Tuesday, August 12, 2008

கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?

ಕನ್ನಡ


மீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.

பிரச்சினை தமிழக அரசு தான் திட்டமிட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகத் திசை திருப்பப்பட்டு கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாதிக்கப்படும் சூழல் வருவதற்கு முன் தமிழக அரசு "எங்களுக்கும் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கு" என்று தெளிவான விளக்கத்தைத் தக்க காலத்தில் அளித்தது. இல்லையென்றால் இந்நேரம் கர்நாடகத்தில் எல்லாக் கட்சிகளும் மீண்டும் போர்க்கோலம் பூண்டிருக்கும்.

முதலில் செம்மொழி என்றால் என்ன? 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருக்கும் மொழிக்குத்தான் செம்மொழி மரியாதை கிடைக்கும். இதற்கென்று மத்தியஅரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரையை ஆய்வு செய்து செம்மொழி மரியாதையை வழங்கும்.

ஏற்கனவே தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாம் நம் தமிழ்மொழிக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. காரணம் சொல்லவா வேண்டும்? 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், இலக்கியங்களும் கொட்டிக்கிடப்பதே காரணம்.

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒருமுறை சொன்னார் "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு அதன் தோற்றம் 2000 ஆண்டுகள் எனக் குறைக்கப்பட்டு விட்டது" என்று. உண்மைதான் திருக்குறள் உள்ளிட்ட இலக்கணப்பிழையின்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி தோன்றியிருக்கும் காலத்தை வருடங்களால் கணக்கிடமுடியாது.

செம்மொழி மரியாதை கிடைப்பதால் என்ன லாபம்? சும்மா ஒரு கவுரவம் தான். இது போக தமிழ்மொழி ஆராய்ச்சிகள் நடக்க மத்திய அரசும் நிதியுதவி செய்யும்.

'அதற்காக தமிழும், கன்னடமும் ஒன்றா? தமிழையும் கன்னடத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பதா? தமிழில் இருந்து தோன்றியது தானே கன்னடம்?' என்ற மனநிலையில்தான் ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இருக்கலாம். கன்னடர்கள் அவர்கள் மொழியும் செம்மொழி ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கான பரிந்துரையையும் செம்மொழி ஆய்வு மையத்திடம் வைத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்து செம்மொழி அந்தஸ்து வழங்கலாமா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.


எந்த மொழி செம்மொழி ஆனால் நமக்கென்ன? ஏற்கனவே தமிழ் செம்மொழி ஆகிவிட்டதே? கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென்ன? தமிழின் பாரம்பரியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. நம் மத்திய அரசு செம்மொழி என்று சொல்லித்தான் தமிழ் மிகவும் தொன்மைவாய்ந்த மொழி என்று உலகுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தெரியாமலே எத்தனையோ நாடுகளில் தமிழ் மதிக்கப்பட்டு வருகிறது.

இன்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ நாடுகளின் சிற்றலை வானொலி ஒலிபரப்பில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்தது ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றன. நயாகரா நீர்வீழச்சியின் வரவேற்புப் பலகையில் 'நல்வரவு' என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் பச்சைத் தமிழர்களான நாம் தான் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். மருந்துக்குக் கூட அம்மா, அப்பா என்று சொல்லாத எத்தனையோ பேர் சென்னையில் இருக்கிறார்கள்.

இது போன்ற தேவையில்லாத வழக்குகள் தமிழர்-கன்னடர் உறவை மேலும் மோசமாக்கும். எப்படா வாய்ப்பு கிடைக்கும் தமிழர்களை எதிர்த்துக் களம் இறங்கலாம் எனத் திரியும் நாராயணகவுடா,பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்சன வேதிகே, வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளியா கட்சி போன்ற இனவெறி அமைப்புகளுக்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆகிவிடும்.

எனவே இந்த வழக்கு நமக்குத் தேவையில்லாத ஒன்று. காவேரி விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஒகேனக்கல் விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்தச் செம்மொழி விசயத்தில் தமிழுக்கோ, தமிழகத்துக்கோ, தமிழர்களுக்கோ எந்தவித இழப்பும் பாதிப்பும் இல்லை. வழக்குத் தொடர்ந்திருப்பவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றால் அது கர்நாடகத் தமிழர்களைப் பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்.

தாய்மொழியைப் போற்றுவோம். பிற மொழியைத் தூற்றாமலிருப்போம்.

Friday, August 08, 2008

டிட் பிட்ஸ் 08-08-08

பீஜிங் ஒலிம்பிக்ஸ்இன்னிக்குத்தான் பீஜிங் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்குது. இந்தியாவுக்கு எதாவது ஒரு பதக்கமாவது கிடைக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காமலும், பேரளவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தையும் வைத்திருக்கும் நமது அரசாங்கத்துக்குக் கடும் கண்டனங்கள். இதனால்தாலன் 100 கோடி பேர் ஒரு வெண்கலப்பதக்கத்துக்கு வாயைப் பார்த்து நிக்கிற நிலமை இருக்கு. :(

குருவி + விஜய் + காமெடி = தொல்லை


சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி மாதிரி ஒரு பார்வர்ட் மின்னஞ்சலில் வந்த குருவி காமெடியை யூட்யூபில் வலையேற்றிவிட அதைத் தொடர்ந்து விஜய்யின் விசிலடிச்சான் குஞ்சுகள் கொடுக்கும் பின்னூட்டத் தொல்லைகள் தாங்கமுடியவில்லை. கெட்ட வார்த்தையில் திட்டுவது முதல் 'மவனே உனக்கு சங்கு'தான்னு மிரட்டுறது வரை பின்னூட்டம் போட்டுக் கொல்லுகிறார்கள். நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க இந்த வீடியோவில் அப்படி என்ன தவறு இருக்கு??
வில்லு படம் ப்ளாப் ஆக பிரபுதேவாவுக்கு பாலாபிசேகம் செய்து வழிபடுவோமாக !

பாவம் + பரிதாபம் = நயன்தாராமறுபடியும் நயனைக் குறிவைத்து யாரோ ஒரு வலைப்பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டார்களாம். பாவம். அவருக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு பிரச்சினைகளோ?

விஷாலுடன் சுற்றுவது பொறுக்காமல் கடுப்பான சிம்புதான் இந்த வேலையைச் செய்திருப்பார் என்று சொல்லாமல் இருந்தால் சரி. சைபர் கிரைம்ல புகார் கொடுங்க மேடம். யார்னு கண்டுபிடிச்சி முட்டிக்கு முட்டி தட்டிருவாங்க.

லிங்க் கொடுன்னு யாரும் எனக்குப் பின்னூட்டம் போட வேண்டாம்னு கேட்டுக்குறேன். ஏன்னா எனக்குத் தெரியாது. ;)

குசேலன் + ரஜினி = குப்பைதமிழகத்தில் வசித்து வரும் ரஜினி என்ற கன்னடநடிகருக்கு யாராவது பபுள்கம் அல்லது ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுங்கள். வாய் நமநமன்னு இருக்கிறதால் தான் எதாவது வருத்தம், மன்னிப்புன்னு கேட்டு நம்ம உயிரை வாங்குகிறார். அவர் பின்னால் வால் பிடித்துத் திரியும் விசிலடிச்சான் குஞ்சுகள் திருந்தினால் சரி. ஒரே மகிழ்ச்சி குசேலன் குப்பை என்ற செய்தி. இப்படி சந்தோசப்படுவதால் நான் கமல் ரசிகர் என்று எண்ண வேண்டாம். நான் இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. :)


இன்னிக்குத் தேதி 08-08-08 இதே போல இன்னொரு நாள் வர இன்னும் ஒருவருசம் + ஒரு மாதம் காத்திருக்கணும். எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தநாளில் ஒரு பதிவைப் பதிஞ்சி வச்சிக்கலாம்னு ஒரு பதிவு. :)

Thursday, August 07, 2008

'சூப்பர்'மணியபுரம் !

மதுரை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எனக்குள் ஓர் ஆர்வம் எப்பவும் தொற்றிக் கொள்வது உண்மை. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. வாழ்க்கையின் முக்கியகட்டமான கல்லூரிக்காலத்தை நண்பர்களுடன் மதுரையில் கழித்ததால், அந்த நினைவுகளை மறக்கமுடியாமலும் திரும்பவும் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல முடியாமலும், அதற்கான வடிகாலாக மதுரை குறித்த செய்திகள், திரைப்படங்கள் மேல் எப்பவும் ஆர்வம் காட்டுவதுண்டு.

அந்த வகையில் காதல் திரைப்படத்திற்கு அடுத்து சுப்ரமணியபுரம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோவில், தெப்பக்குளம், அண்ணே என்ற பாசச்சொல்லை மட்டும் காட்டாமல் அதற்கும் மேலாக முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த வாழ்க்கைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையின் இளமைக்கால வாழ்க்கையையும் திரையில் காட்டியிருப்பதற்காகவே இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். 1980ம் காலகட்டம் இன்றைய அரைக்கிழவர்களின் இளமைக்காலம்.

படத்தைப் பாராட்டி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டன. இந்தப்பதிவு படத்திற்கான விமர்சனம் இல்லை. இது போன்ற இயல்பான கதையமைப்பும், கவரும் அம்சங்களும் கொண்ட திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பும், வெற்றியும் பெறும் போது நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் ஒருவித மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.

  • ஐந்திலக்கத் தொலைபேசிஎண்
  • குழாய் ஒலிபெருக்கி
  • வஜ்ரதந்தி, காளிமார்க், டார்டாய்ஸ் விளம்பரங்கள்
  • ரப்பர் செருப்பு
  • பெல்பாட்டம் பேண்ட், நீளக்காலர் சட்டை
  • தாவணிப்பெண்கள்
  • பாண்டியன் நகரப்பேருந்து
  • கூடைச்சேர்
  • கதவு வைத்த பெட்டியில் இருக்கும் தொலைக்காட்சி
  • சித்ரஹார், ஒலியும் ஒளியும்

இவையெல்லாம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் கண்ணில்பட்ட்வை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம் வீட்டிலிருக்கும் பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிப்பார்த்த உணர்வு !

தமிழ்த்திரையுலகில் எப்போதாவது வரும் இது போன்ற படங்களைத் திருட்டு விசிடியில் பார்க்காமல் தாராளமாகத் திரையரங்கில் சென்று பார்க்கலாம்.

இயக்குனர் சசிகுமார், ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோருக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும் :)

உளியின் ஓசை, குருவி போன்ற சப்பையான படங்களை இன்னமும் முதலிடத்தில் வைத்து அழகுபார்த்துக்கொண்டு சுப்ரமணியபுரம் படத்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கண்டனங்கள்.