Monday, January 05, 2009

அபியும் நானும் அபிராமி மெகாமாலும்


புத்தாண்டு அன்னிக்கு படம் பார்த்தால் வருசம் பூராவும் படம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்கிற நல்ல நம்பிக்கையில் கண்டிப்பாகப் பார்க்கணும்னு நினைச்சிருந்த 'அபியும் நானும்' பார்க்கப்போனேன். என் தம்பி அபிராமி மெகா மால்ல பார்க்கலாம்னு சொன்னதால் அங்கேயே போக முடிவு பண்ணிக் கிளம்பிட்டோம். விளம்பரங்களில் வரும் படத்தலைப்பே ஒரு குழந்தை தன் கையெழுத்தில் எழுதியிருப்பது போல் அழகாகக் கவர்ந்ததால் ஒரு எதிர்பார்ப்பு.

என்ன மாலோ கன்றாவியோ நச நசன்னு இத்தினியோண்டு இடத்துல இம்புட்டுக் கடைகளா இதுல தியேட்டர்கள் வேற. சும்மா சுத்தி சுத்திக் கடைகளாக் க‌ட்டியிருக்காங்க. மாடிப்படியெல்லாம் சின்னதா ஒடுக்கமா வச்சி ... ச்சை... எரிச்சல்.

கவுண்டர்ல போய் டிக்கெட் கேட்டால் 10 மணிக் காட்சிக்குத்தான் இருக்குன்னு சொன்னாங்க. மணி 7 தானே ஆகுது அதுவரைக்கும் என்ன பண்றது? 'கிஸ்ஸிங் கார்ஸ்' விளையாடலாம்னு என் தம்பி நச்சரிச்சான். நாலு கழுதை வயசாகுது கார் ஓட்டி விளையாடணுமான்னு டிக்கெட் வாங்கப் போனா அங்க எட்டு கழுதை வயசானதெல்லாம் டிசர்ட் போட்டுக்கிட்டு வரிசையில நிக்கிறாங்க. ஏழு நிமிசம் விளையாடலாம்னு என் தம்பி சொன்னான். படு பாவிங்க கூட்டமா இருக்குன்னு நாலு நிமிசத்துலயே விரட்டி விட்டுட்டாங்க.

ஒரு வழியா பொழுதை ஒப்பேத்திட்டு திரையரங்குக்கு உள்ளே சென்றால் என்னடா வேற படத்துக்கு வந்துட்டமான்னு நினைக்கிற அளவுக்கு 'பஞ்சாமிர்தம்' பட விளம்பரம் ஒரு பத்து தடவை போட்டார்கள். அந்தப் படம் அபிராமி திரையங்க் உரிமையாளரின் தயாரிப்பாம். அடப் போங்கய்யா சன்டிவிக்காரனுங்கதான் காதல் கொண்டேன், தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதின்னு அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தரம் தொல்லை பண்றானுங்கன்னா நீங்களுமா?

ஒரு வழியாப் படத்தைப் போட்டாங்க. ஒரு அப்பா தன் புத்திசாலியான் செல்ல மகளின் மேல் கண்மூடித்தனாமான பாசத்துடன் இருக்கிறார். அவள் தான் தன் உலகம். அவள் இருப்பதால் தான் தனக்குப் பொழுதே போகிறது என எண்ணும் அளவிற்குப் பாசம். தன் மகளின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் தானே சில முடிவுகள் எடுக்கும்போது முதலில் அது சரியா தவறா என அப்பா எண்ணும் போது அது சரியே என மகள் தன் அப்பாவிற்கு உணர்த்துகிறாள்.

சாதாரண சைக்கிள் வாங்குவதற்குக் கூட முதலில் எதிர்ப்புக் காட்டும் அப்பா காதல் திருமணம் செய்து கொண்ட தன் பெற்றோரைப் போலவே தானும் ஒருவரைக் காதலிப்பாதாகச் சொன்னால்? அதுவும் காதலிப்பவர் சர்தார்ஜி என்றால்? வேண்டாவெறுப்பாக இருக்கும் தந்தையின் மனம் எப்படி மாறுகிறது என்ப‌தே கதை.

நாயகனும் காமெடியனும் பிரகாஷ்ராஜே. சொல்லியா கொடுக்கவேண்டும் சும்மா பின்னியிருக்கிறார். மகளாக த்ரிஷா. சின்ன வயது அபியாக வரும் குட்டிப்பாப்பாக்கள் எல்லாம் கொள்ளை அழகு. பிரகாஷ்ராஜிடம் அபியின் கதையைக் கேட்கும் சிறப்புத் தோற்றத்தில் பிருத்விராஜ். 'மொழி' படத்தைப் போலவே படம் முழுவதும் காட்சிகளிலும் வசனத்திலும் நகைச்சுவைப் பட்டாசு. மாப்பிள்ளையாகச் சர்தார்ஜியைக் காட்டும் போது திரையரங்கில் வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு. அதைப்போலவே கதை கேட்கும் பிருத்வியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

தொய்வில்லாமல் நகரும் காட்சியமைப்பு, பிச்சைக்காரராக வந்து பின் குடும்பத்தில் ஒருவராக‌ மாறும் நடிகர் குமரவேலுவின் வசனங்கள் செம காமெடி. படத்தின் வேகத்தைக் குறைப்பவை பாடல்கள் மட்டுமே. குமரவேலு அபியின் குடும்பத்தைப் பற்றிப் பாடும் ஒரு பாடல் மட்டுமே பரவாயில்லை.

ப்ரீகேஜி அட்மிசனுக்காகப் பிரகாஷ்ராஜ் வரிசையில் நிற்பதை முதல் நாள் படத்தில் பார்க்க அடுத்தநாள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை கான்வென்ட்டில் அதைப்போலவே வரிசை. எல்கேஜி அட்மிசனாம். எனக்கு அடக்க முடியாத சிரிப்பு. (மவனே உனக்கும் அந்த நிலைமை வரும்டி!)

ரொம்பவும் எதிர்பார்க்காமல் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு நல்ல படத்தைப் பார்க்க நினைத்தால் கண்டிப்பாக அபியும் நானும் போகலாம்.

கடந்த வாரம் தனது பிறந்தநாளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடிய த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள். லாபநோக்கில்லாமல் தரமான படங்களை மட்டுமே தர வேண்டும் என முடிவெடுத்திருக்கும் பிரகாஷ்ராஜிற்குப் பாராட்டுக்கள்.

அபியும் நானும் ‍- அட்டகாசம்.

Sunday, November 30, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம்


'சென்னையில் மழை பெய்யாது, வெயில் அதிகம், வேர்க்கும், தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும், ஊர் ரொம்ப அழுக்கா இருக்கும், அதெல்லாம் ஒரு ஊரா?' நீங்க அப்படி நினைக்கிற ஆளா?. குறிப்பா பெங்களூர் மக்கள் :). இவை எல்லாம் இருந்ததுதான். ஆனால் 2004 கோடைகால‌ம் வரை.

அதன்பிறகு 2004 மழைக்காலத்தில் கொட்டித்தீர்க்க ஆரம்பித்த மழை இப்பொழுது வரை வருடாவருடம் தொடர்கிறது. அதனால் சென்னையைப் பத்தி தப்பா நினைக்காம நடப்பு நிலவரத்தையும் தெரிஞ்சுக்கங்க. 2004க்குப் பிறகு இப்போ மீண்டும் நிஷாவின் கோரத்தாண்டவத்தால் சென்னை திரும்பவும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

ஏற்கனவே இரண்டு வாரங்கள் முன்பு மழை நன்கு பெய்து ஓய்ந்து போய் டிசம்பரில் வரவேண்டிய பனிக்காலம் முன்பே தொடங்கியிருந்தது. (உலகம் வெப்பமயமாதல் காரணமா?) இப்போ தொடர்ந்து ஐந்து நாட்களாகப் பெய்துவரும் மழையால் முதலில் மகிழ்ச்சியாயிருந்தாலும் வெள்ளம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது, 90 பேர் பலி ஆகிய செய்திகளைப் படிக்கவும் நின்று போனது. இப்போதைக்கு மழை பெய்யாமலிருந்தால் போதும் என்று நினைத்தாலும் இதோ இப்போதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டுதான் இருக்கிறது. பெய்யெனப் பெய்யும் மழை. பெய்தும் கெடுக்கும் மழை.

2003ம் வருடம் டிசம்பரில்தான் நானும் பிராஜெக்ட் பண்ண‌ சென்னைக்கு வந்தேன். வடபழனியில் வீடு. இரண்டு படுக்கையறை வாடகை வெறும் 3600. 5 பேர் தங்கியிருந்தோம். அரசல் புரசலாக சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் தெரிந்திருந்தாலும் வாழக்கையே வெறுத்துப் போனது அப்போது தான். ஜனவரியில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை. நாங்கள் தங்கியிருந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் எல்லோரும் சேர்ந்து தண்ணீர் லாரியில் காசு கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினோம். அதுவும் மகா மட்டமாக இருக்கும். கூவத்தின் ஓரத்தில் தெளிந்திருக்கும் தண்ணீரை எடுத்து வந்திருப்பானுங்களோன்னு நினைக்கத் தோணும். வெறும் ஒரு வாளித்தண்ணீரில் குளியல். ஒரு வாளித்தண்ணீரில் ஒரு வாரம் போட்டிருக்கும் உடைகளைத் துவைத்து அலசுவது என மகா கொடுமை.

அந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவு என்பது போல 2004ல் மழைக்காலத்தில் கொட்டித் தீர்த்தது மழை. ஊர் முழுவதும் வெள்ளமென்றாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. அப்பொழுதிலிருந்து இதோ இப்போது வரை தண்ணீர்ப் பிரச்சினையெல்லாம் கிடையாது. தொடர்ந்து மழைபெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டதால் வீடு வாடகையையும் கண்டமேனிக்கு உயர்த்தி விட்டார்கள். நாங்கள் இருந்த வீட்டின் தற்போதைய வாடகை 8500.

இந்த மழைக்காலத்தில் நான் இருக்கும் சூளைமேடு பகுதி எவ்வளவோ தேவலை. எப்பவும் போல வேளச்சேரி, மடிப்பாகம் பகுதிகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. வண்டியை வெளியில் எடுத்து 5 நாட்களாகிறது. ஸ்டெர்லிங் சாலை, கல்லூரி சாலைகளில் தண்ணீர் தேங்கிப் போய் நிற்கிறது. ஆச்சரியம் இவ்வளவு மழைக்குப் பிறகும் சூளைமேடு சப் வேயில் தண்ணீர் தேங்கவேயில்லை. கல்லூரி சாலையில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மகளிர் கிறித்தவக் கல்லூரி, சங்கர நேத்ராலயா போன்ற‌ கூறுகெட்ட குப்பைகள் உள்ளே தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றுகிறேன் என சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

2000 ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நிக‌ழ்ந்த‌து போல‌ திரும்ப‌வும் ஏதேனும் அச‌ம்பாவித‌ங்க‌ள் நிக‌ழ்ந்துவிட‌க்கூடாது. அர‌சு அலுவ‌ல‌கங்க‌ளுக்கு ம‌ட்டும் விடுமுறை என‌ ஒரு த‌லைப‌ட்ச‌மாக‌ ஆணை பிற‌ப்பித்த‌ அர‌சைக் க‌ண்டிக்கிறேன். ஏன் த‌னியார் அலுவ‌ல‌கங்க‌ளில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் நீச்ச‌லடித்தா அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ முடியும்? ;) . அடுத்த முறையாவது அளவோடு பெய்யட்டும் மழை.

வெயில், வேர்வையெல்லாம் இப்போ சென்னையில் இல்லையா எனக் கேட்கும் பெங்களூர் பெருமான்களே ஒரு வாரமா சென்னையில் ஓசி ஏசி தெரியுமா?

எப்பத்தான் உங்களுக்குப் புத்தி வரும்?


மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு அதற்குக் காரணமானவர்களை விட அதை முன் கூட்டியே தடுக்கத்தவறிய அரசாங்கத்தின் மீது தான் கடும் கோபம் வருகிறது. ஏற்கனவே சாமானியன் வாழமுடியாத நிலையை ஏற்படுத்திப் பெருமை தேடிக் கொண்ட இந்த அரசாங்கத்தால் எங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கையில் பயம் வயிற்றைக் கவ்வுவதை மறைக்கமுடியவில்லை.

புயல், மழை, சுனாமி பேரிடர்கள் என்றாலும் விதியின் பேரில் குற்றம் சொல்லிவிட்டு சும்மா இருக்கலாம். ஆனால் ரயில்நிலையம், ஹோட்டல் போகக்கூட மனதைரியம், உயிர் மேல் ஆசை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்யமுடியும்?

ஏற்கனவே இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழாத முக்கிய நகரமே இல்லை என்னும் அளவுக்கு நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குப் பிறகும் இந்தக் கிழவர்களின் அரசாங்கம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றால் யாருடைய குற்றம் அது?

மும்பையை விட்டுத் தள்ளுவோம். தமிழகத்தில் பாதுகாப்பு கடந்த வார‌ம் வரை என்ன லட்சணத்தில் இருந்தது தெரியுமா? கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எப்பவும் பெயரளவுக்கு ஒரு சோதனை நுழைவு வைத்திருப்பார்கள். குண்டு வைப்பவன் தலைவாசல் வழியாகத்தான் வருவான் என்பது போல் எப்பவும் 5 போலீசார் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைப் போனவாரம் அங்கே காணவில்லை. காவலர்களும் இல்லை.

எழும்பூர் ரயில் நிலையத்தில் அதைவிட மோசம். பேருந்து நிறுத்தம் அருகில் கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு பயணிகள் நடைமேடைக்கு சாலையிலிருந்து நேரடியாகப் போகுமாறு இருந்தது. அந்த இடத்தில் காவலர்களும் இல்லை. இவையிரண்டும் சில உதாரணங்கள்தான். தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை என்றால் மதுரையில் கேட்கவா வேண்டும். மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் எடை தாங்காமல் சோதனை நுழைவாயில் கத்திக்கூப்பாடு போடுகிறது. அருகில் எந்த ஒரு காவலரும் இல்லை. இந்த மாதிரியான் ஓட்டை உடைசல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு எப்போது முழுஅர்ப்பணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நம்மவர்களுக்குத் தோன்றுமோ தெரியவில்லை.

இந்தியாவில் எல்லா இடங்களிலுமே இப்படித்தானா என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாகவே திருமலை திருப்பதியில் இருக்கிறது. மலையில் ஏறுவதற்குமுன் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி ஒவ்வொருவர் பைகளையும் சோதனை போடுகிறார்கள். பாதயாத்திரை செல்பவர்களுக்கும் முழுசோதனை நடக்கிறது. அத்தகைய பாதுகாப்பு எல்லா இடங்களிலும் இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான தாக்குதல்களைத் தடுக்கமுடியும்.

சந்திரனுக்கு விண்கலம் செலுத்தி மனிதனையும் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இருக்கும் நாட்டில் கேவலம் பொது இடங்களில் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்றால் நம்மை ஆள்பவர்களின் முகத்தில் காறி உமிழத்தான் வேண்டும். :(

Sunday, November 09, 2008

WALL-E பார்த்துட்டீங்களா?


உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை.

2800ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் குப்பையாகி மனித இனமே இல்லாமல் வெறிச்சோடிப்போய் எல்லோரும் பூமியைவிட்டே வெளியேறி வானவெளியில் ஒரு தனிஉலகம் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். குப்பை என்றால் கொஞ்ச நஞ்ச குப்பை அல்ல. அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை. மருந்துக்குக் கூட மரங்களே கிடையாது. எனவே குப்பைகளை எல்லாம் செங்கல்களை போல மாற்றி கோபுரம் கோபுரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி குப்பைகளைச் சேகரித்து அமுக்கி சதுரமாக, செங்கல்லாக மாற்றிக் கோபுரத்தில் ஏற்றும் பணி செய்யும் ஒரு குட்டி ரோபோட்தான் வால்‍-ஈ(wall-e).

மனிதர்கள் எல்லாம் பூமியை விட்டு வெளியேறிவிட்டாலும் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் தனக்கு இட்ட குப்பை பொறுக்கும் பணியை வால்-ஈ தொடர்ந்து செய்து வருகிறது. சுயமாக‌ சிந்திக்கும் அறிவும் நன்றாகவே உள்ளது. வால்-ஈ சூரியஒளி பேட்டரியால் இயங்கக் கூடியதால் அதற்குப் பகலில் மட்டுமே பணி. பணிக்குச் சென்று திரும்பியதும் ஓய்வெடுக்க ஒரு குப்பைலாரி கன்டெய்னர். அதைத் தன் வீடாகப் பயன்படுத்துகிறது. குப்பை பொறுக்கும் போது தனக்குப் பிடித்தமான அழகான பொருட்களை எல்லாம் சேகரித்து வீடு முழுவதும் அலங்கரித்து வைக்கிறது.

அப்படி ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது தான் திடீரென்று வானத்தில் இருந்து ஒரு ராக்கெட் வந்து பூமியில் வெள்ளை நிறத்தில் யாரையோ இறக்கி விட்டு விட்டுச் செல்கிறது. வேறு யார் கதாநாயகிதான். ஆம் அதுவும் ஒரு அழகான ரோபோட். வால்-ஈயைப் போல அல்லாமல் கொஞ்சம் பெரிய டால்பின் போன்று அழகான நடக்கும் ரோபோட். அதன் பெயர் ஈவா. ரொம்ப புத்திசாலி.

ஈவாவை வால்-ஈ மறைந்து மறைந்து நோட்டம் பார்க்கிறது. வால் ஈ தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்து விட்ட ஈவா டமால் என்று சுட்டுவிட பாவமாக வால்-ஈ ஈவா முன் வந்து நிற்கிறது. வால்-ஈ முந்தைய நூற்றாண்டு ரோபோட். ஈவா ப்ரெஷ் பீஸ். எனவே வால்-ஈயைப் பற்றி தானே ஸ்கேன் செய்து அறிந்து கொள்கிறது ஈவா.

இக்கட்டத்தில் வால்-ஈக்கு ஈவாவின் மேல் விருப்பு+காதல் வந்துவிட அதைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் எல்லாப் பொருள்களையும் அதற்குக் காட்டுகிறது. அப்படித்தான் எடுத்து வைத்த ஒரு குட்டிச் செடியையும் வால்-ஈ ஈவாவுக்குக் காட்டுகிறது. அவ்வளவுதான் ஈவா அதைத் த‌டால் என்று பறித்து தன் உடலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்த இடத்திலேயே தியானம் செய்வது போல் நின்றுவிடுகிறது. அசையவே இல்லை. வால் ஈக்கு ஒன்றும் புரியவில்லை. "ஈவா ஈவா" என்று கூப்பிட்டுப் பார்க்கிறது. ஈவாவின் உடலில் ஒரு பச்சைவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.

திடீரென ஜடமாகிவிட்ட ஈவாவை வால்-ஈ வெயில், புயலிலிருந்து பாதுகாக்கிறது. சிலநாட்களில் ஈவாவைத் தேடி அதை விட்டுச்சென்ற ராக்கெட் வந்து அதை அழைத்துச் செல்கிறது. ஈவாவைப் பிரிய மனமில்லாத வால்-ஈ ராக்கெட்டில் புட்போர்ட் அடித்துத் தொங்கிக் கொண்டு செல்கிறது.

அந்த ராக்கெட் ஒரு கோள் மாதிரி இருக்கும் விணகலத்தின் உள்ளே செல்கிறது. அங்கே தான் மனிதர்கள் இருக்கிறார்கள் அதாவது பூமியிலிருந்து சென்றவர்கள். அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண‌ மனிதர்கள் இல்லை பரிணாம வளர்ச்சியில் எலும்புகள் எல்லாம் தேய்ந்து ரப்பர் ட்யூப் போன்ற கை கால்களை உடையவர்கள் (பரிணாமத் தேய்ச்சி?) . நடப்பதைக் கூட மறந்து போன எப்பவும் நாற்காலியில் அமர்ந்து உயிர் வாழ்பவர்கள். அவர்கள் உலகமே மிக மிக நவீனமானது. எல்லா வேலைகளுக்கும் ரோபோக்கள்தான்.

அந்த விண்கலத்திற்கும் ஒரு கேப்டன் உண்டு. அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி பூமிக்கு ரோபோக்களை அனுப்பி அங்கே மனிதர்கள் உயிர்வாழ சூழ்நிலை திரும்பிவிட்டதா என அறிவது. தலைமுறை தலைமுறையாக ரோபோக்கள் அனுப்பியும் இதுவரை பாசிட்டிவ் ரிசல்ட் இல்லை. ஆனால் இந்த முறை ஈவா அதைச் செய்திருக்கிறது. அதாவது பூமியிலிருந்து ஒரு தாவரத்தை அது எடுத்து வந்திருக்கிறது. எப்போது பூமியில் மனிதன் உயிர் வாழும் சூழ்நிலை வருகிறதோ அப்போது இவர்கள் எல்லோரும் பூமிக்குத் திரும்பிவிடவேண்டும் என்பது தான் கேப்டனுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.

தாவரங்கள் இருந்தால் கண்டிப்பாக மனிதர்கள் உயிர்வாழமுடியும் எனவே பூமிக்குத் திரும்பலாம் எனக் கட்டளை பிறப்பிக்க எண்ணும் வேளையில் அந்த விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ரோபோட் அதைத் தடுக்கிறது. அதை எப்படி கேப்டன், ஈவா, வால்-ஈ சேர்ந்து முறியடித்தார்கள் என்பது மிச்சக்கதை. (இப்பவே முக்கால்வாசி சொல்லியாச்சு, மிச்சத்தை டிவிடியில் பாருங்க :) )

படம் முழுவதும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன். வால்-ஈ யின் அப்பாவித்தனமான் செயல்கள் கலக்கல். ராக்கெட் பூமியை விட்டு வெளியே செல்லும் போது செயற்கைக்கோள் குப்பைகளை உடைத்துக் கொண்டு செல்லும் காட்சி சூப்பர். வால்-ஈ விண்கலம் முழுவதும் குப்பையாக்கி விட அதைத் துடைத்துக் கொண்டே துரத்தும் ரோபோ காட்சிகள் நல்ல நகைச்சுவை.

டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் இந்தப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்.

Friday, November 07, 2008

கர்நாடக அரசுக்கும் சிங்கள அரசுக்கும் என்ன வித்தியாசம்?

கர்நாடகத்தில் ஒகேனக்கல் விட‌யம் தேர்தல் பிரச்சினையாக மட்டுமே பயன்படுத்தப்படும் தேர்தல் முடிந்ததும் காற்றோடு போய்விடும் என்று பார்த்தால் காவேரியை விட மிகப் பெரிய பிரச்சினையாகி வழக்கு, நடுவர் மன்றம் என்று இழுத்தடிக்கப்பட்டு திட்டம் பாடையில் ஏற்றப்படும் என்றே தோன்றுகிறது.

நேற்று கர்நாடக்த்தின் நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கொடுமையின் உச்சகட்டமாக ஒகேனக்கல் திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் ஜப்பான் வங்கிக்குக் கடிதம் எழுதி திட்டத்துக்கு ஆப்படிக்க இருப்பதாகக் கூறுகிறார். எவ்வளவு ஈனத்தனமான செயல் இது?? திட்டத்தில் சிக்கல் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக ஜப்பான் வங்கி உதவிசெய்யாது என்றே தெரிகிறது.

ஆகக்கூடி ஒகேனக்கல் திட்டத்துக்குப் பால் ஊற்றும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால் மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே ஒகேனக்கல்லில் சர்வே நடத்த எப்படியோ அனுமதி வாங்கிவிட்டது கர்நாடக அரசு. தூங்குறீங்களா மதிப்பிற்குரிய 40 எம்பிக்களே, மத்திய அமைச்சர்களே, இணை அமைச்சர்களே??? இல்லை நாங்களும் காசு கொடுத்தாத்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்கிறீர்களா?

சர்வே நடத்த அனுமதி பெற்றபின் எடியூரப்பா சொல்கிறார் இப்போதுதான் முதன்முறையாக மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு கர்நாடக பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறதாம். எப்படியும் அடுத்த தடவை பாஜக ஆட்சிக்கு வந்தால் கர்நாடகம் மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகித் தொடர்ந்து தமிழகத்துக்குத் தொல்லைகள் கொடுக்கும்.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று கூப்பாடுபவர்கள் ஒரு மாநிலம் அடுத்த மாநிலத்தை இப்படி குராதத்துடன் துரோகம் இழைப்பதையும் இதுதான் இந்திய இறையாண்மை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வார்களோ???

குறிப்பு : பின்னூட்டம் கூட போட முடியாத இடத்தில் இருந்து திருட்டுத்தனமாகப் பதிவெழுதுகிறேன். பதில் சொல்லலைன்னு கோவிச்சுக்காதீங்க நண்பர்களே !!

Sunday, November 02, 2008

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் அடுத்த நூற்றாண்டிலாவது முடியுமா?

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் 1996-97ம் ஆண்டுகளுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சேலம்‍-நாமக்கல்-கரூர் நகரங்களை இணைப்பதாகும். தற்சமயம் முக்கிய மாவட்டத்தலைநகரமான நாமக்கல் நகரத்தில் தொடர்வண்டிநிலையமோ இருப்புப் பாதையோ இல்லை.

இத்திட்டத்துக்கான அடிக்கல் அப்போதைய மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி நாட்டப்பட்டது.

இந்த இருப்புப்பாதையின் மொத்த தூரம் 85 கிமீ. இதனால சேலம், மல்லூர், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்படும். திட்டத்துக்கான மொத்த செலவு 136 கோடி இந்திய ரூபாய்கள் ஆகும். இதில் முக்கியமாக காவேரி ஆற்றின் குறுக்கில் மோகனூரையும் வாங்க‌ல் ஊரையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட வேண்டும்.

தற்சமயம் தென்மாவட்டங்களிலிருந்து வரும் புகைவண்டிகள் சேலம் செல்வதற்கு கரூரிலிருந்து ஈரோடு சென்று அங்கிருந்து சேலம் செல்லவேண்டும். இதனால் கூடுதலாக 45கிமீ தூரமும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கூடுதலாகவும் ஆகும்.

சரி இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே இந்தத் திட்டம் முடிந்து புகைவண்டிகள் ஓட ஆரம்பித்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. :(. காரணம் கூறுகெட்ட அரசாங்கம் செய்த ஒரு செயல் தான்.
இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலங்கள் ‍ பெரும்பாலும் விவசாயிகள் ‍ இடமிருந்து கையகப்படுத்தும் போது அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்க முன்வந்த தொகை-அதிகமில்லை ஜென்டில்மென்-ஒரு சதுராடிக்கு 0.63 பைசா. (இவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?)

காவேரி ஆற்றுப் படுகையில் அமைந்திருக்கும் வளம் கொழிக்கும் நிலங்களை இப்படிக் கேவலமான் முறையில் விவசாயிகளிடமிருந்து பெற்று விடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் இதை எதிர்த்துப் பலரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்ததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நாமக்கல் நீதிமன்றம் ஒரு சதுர அடி ரூ211 என்ற விலையில் அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. இருப்பினும் மேலும் சில வழக்குகளை விவசாயிகள் தொடர்ந்ததால் இத்திட்டம் காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டு பல வருடங்களாக தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் ஏதும் நிதி ஒதுக்கப்படவில்லை.

கடந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சர் வேலு தெரிவிக்கையில் சுமுகமான முறையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒரு சில அதிகாரிகளஇன் பொறுப்பற்றதனத்தால் தேவையில்லாத வழக்குகள் போடப்பட்டு திட்டம் தாமதமானதுடன் இன்னும் செயல்படுத்தப்படவும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.

நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டார நண்பர்கள் வருத்தத்துடன் இத்தகைய தகவ்ல்களைத் தெரிவித்ததால் இதை எழுதும் எண்ணம் ஏற்பட்டது.

Tuesday, August 12, 2008

கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?

ಕನ್ನಡ


மீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.

பிரச்சினை தமிழக அரசு தான் திட்டமிட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகத் திசை திருப்பப்பட்டு கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாதிக்கப்படும் சூழல் வருவதற்கு முன் தமிழக அரசு "எங்களுக்கும் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கு" என்று தெளிவான விளக்கத்தைத் தக்க காலத்தில் அளித்தது. இல்லையென்றால் இந்நேரம் கர்நாடகத்தில் எல்லாக் கட்சிகளும் மீண்டும் போர்க்கோலம் பூண்டிருக்கும்.

முதலில் செம்மொழி என்றால் என்ன? 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருக்கும் மொழிக்குத்தான் செம்மொழி மரியாதை கிடைக்கும். இதற்கென்று மத்தியஅரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரையை ஆய்வு செய்து செம்மொழி மரியாதையை வழங்கும்.

ஏற்கனவே தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாம் நம் தமிழ்மொழிக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. காரணம் சொல்லவா வேண்டும்? 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், இலக்கியங்களும் கொட்டிக்கிடப்பதே காரணம்.

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒருமுறை சொன்னார் "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு அதன் தோற்றம் 2000 ஆண்டுகள் எனக் குறைக்கப்பட்டு விட்டது" என்று. உண்மைதான் திருக்குறள் உள்ளிட்ட இலக்கணப்பிழையின்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி தோன்றியிருக்கும் காலத்தை வருடங்களால் கணக்கிடமுடியாது.

செம்மொழி மரியாதை கிடைப்பதால் என்ன லாபம்? சும்மா ஒரு கவுரவம் தான். இது போக தமிழ்மொழி ஆராய்ச்சிகள் நடக்க மத்திய அரசும் நிதியுதவி செய்யும்.

'அதற்காக தமிழும், கன்னடமும் ஒன்றா? தமிழையும் கன்னடத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பதா? தமிழில் இருந்து தோன்றியது தானே கன்னடம்?' என்ற மனநிலையில்தான் ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இருக்கலாம். கன்னடர்கள் அவர்கள் மொழியும் செம்மொழி ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கான பரிந்துரையையும் செம்மொழி ஆய்வு மையத்திடம் வைத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்து செம்மொழி அந்தஸ்து வழங்கலாமா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.


எந்த மொழி செம்மொழி ஆனால் நமக்கென்ன? ஏற்கனவே தமிழ் செம்மொழி ஆகிவிட்டதே? கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென்ன? தமிழின் பாரம்பரியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. நம் மத்திய அரசு செம்மொழி என்று சொல்லித்தான் தமிழ் மிகவும் தொன்மைவாய்ந்த மொழி என்று உலகுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தெரியாமலே எத்தனையோ நாடுகளில் தமிழ் மதிக்கப்பட்டு வருகிறது.

இன்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ நாடுகளின் சிற்றலை வானொலி ஒலிபரப்பில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்தது ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றன. நயாகரா நீர்வீழச்சியின் வரவேற்புப் பலகையில் 'நல்வரவு' என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் பச்சைத் தமிழர்களான நாம் தான் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். மருந்துக்குக் கூட அம்மா, அப்பா என்று சொல்லாத எத்தனையோ பேர் சென்னையில் இருக்கிறார்கள்.

இது போன்ற தேவையில்லாத வழக்குகள் தமிழர்-கன்னடர் உறவை மேலும் மோசமாக்கும். எப்படா வாய்ப்பு கிடைக்கும் தமிழர்களை எதிர்த்துக் களம் இறங்கலாம் எனத் திரியும் நாராயணகவுடா,பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்சன வேதிகே, வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளியா கட்சி போன்ற இனவெறி அமைப்புகளுக்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆகிவிடும்.

எனவே இந்த வழக்கு நமக்குத் தேவையில்லாத ஒன்று. காவேரி விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஒகேனக்கல் விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்தச் செம்மொழி விசயத்தில் தமிழுக்கோ, தமிழகத்துக்கோ, தமிழர்களுக்கோ எந்தவித இழப்பும் பாதிப்பும் இல்லை. வழக்குத் தொடர்ந்திருப்பவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றால் அது கர்நாடகத் தமிழர்களைப் பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்.

தாய்மொழியைப் போற்றுவோம். பிற மொழியைத் தூற்றாமலிருப்போம்.