Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Sunday, December 09, 2007

கவர்ந்திழுத்த கல்கியின் படைப்புகள்



நூலகத்தில் வார, மாத இதழ்கள் போரடிக்க ஆரம்பித்த போது கொஞ்சமாக பிற பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்கள் பக்கம் பார்க்கத் தொடங்கினேன். அப்பொழுது சின்ன சின்னக் கதைகள் அடங்கிய புத்தகங்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அனைத்தும் சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் தான். பின்னர் பஞ்ச தந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள் என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன் :).

ஒருமுறை அப்படிப் புத்தகங்களைத் தேடியபோது மாட்டியது தான் 'அப்புசாமி படம் எடுக்கிறார்'. ஏற்கனவே பாக்கியம் ராமசாமியின் சில கதைகளை வார இதழ்களில் படித்திருந்ததால் இந்தப் புதினத்தை ஆவலுடன் படித்தேன். ஒரே சிரிப்புதான் வீட்டில் நாவலைப் படிக்கும் போது. அப்புசாமி, சீதாப்பாட்டி, ரசகுண்டு அடிக்கும் லூட்டி யப்பப்பா. சரியான நகைச்சுவை நாவல். பின் 'மதன் ஜோக்ஸ்' பாகம்1 & 2 ஆகியவையும் படித்தேன். எல்லாம் தரமான நகைச்சுவை. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? என்று எண்ண வைத்தவை. முன்ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத்திருடன் சிங்காரவேலு அப்புறம் ஒரு சின்னப்பையன் லூட்டி அடிப்பது (பெயர் மறந்து போச்சு).

இப்படி சின்னப்புள்ளைத்தனமாகவே இருந்த என்னையும் மாற்றியது கல்கியின் எழுத்துக்கள் தான். கல்லூரியில் இளங்கலை படிக்கும் போது விடுமுறைக்கு என் சித்தி வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே என் சித்தப்பா கல்கியின் 'பொன்னியின் செல்வன்' 6 பாகங்களையும் வர்த்தமானன் பதிப்பகத்தில் இருந்து வாங்கியிருந்தார். பொன்னியின் செல்வன் அருமையான புதினம் என்று பள்ளியில் பாடங்களில் படித்தது. "எதுக்கு சித்தப்பா பொன்னியின் செல்வன் வாங்கியிருக்கீங்க?". "நான் சின்னவனா இருக்கும் போது இதெல்லாம் கிடைக்காதுடா. நூலகத்தில் தான் இருக்கும். அதுவும் ஒரு பாகம் இருந்தால் இன்னொன்னு இருக்காது. அப்படியே கிடைத்தாலும் ஒரு வாரத்தில் திரும்பக் கொடுக்கணும். ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா படிக்கக் கிடைக்காது. ரொம்ப நல்லா இருக்கும். அதுனாலதான் இப்போ வாங்கியிருக்கேன்"ன்னு என்னிடத்தில் ஆசையைத் தூண்டிவிட்டுட்டார்.

முதலில் என்னப்பா இது சுத்தமான தமிழில் இருக்குன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு ரெண்டு பக்கம் படிச்சா சும்மா பிச்சுக்கிட்டு போகுது கதை. வந்தியத்தேவன் வீராணம் ஏரிக்கரையில் குதிரையில் வருவது தொடங்கி ஆழ்வார்க்கடியான், அருள்மொழிவர்மர்(இராஜராஜ சோழர்), குந்தவை, வானதி, பழுவேட்டரையர்கள், நந்தினி, கந்தமாறன், சேந்தன் அமுதன், பூங்குழலி, ஆதித்த கரிகாலன் என்று அனைவரையும் நேரில் பார்த்து, அவர்கள் செய்வதையெல்லாம் நேரில் பார்ப்பது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணியது பொன்னியின் செல்வன். விடாமல் 18 நாட்கள் தொடர்ந்து படித்து நாவலை முடித்தேன். அதற்கப்புறம்? திரும்பவும் இன்னொரு முறை படிக்கத் தொடங்கினேன் :). இன்றளவும் என் மனதில் மட்டுமல்ல தமிழர்களின் மனதில் முதலிடம் எப்போதும் பொன்னியின் செல்வனுக்குத்தான். கல்கி என்ற இப்படிப்பட்ட மாமனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என்பது தமிழர்க்கு எவ்வளவு பெருமை.

அடுத்துக் கொஞ்சநாள் எதுவும் படிக்க முடியாமலே இருந்தது. பின் வேலை தேடி சென்னைக்கு வந்தபோது என் அண்ணனின் அறையில் என் அண்ணனின் நண்பர் 'பார்த்திபன் கனவு'ம், 'சிவகாமியின் சபதமு'ம் வாங்கிவைத்திருந்தார். ஆனால் நான் படித்தால் என் அண்ணனுக்குக் கோபம் வரும். "ஒழுங்கா வேலை தேடுறதுக்குப் படி" என்பான். எனவே என் அண்ணன் வேலைக்குப் போன பிறகு பார்த்திபன் கனவு எடுத்துப் படிப்பேன். பின்னர் எனக்கும் வேலை கிடைத்த பிறகு தைரியமாக சிவகாமியின் சபதமும் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். சிறந்த நாவல். ஆனால் பொன்னியின் செல்வன் அளவுக்கு இல்லையோ? என்று எண்ணுவேன். ஒருவேளை சிவகாமியின் சபதத்தை முதலில் படித்திருந்தால் பொன்னியின் செல்வன் சரியில்லையோ? என்று சொல்லியிருக்கக்கூடும் :). அதெல்லாம் சும்மா இதுவும் நல்ல புதினம்தான் என்று கொஞ்சநாள் ஆகவும் புரியத்தொடங்கியது. 'அலை ஓசை' சரித்திர நாவலோ என எண்ணி படிக்க ஆவலுடன் புரட்டிய எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமே. ஆனாலும் முழுவதையும் விரும்பிப் படித்தேன்.

பின்னர் சாண்டில்யனின் 'யவனராணி'யும், 'மன்னன் மகளு'ம் படிக்கக் கிடைத்தன. நல்ல விறுவிறுப்பான நாவல்கள் தான். ஆனால் வர்ணனைகள்? அப்பப்பா அவ்வளவு 'A'. கல்கியின் நாவல்களில் கொஞ்சம் கூட இந்த மாதிரி வர்ணனைகள் இல்லை. அவ்வளவு நல்ல எழுத்தாளர் அவர். இந்த வகையிலும் கல்கியின் மதிப்பு நம்மிடையே உயர்ந்து விடுகிறது.

இப்போது கல்கியின் நாவல்களை PDFல் படிக்கிறேன். காலத்தின் கோலம்? 'கள்வனின் காதலி', 'தியாக பூமி', 'சோலைமலை இளவரசி', 'பொய்மான் கரடு', 'மோகினித்தீவு' மற்றும் சிறுகதைகள் என அனைத்தையும் கணினியில்தான் படித்தேன்.

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் குறைந்தது ஐந்து, ஆறு புத்தகங்களாவது வாங்கிவிட வேண்டும் என எண்ணியிருக்கிறேன். சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதை'களில் மனதைப் பறிகொடுத்த நான், இந்த முறை முன்னொரு காலத்தில் தூர்தர்ஷனில் பார்த்த 'என் இனிய இயந்திரா'வும் வாங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

அனைத்து கல்கியின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளுக்கு இங்கே கிளிக்கவும்.

Friday, December 07, 2007

முகமூடி வீரர் மாயாவி


பள்ளியில் படிக்கும் போதே எனக்கு புத்தகங்கள் படிப்பதில் ரொம்பவே ஆர்வம் இருந்தது. (பாடப் புத்தகங்கள் அல்ல :) ). என் அண்ணன் மட்டும் நூலகத்திற்குச் சென்று வந்து "இன்னிக்கு நான் 'ஜலதீபம்' படித்தேனே. இருபது பக்கம்" என்று சொல்லும் போது தான் எனக்கும் அந்த ஆர்வம் தொற்றியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

என் அண்ணனுக்கும் எனக்கும் அப்பவே பங்காளிச் சண்டை. நான் அவனுடன் சேர்ந்து நூலகத்துக்குப் போறதெல்லாம் நடக்காத காரியம். நான் நூலகத்திற்குத் தனியாகச் சென்றால் நூலகர் அனுமதிக்கவில்லை. நான் சின்னப்பையன் புத்தகங்களைக் கிழித்து விடுவேன் என்று நூலகர் எண்ணியிருப்பார் போல. நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவர் இல்லாத நேரத்தில் விகடனை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தபோது "டேய் புத்தகத்தை வைடா" என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தால் நூலகர் நிற்கிறார். "அண்ணே!" என்றேன் பயத்துடன். "வைச்சுட்டுப் போடா!" என்று விரட்டியபோது கண்களில் நீர் முட்டியது.

பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் நூலகத்துக்குள்ளேயே நுழைய முடிந்தது. நூலகத்தில் அமர்ந்து சோறு, தண்ணியில்லாமல் வார இதழ்களைப் படித்துக் கொண்டிருப்பேன். பாக்யாவில் கேள்வி-பதில் பகுதியில் பாக்யராஜ் சொல்லியிருக்கும் குட்டிக்கதைகளை விரும்பிப் படிப்பேன். அப்புறம் ராணி காமிக்ஸ். இதில் வரும் முகமூடி வீரர் மாயாவி கதையும், ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் கதையும் மிகவும் பிடிக்கும்.

முகமூடி வீரர் மாயாவி ஆப்பிரிக்காவில் காட்டுக்குள் இருந்து கொண்டு அங்குள்ள விலங்குகளையும், மலைவாழ்மக்ககளையும் காப்பாற்றுவார். அவரது இருப்பிடம் மண்டை ஓட்டுக் குகை. அவருக்குத் துணை ஒரு ஓநாய். அதன் பெயர் மறந்துவிட்டது. காட்டுக்குள்ளே இருந்தாலும் நாட்டில் நடக்கும் எல்லா விசயங்களும் அவருக்குத் தெரியும். மண்டை ஓட்டுக் குகைக்குள் ஒரு பெரிய நூலகம், அவரது முன்னோர்களது கல்லறைகள் எல்லாம் இருக்கும். கொள்ளைக்காரர்களுக்கும் விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் அவர் சிம்ம சொப்பனம். அவர் கையில் ஒரு மண்டை ஓடு பொறித்த மோதிரம் அணிந்திருப்பார். அவர் சண்டை போடும் போது எதிராளியின் முகத்தில் அதை வைத்து ஒரு குத்து விடுவார். அவ்வளவுதான் அந்த மண்டைஓட்டுக் குறி அவன் முகத்தில் பதிந்து விடும். அதை யாராலும் அழிக்க முடியாது. எதிராளி தப்பித்தாலும் மண்டை ஓட்டுக் குறியைக் கொண்டு பின்னர் எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் மக்கள். மாயாவிக்கு ஒரு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உண்டு. ஒவ்வொரு மாயாவியும் இறக்கும் போதும் தனது பொறுப்பைத் தனது மகனிடம் விட்டுச் செல்வது வழக்கம். இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக மாயாவியின் தோற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாயாவியின் அதிரடியிலும், தீமையை எதிர்க்கும் சாகசத்தாலும் நான் அவருக்கு ரசிகனானேன்.

ஜேம்ஸ்பாண்ட் கதைகள் அப்படியே இப்போது வரும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போலத்தான். கொஞ்சம் சாகசம், குடி, கும்மாளம் என்று. கடைசியில் "007 உங்களாலதான் இதையெல்லாம் செய்யமுடியும்" என்ற வசனத்தோடு கதை முடியும்.

பின்னர் கொஞ்ச நாளில் ராணி காமிக்ஸ் பதிப்பு நிறுத்தப்பட்டது. பின் எங்கள் நூலகத்தில் லயன், முத்து காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தனர். மாயாவியை என் தலைவனாக நினைத்ததாலோ என்னவோ அந்த காமிக்ஸ் புத்தகங்களில் என் மனம் நிலைக்கவில்லை.

அப்புறம் எனக்கு அந்தக் காலகட்டத்தில் (1993-95) ஜூனியர் விகடன் மூலமாகத்தான் அரசியல் அறிமுகம் ஆனது. ஜெயலலிதாவும், அமைச்சர்களும் பண்ணும் அட்டகாசங்கள், வெளிப்படையான ஊழல்களை ஜூவியில் படிக்கும் போது ஒரு வெறியைக் கிளப்பியது. திமுக-தமாகாவை வெளிப்படையாகவே ஆதரித்து வீட்டில் பேசிய போது "இந்த வயசிலேயே என்ன அரசியல்?" என்று திட்டு விழுந்தது. இப்போ அந்த இதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைன்னு தெரிஞ்சு போச்சு. :)

இப்படி சின்னப்புள்ளையாத் திரிஞ்ச என்னைப் புதினங்கள் படிக்கத் தூண்டியவர் கல்கி. சரி போதும். இன்னொரு பதிவாப் போட்டுடலாமா?