Monday, June 23, 2008

(கு)ரங்கும் ஜிலேபியும்


நானானி என்னை ஜிலேபி பிழியச் சொல்லியிருந்தாங்க. பதிவுகள் படிக்கிறதும் கொஞ்சம் குறைஞ்சதால எனக்கு இது என்ன விளையாட்டுன்னே புரியல. சரி ஜிலேபி பத்தி ஒரு மொக்கை போடணும்னு நானாகவே முடிவு பண்ணிக்கிட்டு ஒரு மொக்கைக் கதை.

பெண்பார்க்க வந்திருந்த பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மங்களம் மாமி இனிப்பு வகைகளைக் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். சன்னலில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பாமாவுக்குப் பையனைப் பிடித்திருந்தது. சட்டென மங்களம் உள்ளே வந்து "பாமா, இதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குக் கொடும்மா" என்று காபி கோப்பைகள் இருந்த தட்டைத் தந்து விட்டுப் போனாள்.

குனிந்த தலை நிமிராமல் எல்லோரிடமும் காபி கோப்பைகளைக் கொடுத்த போது தான் கவனித்தாள். தன் அம்மா அவர்களுக்குப் பரிமாறிய இனிப்பு வகையறாக்களில் ஜிலேபியும் இருந்தது. உள்ளே வந்த பாமா அம்மாவைப் பார்த்து மெதுவாக அழுத்தமாகக் கேட்டாள்.

"ஜிலேபியை எதுக்கு அவுங்களுக்குக் கொடுத்தாய்?"
"ஏண்டிம்மா? நீதானே அவங்களுக்குக் கொடுக்கலாம்னு நேத்து இனிப்புப் பண்டமெல்லாம் வாங்கிண்டு வந்தாய்?"
"வந்தேன். ஆனால் நான் ஜிலேபி வாங்கிண்டு வரலை"
"அப்புறம் மேசையில் தட்டில் இருந்த ஜிலேபி??"

பாமா மங்களத்தின் காதில் சொன்னாள்.
"அடிப்பாவி இப்படியா செய்வாய்?" மெதுவாக கூடத்தை எட்டிப் பார்த்துவிட்டு "ஐயையோ மாப்பிள்ளைப் பையன் வேறு ருசிச்சி சாப்பிடுறானேடி!!!" என்று பதட்டப்பட்டாள்.

சற்று நேரத்தில் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்து, பெண்ணைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டு பிள்ளையாண்டானின் அப்பா பாமாவிடம் "குழந்தே! ஜிலேபி நீயே செய்தாயோ? ரொம்ப நன்னாயிருந்தது"ன்னு சொன்னதும் பாமாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆனதும் கணவன் ஸ்ரீதர் பிறந்தநாள் வந்தது.

"ஏண்டி என் பிறந்தநாளுக்கு நீ ஜிலேபி செஞ்சு தர்றியா? உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தபோது சாப்பிட்ட ஜிலேபி இன்னும் தொண்டையிலேயே இருக்கிறதடி. நீதானே செய்தாய் அந்த ஜிலேபியை? ஜிலேபி செய்யணும்னா நம்மகிட்டே மாவு பிழிய உரல் இல்லியே?"

"பரவாயில்லை. பண்ணிரலாம்"

"உரல் இல்லாம எப்படிப் பண்ணுவாய்? இடியாப்ப உரலில் பண்ணலாம்னு சொல்றாயோ? ஜிலேபி ரொம்ப ஒல்லியா வருமோன்னோ?"

"அசடாட்டம் பேசாதேள். சர்க்கரைப் பாகு தயார் பண்ணிட்டாப் போதும். நீங்க கடையில் போய் ஒரு இருபது முறுக்கு மட்டும் வாங்கிண்டு வாங்கோ. கொஞ்சம் கட்டையா இருக்கிறதா வாங்கிண்டு வாங்கோ"

"முறுக்கு எதுக்கு இப்போ? ஜிலேபிதானே வேணும்னு கேட்டேன்"

"ஐயோ! ஜிலேபி செய்யத்தான் முறுக்கு"

"புரியறமாதிரி சொல்லேண்டி"

"ஈஸ்வரா! எனக்கு ஜிலேபியும் செய்யத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. நீங்க என்னைப் பெண் பார்க்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னால தீபாவளிக்குப் பண்ணின முறுக்கும், குலோப்ஜாமூன் செய்து மிஞ்சிய சர்க்கரைப்பாகும் மீதமிருந்தது. பக்கத்து வீட்டு வாண்டு ரங்கு அதையெல்லாம் பாகுல போட்டு ஊற வச்சுட்டான்.அதைப் போய் எங்கம்மா ஜிலேபின்னு எடுத்து உங்களுக்குக் கொடுத்துட்டா. நீங்களும் அந்த ஜிலேபியைப் போய் ஆஹா ஓஹோ புகழ்றீங்களே?"

ஸ்ரீதர் முகத்தில் ஈயாடவில்லை.

Wednesday, June 18, 2008

மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு

'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.

ஒரு சின்ன ப்ளாஷ் பேக். ரெண்டு மாதம் முன்னாடி தூங்கிறப்போ கனவில் கையில் வேலோட முருகனும், அவர் மாமன் அழகரும் வந்து "ஏம்பா, ரெண்டு வருசம் மதுரையில் படிச்சியே எங்களை ஒரு தடவையாவது வந்து எட்டிப் பார்த்தியா? வாராவாரம் அல்வா வாங்கித் திங்கிறதுக்காகவே டவுன்ஹால் சாலை வழியா மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போன நீ அல்வா கிடைக்காதுங்கிறதுக்காக திருப்பரங்குன்றத்துக்கும், அழகர்கோவிலுக்கும் வராம டபாய்ச்சல்ல.. பாரு உனக்கு விடுப்பு கிடைக்காது" அப்படின்னு சொன்னதால "அப்படியெல்லாம் இல்லீங்கோ. நான் கூப்பிட்டப்போ துணைக்கு யாரும் வரமாட்டேன்னு சொன்னதால வரமுடியலீங்கோ. எனக்கு விடுமுறை கிடைச்சா கண்டிப்பா வந்து பார்க்கிறேன்"னு வாக்கு கொடுத்துட்டேன்.

கோவில் குளம்னு கூப்பிட்டாலே கம்பளிப் பூச்சியைப் பார்க்கிற மாதிரி நண்பர்கள் பார்க்கிறதால இப்பவும் தனியாகவே போக வேண்டிய சூழ்நிலை ஆகிப் போச்சு. சரியா இந்த நேரத்துல புரட்சிப்பதிவர் டிபிசிடி வேற மதுரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னதை நம்பி அதையும் என் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கிட்டேன். ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய் அடிக்க முடிவு பண்ணியாச்சு.


கிடைச்சது 9 நாட்கள் விடுமுறை. ஜூன் 7 முதல் 15 வரை. விடு ஜூட். விடுப்புக்கு முதல் நாள் நான் வேலையே பார்க்கலை. எல்லோர்கிட்டயும் போய் "நான் ஊருக்குப் போறேன். ஒரு வாரம் லீவு" அப்படின்னு பீத்திக்கிட்டே திரிஞ்சேன். ரொம்ப பேர் காண்டாகிட்டாங்க. வரும்போது எதாவது திங்கிறதுக்குக் கொண்டு வா. (அட உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதாப்பா? ஊருக்குப் போனா எதாவது திங்க கொண்டு வரணும்னு எவன் சட்டம் போட்டான்?). ஒரு வழியா மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது அதிகாலை மணி 2. டவுன் ஹால் சாலையில் அலைஞ்சு திரிஞ்சு ஒரு விடுதியைக் கண்டுபிடித்து தூங்க ஆரம்பிச்ச போது மணி 2:30.

என் திட்டம் இது தான். முதலில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம். பின்னர் திருப்பரங்குன்றம். அடுத்து அழகர் கோவில். அதற்கப்புறம் மலை மேல் பழமுதிர்ச்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம்.

மீனாட்சி அம்மன் கோவில்
சீக்கிரமே மீனாட்சி அம்மன் கோவில் போகணும்னு முடிவு பண்ணியதால் வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே தூக்கம் போட்டேன். காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டமே இல்லாத தரிசனம். அம்மன் சன்னிதியிலேயே கூட்டம் இல்லை. சுவாமி சன்னிதியில் விழாக்காலங்களிலே கூட கூட்டம் இருக்காது. அதுவும் நான் சென்ற போது கூட்டமில்லாமல் ஒரு தரிசனம். பின்னர் பரிவாரங்களை வணங்கிவிட்டு வெளியில் வந்து தெப்பக்குளப் படிக்கட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாயிற்று.


மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் கோபுரம் முழுவதும் தென்னை ஓலையால் மூடிவைத்திருந்தார்கள். கோவிலுக்கு வெளியே சித்திரை வீதி முழுவதும் சாலையைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் சாலையோரக் கடையில் மதுரை ஸ்பெசல் சுடச் சுட இட்லி சாப்பிடலாமென்றால் என் நேரம் ஒரு கடையும் தென்படவில்லை. சரின்னு வெறும் வயிற்றோடவே திருப்பரங்குன்றம் பேருந்து ஏறிய போது மணி 7:30.

திருப்பரங்குன்றம்
பெரியாரிலிருந்து கால் மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன். முருகனின் முதல் படை வீட்டைத் தரிசிக்கப் போறோமே, கடவுளை நினைத்துக் கொண்டே செல்லணும் என்று 'சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா' என்ற முருகன் துதியைப் பாடிக்கொண்டே கோவிலுக்குள் வந்து சேர்ந்தேன்.


திருப்பரங்குன்றம் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கோவிலின் அமைப்பு ரொம்பவே வித்தியாசமானது. மலைதான் கோவிலின் ஒரு பக்கம். அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,சிலைகளைச் சுற்றிக் கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் இரண்டு தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் நந்தி, மயில், எலி வாகனங்களின் சிலைகள் உள்ளன. அவற்றுக்கு எதிரே இரண்டாவது தளத்தில் முருகர், துர்க்கை, விநாயகர், முருகனுக்குப் பக்கவாட்டில் பெருமாளும், விநாயகருக்குப் பக்கவாட்டில் சிவனும் உள்ளனர்.

துர்க்கைக்கு சன்னிதிக்கு நேரேதான் ராஜகோபுரம் உள்ளது. முருகர் துர்க்கைக்குப் பக்கவாட்டில், தெய்வானையுடன் பக்கவாட்டில் சிற்பமாகக் காணப்படுகிறார். முருகனுக்கு அருகில் ஒருவர் தாடியுடன் உள்ளார். நாரதர் என்று குருக்கள் சொன்னார், அது தவறு இந்திரன் அல்லது அகத்தியராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இங்கும் கூட்டமில்லை. ரொம்ப நேரம் நின்று வணங்கிய பிறகு தெப்பக்குளம் மற்றும் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் ஒரு அக்கா தெருவோரத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். வெறும் ஐந்து ரூபாய்க்கு சில பல இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு திரும்பவும் பெரியார் நிலையம் வந்து சேர்ந்தேன்.

அழகர் கோவில்
அங்கிருந்து பேருந்தில் அழகர் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது மணி 10:15. சுற்றிலும் பச்சை பசேல் என்று மலை. மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில். உள்ளே சென்றால் கோவிலின் வெளியே முதலில் வருவது பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னிதி. இங்கு சாமிக்கு சிலை கிடையாது. மூடப்பட்ட கதவில் சந்தனம் பூசப்பட்டு அதையே கருப்பசாமியாக வழிபடுகிறார்கள். ஏன் என்ற காரணமும், வரலாறும் தெரியவில்லை. ரொம்பவும் சக்திவாய்ந்த கடவுள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெளியே



உள்ளே


மிகுந்த பயபக்தியோடு வணங்கிவிட்டு அழகர் கோவிலின் உள்ளே சென்றால் இங்கும் கூட்டமில்லை. சனிக்கிழமையாதலால் பூஜைகள் நடந்து கொண்டிருந்ததன. கொஞ்ச நேரத்தில் அது முடியவும் அழகரையும் தரிசித்துவிட்டு பிற சன்னிதிகளையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் நம் முன்னோர்களின் குறும்பு. பூஜை முடிந்து வாழைப்பழம் வைத்திருந்தவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.

பழமுதிர்ச்சோலை

அழகர்மலையின் மேலே முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை உள்ளது. இங்கு செல்வதற்கு அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் இருப்பது போல. மலைப்பாதையில் பத்து நிமிடப் பயணம். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இறக்கிவிடுகிறார்கள். இந்த முருகன் கோவில் கொஞ்சம் சிறியது தான். விநாயகர், முருகர், பெருமாள் சன்னிதிகள் மட்டுமே உள்ளன.

இராக்காயி அம்மன் கோவில்

பழமுதிர்ச்சோலையில் இருந்து அதே மலைச்சாலையில் ஒரு பத்து நிமிடம் நடந்தால் நூபுரகங்கை எனப்படும் வற்றாத தீர்த்தக்கிணறு மற்றும் அதை ஒட்டி இருக்கும் இராக்காயி அம்மன் கோவிலையும் தரிசிக்கலாம். எல்லோரும் தீர்த்தக் கிணற்றில் குளித்து விட்டு வந்து தரிசிக்கிறார்கள். நான் தலையில் தெளித்துக் கொண்டு இராக்காயி அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் என் புயல்வேக ஆன்மீகப் பயணம் முடிவுக்கு வந்தது. அப்போது மணி 12:10.

வௌவால் தெரியுதா?



அழகர்மலையின் அழகிய தோற்றம்



திரும்பவும் மலையில் இருந்து இறங்கி அழகர்கோவில் சென்று பின் பெரியார் நிலையத்தில் இறங்கி, சாப்பிட்டு விட்டு டவுன்ஹால் சாலை பிரேமாவிலாஸில் அல்வா சாப்பிட்டுவிட்டு விடுதிக்குச் சென்று பேய்த்தூக்கம் போட்டேன்.

மதுரையில் கண்ட மாற்றங்கள்
1. பண்பலை வானொலிகள்
2. மாற்றம் செய்யப்பட்ட பெரியார் நிலையம் மற்றும் புதிய மேம்பாலம்
3. ஏகப்பட்ட ஏர்பஸ்கள். இரண்டுமடங்கு கட்டணம்.
4. தங்கரீகல் திரையரங்கு மாற்றம் செய்து கட்டப்படுகிறது. DTS,ACயுடன்.
5. டவுன்ஹால் சாலையில் ஒரு தேநீர் 4 ரூபாய். அநியாயம்.

என்றும் மாறாதது
வாங்கண்ணே என்னும் மக்களின் அன்பு. (ஐஸ் ஐஸ்... நானெல்லாம் உங்களுக்கு அண்ணனா? எப்பவும் அன்புத்தம்பிதேன்)

பெருமாள் தெப்பம் - டவுன்ஹால் சாலை

இந்த அழகான தெப்பக்குளம் நேதாஜி சாலைக்கும் டவுன்ஹால் சாலைக்கும் இடையில் இருக்கிறதென்றால் நம்பமுடிகிறதா? தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்து விட்டதால் இப்பொழுது தெப்பக்குளத்துக்குப் போக வழியே கிடையாது.

சின்ன சந்தேகம்
ஏன் அழகர்கோவில் கருப்பசாமி சன்னிதியில் சிலை வழிபாடு இல்லை? யாருக்காவது தெரியுமா?

பதிவர் சந்திப்பு
மதுரை வந்ததிலிருந்தே பதிவர் டிபிசிடியின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்தன. முதலில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என்று சொன்னபோது என் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு திடீரென்று ஒருநாள் "நான் டிபிசிடி பேசுறேன். இது தான் என் கைப்பேசி எண்" என்று சொல்லிவிட்டு நான் "அப்புறம்" என்பதற்குள் டீங் டீங் டீங். தொடர்பைத் துண்டித்துவிட்டார். அப்புறம் இரண்டு நாட்களாக பேச்சு மூச்சைக் காணோம்.

சந்திப்புக்கு முதல் நாள் தொலைபேசி "எங்க சந்திப்பு நடத்துறீங்க?"ன்னு கேட்க "நாளைக்கு சந்திப்புக்கு நாளைக்குத்தான் முடிவு பண்ணனும்" அப்படின்னு மர்மச்சிரிப்பு சிரிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி.'நான் அவசரமாக போடி போகிறேன். என்னால் உங்களைச் சந்திக்க முடியாது' என்று. பின்னூட்ட பாணியில் ஒரு சோக ஸ்மைலியை அவருக்கு குறுஞ்செய்தியில் அனிச்சையாக அனுப்பிவிட்டேன்.

ஆகக் கூடி சந்திப்பு இருக்குன்னு ஆசையைக் கிளப்பிவிட்டு கடைசியில் எஸ்ஸாகிப் போன டிபிசிடியின் நடவடிக்கைகளில் சந்தேகமும் ஒரு வித பதற்றமும் இருப்பதால் எதற்கும் மலேசியா காவல்துறை அவர்மேல் ரெண்டு கண்ணையும் வைப்பது நல்லது. சந்திப்பு இல்லாததால் சாவகாசமாகக் கிளம்பி இரவு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

Wednesday, May 07, 2008

குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பாதிப்பு!


'குவெஸ்ட் நெட் (Quest Net முன்பு Gold Quest)' தங்கக் காசு மல்ட்டி மார்கெட்டிங் ஏமாற்று வேலை அம்பலமாகிவிட்டது. இப்போது தான் எல்லோரும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை கண்டிப்பாக எல்லோருக்கும் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருக்கிறது.

இதில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பெரும்பாலோனோர் கணினி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். ஆனால் இவர்கள் அனைவரும் வெளிப்படையாக புகார் தெரிவிப்பது கடினம் தான். ஏனென்றால் இந்தப் பணம் இவர்களுக்கு ஒரு மாதம் அல்லது அரைமாதச் சம்பளம் தான்.

சரி. இது என்ன முறைகேடு என்பதைப் பார்க்கலாம். குவெஸ்ட் நெட் என்பது ஒரு பன்னாட்டு மல்ட்டி மார்க்கெட்டிங் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் உள்ளது. இவர்களது தங்கக்காசுத் திட்டத்தில் சேர முதலில் 33000 ரூபாய் கட்ட வேண்டும். (முதலில் குறைவாக இருந்திருக்கலாம். அல்லது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலித்திருக்கலாம். பெங்களூரில் வசூலித்த தொகை 33,000). அதற்குப் பதில் அவர்கள் ஒரு தங்கக்காசு அல்லது சில வெள்ளிக்காசுகள் கொடுப்பார்கள். அந்தக் காசு உலகில் வேறு எங்கும் கிடைக்காது. அந்தக் காசின் உருவம்,வடிவத்தை இவர்கள் பதிவு செய்து வைத்திருப்பார்கள். எனவே இந்தக் காசை வெளியில் யாரும் போலியாகத் தயாரிக்க முடியாது(!?).

இந்தக் காசுகளை நாம் இணைய தளத்தில் விற்கலாம். வாங்குவதற்கு வெளிநாட்டு மக்கள் அலைமோதுவார்களாம். ஏனென்றால் அந்தக் காசு வேறு எங்கும் கிடைக்காதாம். இப்படியெல்லாம் முதலில் அவர்களது அறிமுகக் கூட்டத்தில் சொல்வார்கள். அதன் பின்னர் நாம் நமக்குக் கீழே 3 பேரை இந்தத் திட்டத்தில் சேர்த்து விடவேண்டும். அப்படி சேர்த்து விட்டால் அதற்கான கமிசன் தொகை நமக்குக் கிடைக்கும். அது போக அவர்களுக்குக் கீழே ஆட்கள் சேரச்சேர அதற்கான கமிசன் தொகையும் நமக்குக் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.

அந்தக் காசை இணைய வர்த்தகத்தின் மூலம் மட்டுமே விற்க முடியும். அதன் எடை வெறும் 6கிராம்தான். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் 33,000 கட்டிவிட்டு நம்மால் மூன்று பேரை சேர்த்துவிட முடியாவிட்டால் வெறும் 6கிராம் காசோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். மிச்சப்பணம் அவ்வளவுதான். கேட்பதற்குச் சுலபமான வழியாகத் தெரியும், மூன்று பேரைச் சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

இதன் அறிமுகக் கூட்டமே பயங்கர பரபரப்புடன் நடக்கும். முதலில் நவநாகரீகமான இளைஞர்கள், இளைஞிகள் மேடைக்கு வந்து "நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், இந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், போன வருசம் இந்தத் திட்டத்தில் சேர்ந்தேன், இப்போ வாராவாரம் எனக்கு 30,000 கமிசன் கிடைக்கிறது, நான் கூட முதலில் யோசித்தேன் இதில் சேரலாமா என்று ஆனால் இன்று நான் கோடீஸ்வரி, நீங்கள் ஆக எப்போ பணக்காரர் ஆகப் போகிறீர்கள்?, இப்போ கூட நான் விமானத்தில் தான் இங்கு வந்தேன். போனவாரம் நான் ஹோண்டா சிட்டி கார் வாங்கினேன் நீங்களும் வாங்க வேண்டாமா? கையில் வெறுமனே காசை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றெல்லாம் விடுதியில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்கள் போல மூளைச் சலவை செய்வார்கள்.

இதில் வெளிப்படையாகத் தெரியும் குளறுபடிகள் என்னென்ன?
1. ஒரு சாதாரண தங்கக்காசினை வாங்குவதற்கு இணையத்தில் எப்படி மக்கள் இவ்வாறு போட்டி போடுவார்கள்?

2. நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிட்டால் நமக்கும் கமிசன் கிடைக்கும் என்பதை எப்படி நம்புவது? நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிடுவது நமக்கு எப்படித் தெரியும்?

3. இந்தத் திட்டத்தில் யாரும் நேரடியாகச் சேரமுடியாது. யாராவது உறுப்பினராக இருந்தால் அவர் மூலம் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதன் மூலம் நிறுவனத்துக்கும் சேருபவருக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது.

இப்போது இத்திட்டத்தில் சேர்ந்த எல்லோருமே யாரைக் கேட்பதென்று தெரியாமல் தம்மைச் சேர்த்துவிட்ட நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காசின் தற்போதைய மதிப்பு EBayல் 80,000 ரூபாயாம். (யாராவது உறுதிப்படுத்துங்க). எனது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் இதில் 6 பேர் ஏமாந்திருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு மட்டுமே தங்கக்காசு அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாருக்கும் வரவில்லை. அனைவரும் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இந்த நிறுவனம் மூடப்பட்ட செய்தியே பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் பணம் மட்டுமே போயிருக்கிறது.

இன்னமும் 'இந்த நிறுவனம் நல்ல நிறுவனம், இதைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள், எனக்கு போனவாரம் கூட செக் வந்தது காட்டட்டுமா?' என்றெல்லாம் சிலர் இணையத்தில் சவால் விடுகிறார்கள். அவர்களுக்குச் சில தகவல்கள்

1. காவல்துறையிடம் நிறுவனத்தைப் பற்றிப் புகார் கொடுத்ததும் அதன் சென்னை கிளை தலைமை நிர்வாகி(கூட்டத்தலைவன்?) ஹாங்காங் சென்று மாயமானது ஏன்? சட்டப்படி பிரச்சினையை எதிர் கொண்டிருக்கலாமே? இந்நிறுவனம் 2003லேயே ஒருமுறை மோசடிக்காக மூடப்பட்டு சீல்வைக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

2. இந்த நிறுவனம் பிலிப்பைன்ஸ், நேபாளம், இலங்கையில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாம். இந்நிறுவனத்தின் உரிமையாளரை சர்வதேச காவல்துறை தேடி வருகிறது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிறுவனம் திரும்பவும் ஜெகஜ்ஜோதியாகத் திரும்பவும் கடை(வலை?) விரிக்கிறதென்றால் நம் சட்டம் அவ்வளவு எளிதில் ஏமாற்றப்படக் கூடியதா? :(

தொடரும் இது போன்ற மோசடிகளுக்கு யார் காரணம்?

சட்டம் சரியில்லை என்பதெல்லாம் அப்புறம். சொல்வதற்கே சங்கடமாக உள்ளது. மன்னிக்கவும். பணம் போட்டு ஏமாந்த மக்களை காயப்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை. விரைவில் பணம் பார்க்க வேண்டும் என்ற மக்களின் பேராசையே காரணம். யாரும் ஒரே நாளில் பணக்காரனாக முடியாது. கூடுதல் வருமானம் வேண்டுமென்றால் தற்போது எத்தனையோ வழிகள் உள்ளன. நல்ல நல்ல லாபம் தரும் மியூட்சுவல் பண்ட்கள் எவ்வளவோ உள்ளன. இன்னும் அதிகம் வேண்டுமானால் பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளன. அதன் மூலம் திறமையுடன் செயல்பட்டு நல்ல வருமானம் பார்க்கலாம்.

மென்பொருள்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அப்பாவி, படிக்காத நடுத்தர வர்க்க மக்கள்தான் சீட்டுக்கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாற்றப்பட்டார்கள் என்றால் படித்தவர்களும் இப்படி இருக்க வேண்டுமா? பெரும்பாலானோர்க்கு அரை மாதச் சம்பளம்தான், அதற்காக தெருவில் ஏமாற்றிப் பிழைப்பவனிடம் காசை அள்ளி வீச வேண்டுமா? :(

Monday, May 05, 2008

கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்


உலகம் வெப்பமாவதும், பருவமழைக் குளறுபடிகளும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் விழிப்புணர்வையும், தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் பொறுப்புணர்வின்றி செயல்படும் போது கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சுகின்றன.

பெங்களூர் பூங்கா நகரம் என அழைக்கப்பட்டாலும் அந்தப் பெயரை இழக்கும் நாட்கள் வெகுவிரைவில் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரத்தில் தக்காண பீடபூமியின் தெற்கு எல்லையில் இருப்பதால் மிதமான வெப்பநிலையும், வனங்கள், மழைவளம், தேவையான நிலத்தடி நீர் என இயற்கை வளங்கள் மிகுந்தே இருக்கிறது. ஆனால் போகிற போக்கில் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் நிலை தோன்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பெங்களூர் மட்டுமல்லாது மொத்த கர்நாடகத்துக்கும் மிக முக்கிய வருவாய், வனங்களை அழித்து நிலம் ஒதுக்கிக் கொடுத்ததால் வளர்ந்த கணினி நிறுவனங்கள் கொடுப்பதேயாகும். அசுர வளர்ச்சியும், இந்த நிறுவனங்களின் ஊழியர்களும், இந்நிறுவனங்களில் வேலைதேடி வந்து இங்கே வந்து தங்கியிருப்பவர்கள் மட்டும் தான் இங்கே பெரும்பான்மை மக்கள். நகரின் முக்கிய பிரச்சினையான போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்கள் சிறிய நகரத்தில் அடைந்து கிடக்கும் மக்கள், அவர்களால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெருக்கடிகள், பெரும்பான்மையாக சாலையில் ஓடும் இரவு பகல் பாராமல் கணினி நிறுவன ஊழியர்களை ஏற்றி வரும் வாகனங்கள் தாம்.

போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சாலைகளை அகலப்படுத்தியும், பாலங்கள் கட்டியும் பார்த்தாயிற்று. முடிந்தபாடில்லை. இந்த போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டவை சாலை ஓரங்களில் இருந்த மரங்கள். பாரபட்சம் இல்லாமல் வெட்டிச் சாய்க்கப்பாட்டதன் விளைவு இன்று நகரில் வெப்பநிலை உயர்வு. இந்தக் கோடையில் இன்று வரை பெங்களூரின் அதிகபட்ச வெப்பநிலை 39டிகிரி செல்சியஸ். நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கன்னடர். தமிழ் நன்றாகப் பேசுவார். அவர் சொன்னது "15 வருடம் முன்பு பெங்களூரில் ஏப்ரல் மாதத்தில் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டுதான் வெளியே போகமுடியும். இப்போ பாருங்கள் எவ்வளவு வெயில்!" என்று மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார்.

இந்தப் போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்களுள் ஒன்று முக்கால்வாசிப் பேர் வாகனம் வைத்திருக்கிறார்கள். இங்கே நகரப் பேருந்துகளில் பயணக்கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்கு, தனிவாகனத்தில் சிரமமில்லாமல் செல்லலாம் என்ற எண்ணம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. போக்குவரத்தைக் குறைக்க மெட்ரோ ரயில் என்ற புதிய திட்டத்துக்காக மகாத்மா காந்தி சாலையில் இருக்கும் ஏகப்பட்ட மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அல்சூர் பழைய சென்னை சாலையில் இருக்கும் மரங்களும் சமீபத்தில் வெட்டப்பட்டன. மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதனால் பின்னாளில் ஏற்படும் பாதிப்புகளை ஆராயாமல் தற்காலிகமாகத் தீர்வுகாணும் அரசின் போக்கால் பிற்காலத்தில் பெரிய விளைவுகள் ஏற்படலாம்.

இதுவரை எத்தனையோ ஆயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பதில் புதிய மரக்கன்றுகள் எங்காவது நடப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை. வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் புதிய மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உள்ளது.

போனமாதம் மடிவாளாவில் வெட்டிச்சாய்க்கப்பட்ட மிகப்பெரிய ஆலமரத்தை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது. காரணம் சாலையை அகலமாக்குகிறார்களாம். மடிவாளா காவல் நிலையத்தில் இருந்து செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை நிறுத்தம் வரை உள்ள 200 மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மடிவாளா ஐயப்பன் ஆலயம் அருகில் - சாலையின் ஓரம் கூட இல்லை - அதையும் தாண்டி உள்ளே இருந்த ஒரு மிகப்பெரிய ஆலமரமும், அந்த சாலையில் இருந்த பிற மரங்களும் வெட்டப்பட்டன. என்னதான் இந்த 200 மீட்டருக்கு சாலையை அகலப்படுத்தினாலும், செயிண்ட் ஜான்ஸ் நிறுத்தம் தாண்டி திரும்பவும் சாலை குறுகலாகத்தான் செல்லும். என்ன ஒரு அறிவாளித்தனத்துடன் அரசு இயந்திரம் வேலை செய்கிறது பார்த்தீர்களா?

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 7


இந்த நிலை இங்கே மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் தான். தேசிய நெடுஞ்சாலை 7ல் நான்கு வழிப்பாதைக்காக போடப்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நடும் அறிகுறியே இல்லை. மாறாக சாலையின் நடுவில் மட்டும் பூச்செடிகளை வைத்து அழகு பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் அற்பத்தனமாக செயல்பட்டு மரங்களை வெட்டிவிட்டு, சாலையின் நடுவில் புற்களையும், குரோட்டன்ஸ் செடிகளை வளர்த்து அழகு பார்ப்பதால் மழை பெய்யாது மாறாக வெப்பநிலை மட்டுமே கூடும். கோவை மாவட்டத்தில் ஒரு நான்குவழிச்சாலைக்காக வெட்டப்பட்டு கணக்கு காட்டப்பட்ட மரங்கள் 1300. கணக்கில் வந்தது மட்டுமே இவ்வளவு என்றால் வராததை எல்லாம் நினைத்தால் கண்ணீர் மட்டும் மிஞ்சும்.

குறிப்பாக தமிழகத்தில் முக்கியமான சாலைகள் எல்லாம் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுவதால் ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. தேநெ 7 க்காக கன்னியாகுமரியிலிருந்து ஓசூர்வரை, மதுரை-சென்னை சாலையிலும் பணிகளுக்காக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு வருகின்றன.

மாறிவரும் சூழ்நிலையில் இவையெல்லாம் நாட்டுக்கு முக்கியமான திட்டங்கள்தாம். ஆனால் வெட்டப்படும் மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கும் பொறுப்பும் அரசிடமே உள்ளது என்பதையும் உணரவேண்டும். ஏற்கனவே பெரும்பாலும் வறண்ட பூமியாக உள்ள தமிழகத்தில் இருக்கும் மரங்களையும் வெட்டி விட்டு, பதிலுக்கு மரக்கன்றுகளும் நடாமல் மெத்தனமாக இருந்தால் மேலும் பாதிப்புகள் நமக்குத்தான் பிற்காலத்தில் ஏற்படும் என்பதை அரசுகள் உணரவேண்டும்.

இல்லையெனில் தொழில்வளம் பெருகும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் மழை பெய்யாது, கையில் காசிருந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. :(

Tuesday, April 29, 2008

ஜோகிந்தர் அல்ல 'சென்டிமென்ட்' சர்மா & ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்



நேற்று நடந்த சென்னை-பெங்களூர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் நம்ம ஜோகிந்தர் சர்மாவின் கடைசி ஓவர் ராசி வேலை செய்தது. இந்தியா விளையாடும் 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலெல்லாம் ஜோகிந்தர் கடைசி ஓவர் பந்து வீசி வெற்றிக்கனியைப் பறித்துத் தந்திருக்கிறார். அது போலவே அணித்தலைவர் தோனியும் அவரையே எல்லாப் போட்டிகளிலும் கடைசி ஓவர் பந்து வீச வைக்கிறார். இந்த சென்டிமென்ட் நன்றாகவே வேலை செய்கிறது.

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடும் தோனி ராசி காரணமாக ஜோகிந்தரை சென்னை அணியில் இழுத்துப் போட்டு தொடர்ந்து வெற்றியைத் தேடித் தந்து வருகிறார் ஜோகிந்தர். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன் எடுக்க வேண்டிய நிலையில் நம் ஜோகிந்தர் பந்து வீசி வெற்றியைப் பறித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே நம் ஜோகிந்தருக்கு 'சென்டிமென்ட் சர்மா' என்ற பட்டம் சென்னை அணியின் ரசிகர்கள் சார்பாக வழங்கப்படுகிறது.

கொசுறு : நேற்று பெங்களூரில் சென்னை அணி ஜெயித்ததும், இதுக்குக் கூட அடியைப் போடுவானுங்கடா லூசுப் பசங்கன்னு நினைத்து நம்ம ஆட்கள் யாரும் வெளியில் தலை காட்டவில்லை. :)

-----XX-----

ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்


மின்னஞ்சல் 1 : உங்களுக்குத் தெரியுமா ஸ்ரீசாந்த் ஏன் அழுதார் என்று?


...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........

இது தான் காரணம் :)



மின்னஞ்சல் 2 : நியூட்டனின் மூன்றாம் விதியும் ஸ்ரீசாந்தும்

எல்லா வினைக்கும் ...........


சரிசமமான எதிர்வினை உண்டு ......



மின்னஞ்சல் 3 : கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சைமண்ட்ஸைக் கேட்டார்


ஹைடனைக் கேட்டார்


ஏன் கைஃப்பைக் கூடக் கேட்டார்



கடைசியாக ஹர்பஜன்தான் கேட்காமலேயே கொடுத்தார்






நன்றி :
சாம்
-----XX-----
அழுத பிள்ளை சிரிச்சிச்சாம்!! கழுதைப் பாலைக் குடிச்சிச்சாம் !!




Friday, April 25, 2008

அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


நம்ம ஊர்ல ஏகப்பட்ட வகையறா இருக்குதுங்க. ஒவ்வொரு வகையறாக்கும் ஒவ்வொரு குலசாமி. ஒவ்வொரு வகையறாக்கும் ஒரு ஒரு வித்தியாசமான பேரு இருக்கும். அதை வச்சுத்தான் எப்பவாவது பொது இடத்துல வச்சுக் கூப்பிட்டு கிண்டலடிப்பாங்க.

அந்தப் பேரு எல்லாம் ரொம்ப சிரிப்பா இருக்கும். அந்தந்த பரம்பரையில இருந்த முன்னோருங்க பண்ணிய சேட்டையையே பட்டப்பெயராக வைத்து தலைமுறைகள் கடந்தும் அந்தப் பேர் அவர்களின் சந்ததிகளையும் அழைக்கப் பயன்பட்டு வருகிறது.

சரி. சரி. அந்தப் பெயரெல்லாம் என்னன்னு பார்ப்போம்.

  • மத்தியானச்சோறு
  • கட்டுச்சோறுகளவாணி
  • அரைப்பனையேறி
  • குருத்துப்புடுங்கி
  • மட்டைநக்கி
  • ஆவாரங்கட்டை

இப்படி நிறைய இருக்கு. ஞாபகம் வரும்போது சொல்றேன். ஒன்னொண்ணுக்கும் பெயர்க்காரணம் பார்ப்போமா?

மத்தியானச்சோறு
எங்க ஊர்லயே அந்தக் காலத்துல பெரிய பணக்காரங்க. அரிசி சாதம் வைக்கிறதே பெரிய விசயமாம் அப்போ. ஆனா இவுங்க வீட்டுல மட்டும் தினமும் மதியம் அரிசி சாதம் தானாம். அதான் இந்தப் பேரு.

கட்டுச்சோறுகளவாணி
திருவிழாவுக்குப் போயிருந்த இடத்துல கட்டுச்சோத்தைக் களவாண்டு சாப்பிட்டு மாட்டிக்கிட்டாராம் இவுங்க பரம்பரையில ஒரு தாத்தா. பாவம் அவரால அவர் பேரப்புள்ளைங்க மத்தவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க.

அரைப்பனையேறி
நொங்கு திங்கிற ஆசையில விறுவிறுன்னு பனைமரம் ஏறிட்டு பாதி ஏறுனதும் கீழே குனிஞ்சு பார்த்திருக்கார். பயந்தே போயிட்டாரு. மேலேயும் ஏறத் தைரியம் இல்லை. கீழேயும் இறங்க முடியலை. பயந்து போய் ரொம்ப நேரமா பாதிப் பனைமரத்திலேயே இருந்திருக்கார். பாவம். மத்த ஆளுங்க எப்படியெல்லாம் ஓட்டியிருப்பாங்கன்னு நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது.

குருத்துப்புடுங்கி
குட்டிக் குட்டிப் பனை மரங்களில் குருத்தை மட்டும் உருவி எடுக்கிறதில கில்லாடிகளாம். என்ன ஒரு குரங்குச்சேட்டை இது?

மட்டைநக்கி
கள்ளு குடிக்க காசு இல்லாம குடிச்சுப் போட்ட மட்டையை நக்கி நக்கி போதை ஏத்திக்கிட்டாராம் ஒரு பெருசு.

ஆவாரங்கட்டை
சந்தைக்குப் போயிட்டு வர்றப்ப நம்ம ஆளுக்கு வயித்தைக் கலக்கியிருக்கு. ஆள் இல்லாத இடமா ஒதுங்கி அங்க இருந்த ஆவாரஞ்செடியை மடக்கி உட்கார்ந்திருக்கார். எல்லாம் முடிச்சிட்டு எந்திருச்சப்ப மடக்கியிருந்த ஆவாரஞ்செடி தடார்னு நிமிர்ந்து நம்ம ஆளு முதுகு பூரா ஷேம் ஷேம் பண்ணிடுச்சாம். சிங்கம் மாதிரி இருந்த நாம இப்படி அசிங்கமா ஆகிட்டோமேனெல்லாம் பீல் பண்ணாம, எந்திருச்சி நின்னாலும் முதுகுல ஒன்னும் ஒட்டலைன்னு நம்ம ஆளு துடைச்சுப் போட்டுட்டு போகப் பார்க்க சைடு வாக்குல ஒளிஞ்சிருந்த கூட்டாளிங்கலாம் பார்த்து கிண்டலடிச்சி ஊரைக் கூட்டாமலே விசயத்தைச் சொல்லிட்டாங்களாம் ஊருக்குள்ள.

இன்னிக்கும் ஊருக்குள்ளாற ஆவாரங்கட்டைன்னாலே ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான். இந்த வகையறாப் பசங்கள பொது இடத்துல் ஆவாரங்கட்டைன்னு கூப்பிட்டாலே நெளிவானுங்க. இன்னொரு முக்கியமான விசயம் எங்க ஊர்ல வீட்டுல முதன் முதல்ல டாய்லட் கட்டினது இந்த வகையறாதானுங்க.

இதுதாங்க நம்ம ரெண்டு வ.வா.சங்கப் போட்டிக்கு. இந்தப்பதிவுல எங்க ரெண்டு வருதுன்னு யோசிச்சீங்கன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்.


படம் நன்றி : http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.html

Thursday, April 24, 2008

இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க?



யாரா இருந்தாலும் சரி.. வெறிநாய்னா குலைக்கத்தான் செய்யும் !!

அடங்குடாடேய்! யோகா கத்துக்குற மூஞ்சியைப் பாரு !

நன்றி : சாம்