Tuesday, February 19, 2008

பதிவுலக க்விஸ் மற்றும் 'ஒரு (தி)தொரட்டியின் கதை'



கீழே கொடுத்திருக்கும் கேள்விக்கெல்லாம் சரியா பதில் சொன்னா 'கண்ணம்மா' கார்த்திக் பிரபு ஆறு மாசம் முன்னால நடந்த போட்டியில் எனக்கு பரிசா அனுப்புறேன்னு சொல்லி இன்னமும் அனுப்பிக்கிட்டிருக்கிற 'கணையாழியின் கடைசிப்பக்கங்கள்' அவர் அனுப்பியவுடன் பரிசாகக் கொடுக்கப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

நொந்தழல் கவின்னு அன்போட அழைக்கப்படுபவர்
1. செந்தழல் ரவி
2. வெந்தழல் பீவி
3. வெண்குழல் ஆவி

காண்டு கஜேந்திரன், பேண்டு பலராமன், புரளி மனோகர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி விளிக்கப்படுபவர்
1. டோண்டு ராகவன்
2. மாண்டு மாதவன்
3. நண்டு நாயகன்

அய்யனார் என்பவர்
1. திருவள்ளுவர்
2. விவேகானந்தர்
3. கவிஞர் கம் பதிவர்

ராசி ஏழுமலை என அழைக்கப்படுபவர்
1. காசி ஆறுமுகம்
2. ஓசி ஏறுமுகம்
3. பாசி பரமசிவம்

TBCD ன்னா என்னா அர்த்தம்?
1. Tamilnadu Born Confused Dravidan
2. Thailand Born Confused Dravidan
3. TuBerClosis Disease

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்புக்கு பதிவுலக உதாரணம்
1. டோண்டு - லக்கிலுக்
2. காண்டு - கோலி காண்டு
3. செந்தழல் - க.கந்தசாமி

பொருத்துக :

யோனி,குறி -- சுண்டக்கஞ்சி மீட்டிங்
துக்ளக் ஆண்டுவிழா -- ஓசை செல்லா
சோ,மோடி -- 200000 ஹிட்கவுண்ட்
போய்ட்டு வாரேன் பார்ட் 2 -- சூடான இடுகைகள்
ரெஃப்ரெஷ் பட்டன், F5 கீ -- ஜோ,கோடி

கண்டுபிடிங்க :

மலேசியாவுக்குக் கீழே குடியிருப்பவர். சீனாக்காரப் பொண்ணை சாவடித்து சாரி டாவடித்து ஒன்னுக்கும் வழியில்லாமல் பூவை மட்டும் போட்டோ எடுத்து பிட்டுக்கு அனுப்பியவர். பதிவு போடுவதை மறந்து போனவர். எப்போதாவது பின்னூட்டங்களில் ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறவர். ப்திவுலகில் பழக்கமான என் நண்பனின் அண்ணன். அவர் யார்?

************************************************************************

கீழே இருக்கும் கதை போன மாசமே எழுதினது. ஊர் நெலவரம் சரியில்லாததால் போடலை. அதுனால லேட் ரிலீஸ்.

ஒரு தொரட்டியின் கதை !

பதிவுபுரம்னு ஒரு ஊர்ல ராசி ஏழுமலை ன்னு ஒருத்தர் இருந்தாராம். அவருக்கு தொரட்டி செஞ்சு விக்கிறதுதான் வேலையாம். அவருக்கு தன்னோட தொரட்டி செய்யுற திறமை மேல ரொம்ப பெருமையாம். ஊருக்குள்ள நாலஞ்சு தொரட்டிக் கடை இருந்தாலும் அவர் கடையைத் தேடித்தான் ரொம்ப மக்கள் வருவாங்களாம்.

ஒருநாளு ஊருக்குள்ள பெரிய மனுசானாத் திரியிற பா.சவக்குமார் அசலூர் திருவிழாக்குப் போயி தொரட்டியைக் கண்டுபுடிச்சதே எங்க ஊர்ல தான்னு பெருமையா சொல்லிக்கிட்டாராம். அதை ஆயாவூட்டுக்கு ஓசி சோறு சாப்பிடப் போன மரமண்டு ஒன்னு விசயம் கேள்விப்பட்டு ஊருக்குள்ளாற வந்து சொல்லிருச்சாம்.

உடனே ராசி ஏழுமலை தொரட்டியைப் பத்தி சொன்னீங்களே அதைச் செஞ்சவனை ஏன் சொல்லலைன்னு பஞ்சாயத்தக் கூட்டிட்டாராம். பஞ்சாயத்துல ராசி ஏழுமலையைப் பிடிக்காத ஆளுங்கல்லாம் மூஞ்சியைப் பொத்தி முக்காடு போட்டுக்கிட்டு கூட்டத்தோட கூட்டமா சவுண்ட் விட்டாங்களாம். கூட்டத்துல ஓரமா உக்காந்திருந்த KULA(a)குளா மட்டும் "தொரட்டி செய்யிறதுல இல்லை சூட்சுமம்.. மக்கள் அத தொரத்தித் தொரத்தி வாங்குறதுல தான் இருக்கு"ன்னு தத்துவமா பேசினாராம். அப்புறமா ஊருக்குள்ள எவன் நல்லா கைநாட்டு வைக்கிறான்னு போட்டி வச்சி அவனுக்கெல்லாம் எருது தர்றேன்னு சொன்னோமே என்னய்யா இன்னமும் எருதையும் காணோம் கருதையும் காணோம்னு எவனும் எதிர் கேள்வி கேட்டுறுவான்னு நெனச்சிக்கிட்டு கமுக்கமா உக்காந்துக்கிட்டாராம். "இந்தாளுக்கு இதே வேலையா போச்சுய்யா தொரட்டி நான் தான் செஞ்சேன் நல்லா வெரைட்டியா செஞ்சேன்னு புலம்புறதே பொழப்பு. பிரச்சனையை சட்டுபுட்டுன்னு பேசி முடிங்கய்யா"ன்னு எகிறுனாராம் அன்லக்கிகுக்.

"தொரட்டியை சொன்னா என்னய்யா அத செஞ்சவனை சொன்னா என்னய்யா எப்படின்னாலும் அது ஒன்னுதான்யா. தொரட்டிதான் ராசி ஏழுமலை! ராசி ஏழுமலைதான் தொரட்டி!"ன்னு திருவிளையாடல் வசனத்தைச் சொல்லி பஞ்சாயத்தை பைசல் பண்ணினாங்களாம். இந்தப் பிரச்சனை இப்பக்குள்ள முடியாது எப்பவுமே பொகைஞ்சிக்கிட்டு தான் இருக்கும்னு அவுங்களுக்குள்ளயே பேசிக்கிட்டு கலைஞ்சி போனாங்களாம் ஊர்க்காரங்க.

************************************************************************

கதை புரியாதவுங்க கீழே இருக்கிற சுட்டிகளை படிங்க. புரிஞ்சாலும் புரியும்.

சன் செய்திகள் நிஜம் தொடரில் தமிழ்ப்பதிவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி !
மூன் டிவிக்கு ஒரு காக்கா கதை!
'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

யாரும் கோவிச்சிக்காதீங்க. ஜஸ்ட் ஃபார் ஃபன். குறிப்பா ராசி சாரி காசி சார் சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்புறம் என்னையும் 'யாரது? பதிவரா?'ன்னு கேட்டுறக்கூடாது ;) .

Monday, February 11, 2008

குமட்டுல குத்துறது எப்படி?

நாம அடிக்கடி ஒரு வாக்கியத்தைக் கேட்கிறோம். அதுதான் 'குமட்டுலயே குத்திருவேன்'ன்னு. அது என்னாங்க குமடு?? அப்படி எதாவது உறுப்பு நம்ம உடம்பிலே இருக்குதா? அது தான் இல்லை. குமட்டில் குத்துவது எப்படி என்று சொல்லித்தாரேன் கேளுங்க. நீங்களும் உங்கள் வீட்டில் பயன்படுத்தி ஆளுக்குத் தகுந்த மாதிரி பூரிக்கட்டை, தோசைக்கரண்டி கலவரங்களிலிருந்து தப்பியுங்கள்.

1. கையை சொடுக்குபோடுவது போல் வைத்துக் கொள்ளுங்கள். கட்டைவிரல் ஆள்காட்டி விரலுடன் சேர்ந்திருக்க வேண்டும்.
2. கணவன்/மனைவி/காதலன்/காதலி கன்னத்துக்கும் தாடைக்கும் இடையில் சரியாக கையைப் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு குத்தவும்.
3. எல்லா விரல்களையும் மடக்கிக் கொண்டு குத்து விட்டால் அது குமட்டுக்குத்து அல்ல. கும்மாங்குத்து.

இவ்வளவு தாங்க.

சரி. எப்பல்லாம் இதை பயன்படுத்தலாம்.

கணவனாக இருந்தால் மனைவி அம்மா வீட்டுக்கு ஒரு வாரம் போக வேண்டும் என்று சொன்னால் "உனக்கு எப்பவும் தமாசுதான். நான் இங்கே தனியாக இருந்து கஷ்டப்படுவேனேன்னு எப்படியும் திரும்பி வந்துருவே. அப்புறம் என்ன அம்மா வீடு ஆட்டுக்குட்டி வீடு" என்று இல்லாத பொய்களைச் சொல்லி குமட்டில் குத்தலாம்.

மனைவியாக இருந்தால் கணவனிடம் முக்கியமாக எதாவது நகை வாங்கிக் கேட்கும் போது பயன்படுத்தலாம். "ஏங்க எனக்கு அந்த நெக்லஸ் வாங்கணும்னு பேசிக்கிட்டிருந்தோமே?". உடனே கணவன் "அது எனக்கு போனஸ் வந்தவுடனே வாங்கலாம்" ன்னு சொன்னா "போங்க உங்களுக்கு எப்பவுமே குறும்புதான். போனஸ்தான் போன மாசமே வந்துருச்சே பேங்க் ஸ்டேட்மெண்ட் வீட்டுக்கு வந்தப்போ பார்த்தேன்" என்று சொல்லி பொய் சொன்னதுக்காக குமட்டில் ஒரு குத்து விடலாம்.

காதலியாக இருந்தால் காதலன் "எப்போ நமக்குக் கல்யாணம்"னு கேட்டால் எதுவுமே சொல்லாமல் ஒரு குத்து விட்டாலே போதும். காதலன் புரிந்து கொண்டு அவர் மனசுக்குள்ளேயே சொல்லிக் கொள்வார் "அதானே அதுக்காகவா காதலிக்கிறோம்"னு.

சமீபத்தில் (மெய்யாலுமே கொஞ்ச நாளைக்கு முன்னால) சில வயதான மனிதர்களை அவர்களின் மனைவிமார்கள் குமட்டில் கும்மாங்குத்து குத்தி கொடுமைப்படுத்துவதாகத் தெரிகிறது. ஏன் இப்படியெல்லாம்?? ப்ளீஸ் விட்டுறுங்க.

இதில் உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் இல்லை. குமட்டுக்குத்து மட்டுமே உள்ளது. ;)

தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் ! பிரம்மாண்டமாய் !


போன வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராமேஸ்வரம் சென்று வந்தது தான் என் முதல் பதிவாக மலர்ந்தது. அது போல இந்த வருடமும் ஒரு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்து இதுவரை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் மட்டுமே பார்த்திருந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.

கூட வருவதாக சொல்லியிருந்த நண்பன் கடைசி நேரத்தில் கழன்று கொள்ள நான் மட்டும் இராமநாதபுரத்தில் இருந்து தனியே புறப்பட வேண்டியதாயிற்று. ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பின் தஞ்சை சென்றடையும் போது காலை மணி 11. பிரம்மாண்டமான கோபுரம் வரவேற்க ஆச்சரியத்துடன் உள்ளே சென்றேன்.

பெருவுடையார் சன்னிதி்





சன்னிதியின் கூரையில் ஒரே கல்லில் செய்யப்பட்ட கல் வளையம்



பொன்னியின் செல்வராகிய இராஜராஜ சோழர், சோழர் பெருமையை தமிழுலகம் என்றென்றும் பேசவேண்டும் என்று பெருமிதத்துடன் கட்டிய பிரம்மாண்டக் கோவில். முதலில் சுவாமியைத் தரிசித்து விட்டுப் பின்னர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் முதலில் பிரம்மாண்ட நந்தியையும், பின்னர் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) சன்னிதியையும் சென்று தரிசித்தேன். மிகப்பெரிய சிவலிங்கம். எட்டி எட்டிப் பார்த்து தரிசிக்க வேலையே வைக்காமல் வாயிலிலிருந்தே நல்ல தரிசனம் கிடைத்தது. கூட்டமும் குறைவு. சிறப்பு தரிசனம், தர்ம தரிசனம் என்ற பேச்சே இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை. சாமியைப் பார்க்க அடிதடி இருந்தால் தானே இந்த முறைகளெல்லாம் தேவை?

பின்னர் பிரகாரத்தை சுற்றி வந்து விநாயகர், முருகர், குரு, சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகி (பிரஹன்நாயகி) சந்நிதிகளுக்கும் சென்று தரிசித்தேன். பின்னர் கோவிலைச் சுற்றி வந்து சிற்பங்களைப் பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஆரம்பித்தேன். பெருவுடையார், நந்தி, பெருவுடையார் சன்னிதியின் மேல் கலசம் இருக்கும் பெரிய விமானம் எல்லாமே ஒரே கல்லால் செய்யப்பட்டவை என்று தெரிந்தபோது ஆச்சரியமே மிஞ்சியது.

பெரிய நந்தி



ஒரு கல்வெட்டு



கோவிலின் ஒரு பகுதி



கோவிலின் வெளிச்சுவர், பிரகாரச்சுவர் என எல்லா இடங்களிலும் கல்வெட்டுகள், கல்வெட்டுகள் மட்டுமே. அதனால் தான் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இந்தக் கோவில் இருக்கிறது. இவை அனைத்தும் இராஜராஜசோழன் காலத்தவை. அவரின் ஆட்சிக்கால சிறப்பையும், கொடைகளையும் இதில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். பெருவுடையார் சன்னிதியைச் சுற்றி முழுவதும் அழகழகான சிற்பங்கள் உள்ளன. பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் பெருவுடையார் சன்னிதியின் உட்புறம் இருக்கும் சுவர்களிலும் பெரிய பெரிய தூண்களிலும் சிற்பங்களே இல்லாமல் வெறுமனே இருக்கின்றன. காரணம் தெரியவில்லை. ஒருவேளை சிற்பங்களால் கோபுரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் வலிமை குறையக் கூடும் என்ற காரணமாக இருக்கலாம்.

அழகான சில ஓவியங்கள்





கோவிலின் உள்புறம் நாயன்மார்கள் மற்றும் 108 சிவலிங்கங்கள் இருக்கும் சுற்று மண்டபம் முழுவதும் அழகழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நம் ஆட்கள் அதன் அருமை தெரியாமல் தங்கள் பெயர்களையும், I love you என்றெல்லாம் ஓவியங்களின் மேல் கிறுக்கி வைத்திருக்கிறார்கள். :(

பூங்கா மற்றும் நடைபாதை




கோவிலில் கவனித்த இன்னொரு முக்கியமான விசயம் சுத்தம். ஒரு சிறிய காகிதம் கூட இல்லாமல் அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். அறநிலையத்துறை கவனிக்கவும். அப்புறம் கோவிலின் வெளிச்சுவருக்கும், உள்சுற்றுச் சுவருக்கும் இடையில் அருமையான பூங்கா மற்றும் நடைபாதை. கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே ஒரு கோட்டை போன்ற அமைப்பும், ஒரு அகழி போன்ற வாய்க்காலும் காணப்படுகிறது. இது அகழி அல்லது கோவிலின் பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் வரும் வாய்க்காலாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அழகிய குதிரை



அழகான பூதம்



இந்தக் கோவில் ஒரு புராதனச் சின்னம்



கோவில் வரலாறு



தோளில் நார்ப்பையுடனும் கையில் கேமராவுடனும் சுற்றிக் கொண்டிருந்த என்னிடம் "போட்டோ எடுத்துத் தருவீங்களா? எவ்வளவு?" என்று கேட்டு வெறுப்பேற்றினார் ஒரு வேலூர்க்காரர். :). மதியம் 2மணிக்கு எல்லாவற்றையும் பார்த்து விட்டு, வசந்தபவனில் சாப்பிட்டு விட்டு, தஞ்சை வராமல் டேக்கா கொடுத்த நண்பனைப் பார்க்க திருச்சிக்கு பேருந்தில் ஏறினேன்.