
இன்றைக்கு நம்மில் பெரும்பாலோனோர் வீட்டில் குறைந்தது ஒரு சீனப்பொருளாவது இருக்கும் நிலைமை இருக்கிறது. காரணம் அதன் குறைந்த விலை. குறிப்பாக அலைபேசிகளின் உபயோகத்தால் சீனத் தயாரிப்புகள் அனைவரையும் மிக எளிதில் சென்று அடைந்து விடுகின்றன. அமெரிக்கா கூட இந்த மலிவுவிலை சீனப்பொருள்களைக் கண்டு அஞ்சுகிறது.
பெரும்பாலோனோரின் முதல் சீனத்தயாரிப்பாக ஹீரோ பேனாதான் இருந்திருக்க முடியும். பள்ளிகளில் தலைமையாசிரியரின் அடையாளமே தங்கநிற மூடி போட்ட ஹீரோ பேனாதான்.
சீனத்தயாரிப்புகளுக்கு எப்படி இவ்வளவு வெற்றி? அதன் மலிவு விலையும், மேம்பட்ட உபயோகமும்தான். சீனப்பொருள்களின் தரமும் குறை சொல்லும் அளவு இருந்ததில்லை. எவ்வளவோ சீன அலைபேசிகள் மற்ற பிராண்டட் மொபைல்களைவிட குறைந்தவிலையில் அதிக Featuresஉடன் கிடைக்கின்றன். அதனால் தான் அவற்றுக்கு இவ்வளவு வரவேற்பு. பிரச்சினை வந்தால் தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்கிக் கொள்ளவேண்டியது தான். அதை சர்வீஸ் எல்லாம் செய்யமுடியாது. பிராண்டட் மொபைல்களில் பிரச்சினை வந்தால் அவற்றின் உதிரி பாகங்களின் விலை மொபைல்வாங்கிய விலையைவிட அதிகமாகவே இருக்கின்றன.
அலைபேசிகள் மட்டுமல்ல மற்றுமொரு முக்கியமான சீனத்தயாரிப்பும் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிதான். அவைதான் பொம்மைகள். இன்றைய குழந்தைகள் விளையாடாத சீனப்பொம்மைகளே இல்லை. உள்ளூர் தயாரிப்பில் 700, 800 இருக்கும் சீனத்துக் கார் பொம்மைகளின் விலை வெறும் 100, 150 தான். மேலும் இவற்றால் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைப்பதால் சீனப்பொருள்களை விற்றுவருகின்றனர். இன்றும் சீனத்தயாரிப்புகளை மட்டும் விற்கும் கடைகள் ஏகப்பட்டவை உள்ளன.இப்படி அலைபேசிகள், பொம்மைகள் என மக்களுக்கு உபயோகமாக இருந்த சீனப்பொருள்கள் இன்று தடை செய்யப்படும் நிலைமைக்கு வரக் காரணம் என்ன? இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க போலி வீட்டு உபயோகப் பொருள்களை Made in India என்று போட்டு வெளியிட்டதுதான். சமீபகாலமாக எல்லையில் இந்தியாவைச் சீண்டிவரும் சீனா, ஷாம்பூ, முகக்ரீம் என ஏகப்பட்ட போலித் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரித்ததாக முத்திரையிட்டு இந்தியாவுக்கே அனுப்பி விற்கப்பார்த்தது.

இங்கேதான் பிரச்சினை. இதனால் மலிவு விலையில் கிடைக்கும் பிற சீனப்பொருள்களின் தரமும் கேள்விக்குறியானது. முதல்கட்டமாக IMEI எண் இல்லாத சீன அலைபேசிகளை உபயோகப்படுத்தமுடியாது எனக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. விடுமா சீனா? இப்பொழுது IMEI எண்ணுடனும் சீன அலைபேசிகள் கிடைக்கின்றன. இப்பொழுது எப்படி சீனப்பொருள்களின் உபயோகத்தைத் தடுப்பது எனவும் அரசு சிந்தித்து வருகிறது.
இன்னொரு முக்கியவிடயம் பார்ப்பதற்குக் கண்களைக் கொள்ளை கொள்ளும் சீனா பொம்மைகள் மற்றும் அலைபேசிகள் தரமில்லாத பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சொல்லி வருகின்றன. மலிவு விலையில் கிடைக்கும் இந்தப் பொருள்களால் நிச்சயம் நம் உள்நாட்டுத் தயாரிப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் உள்நாட்டுத் தயாரிப்புகளோ எளிய மக்களுக்குக் கட்டுபடியாகத விலையில் அல்லவா கிடைக்கின்றன. எனவே ஆபத்தை அறியாத மக்கள் அவற்றையே வாங்குகின்றனர். கோழியா முட்டையா கதைபோல் இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வாக இருக்க முடியும்?


















