Friday, January 08, 2010

பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன ?


பசுமை இல்ல வாயுக்கள் அப்படின்னா என்ன? கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். பூமியை மிதமான சூடான வெப்பத்தில் வைத்திருக்கும் வாயுக்களே அவை. இந்த வாயுக்களால்தான் பூமியில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றின. இல்லையெனில் பூமி வெறும் பனிக்கோளமாகவே இருந்திருக்கும். இந்த வாயுக்களால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 33 டிகிரியாக உள்ளது.

இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும். இந்த வாயுக்கள் அதிகரிக்க என்ன காரணம்? சுலபமான விடை மனிதனின் ஆதிக்கம்.

கீழே உள்ள 10 காரணிகள் தான் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணம்.

1. மின் உற்பத்தி நிலையங்கள் - 25%
நிலக்கரி மற்றும் எண்ணையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் உலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு.

2. காடுகள் அழிப்பு - 20%
விவசாயம் மற்றும் குடியேற்றங்களுக்காக காடுகள் அழிப்பு. இதனால் பசுமைஇல்ல வாயுக்கள் உறிஞ்சப்படாமல் பூமியில் இருக்கின்றன.

3. போக்குவரத்து - 13%
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

4. எரிபொருள் உற்பத்தி - 6.3%
பெட்ரோல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு

5. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - 6%
பயிர்களுக்குப் போடப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நைட்ரேட் ஆக்சைடை வெளியிடுகின்றன

6. பண்ணைகள் - 5%
பண்ணைகளில் உள்ள மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் வெளியிடும் மீத்தேன்

7. சிமெண்ட் உற்பத்தி - 4%
பெருகிவரும் குடியேற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் சிமெண்ட் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறதி. இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணி.

8. விமானங்கள் - 3.5%
விமான எரிபொருளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு

9. இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி - 3.2%
இந்த தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

10. குப்பைகளும் கழிவுகளும் - 3%
குப்பைகளில் வெளிப்படும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு


இந்த வாயுக்களின் உற்பத்தியைக் குறைக்கத்தான் உலகநாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் ம்ட்டுமே முயன்று தீர்வு காண முடியும் என்றல்ல.


அன்றாட வாழ்வில் சாதாரண மக்களாகிய நாமும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறோம். தனிமனிதனாக நாமும் நம்மால் முயன்ற அளவு இவற்றைத் தவிர்க்க முடியும். சிறிய விசயங்கள்தான் மிகப்பெரும் பலன் தரும். ஒவ்வொரு வீட்டிலும் முயன்றால் சிறுதுளி பெரு வெள்ளம்.

1. சாதாரண விளக்குகளுக்குப் பதில் CFL விளக்குகளைப் பயன்படுத்துதல். இதனால் மின்சாரப் பயன்பாடு குறையும். உற்பத்தியும் அதிக அளவில் தேவையிருக்காது.

2. மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி ஆகியவை பயன்படுத்துதல். Energy Star முத்திரை 3க்கு மேல் இருப்பதை வாங்கலாம்.

3. அலுவலகக் கணினிகளை Stand byல் வைக்காமல் இயக்கத்தை முழுவதும் நிறுத்திவிடுதல்

4. ஏசிகளின் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்யலாம்.

5. தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக சூரிய ஒளி வெந்நீர் அடுப்புகளைப் பயன்படுத்தலாம். தண்ணீரை எப்போதும் 50 டிகிரிக்கு மேல் சுடவைக்க அவசியமில்லை.

6. துணிகள் அதிகம் இருந்தால் மட்டும் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்

7. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். பிக் ஷாப்பர் பைகள் மிகவும் வசதியானவை. கடைகளில் கொடுக்கும் பாலித்தீன் பைகளைத் தவிர்க்கலாம்.

8. குப்பைகளைப் பாலித்தீன் பைகளில் சேகரிக்கும் பழக்கத்தை மாற்றி குப்பைவாளிகளில் மட்டும் சேகரிக்கலாம். பாலித்தீன்களை எரிக்கும் போது வெளிவரும் வாயுக்கள் அதிக தீமை விளைவிப்பவை.

9. வாகன உபயோகத்தை முடிந்த அளவு குறைக்கலாம். Car pooling எனப்படும் முறையில் நண்பர்கள் சேர்ந்து ஒரு வாகனத்தை உபயோகிக்கலாம்.

10. வார இறுதி நாட்களில் பேருந்துகளை மட்டும் பயணத்துக்குப் பயன்படுத்தலாம். நெரிசலும் இருக்காது தானே??

11. சிக்னல்களில் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

12. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மரம் வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் டன் கணக்கில் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது


இதுபோன்ற செயல்கள் டென்மார்க் நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. டென்மார்க் தன் மின் உற்பத்திக்கு காற்றாலைகளையே பெரும்பாலும் பயன்ப்டுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டத் தடையும் உள்ளது. டென்மார்க் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.அதனால் தான் தலைநகர் கோபன்ஹகனில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.

பிரிட்டன் போர்னியோ, நியூகினியா தீவிலுள்ள அடர்ந்த காடுகளை விலைக்கு வாங்கி அங்கு மரங்களை வெட்டத் தடைசெய்யும் படி அந்நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


நம் அரசாங்கமோ சாலை விரிவாக்கம், நான்கு வழிச் சாலை என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளிவிட்டது :( . அரசை நம்பிப் பயனில்லை நாமே முயன்றால் தான் உண்டு.

தகவல் கோர்வை - இணையம்

Saturday, January 02, 2010

சீனத்தயாரிப்புகள் வரமும், சாபமும்


இன்றைக்கு நம்மில் பெரும்பாலோனோர் வீட்டில் குறைந்தது ஒரு சீனப்பொருளாவது இருக்கும் நிலைமை இருக்கிறது. காரணம் அதன் குறைந்த விலை. குறிப்பாக அலைபேசிகளின் உபயோகத்தால் சீனத் தயாரிப்புகள் அனைவரையும் மிக எளிதில் சென்று அடைந்து விடுகின்றன. அமெரிக்கா கூட இந்த மலிவுவிலை சீனப்பொருள்களைக் கண்டு அஞ்சுகிறது.

பெரும்பாலோனோரின் முதல் சீனத்தயாரிப்பாக ஹீரோ பேனாதான் இருந்திருக்க முடியும். பள்ளிகளில் தலைமையாசிரியரின் அடையாளமே தங்கநிற மூடி போட்ட ஹீரோ பேனாதான்.

சீனத்தயாரிப்புகளுக்கு எப்படி இவ்வளவு வெற்றி? அதன் மலிவு விலையும், மேம்பட்ட உபயோகமும்தான். சீனப்பொருள்களின் தரமும் குறை சொல்லும் அளவு இருந்ததில்லை. எவ்வளவோ சீன அலைபேசிகள் மற்ற பிராண்டட் மொபைல்களைவிட குறைந்தவிலையில் அதிக Featuresஉடன் கிடைக்கின்றன். அதனால் தான் அவற்றுக்கு இவ்வளவு வரவேற்பு. பிரச்சினை வந்தால் தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்கிக் கொள்ளவேண்டியது தான். அதை சர்வீஸ் எல்லாம் செய்யமுடியாது. பிராண்டட் மொபைல்களில் பிரச்சினை வந்தால் அவற்றின் உதிரி பாகங்களின் விலை மொபைல்வாங்கிய விலையைவிட அதிகமாகவே இருக்கின்றன.

அலைபேசிகள் மட்டுமல்ல மற்றுமொரு முக்கியமான சீனத்தயாரிப்பும் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிதான். அவைதான் பொம்மைகள். இன்றைய குழந்தைகள் விளையாடாத சீனப்பொம்மைகளே இல்லை. உள்ளூர் தயாரிப்பில் 700, 800 இருக்கும் சீனத்துக் கார் பொம்மைகளின் விலை வெறும் 100, 150 தான். மேலும் இவற்றால் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைப்பதால் சீனப்பொருள்களை விற்றுவருகின்றனர். இன்றும் சீனத்தயாரிப்புகளை மட்டும் விற்கும் கடைகள் ஏகப்பட்டவை உள்ளன.

இப்படி அலைபேசிகள், பொம்மைகள் என மக்களுக்கு உபயோகமாக இருந்த சீனப்பொருள்கள் இன்று தடை செய்யப்படும் நிலைமைக்கு வரக் காரணம் என்ன? இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க போலி வீட்டு உபயோகப் பொருள்களை Made in India என்று போட்டு வெளியிட்டதுதான். சமீபகாலமாக எல்லையில் இந்தியாவைச் சீண்டிவரும் சீனா, ஷாம்பூ, முகக்ரீம் என ஏகப்பட்ட போலித் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரித்ததாக முத்திரையிட்டு இந்தியாவுக்கே அனுப்பி விற்கப்பார்த்தது.


இங்கேதான் பிரச்சினை. இதனால் மலிவு விலையில் கிடைக்கும் பிற சீனப்பொருள்களின் தரமும் கேள்விக்குறியானது. முதல்கட்டமாக IMEI எண் இல்லாத சீன அலைபேசிகளை உபயோகப்படுத்தமுடியாது எனக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. விடுமா சீனா? இப்பொழுது IMEI எண்ணுடனும் சீன அலைபேசிகள் கிடைக்கின்றன. இப்பொழுது எப்படி சீனப்பொருள்களின் உபயோகத்தைத் தடுப்பது எனவும் அரசு சிந்தித்து வருகிறது.

இன்னொரு முக்கியவிடயம் பார்ப்பதற்குக் கண்களைக் கொள்ளை கொள்ளும் சீனா பொம்மைகள் மற்றும் அலைபேசிகள் தரமில்லாத பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சொல்லி வருகின்றன. மலிவு விலையில் கிடைக்கும் இந்தப் பொருள்களால் நிச்சயம் நம் உள்நாட்டுத் தயாரிப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் உள்நாட்டுத் தயாரிப்புகளோ எளிய மக்களுக்குக் கட்டுபடியாகத விலையில் அல்லவா கிடைக்கின்றன. எனவே ஆபத்தை அறியாத மக்கள் அவற்றையே வாங்குகின்றனர். கோழியா முட்டையா கதைபோல் இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வாக இருக்க முடியும்?

Thursday, November 12, 2009

தமிழில் பட்டையைக் கிளப்பும் டிஸ்கவரி சேனல் !!


டிஸ்கவரி தொலைக்காட்சி இப்பொழுது தமிழில் பட்டையைக் கிளப்புவது தெரியுமா உங்களுக்கு?? அலுத்துப் போன நகைச்சுவைகளும், உலுத்துப்போன நடன நிகழ்ச்சிகளையும் பார்த்து சலித்திருந்த நேரத்தில் அதிரடியாக தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது டிஸ்கவரி தொலைக்காட்சி.

டிஸ்கவரி தொலைக்காட்சியை அதன் அறிவியல் மற்றும் விலங்குளின் வாழ்க்கைமுறை பற்றிய நிகழ்ச்சிகளுக்காகக் காண்பவர்கள் ஏராளம். பின்னே சிங்கம், புலி, சிறுத்தைகள் மானைத் துரத்திச் சென்று வேட்டையாடுவதை சன் தொலைக்காட்சியில் காணமுடியுமா?

கிராமங்களில் டிஸ்கவரியின் ரசிகர்கள் குறைவானாலும், சிறு நகரங்களில் அதிகம். மொழிபுரியாவிட்டாலும் காட்சிகளுக்காகக் காண்பவர்கள் ஏராளம். எனவே இவர்களை முற்றிலும் கவர்வதற்காக‌ தன் ஒளிபரப்பை இந்தியாவின் மாநில மொழிகளிலும் தொடங்கியிருக்கிறது.

முதலில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மட்டும் தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய டிஸ்கவரி இப்பொழுது மறுஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ழ்சிகளால் 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சியாக மாறியிருக்கிறது. (Discovery Kids தவிர). பாராட்டபட வேண்டிய விடயம் அவர்களின் மொழிமாற்றம். முடிந்தவரையில் ஆங்கிலக்கலப்பின்றி தமிழில் பேசுகிறார்கள்.

Man vs Wild, Nature's great events, Escaped, Expedition wild, Survivor man, Discover India இன்னும் பல நிகழ்ச்சிகளைத் தமிழில் அருமையாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்புகிறார்கள். இவர்களைப் பார்த்து Nat Geo, Animal Planet ஆகியோரும் தமிழில் ஒளிபரப்பினால் ( Zee Studio ஆங்கிலத்தில் சப்டைட்டில் போட்டதைப் பார்த்து Star Moviesம், HBOவும் செய்தது போல) அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை மாணவர்கள், குழந்தைகளும் காணும் வாய்ப்புகள் அதிகமாகும்.

டிஸ்கவரி தமிழ், கேபிள் தொலைக்காட்சியிலும், DTHலும்தெரியுதுங்க. டிஸ்கவரி பாருங்க. அறிவை வள்ர்த்துக்கோங்க. :)

Tuesday, November 03, 2009

இலங்கை வானொலிகள்


வானொலிகள். முந்தைய காலத்திலும் சரி,இன்றைய கால்த்திலும் சரி,எதிர்காலத்திலும் சரி. மிக முக்கியமான செய்தி ஊடகம் மட்டுமல்ல, மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஊடகமும் கூட. திரைப்பபடப் பாடல்களை ஒலிபரப்பி அவற்றின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பவை இன்றைய பண்பலை வானொலிகள் மட்டுமல்ல. இங்கு நான் குறிப்பிட விரும்புவது என் குழந்தைப் பருவத்தில் (90களில்) வானொலிகள் எவ்வளவு முக்கியமான பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது என்பதைத்தான்.

80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் தமிழகத்தின் மிகமுக்கிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தவை தூர்தர்சனும், இலங்கை வானொலியும் தான். அகில் இந்திய வானொலி செய்திகள் மற்றும் விவசாய செய்திகளுக்காக மட்டுமே பெயர்பெற்றவை. மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியதில்லை. என‌க்கு வானொலி கேட்ப‌தென்றால் கொள்ளை விருப்ப‌ம்.

"இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு". தமிழகத்தில் அனைத்துத் திரைப்படப்பாடல்களையும் ஒலிபரப்பி கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. காலை 7:00 மணிக்குத் தொடங்கும் ஒலிபரப்பு 10:00 வரையிலும். பின்னர் 3:00 மணிக்குத் தொடங்கி 5:30 வரையிலும் வகை தொகையில்லாமல் பாடல் பட்டாசுகளைக் கொளுத்திவிடுவார்கள்.

தினமும் மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகும் 'லீவியின் சினிமாப் பாடல்கள்' என்ற நிகழ்ச்சியின் அடிமையாக இருந்தேன். அப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த விளம்பரங்களும் இலங்கை வானொலிக்கே வழங்கப்பட்டிருந்தன. மத்திய அலை ஒலிபரப்பானாலும் தெள்ளத் தெளிவான ஒலிபரப்பு. தொகுப்பாளர்களின் தோழமையாகப் பேசும் விதம் என எல்லாமே அகில‌ இந்திய வானொலியின் சோம்பேறித்தனத்திலிருந்து வித்தியாசப்பட்டதால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

பிடித்த தொகுப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம். பாடல் ஒலிபரப்பும் முன்பு மிக அருமையாக சம்பந்தப்பட்ட‌ விசயங்களையும் சேர்த்துச் சொல்லுவார். இல்ங்கை வானொலியிடம் தான் தமிழ்த்திரைப்படங்கள் அனைத்தினுடைய பாடல் ஒலிநாடாக்களும் உள்ளனவாம். இப்போதும் இந்த ஒலிபரப்பு உள்ளதா இல்லையா எனத் தெரியவில்லை.

அது மட்டுமா? கொஞ்சம் பெரியவனாகி (15, 16 வயதில்) விவரம் தெரியவும் தொலைக்காட்சி ஆன்டனாவுடன் வானொலிப்பெட்டியை இணைத்து இலங்கையின் பண்பலை வானொலிகளையும் கேட்டு நானும், அண்ணனும் மகிழ்ந்து வந்தோம். இந்தியாவில் பண்பலைகள் வருவதற்குப் பல வருடங்கள் முன்பே இலங்கையில் பண்பலை வானொலிகள் கொடிகட்டிப் பறந்து வந்தன.



சூரியன் பண்பலை, சக்தி பண்பலை, இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இன்னும் நிறைய. எனக்கு சக்தி பண்பலை தான் மிகவும் பிடிக்கும். மேகமூட்டம் இல்லாத காலங்களில் மிகத் தெளிவாக அனைத்துப் பண்பலை வானொலிகளும் கேட்டிருக்கிறோம்.

ஒருமுறை சூரியன் பண்பலைக்குத் தொலைபேசிய சிறுமி "மியாவ்!!!" என்று கத்த "ம்ஹூம்.இது போன்ற ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவர் தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்" என பெண்தொகுப்பாளர் அவர் உதவியாளரிடம் சொன்னார். அதை நினைத்து ஒருநாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன். ம்ம்ம்... சூதுவாது தெரியாத பருவமது.... மிக‌ முக்கிய‌மாக‌ அவ‌ர்க‌ள்து தூய த‌மிழ். தொகுப்பாளர்கள் 95 ச‌த‌வீத‌ம் ஆங்கில‌க்க‌ல‌ப்பின்றிப் பேசுவார்க‌ள். இன்றும் க‌தைத்துக் கொண்டுதான் இருக்கிறார்க‌ள். இலங்கையில் இப்பொழுது இன்னும் நிறைய தமிழ் பண்பலை வானொலிகள் இருப்பதாக அறிகிறேன்.

வெகுஅரிதாக கோடைகாலத்தில் 'புலிகளின் குரல்' வானொலியில் வரும். ஒருமுறை விடுதலைப்போராளி ஒருவரது வாழ்க்கை வரலாற்றையும், செய்திகளும் கேட்கமுடிந்தது. அலைவரிசை தெளிவின்மை, வானிலை ஆகியவற்றால் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கேட்கமுடிந்திருக்கிறது.

இதோடு விட்டுவிடவில்லை வானொலி கேட்கும் விருப்பம். சிற்றலையில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு , லண்டன் பிபிசியின் தமிழோசை, சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றையும் தேடிப்பிடித்து நிகழ்ச்சிகளை ரசித்திருக்கிறேன்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் இருந்து பண்பலை வானொலி தொடங்கப்பட்டது. துல்லியமான ஒலிபரப்பாக இருந்தாலும், நிகழ்ச்சிகள் மொக்கையாக இருந்தால் யார் கேட்பார்கள்? "பண்பலையில் விளம்பரம் செய்யுங்கள். இந்த நாட்டின் செல்வம் இங்கேயே இருக்கட்டும்" என இலங்கை வானொலியின் சர்வதேச ஒலிபரப்பின் போட்டியை ஈடுகொடுக்க முடியாமல் புலம்பித் தள்ளுவார்கள்.

அதன்பின்னர் நான் கல்லூரியில் சேர்ந்த காலம். இந்தியாவில் தனியார் பண்பலை வானொலிகளுக்கு அனுமதி கிடைத்தது. தமிழில் முதலி திருநெல்வேலியில் இருந்து சூரியன் பண்பலை தன் முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. திருநெல்வேலியில் ஒலிபரப்பாகும் வானொலி மதுரை வரை கேட்கும். எங்களுக்கு கல்லூரி விடுதியில் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. ஏனோ தனியார் பண்பலை வானொலிகளுக்கு செய்திகள் ஒலிபரப்பும் உரிமை மட்டும் கொடுக்கப்படவில்லை.

வேலை தேடி சென்னை வந்தால் .... அட சென்னையின் பண்பலை வானொலிகள் பற்றி உங்களுக்குத் தெரியாததா பாஸ்?

Friday, October 30, 2009

யூத்புல் விகடனில் என் பதிவு




யூத்புல் விகடனில் என் முந்திய பதிவான 'மாமல்லபுரம்' 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளிவந்துள்ளது. விகடனுக்கு நன்றி.

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

Wednesday, October 28, 2009

மாமல்லபுரம்


’சிவகாமியின் சபதம்’ - பண்டைத் தமிழகத்தின் பல்லவ சாம்ரஜ்யம் எப்படி எழுச்சியுற்று வாதாபியை வென்று கணபதியைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தது என ஒரு காதலின் பின்னணியில் புனையப்பட்டிருக்கும் அருமையான சரித்திரப் புதினம்.

மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் அவர்களது சிற்பக்கலை மீதான காதலை அருகிலிருந்து கண்டது போல சிவகாமியின் சபதத்தில் படித்து விட்டு அவர்கள் ஆட்சி புரிந்த மாமல்லபுரத்திற்குச் செல்லவில்லையென்றால் எப்படி???

கோடைவாட்டியெடுக்கும் ஒரு விடுமுறை நாளில் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் செல்லலாமெனத் திட்டமிட்டு நண்பகலில் அங்கு சென்றாயிற்று. ஆனால் கோடையில் வந்தது எவ்வளவு தவறு எனப் பின்னர் உணர்ந்தேன்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்து செல்லும் தொலைவில்தான் சிறப்புமிக்க ’கடற்கரைக் கோவில்’ உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடல் பின்னணியில் கோவிலைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.

கிபி 640ல் மகேந்திரவர்மரால் குன்றைக் குடைந்து குடைவரைக் கோவிலாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏகப்பட்ட சிற்பங்கள் கடற்காற்றால் அரிக்கப்பட்ட நிலையிலும் செதுக்கிய சிற்பிகளின் திறமையைக் காட்டுகின்றன.

இருகோவில்களாக உள்ள கடற்கரைக் கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்த கோவிலில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ளது. பின்புறம் உள்ள சிறிய கோவிலில் மேற்கு நோக்கி உள்ள சன்னிதி வெறூமையாக உள்ளது. உள்ளே சிலை எதுவும் அமைக்கப்படவில்லை அல்லது அழிந்திருக்கலாம். இதன் பின்புறம் உள்ள சன்னிதியில் படுத்திருக்கும் நிலையில் பெருமாள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.


சுற்றிச் சுற்றிப் படங்கள் எடுத்தபின் மதிய உணவு. ம். பரவாயில்லை ரகம். அடுத்தது மகிசாசுரமர்த்தினி மண்டபம். இது ஐந்துரதம் செல்லும் சாலையில் உள்ளது. வலதுபுறம் சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மூன்று மண்டபங்கள் உள்ளன. முதல் மண்டபம் பாறையைக் குடைந்து மூன்று சன்னிதிகளுடன் உள்ளது. உள்ளே சிறபங்களோ வேலைப்பாடுகளோ இல்லை.

அதற்கும் சிறிது மேலே சென்றால் அருமையான மகிசன் வதம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மற்றொரு பக்கம் படுத்திருக்கும் திருமால் சிற்பம். பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இவ்விரண்டும் அவ்வளவு அருமை.




அவ்வ்வ்வ்... கால் வலிக்குதே !!! தண்ணீர் வேறு காலியாகிவிட்டது. இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னொரு மண்டபம் தெரிகிறது. அவ்வளவு தூரம் நடக்கமுடியாது என்று மேலே இருந்த இன்னொரு சிறிய மண்டபத்துக்குச் சென்றேன். இது என்ன கண்காணிப்புக் கோபுரமா அல்லது கலங்கரை விளக்கமா தெரியவில்லை. உள்ளே மேலே ஏறிச் செல்ல மாடிப்படிகள் உள்ளன.

கீழே இறங்கிவந்த பிறகு ஐந்துரதம் செல்ல நடைப்பயணம். சாலையின் இருபுறங்களிலும் சிற்பக் கூடங்கள். பெரிய பெரிய புத்தர் சிலைகள் வேலை முடிந்து வெளியில் வைக்கப்பட்டிருந்தன. அடுத்த சோதனையாக என் கேமரா வேலை செய்யவில்லை. பேட்டரியில் சார்ஜ் இல்லை. சும்மா ஒரு 250 படங்கள் மட்டுமே எடுத்திருந்தேன். முக்கியமான ஐந்து ரதங்களைக் கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை. என் அலைபேசியில் மட்டுமே படங்கள் எடுத்தேன்.




ஐந்து விதமான ரதங்களும் விதவிதமான சிற்பங்களுடன் கண்கொள்ளாத அழகுடன் விளங்குகின்றன. யானை, சிங்கம், நந்தி என அனைத்தும் அருமை.

அப்பாடா .... அவ்வளவு தான் கோடையின் கொடுமையில் இதற்கு மேல் என்னால் நடக்கமுடியாது. திருக்கழுகுன்றம் செல்லமுடியாது. பகீரதன் தவம், புலிக்குகை, திருக்கழுகுன்றம் காண முடியவில்லை. பயணம் பாதியில் முடிந்தது.

Wednesday, September 09, 2009

சாண்டில்யனின் கடல்புறா - 1


கலிங்க நாடு. தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும், ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு. அதன் மன்னன் பீமன். இந்நாட்டின் முக்கியத் துறைமுகம் பாலூர்பெருந்துறை. கலிங்க நாட்டில் தமிழ்மக்களுக்கு போதிய பாதுகாப்பின்மையும், அநீதியும் இழைக்கப்படுகின்றன. ஏனென்றால் கலிங்கத்துக்கும் சோழநாட்டிற்கும் பகை.

எனவே சோழ நாட்டு மன்னன் வீரராஜேந்திரர்(இராஜேந்திர சோழரின் மகன்) சமாதானத்தை வேண்டி கருணாகரன் என்ற இளைய பல்லவனைத் தூதுவனாக அனுப்புகிறார். அவன் கப்பலில் புகாரிலிருந்து பாலூர்பெருந்துறை வருகிறான். துறைமுகத்தில் தன் உயிர் நண்பனும் சோழ-சாளுக்கிய இளவரசனான அநபாயன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கச் சோழன்) கலிங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டிடுப்பதை அறிந்து சினம் கொண்டு பீமனுக்கு எதிராக வாய்ச் சண்டையை ஆரம்பிக்க அது வாள்ச்சண்டையில் முடிகிறது.

கலிங்கத்து வீரர்களிடமிருந்து தப்பி வெளிநாட்டவர் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் ஒளிந்து கொள்கிறான். கதாநாயகியை அறிமுகம் செய்ய இதை விட ஒரு நல்ல சமயம் வேண்டுமா? அந்த விடுதியில் தங்கியிருப்பவர் ஸ்ரீவிஜயத்தின் இளவரசரான குணவர்மர் மற்றும் அவர் மகள் காஞ்சனா. ஸ்ரீவிஜயம் இன்றைய சுமத்ரா, இந்தோனேசியா. குணவர்மர் அவர் தம்பி ஜெயவர்மனால் வஞ்சிக்கப்பட்டு அரியணையில் ஏறமுடியாமல் கடாரத்த்தின்(மலேசியா) இளவரசராகவே உள்ளார். எனவே வாரிசுச் சண்டையைத் தீர்த்துவைக்க இராஜேந்திரசோழரின் உதவியை நாடி சோழநாடு செல்வதற்காக பாலூரில் ரகசியமாகத் தங்கியிருக்கிறார்.

கலிங்கமும், ஸ்ரீவிஜயமும் நட்பு நாடுகள். எனவே பீமனும், ஜெயவர்மனும் நண்பர்கள் என்பதையும் நினவில் கொள்க. எனவேதான் குணவர்மர் ரகசியமாகத் தங்கியிருக்கிறார். காஞ்சனாவின் அறையில் ஒளிந்திருக்கும் இளையபல்லவனுக்கும், காஞ்சனா, குணவர்மருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. இளையபல்லவனை மோப்பம் பிடித்த கலிங்கவீரர்கள் விடுதிக்கு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி சோழநாடு ஒற்றனான வணிகன் சேந்தனின் வீட்டிற்குச் செல்கிறான். அதற்குள் அங்கே சேந்தனும் கலிங்கவீரர்களிடம் சிறைப்ப்ட்டிருக்கிறான். இளையபல்லவனும் சிறைப்படுகிறான். நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

சிறையிலிருக்கும் இளையபல்லவனுக்கு அநபாயன் ’அவர்களை எப்படியாவது மீட்பதாகச்’ செய்தி அனுப்புகிறான். சிறையிலிருக்கும் அநபாயர் எப்படித் தன்னைச் சிறைமீட்பார் என யோசிக்கிறான் பல்லவன். எல்லாத் தடைகளையும் மீறி நீதிமன்றத்தில் காஞ்சனாவின் உதவியுடன் அட்டகாசமாக அனைவரையும் சிறைமீட்கிறார் அநபாயன். தப்பிச் செல்லும் அனைவரும் பாலூருக்கு வெளியில் கடற்கரைக் கிராமத்தில் தங்குகிறார்கள். பின்னர் காஞ்சனாவிற்கும் இளையபல்லவனுக்கும் காதல் அரும்புகிறது.


(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.)

சோழநாட்டு இளவரசனும், தூதுவனும், ஒற்றர்களும் தப்பிய செய்தியால் கலிங்கம் முழுவதும் கடும் பாதுகாப்பு இடப்படுகிறது. எனவே தரைவழியாக சோழநாடு செல்வது இயலாத காரியம். கடல்வழியாக மட்டுமே செல்லமுடியும். ஆனால் அங்கும் பாதுகாப்பு பலமாயிருக்குமென்பதால் திட்டமிட்டு சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இப்போதுதான் அறிமுகமாகிறான் அமீர். அரபு நாட்டவன். கதையின் மிகமுக்கியமானவன். அநபாயரின் நண்பன். அமீர் அவர்களை எப்படியாவது தப்பவைப்பதாக வாக்குறுதி கொடுத்து, அவர்களைத் தன் குருவும், கொள்ளையன் என்றும், மாவீரன் என்றும் அறியப்பட்ட அகூதா என்னும் சீனத்துக் கடலோடியிடம் அழைத்துச் செல்கிறான். அகூதா பெரும் வணிகர். கப்பல்களுக்குச் சொந்தக்காரர்.

அநபாயர், இளையபல்லவன், குண்வர்மர், காஞ்சனா, சேந்தன் ஆகிய அனைவரும் மாறுவேடத்தில் அகூதாவின் ஊழியர்கள் போல பாலூர்த் துறைமுகத்தில் நுழைந்து அனைத்துக் காவலையும் உடைத்து பூம்புகார் செல்லும் மரக்கலத்தில் ஏறித் தப்பிப்பது என்பது திட்டம். மிகவும் ஆபத்தான திட்டம். இதனால் ஓரிருவர் இறக்கும் வாய்ப்பும் உள்ளது. துறைமுகவாயிலில் இவர்களின் வேடம் கலையவே ஆரம்பிக்கிறது சண்டை. இளையபல்லவன் சண்டையில் பலத்த காயமடைகிறான். அவனால் மரக்கலம் செல்லமுடியாமல் கடற்கரையிலேயே விழுந்துவிடுகிறான். அநபாயர், குணவர்மர், காஞ்சனா மட்டுமே மரக்கலத்தை அடையமுடிகிறது. அமீரும், சேந்தனும் மரக்கலத்தில் ஏறாமல் கடற்கரையின் மற்றொரு பகுதியை நோக்கி ஓடுகிறார்கள். அடுத்து என்ன நடந்தது??????

அதை அடுத்த பாகத்தில் தான் பார்க்கவேண்டும் :)))))


பட்டையைக் கிளப்பும் இப்புதினத்தில் நிறைய அருமையான சரித்திரத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

1) இராஜேந்திரசோழருக்குப் பின்னர் இரண்டாவது முறையாகக் கடாரமும், ஸ்ரீவிஜயமும் சோழர்களால் வெல்லப்பட்டிருக்கிறது.

2) இளையபல்லவன் பின்னாளில் ’கருணாகர தொண்டைமான்’ எனப் பெயர் கொண்டு கலிங்கத்தின் மீது படையெடுத்து கலிங்கத்தை அழிக்கிறான். செயங்கொண்டார் இப்போரை வைத்துத்தான் ‘கலிங்கத்துப்பரணி’ பாடியிருக்கிறார்.

3) அடுத்தது நாடுகளின் பெயர்கள். இந்த ஆயிரம் ஆண்டுகளில் நாடுகளின் பெயர்கள் எவ்வளவு மாறிவிட்டன.
ஸ்ரீவிஜயம் - இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா
கடாரம் - மலேசியா
நக்காவரம் - நிக்கோபார் தீவுகள்
அட்சயமுனை - Banda Aceh (தமிழில் எப்படிச் சொல்வது??)

இன்னும் பல.....

சாண்டில்யன் அவர்கள் எழுதினால் கவர்ச்சி இல்லாமலா??? இதிலும் நிறைய இருக்கிறது. காஞ்சனாதேவியின் அறிமுகத்தில் மூன்று
பக்கங்களில் அவள் அழகு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இளையபல்லவன், காஞ்சனாதேவி காதல் காட்சிகளும் நிறைய உள்ளன. ;)

ஆமாம் அது என்ன கடல்புறா?? தெரியலங்க... ஒரு வேளை காஞ்சனாதேவியைத்தான் அப்படிச் சொல்கிறாரோ?? (தெரிந்தவர்கள் சொல்லவேண்டாம் :) ) ஒரே ஒரு இடத்தில் மட்டும் இளையபல்லவன், காஞ்சனாதேவியிடம் ‘வீட்டுப்புறா காட்டுபுறா கடல்புறா’ என்கிறான். அவ்வளவு தான்...

விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எழுதப்பட்டிருக்கும் இப்புதினம் சரித்திர ஆர்வம் கொண்ட அனைவரும் வாசிக்கலாம்.

கடல்புறா இணையத்தில் படிக்க - http://kadalpuraaonnet.blogspot.com