Tuesday, August 12, 2008

கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?

ಕನ್ನಡ


மீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.

பிரச்சினை தமிழக அரசு தான் திட்டமிட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகத் திசை திருப்பப்பட்டு கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாதிக்கப்படும் சூழல் வருவதற்கு முன் தமிழக அரசு "எங்களுக்கும் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கு" என்று தெளிவான விளக்கத்தைத் தக்க காலத்தில் அளித்தது. இல்லையென்றால் இந்நேரம் கர்நாடகத்தில் எல்லாக் கட்சிகளும் மீண்டும் போர்க்கோலம் பூண்டிருக்கும்.

முதலில் செம்மொழி என்றால் என்ன? 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருக்கும் மொழிக்குத்தான் செம்மொழி மரியாதை கிடைக்கும். இதற்கென்று மத்தியஅரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரையை ஆய்வு செய்து செம்மொழி மரியாதையை வழங்கும்.

ஏற்கனவே தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாம் நம் தமிழ்மொழிக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. காரணம் சொல்லவா வேண்டும்? 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், இலக்கியங்களும் கொட்டிக்கிடப்பதே காரணம்.

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒருமுறை சொன்னார் "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு அதன் தோற்றம் 2000 ஆண்டுகள் எனக் குறைக்கப்பட்டு விட்டது" என்று. உண்மைதான் திருக்குறள் உள்ளிட்ட இலக்கணப்பிழையின்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி தோன்றியிருக்கும் காலத்தை வருடங்களால் கணக்கிடமுடியாது.

செம்மொழி மரியாதை கிடைப்பதால் என்ன லாபம்? சும்மா ஒரு கவுரவம் தான். இது போக தமிழ்மொழி ஆராய்ச்சிகள் நடக்க மத்திய அரசும் நிதியுதவி செய்யும்.

'அதற்காக தமிழும், கன்னடமும் ஒன்றா? தமிழையும் கன்னடத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பதா? தமிழில் இருந்து தோன்றியது தானே கன்னடம்?' என்ற மனநிலையில்தான் ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இருக்கலாம். கன்னடர்கள் அவர்கள் மொழியும் செம்மொழி ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கான பரிந்துரையையும் செம்மொழி ஆய்வு மையத்திடம் வைத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்து செம்மொழி அந்தஸ்து வழங்கலாமா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.


எந்த மொழி செம்மொழி ஆனால் நமக்கென்ன? ஏற்கனவே தமிழ் செம்மொழி ஆகிவிட்டதே? கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென்ன? தமிழின் பாரம்பரியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. நம் மத்திய அரசு செம்மொழி என்று சொல்லித்தான் தமிழ் மிகவும் தொன்மைவாய்ந்த மொழி என்று உலகுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தெரியாமலே எத்தனையோ நாடுகளில் தமிழ் மதிக்கப்பட்டு வருகிறது.

இன்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ நாடுகளின் சிற்றலை வானொலி ஒலிபரப்பில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்தது ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றன. நயாகரா நீர்வீழச்சியின் வரவேற்புப் பலகையில் 'நல்வரவு' என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் பச்சைத் தமிழர்களான நாம் தான் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். மருந்துக்குக் கூட அம்மா, அப்பா என்று சொல்லாத எத்தனையோ பேர் சென்னையில் இருக்கிறார்கள்.

இது போன்ற தேவையில்லாத வழக்குகள் தமிழர்-கன்னடர் உறவை மேலும் மோசமாக்கும். எப்படா வாய்ப்பு கிடைக்கும் தமிழர்களை எதிர்த்துக் களம் இறங்கலாம் எனத் திரியும் நாராயணகவுடா,பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்சன வேதிகே, வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளியா கட்சி போன்ற இனவெறி அமைப்புகளுக்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆகிவிடும்.

எனவே இந்த வழக்கு நமக்குத் தேவையில்லாத ஒன்று. காவேரி விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஒகேனக்கல் விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்தச் செம்மொழி விசயத்தில் தமிழுக்கோ, தமிழகத்துக்கோ, தமிழர்களுக்கோ எந்தவித இழப்பும் பாதிப்பும் இல்லை. வழக்குத் தொடர்ந்திருப்பவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றால் அது கர்நாடகத் தமிழர்களைப் பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்.

தாய்மொழியைப் போற்றுவோம். பிற மொழியைத் தூற்றாமலிருப்போம்.

5 comments:

ஜெகதீசன் said...

ஆனால் வழக்கு செம்மொழித் தகுதி அம் மொழிகளுக்குத் தரக்கூடாது என்பதற்காக அல்ல..
" இந்த இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களில் மொழியியல் அறிஞர்கள் யாரும் இல்லை.

எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு முறையான அறிஞர்கள் கொண்ட கமிட்டிகளை அமைக்க வேண்டும்"

இதுவே அந்த மனுவின் சாராம்சம்...
http://thatstamil.oneindia.in/news/2008/08/06/tn-madras-hc-issues-notice-on-committee.html
__________________

இருப்பினும், இந்த வழக்கு தேவையில்லாதது தான்..

Yogi said...

// தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சர்வதேச அளவில் உள்ள அங்கீகாரத்தின் அடிப்படையில் தான், அவற்றுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், தெலுங்கு-கன்னடத்துக்காக அமைக்கப்பட்ட கமிட்டிகளில் உள்ளவர்கள் ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். செம்மொழி அந்தஸ்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என இவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இதனால் செம்மொழி அந்தஸ்து தரலாம் என்பதைத் தவிர வேறு எதையும் இவர்களால் பரிந்துரைக்கவே முடியாது //

தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதால் நமக்கு என்ன பாதிப்பு?

தமிழுக்கு சர்வதேச அந்தஸ்து உள்ளது. ஆனால் தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு அந்த அந்தஸ்து கிடையாது எனத் தமிழர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தால் கன்னடர்களின் கோபம் தமிழர்களை நோக்கித் திரும்பாதா? உள்ள பிரச்சினை பத்தாது என்று இது வேறு :(

Tech Shankar said...



Lifestyle in Bangalore for Tamil People is always dangerous and full of thrilling.

We people do not know when will they (Kannadigas) start any new issues?

But, Now One Tamil person started a new issue about Tamil Vs Kannada?

What are we going to do?

Anonymous said...

செம்மொழி வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சரியானதே.

தொடர்ந்து தமிழையும் தமிழர்களையும் எதெர்கெடுத்தாலும் எதிர்ப்பது கன்னடர்களின் வாடிக்கையாகிவிட்டது. திருவள்ளுவரையே எல்.டி.டி.இ. என்று சொன்ன முட்டாள்களும் கர்நாடகாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழர்கள் தொடர்ந்து குட்டுக்கு குனிபவர்கள் அல்ல...

தமிழனின் தன்மானம் காக்கும் தமிழர்களின் தலைமை தமிழ்நாட்டுக்கு விரைவில் வரும்...

அப்போது தமிழர்களின் எதிரிகள் ஓடி ஒளிவார்கள்.

bala said...

//கன்னடத்துக்கு செம்மொழி-குறுக்கே நிற்கிறதா தமிழ்?//

பொன்வண்டு அய்யா,
செம்மொழி பட்டம் கிடைத்துவிட்டு போகட்டுமே.கன்னடமும் தமிழ்த்தாய்#1 போட்ட குட்டி தானே.அதனுள் ஓடுவதும் தமிழ் ரத்தம் தானே.என்ன,இப்ப தனிக் குடித்தனம் வச்சுருக்காங்க.வாழ்த்துவது தானே தாயுள்ளம்.

பாலா

அது சரி.தமிழ்த்தாய் போட்ட குட்டிக்கு எழுத்துக்கள் மட்டும் இப்படி ஜிலேபி,முறுக்கு மாதிரி சுருண்டு சுருண்டு வந்திருப்பது யாரோட ஜீன்ஸ் மூலமா என்ற சந்தேகம் எழுகிறது.ஒருவேளை தமிழர் தந்தையிடமிருந்தா அல்லது தமிழ்த் தாய்#1 கன்னடமா?கன்ஃப்யூஷன்.நம்ம முனைவர் இராம.கி அய்யாவோ அல்லது முனைவர் மு இளங்கோவன் அய்யாவோ தான் தீர்ப்பு சொல்லணும்.

பாலா