Monday, February 07, 2011
'அய்யனார்' படத்தின் 'பனியே!' பாடல் ..
சமீபத்தில் வெளியான 'அய்யனார்' படம் அந்த அளவு வெற்றி பெறவில்லை. கதாநாயகனாக 'ஈரம்' படத்தின் 'ஆதி' நடித்திருந்தார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் 'தமன்'. தலைவர் யாருமல்ல. பாய்ஸ் படத்தில் ட்ரம்ஸ் வாசிக்கும் குண்டு பையன் தான்.
இவர் மிக அருமையாக இசை அமைத்துள்ளார். இப்படத்தில் 'கவிப்புயல்' தாமரை அவர்கள் தன் அருமையான வரிகளால் தூயதமிழில் வழமை போல் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
இந்தப்பாடல்தான் 'பனியே! பனியே! என் இதயம் புல்நுனியா?' எனத்துவங்கும் அருமையான பாடல்.
தினமும் நான்கைந்து முறை தொடர்ச்சியாகக் கேட்கிறேன். நீங்களும் இந்தப் பாடலை மறக்காமல் கேட்டு மகிழுங்கள். :)
http://mp3.tamilwire.com/ayyanar-2010.html
Wednesday, February 02, 2011
கண்ணாடி மாற்ற நேராக ஆப்டிகல்ஸ் செல்பவரா நீங்கள்? ஒரு நிமிசம் ..
என் கண்ணில் திடீரென ஒரு பிரச்சினை. கண்ணாடி அணிந்திருக்கும் எனக்கு எதையாவது கூர்ந்து பார்த்தாலோ, படித்தாலோ கண் கூசியும், வலிக்கவும் செய்தது.
தொடர்ந்து ஒருவாரமாக இந்தப் பிரச்சினை இருந்ததால் கண்ணில் பிரச்சினையாக இருக்கும் என சந்தேகித்து கண் மருத்துவரிடம் சென்றேன்.
முதலில் ஒருமணிநேரத்தில் நான்கு முறை கண்ணில் சொட்டு மருந்து ஊற்றி பின் மருத்துவரிடம் அனுப்பினார்கள்.
என் பிரச்சினையைக் கேட்டபிறகு, கண்ணில் லென்சுகளை மாற்றி மாற்றி எழுத்துக்களைப் படிக்கச் சொன்னார்.
பின் அவர் கேட்ட முதல் கேள்வி "கண் மருத்துவரை இதற்கு முன்னால் எப்பொழுது பார்த்தீர்கள்?"
சத்தியமாக எனக்கு நினைவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை அருப்புக்கோட்டையில் முதன்முதலில் கண் பார்வைக் குறைபாட்டிற்காகச் சென்றேன்.
சொன்னால் காறித்துப்புவார் என்பதால் "2 வருடம் முன்பு சென்று பார்த்தேன்" என்று சொன்னேன்.
"எந்த மருத்துவரைப் பார்த்தீர்கள்?"
"இங்கு இல்லை. பெங்களூரில்" - இதுவும் பொய்.
"சரி. கடைசியாக கண்ணாடி எப்போது 'பவர்' செக் செய்து மாற்றினீர்கள்? எங்கு மாற்றினீர்கள்?"
"போன வருடம் ஜிகேபி ஆப்டிகல்சில் 'பவர்' செக் பண்ணி மாற்றினேன்"
"ஏன் கண் மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை?"
மாட்டிக் கொண்டேன்.
"சொல்லுங்கள். ஏன் கண் மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை?"
மௌனம்.
"உங்கள் கண்ணில் தற்போதுள்ள குறைபாடு -2.75. ஆனால் நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் பவர் -3.5. நீங்கள் ஆப்டிகல்ஸ் சென்றால் அங்கிருப்பவர்கள் ஒன்றும் மருத்துவர்கள் இல்லை. வியாபாரிகள். அவர்கள் எப்படி சரியான பவரைச் சொல்லமுடியும்? நீங்கள் உங்கள் கண்ணின் குறைபாட்டை விட அதிக பவர் உள்ள கண்ணாடி அணிந்திருப்பதால் தான் கண் வலிக்கிறது" என்றார்.
எனக்கு இப்படி எல்லாம் பிரச்சினை இருக்கும் என்பதே அப்போது தான் புரிந்தது.
எனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் இலவசமாக ஆப்டிகல்ஸில் பவர் செக் செய்து கொள்ளலாம் என நினைத்து அங்கே சென்றால் எந்த லட்சணத்தில் செய்வார்கள் என்பதைப் பாருங்கள்.
பவர் செக் செய்தபின், எனக்கு வேறு எந்தக் குறையும் கண்ணில் இல்லை எனவும், பவர் செக் அல்லது பார்வைக்குறைபாடு என்பது கண்ணில் உள்ள பிரச்சினையில் 5% மட்டுமே எனவும், இனி பவர் செக் செய்ய ஏதாவது ஒரு கண் மருத்துவரை மட்டுமே சென்று பாருங்கள் என்றும் அறிவுறுத்தினார். ரூ.200 மட்டுமே வாங்கினார்.
கண் நம் உடலின் முக்கிய உறுப்பு. அதில் குறைபாடு என்றால் கஞ்சத்தனம் காட்டவேண்டாம். அதை எனக்கு உணரவைத்த மருத்துவர் குமரனுக்கு நன்றி.
Subscribe to:
Posts (Atom)