவனிக்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. யாராவது நிகழ்ச்சியைப் பதிவு பண்ணியிருந்தீங்கன்னா தரவேற்றி விட்டு சுட்டி கொடுங்கப்பா. பார்க்காதவர்கள் பார்க்கட்டும்.
சந்தேகம் :
* பேட்டி எடுத்தவர்கள் மா.சியின் சன் டிவியின் ஏகபோகம் தொடரைப் படிக்கவில்லை என்று தெரிகிறது. :)))))