Tuesday, January 29, 2008

தவறாமல் ஜெயா செய்திகள் பாருங்கள் !!!


நல்ல விசயம் எங்க இருந்தாலும் சுட்டிக் காட்டணும் இல்லையா? என்னடா காமெடி பண்றேன்னு நினைக்காதீங்க. தினமும் ஜெயா செய்திகளில் கடைசியில் 'இன்று' என்ற தலைப்பில் இன்றைய தேதியில் வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகள் காட்டுகிறார்கள். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்கள் பிற அரசுத் தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்கள் தரப்படுகின்றன.

எனவே செய்தி 7:30க்கு ஆரம்பிக்குதுன்னா நீங்க ஒரு 7:50க்கு பாருங்க அப்போது தான் போடுகிறார்கள். அதற்கு முன்பே பார்த்து உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல. இப்பல்லாம் கருணாநிதி பற்றி அடிக்கடி டாக்குமெண்டரி போடுகிறார்கள். விஷப்பாம்பு நஞ்சைக் கக்கியது, தமிழ்நாட்டை காரிருள் சூழ்ந்தது என்றெல்லாம் சொல்லி காதை செவிடாக்குகிறார்கள். ஜாக்கிரதை. இலைக்காரன் மன்னிப்பாராக. ;)

Wednesday, January 23, 2008

பதிவுலகில் ஒரு வருடம் மற்றும் எழுதியதில் பிடித்தது

ஒரு வருடம் ஆச்சுங்க நான் வலைப்பதிவுலகத்திற்கு வந்து. நான் எப்படிப் பதிவெழுத வந்தேன், என் பதிவுகளில் எனக்குப் பிடித்தவை எது மற்றும் பதிவுலகம் பற்றி சில விசயங்கள் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

நான் வலைப்பதிய வந்தது முழுக்க முழுக்க விபத்தே. வேலையில் சேர்ந்து கொஞ்ச நாளில் வேலை நேரம் போக மிச்ச நேரம் அலுவகத்தில் ரொம்பவே போரடிப்பதாகவும், எவ்வளவு நேரம் தான் குமுதத்தையும், தினமலரையும் பார்ப்பது என என் அண்ணனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் அறிமுகப்படுத்தியது தான் தமிழ்மணம். அதாவது நான் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தது 2006 டிசம்பர் வாக்கில் தான். கணினியில் தமிழில் இவ்வளவு எளிதாக தட்டச்ச முடியும் என்பதே எனக்கு அப்போது தான் தெரியும். சரி நாமளும் பதிவு எழுதிப் பார்ப்போமே என்று எழுதியது ஜனவரி 2007 கடைசியில். மூன்று பதிவுகளை ஒரே மூச்சில் முடித்து விட்டு தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டில் பதிவினை இணைத்தேன்.

நான் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராமேஸ்வரம் சென்று வந்ததை என் முதல் பதிவாகப் போட்டேன். அது 'எங்க ஏரியா உள்ள வாங்க'. அப்புறம் என் நண்பர்களின் பட்டப்பெயர்களை எல்லாம் ஒரு பதிவில் போட்டு அவர்களுக்கு வெறுப்பேற்றிய 'ரொம்பப் பெருமையா இருக்கு' ரெண்டாவது பதிவு.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் சுமாரான பதிவுகள் மட்டுமே எழுதிவிட்டு ஒரு நகைச்சுவைப் பதிவு முயற்சி செய்வோம் என்று நான் ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தது தான் 'இம்சை இளவரசன் சோனி எரிக்ஸன்'. எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது நான் நினைத்தாலும் இந்த மாதிரி எழுத முடிவதில்லை. இன்றும் இப்பதிவு என் நண்பர்களால் மின்னஞ்சலில் சுற்றி வருகிறது.

அப்புறம் எங்க ஊர் நடிகர் ரித்திஸின் அட்டகாசங்களைச் சொல்லி துவைத்துத் தொங்கவிட்டது 'கானல் நீர் கதாநாயகனின் முதலமைச்சர் கனவு'.

நானும் உருப்படியான பதிவுகள் எழுதுவோம் என நினைத்து எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்து எழுதியது தான் 'ஏடிஎம் எப்படி வேலை செய்யுது தெரியுமா?' தொடர். இத் தொடர் பூங்காவில் வெளிவந்தது மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது.

ஏண்டா எங்க ஊரைப் பத்தியெல்லாம் பெருமையா எழுத மாட்டியா ன்னு நண்பர்கள் கேட்க எழுதியது தான் 'நாகர்கோவில் நண்பர்கள்' இரண்டு பாகம்.

அப்புறம் எனக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச ஜாவா ஸ்கிரிப்ட் அறிவைச் சோதித்துப் பார்த்து ப்ளாக்கரின் டெம்ப்ளேட் நிரலில் சின்ன மாற்றம் செய்து எழுதியது தான் 'ஒரே Blogger Account-ன் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் author name மாற்றலாம்'.

அதற்கப்புறம் இன்று வரை ஏதோ எழுதி வருகிறேன். சக பதிவர்களைக் கலாய்த்துப் பார்ப்போமே என்று எழுதியது இரண்டு பதிவுகள். அவை 'பதிவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்' மற்றும் 'சுக்கு காபி வித் சுப்பிரமணியில் கண்மணி'. கண்மணி டீச்சரின் அனுமதியோடு எழுதியது இரண்டாவது.

இடையில் இரண்டு மாதங்கள் பணிச்சுமையாலும், மதுரைத்திட்டத்தில் பங்கு பெற்றதாலும் பதிவுகள் எழுத முடியவில்லை. முகத்தை மறைத்து வேறு பெயரில் எழுதுவது எனக்கும் உடன்பாடில்லை. இருந்தாலும் எதோ அப்போதிருந்த நினைப்பில் அப்படிப் பெயர் வைத்துக் கொண்டேன். சின்னப்பிள்ளையில் என் தாத்தாவின் மளிகைக் கடையில் பொன்வண்டு சோப்பை வைத்து கார் ஓட்டி விளையாண்ட நினைப்பு வர அதையே வைத்துக் கொண்டேன். தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். என் பெயர் யோகேஸ். தற்சமயம் பெங்களூரில் இருக்கிறேன்.

கிட்டத்தட்ட எல்லாப் பதிவர்களின் பதிவுகளையும் ஒரு முறையாவது படித்திருக்கிறேன். ஆனால் அந்த அளவுக்கு யாருக்கும் பின்னூட்டம் போட்டது இல்லை. காரணம் என் அலுவலகத்தில் உடன் இருப்பவர்கள் அப்படி. ஏற்கனவே எப்பவுமே தமிழ் இணையதளங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று நல்ல பெயர் எனக்கு. இரண்டு மூன்று முறை என் மேனேஜரே பார்த்திருக்கிறார். இருந்தாலும் பதிவுகளை சின்னச் சின்ன விண்டோக்களாக திறந்து வைத்துக் கொண்டு படித்து விடுவேன். :). இருந்தாலும் நிறையப் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களும் போட்டிருக்கிறேன்.

நிறையப் பதிவர்களுக்கு இருப்பது போல எனக்கும் ஒரு நட்பு வட்டம் இல்லையே என வருத்தம் உள்ளது :( . இந்த வருடத்திலாவது அது நிறைவேறுகிறதா எனப் பார்ப்போம்.

என் பதிவுகளைப் பற்றி தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அப்புறம் பதிவின் பக்கவாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு உள்ளது உங்கள் கருத்தை அதில் சொல்லுங்கள்.

Friday, January 18, 2008

சுக்கு காபி வித் சுப்பிரமணி-யில் கண்மணி !

சுப்பிரமணி : இன்னிக்கு நாம நிகழ்ச்சியில் சந்திக்கப் போற பதிவர் யாருன்னு உங்க எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். ஏன்னா ஏற்கனவே எல்லா நாடகத்துக்கு இடையிலயும் ad போட்டுக் காட்டிட்டாங்க. எனவே வெல்கம் ஒன் அன் ஒன்லி ஒன் மொக்கைப் பதிவர் கண்மணீய்ய்ய்ய்ய்ய்.

சுப்பிரமணி : வணக்கம் கண்மணி டீச்சர் !

கண்மணி : வணக்கம் ச்சுப்பிரமணி ! நீங்க எங்க வீட்டு நாய் மாதிரியே பேசுறீங்க. அதோட பேரும் ச்சுப்பிரமணி தான்.

சுப்பிரமணி : ஓ சூப்பர்! நம்ம நேரா பேட்டிக்குக் போகாம கொஞ்சம் சுத்து வழியில இப்போ போலாம். உங்களோட பொழுதுபோக்கு எல்லாம் என்னன்னு கொஞ்சம் சொல்றீங்களா?

கண்மணி : எனக்கு இருக்குறது எப்பவுமே ஒரே ஒரு பொழுது போக்குதான். அது வேலைக்குப் போறது.

சுப்பிரமணி : அப்போ உங்களோட ஃபுல் டைம் ஜாப் எது?

கண்மணி : பதிவு எழுதுறது.

சுப்பிரமணி : ஆமாம். நான் தான் மறந்துட்டேன். கும்மி, மொக்கைனா கூப்பிடு கண்மணியைங்கிற அளவுக்கு பதிவுலகில் பேர் வாங்கியிருக்கீங்க. இதுக்கெல்லாம் யார் காரணம் இந்த அளவுக்கு நீங்க பேர் வாங்குறதுக்கு நீங்க என்ன என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்கன்னு கொஞ்சம் விபரமா சொல்றீங்களா?

கண்மணி : முதலில் என் தலைமையில இயங்கும் பாசக்கார குடும்பம் என்கிற மக்கள் தொண்டு இயக்கத்துக்குத்தான் நன்றி சொல்லணும்.அவங்கதான் பதிவு போட்டவுடனே வரிசையாக் கியூ கட்டி நின்னு ஒவ்வொரு பின்னூட்டமாப் போட்டுத் தாக்கி என்னையே திக்குமுக்காட வச்சிருவாங்க. அப்புறமென்ன வழக்கம் போல கும்மிதான். ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறிக் கலாய்ச்சி பதிவை எங்கேயோ கொண்டு போய்ருவோம். இதுல என்ன வருத்தம்னா பதிவு போட்ட பத்து நிமிசத்துல 40 பின்னூட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை எட்டிரும் என்னோட பதிவுகள். அதுனால மத்தவுங்க படிக்கமுடியலைங்கிற வருத்தம் கொஞ்சம் இருக்கு.

அவ்வ்வ்வ்வ் எம்ஜியார் பாட்டுப் பாடி நாட்டுக்கு நல்ல சேதி சொன்னாரு நான் பதிவு போட்டு புவியை சூடாக்காதீங்க....மாம்பழம் சாப்பிடாதீங்க....ஜங்க் புட் சாப்பிடாதீங்க...அப்படின்னு எவ்ளோ நல்ல சேதி சொல்லியிருக்கேன்.

முதுமை வரமா சாபமா ன்னு மிரட்டியிருக்கேன்.நட்சத்திர வாரத்துல வாலை சுருட்டிகிட்டு நல்ல புள்ளையாட்டமா...பததிவு போட்டிருக்கேன்....அவ்வ்வ்வ்வ்

அதெல்லாம் விட்டுட்டு மொக்கை கும்மி மட்டும் படித்து என்னை மொக்கை ராணியாக்கிட்டீங்க. இந்த சதி வேலையின் சூத்ரதாரி அந்த மலேஷியா மாரியாத்தாதான்.

சுப்பிரமணி : சரி இப்படி கும்மிப்பதிவுகளுக்கு பதிவுலகக் கலாசாரக் காவலர் பதிவர்கள்கிட்ட இருந்து எதிர்ப்பு எதுவும் கிளம்பிருக்குமே?

கண்மணி : அப்படி எதுவும் கிளம்புறதுக்கு முன்னாடி நானே கும்மி ன்னு ஒரு பதிவை ஆரம்பிச்சி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வச்சாச்சு. முதலில் எல்லோரும் தமிழ்நாட்டின் பாரம்பரியக்கலையான கும்மியைப் பத்தின ஆராய்ச்சிப் பதிவுன்னு நினைச்சி என்னைப் பாராட்டி மின்னஞ்சலெல்லாம் அனுப்பி அவுங்களுக்குப் பதில் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி.

சுப்பிரமணி : அப்புறம் நீங்க வேற என்ன என்ன குழுப்பதிவிலெல்லாம் உறுப்பினரா இருக்கீங்க? அது பத்திச் சொல்லுங்க.

கண்மணி : ப.பா.சங்கம் அப்புறம் அனைத்து மொக்கை, கும்மிப் பதிவுகளிலும் ஆயுள் உறுப்பினர் நான்.

சுப்பிரமணி : பாப்பா சங்கம் என்னாச்சு? ரொம்ப நாளா பூட்டியே கிடக்குன்னு பேசிக்கிறாங்களே?

கண்மணி : அதெல்லாம் வடிகட்டாத பொய். சங்கம் ஏற்கனவே அபராதத்திலதான் ஓடிக்கிட்டிருக்கு. இபி பில், வாட்டர் பில், கட்டட வாடகைன்னு கட்டமுடியாம கரண்ட், தண்ணி, ஏன் கட்டடத்தையும் எடுத்துக்கிட்டாங்க. இதெல்லாம் ஆப் த ரெக்கார்ட். எடிட் பண்ணீருங்க. நிகழ்ச்சியில போட்டுறாதீங்க. அதுனால சேலத்துலயும், ஈரோட்டிலயும் கலை நிகழ்ச்சி நடத்தி சங்கத்துக்கு நிதி சேர்க்கலாம்னு இருக்கோம். இதெல்லாம் எதிர் சங்கம் கிளப்பி விடாத பொய்.

சுப்பிரமணி : அவரவர்க்கு அவரவர் ஆணி. வேறென்ன திட்டமெல்லாம் வச்சிருக்கீங்க. மக்களைக் கவருவதற்கு?

கண்மணி : அடுத்து கின்னஸ் புத்தகத்தில் கும்மியை இடம்பெற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் போறோம். அதுக்காக 24 மணிநேரத்தில் 1லட்சம் பின்னூட்ட்ம் போட்டு சாதனை செய்யத் திட்டம் போட்டிருக்கோம். இதுக்காக இதில் ஏகப்பட்ட அனுபவம் உள்ள 'மீ த பர்ஸ்ட்' புகழ் மைபிரண்டிடம் இந்த வேலையை முடிக்க ஒப்பந்தம் போட்டிருக்கோம். அவர் அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருக்கிறார். இதன் மூலம் ப்ளாக்கர் சர்வரின் கெப்பாசிட்டியையும் சோதனை செய்ய முடியும் இல்லையா?

சுப்பிரமணி : அப்புறம் உங்கள் வழிகாட்டுதலில் நடக்கும் குட்டீஸ் பதிவு பத்தி சொல்லுங்களேன்.

கண்மணி : முதலில் டல்லா இருந்தாலும் குட்டீஸ் பதிவு தான் இப்போ டாப். சக பதிவர்களைக் கலாய்ப்பது முதல் புதுப் ப்து விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவது வரை அவுங்க பதிவுகளாலும் , பின்னூட்டங்களாலும் நிறைய பதிவர்களுக்கு வியாபாரமே குறைஞ்சி போச்சுன்னு பேசிக்கிறாங்க.

சுப்பிரமணி : நீங்க இந்தப் பதிவுலகில் சந்தித்த பிரச்சினைகள் பத்திச் சொல்லுங்களேன்.

கண்மணி : பிரச்சினைன்னா பெரிசா ஒன்னும் இல்லை. இங்கிலீஸ்ல எழுதாதே, குட்டீஸ் பதிவுக்குப் பேர மாத்துன்னு ஒரு பிரச்சினை. அனானியாப் பின்னூட்டம் போட்ட கணினிப் புலவர் ரவிசங்கர் தான் தான் அந்த பின்னூட்டம் போட்டவர்னு ஒத்துக்கிட்ட போது அம்புட்டு நல்லவராயா நீங்கன்னு 'கோலங்கள்' கண்ணீர் வந்துடுச்சி. அப்புறம் பாப்பா சங்கப் பதிவுல ப்யூட்டிஸ் அடிச்ச லூட்டிஸ்ல புலி பின்னூட்டம் போட அதை வச்சி ஏகத்துக்கும் என்னை கலாய்ச்சிட்டாங்க. இதெல்லாம் டேக் இட் ஈசி யு நோ?

சுப்பிரமணி : வௌவால் பத்தி என்ன நினைக்கிறீங்க? ரொம்ப அப்புராணிப் பறவை இல்லையா?

கண்மணி : பெரிய தொல்லைங்க. குறுக்கும் மறுக்கும் பறந்து இம்சையா இருக்கு. அப்பப்போ கீச் கீச்னு சத்தம் வேற. மொதல்ல எங்க வீட்டு புகைக்கூண்டை கம்பி வச்சி அடைக்கணும். அங்கதான் தங்கியிருக்குதுங்க. ஆமா நீங்க இந்த வௌவால் பத்தித்தானே கேட்டீங்க?

சுப்பிரமணி : ஆமாமா. நானும் பறக்கிற வௌவாலைப் பத்தித்தான் கேட்டேன். ரொம்ப நன்றி கண்மணி. உங்களுக்கு எங்க நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதுக்காக ஒரு கும்மி நினைவுப் பரிசு. இதை உங்க பதிவுக்கு சைடிலே போட்டுக்கோங்க.


கண்மணி : போங்கய்யா உங்க பரிசும் நீங்களும்.ஏதோ பரிசுன்னு பார்த்தா லோகோவைக் குடுத்து பிலாக்குல போட்டுக்கச் சொல்லுவீங்க.அதைப் பாத்தாலே புதுசா வர்ரவங்க என்னமோ ஏதோன்னு மெரண்டு ஓடுறாங்க....
ஆளை விடு சாமி.வேணும்னா எங்க ச்சுப்பிரமணிக்கு ஏதாச்சும் பிஸ்கோத்து வாங்கிக் குடு போதும்..

Thursday, January 17, 2008

க.கா.கா, மதுரை மற்றும் காதலிக்க நேரமில்லை !


KKK சுருக்கமாக கனா காணும் காலங்கள்

ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ரசிகர்களாக வைத்திருக்கும் தொடர். கதை இது தான். சென்னையின் ஒரு தனியார் பள்ளியில் +2 மாணவர்களில் இரண்டு குழுக்கள். எல்லாவற்றிலும் எதிரும் புதிரும் தான். பாலா, பச்சை, பாண்டி, ஜோ என ஒரு குழு. வினீத், உன்னி, கிருஷ் அப்புறம் இன்னொரு பையன் இவர்கள் அடுத்த குழு. இரு குழுவினருக்கும் பொதுவான தோழி ராகவி. இவர்களுக்குள் வரும் மோதல்கள் தான் கதையின் கருவாக இருந்தது. இப்போ கொஞ்சமே மாற்றப்பட்டுவிட்டது.

முதலில் நூறு நாட்களுக்கு நன்றாக பள்ளிகளில் அடிக்கும் அட்டகாசங்கள், ஊர் சுற்றுதல, நண்பர்களுக்குள் சண்டை பின் சமாதானம் என அமர்க்களமாகக் காட்டினார்கள். இத்தொடர் எல்லோரையும் கவர்ந்தது இந்தக் கால கட்டத்தில் தான். அதற்குப் பிறகு கதைப் பஞ்சம் வந்து இப்போ நொண்டியடிக்கிறது.

பச்சை, ராகவியைக் காதலிப்பதாகக் கூற அவளிடம் செவுள் தெறிக்க அறை வாங்குகிறான். பின்னர் ராகவி அவனை மன்னித்தாலும் அவன் அவள் மீது கோபமாகவே இருக்கிறான். இதுவரை தான் கதை வந்திருக்கிறது. இனிமேல் என்ன ஆகுமெனத் தெரியவில்லை.

தொடரின் முக்கிய ப்ளஸ் பாண்டி. பாண்டி வந்தாலே எல்லாக் காட்சிகளிலும் கலகலப்பாக இருக்கும். மைனஸ் பாய்ண்ட் திடீர் திடீரென சிலர் காணாமல் போய் விடுவது. ஜோவுக்கு இப்போ பரீட்சையாம் அதுனால இன்னும் கொஞ்ச நாள் வரமாட்டானாம். அப்புறம் மிண்டு, கார்த்தி அப்புறம் இன்னொரு பொண்ணு என மூன்று பேரைக் கொண்டு வந்து பாலா கோஷ்டி ஜொள்ளு விடுவது போலக் காட்டினார்கள். இப்போ அவர்களும் இல்லை. பச்சையும், ராகவியும் எப்போதும் அழுது வழிகிறார்கள். ஷேம் ஷேம்.

ஆர்குட்டில் இதன் குழுமத்தில் 10,000க்கும் மேலான உறுப்பினர்கள். என்னமோ! காதல் விசயத்தை விடுத்து மீண்டும் கலகலப்பைக் கூட்டினால்தான் டிஆர்பி வாங்கமுடியுமப்பு !!

கொசுறு : ராகவியாக வரும் ஹேமா சூர்யவம்சம் படத்தில் மகன் சரத்குமாருக்கு மகனாக வரும் குட்டிப்பையன் தான்.

**********************************************************************************கதை என்னன்னு எனக்கும் தெரியாதுங்க. ஏன்னா நான் தற்செயலா இத்தொடரின் கதாநாயகியைப் பார்த்த பிறகு தான் அவருக்காக இந்தத் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன்.

கதையின் ஒருவரி இதுதான். போக்கிரியாகத் (ரவுடிக்கு தமிழில் போக்கிரின்னு தான் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் சொல்கிறார்கள்) திரியும் சரவணனின் முறைப்பொண்ணு மீனாட்சி. மீனாட்சி சரவணனைத் திருத்த முயற்சிக்கிறாள். அவன் திருந்துவது மாதிரி தெரியவில்லை. எனவே தன் காதலை மறைத்து அவனை வெறுப்பது மாதிரி நடித்து அவனைத் திருத்த முயற்சிப்பதுதான் கதை.

கதை முழுக்க முழுக்க மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் எடுக்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். அப்புறம் எல்லாத் தொடரிலும் இருக்கும் அழுகாச்சி தொல்லையெல்லாம் கிடையாது. சரவணன் கோஷ்டி அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது.

சரவணனாக மிர்ச்சி செந்தில். இதில் சொந்தக் குரல் இல்லை. இவருக்குக் குரல் கொடுத்திருப்பவர் மதுரை ஸ்லாங்கில் பொளந்து கட்டுகிறார். மீனாட்சியாக ஸ்ரீஜா சந்திரன் (கேரளா). கண்களை உருட்டி உருட்டிப் பேசும் போது கொள்ளை அழகு. முக்கியமான விசயம் தொடரில் வயதுப் பெண்கள் எல்லோரும் தாவணியில் தான் வருகிறார்கள்.

இப்பல்லாம் தாவணி கட்டி பொண்ணுங்களை எங்கே பார்க்க முடிகிறது? அதற்காகவே இந்தத் தொடரைப் பார்க்கலாம்.

கொசுறு : ஆர்குட் மீனாட்சி ரசிகர்கள் குழுமத்தில் நானும் உறுப்பினர் ;)

**********************************************************************************இளைஞர்களையும் நெடுந்தொடர் பார்க்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். கதை நடப்பது சிங்கப்பூரில். அங்கே வசிக்கும் சக்திக்கும் திவ்யாவுக்கும் காதல் மலர்கிறது. கல்யாணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம், பிரச்சினையென்றால் காதலும் வேணாம் கேரட்டும் வேண்டாம் (இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் கத்தரிக்காய்?) என்று பிரிந்து விடலாம் என்று முடிவு செய்து சேர்ந்து வாழ்கிறார்கள். இதுவரைதான் கதை வந்துள்ளது.

தலைப்புப் பாடல் அருமை. இந்தப் பாடலை மேலும் ஹிட்டாக்கியதில் கணினித் துறையில் இருப்பவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஈமெயிலில் சுட்டி அனுப்பி தரவிறக்கம் செய்து கேட்டுப் பார்க்கச் சொன்னார்கள்.

சக்தியாக ப்ரஜின். திவ்யாவாக சந்திரா லட்சுமணன். முதலில் இவர் ப்ரஜினுக்கு சரியான பொருத்தம் இல்லை என்று சொன்னாலும் இப்போ மெள்ள மெள்ள ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

தொடரின் மிகப்பெரிய ப்ளஸ் 'உன்னாலே உன்னாலே' ஸ்ரீநாத். ப்ரஜினின் நண்பனாக வரும் இவர் டைமிங் ஜோக் அடித்துக் கிளப்புகிறார். திரைப்படங்களில் மேலும் வாய்ப்புகள் கிடைத்து கலக்க வாழ்த்துக்கள்.மைனஸ் விளம்பரங்கள். ஆமாம் மொத்தம் 12 நிமிடங்கள் மட்டுமே தொடரைக் காட்டுகிறார்கள்.

கோலங்கள் அழுகாச்சியைப் பார்ப்பதற்கு இந்தத் தொடர் எவ்வளவோ மேல். தாய்மார்களே மாறுங்கள்.

கொசுறு : இந்த நாடகம் பார்க்க அடித்துப் பிடித்து அலுவகத்திலிருந்து ஓடி வருகிறார்கள் நண்பர்கள.

Monday, January 14, 2008

சன் செய்திகள் நிஜம் தொடரில் தமிழ்ப்பதிவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி !

நேற்று தற்செயலாக சன் செய்திகள் தொலைக்காட்சியைப் பார்த்தபோது இரவு 9:30 மணிக்கு நிஜம் தொடரில் தமிழ்ப்பதிவர்கள் குறித்து நிகழ்ச்சி இருப்பதாகக் காட்டினார்கள். தவறாமல் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே மா.சிவக்குமார் பேசினார். மேலும் பங்கு பெற்றவர்கள் 'எண்ணங்கள்' பத்ரி, லக்கிலுக், பொன்ஸ், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சீனிவாசன். வலைப்பதிவுகள் சக்திமிக்க ஊடகமாக உருவாகி இருப்பதுதான் கரு.

* உலகில் தமிழில் தான் முதலில் வலைப்பதிவு திரட்டி உருவாக்கப்பட்டது என்று மா.சி கூறியது எனக்குப் புதிய தகவல்.
* எஸ்.ராமகிருஷ்ணன் பேசும் போது தின்மும் ஒரு மணி நேரம் வலைப்பதிவுகள் படிப்பதாகக் கூறினார். மேலும் பதிவுலகில் இருக்கும் பிரச்சினைகளான ஒருவரே வேறு சில ஐடிகளில் பின்னூட்டம் போடுவது போன்றவற்றைக் சுட்டுக் காட்டவும் தவறவில்லை.
* சீனிவாசன் 90% பதிவுகள் நல்ல பதிவுகளே எனவே புதியவர்கள் தயங்காமல் வரலாம் என்றும் சொன்னார்.
* லக்கிலுக் பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் மூலம் கோவையில் ஒருவர் மாதம் 6000 சம்பாதிப்பதாகக் கூறினார். யாருங்க அது? :)
* பொன்ஸ் இது மிகவும் சக்தி மிக்க ஊடகம் என்று சிம்பிளாக சொன்னதோடு முடித்துக் கொண்டார். ஏங்க? :)

பேட்டிகளின் இடையில் தமிழ்மணம், பொன்ஸின் பூக்கிரி.காம், பாலபாரதியின் விடுபட்டவை, தமிழில் பங்குவணிகம், மா.சியின் வலைப்பதிவு ஆகியவை காட்டப்பட்டன.

சக பதிவர்கள் இப்படிப் பலராலும் கவனிக்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. யாராவது நிகழ்ச்சியைப் பதிவு பண்ணியிருந்தீங்கன்னா தரவேற்றி விட்டு சுட்டி கொடுங்கப்பா. பார்க்காதவர்கள் பார்க்கட்டும்.

சந்தேகம் :
* பேட்டி எடுத்தவர்கள் மா.சியின் சன் டிவியின் ஏகபோகம் தொடரைப் படிக்கவில்லை என்று தெரிகிறது. :)))))

Saturday, January 12, 2008

ஆல் டே ஜாலி டே ! ஹேப்பி ஹேப்பி மொக்கை டே !

ஒரு நாள் அலுவலகத்தில் மதியம் நல்லா சாப்பிட்டுட்டு பொழுது போகாம - எவ்வளவு நேரம் தான் தமிழ்மணத்தையே மேயுறது?- கணினி முன்னால கையைத் தலையணையா வச்சிட்டுத் தூங்கிட்டேன். அட ரொம்ப நேரமெல்லாம் இல்லங்க. சும்மா ஒரு ஒன்றரை மணி நேரம் தான். கொஞ்ச நேரம் கழிச்சி என்னோட டீம்லீட் வந்து தட்டி எழுப்பி "எழுந்திரு. போதும். நீ விட்ட குறட்டையில் இங்க யாருமே வேலை செய்ய முடியல. கம்ப்யூட்டரெல்லாம் அதிருது. ரெண்டு மானிட்டர் வைப்ரேட் ஆகி உடைஞ்சிருச்சி"ன்னு சொன்னாங்க. நானும் "ஆபீஸ்ல இதெல்லாம் சாதாரணமப்பா"ங்கிற மாதிரியே தூக்கக் கலக்கத்தில உக்கார்ந்திருந்தேன்.

உடனே எங்க மேனஜர்கிட்ட இருந்து போன். வாய் ஓரம் வழிஞ்ச எச்சிலைத் துடைத்துக் கொண்டே பவ்யத்தோட எழுந்து போனை எடுத்தேன். "உடனே என்னை வந்து பார்"னு சொல்லிட்டு போனை வைச்சிட்டார். நான் பயந்து போய் என் டீம் லீடைப் பார்க்க அவங்க "ம். நீ பண்ணுற எல்லா அட்டகாசத்தையும் நான் சொல்லிட்டேன். அதான் கூப்பிடுறார்"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அடிப்பாவின்னு மனசுக்குள்ளயே திட்டிட்டு பயந்து போய் அவருகிட்ட போனேன்.

கொஞ்ச நேரம் என்னைக் கண்டுக்காம ரொம்ப பிஸியா இருக்குற மாதிரி சீன் போட்டார். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே "இந்த வருசம் பெஸ்ட் பெர்ஃபார்மர் அவார்டுக்கு உன்னை செலக்ட் பண்ணியிருக்கோம். கங்கிராட்ஸ்"ன்னு கை குடுத்தார். இந்தத் தாக்குதலை முற்றிலும் எதிர்பார்க்காததால் என்ன செய்வதென்றே தெரியாமல் அவரிடம் "ரொம்ப தேங்கிஸு சார்"ன்னேன். "நீ பண்ற எல்லாத்துலயும் ஒரு நல்ல இன்வால்வ்மெண்ட் இருக்கு. அதுனாலதான் இந்த அவார்ட் உனக்கு"ன்னார். "ஆமா சார். அதுனாலதான் ஒன்றரை மணி நேரம் தூங்கினது கூடத் தெரியலை"ன்னு மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டு வந்துட்டேன். டீம்லீட் என்னைப் பார்த்து சிரிச்சாங்க.

கூட வேலை பாக்குற பசங்ககிட்ட வந்து சொன்னேன். அவார்ட் விசயம் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சாங்க. "அடப் போடா அதெல்லாம் தமிழ்மணத்தில அப்பப்போ 'மொக்கை பதிவர்' அவார்டுன்னு கொடுப்பாங்களே அந்த மாதிரி. பிளாக்குல சைடில போட்டு வைச்சுக்கிற மாதிரி சர்டிபிகேட்டை வாங்கி பிரேம் போட்டு வச்சுக்க வேண்டியதுதான். எக்ஸ்ட்ரா ஒரு பைசா கூட தரமாட்டானுங்க கஞ்சப் பசங்க.ஆமா அது ஏன் உன்னை செலக்ட் பண்ணினாங்க? நீ ஆபிஸுக்கு வர்றதே 10 1/2 மணிக்கு. வந்தவுடனே தினமலர், தமிழ்மணம் அப்புறம் ஆர்குட். இதெல்லாம் முடிச்சிட்டு பொழுது போகலைன்னா ஆபிஸ் மெயில் ஓப்பன் பண்ணி எதாவது வந்திருக்கான்னு பாக்குற. உடனே டீ. திரும்ப வந்து கொஞ்ச நேரம் வேலை பாக்குற மாதிரி சீன். அப்புறம் லஞ்ச். அதுக்கப்புறம் ஒரு ஒன்றரை மணி நேரம் தூக்கம். அதுவும் குறட்டை விட்டு. அப்புறம் ஒரு டீயைக் குடிச்சிட்டு வீட்டுக்கு ஓடிடுற. அது எப்படிடா இந்த மேனேஜர் மட்டும் எப்பவுமே கரெக்டா கண்டுபிடிச்சி இப்படி தப்பான முடிவு எடுக்குறாங்க"ன்னு 'உன்னாலே உன்னாலே' ஸ்ரீநாத் மாதிரி புலம்புனாங்க.

இதுக்கு என்னோட பதில் "கண்ணா எப்படி வேலை பார்க்குறோம்ங்கிறது முக்கியமில்லை. எப்படி வேலையை முடிக்கிறோம்கிறது தான் முக்கியம்".

------X------

எங்கள் அறையில் இப்போ ஒரு நாலு மாசமா நாங்களே சமையல் செய்து சாப்பிடுகிறோம். ஒரு நாள் இரவு என் அறை நண்பர்கள் "வாங்க சாமானெல்லாம் வாங்கணும். கடைக்குப் போலாம்"னு கூப்பிட்டானுங்க. நான் ஆகா செலவில்லாம ஒரு போர்ட்டர் ரெடி பண்றானுங்கன்னு உஷாராகி "இல்லடா நான் இன்னிக்கு நைட் சமையல் பண்ணுறேன். நீங்களே போய் வாங்கிட்டு வந்துடுங்கன்னு சொல்லிட்டேன். அதாவது சொ.செ.சூ வச்சிக்கிட்டேன். என்ன பண்றதுன்னு கேட்டதுக்கு உப்புமா செய்யுங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டானுங்க.

ஏற்கனவே நான் பல குழம்பு, சாதம் எல்லாம் வச்சிருந்தாலும் உப்புமா நான் முயற்சி செய்து பார்த்ததே இல்லை. எனவே அம்மாவிடம் தொலைபேசி எப்படின்னு கேட்டுட்டு வெங்காயம், மிளகாய் எல்லாம் நறுக்கிட்டு ரவையை வறுக்க ஆரம்பிச்சேன். அப்படியே பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நல்லாக் கொதிக்கவச்சு அது கொதிக்க ஆரம்பிச்சதும் ரவையைப் போட்டேன்.

அடப்பாவமே பொசுக்குன்னு எல்லாத் தண்ணியையும் ரவை உறிஞ்சிடுச்சி. ஆகா என்னடா இது கிண்டுறதுக்கு கஷ்டமா இருக்கேன்னு இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்த திரும்பவும் உறிஞ்ச இப்படியே ஒரு ஏழு எட்டு டம்ளர் தண்ணி ஊத்தியாச்சு. அதாவது ரெண்டு டம்ளர் ரவைக்கு ஒரு பன்னிரெண்டு டம்ளர் தண்ணி.அப்பத்தான் ரவை ரொம்ப குழைவா வரஆரம்பிச்சது. அப்புறம் தான் சுதாரிச்சுப் பார்த்தா அப்படியே கிட்டத்தட்ட கொஞ்சம் கெட்டியான பாயசம் மாதிரி இருக்கு.

ஆகா தப்புப் பண்ணிட்டோமே சும்மாவே இம்சையைக் கூட்டுவானுங்க இதுல இந்த உப்புமாவைப் பார்த்தானுங்கன்னு ரூமைவிட்டே துரத்திருவானுங்களேன்னு யோசிச்சிட்டுக்கிருந்தப்பவே வந்துட்டானுங்க. "அட அதுக்குள்ள பண்ணிட்டீங்களா?"ன்னு ஒருத்தன் வேகமாப் போய் சட்டியைத் திறந்து பார்த்தான். "அட உப்புமாவுக்குப் பதிலா கேசரி பண்ணிட்டீங்களா? ஆனா கேசரியில எதுக்கு பச்சைமிளகாய், வெங்காயமெல்லாம் கிடக்கு?"ன்னு சந்தேகமாக் கேட்டான். "அது வந்து"ன்னு நான் இழுக்குறப்பவே தலையில கையை வச்சிக்கிட்டு தரையில உக்காந்துட்டானுங்க. "இதை இப்போ என்ன பண்றது"ன்னு ஒருத்தன் கேட்க "ம். பக்கத்தில் இருக்கிற சந்தியா தியேட்டருல கொஞ்சம் பசை இருக்கு. கம்மி ரேட்டுக்கு வாங்கிக்கிறீங்களான்னு கேட்டுட்டு வா"ன்னான்.

உடனே ரோசம் வந்து வீட்டில் இருந்து வெளியேறிய நான் நேராக ஓட்டலுக்குப் போய் எல்லோருக்கும் என் செலவில் முட்டை புரோட்டா பார்சல் வாங்கிட்டு வந்துட்டேன். :)

------X------

ஒருநாள் பெங்களூர்ல பேருந்தில் போன போது நாங்க இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தும் பஸ் நிக்கலை. உடனே நான் "ஹோல்டான். டோர் ஓப்பன் மாடி சார்"ன்னு சவுண்ட் விடவும் பஸ் நின்னுருச்சு. என் பசங்க எல்லாம் "என்ன இவ்வளவு சூப்பரா கன்னடம் பேசுற. கலக்கிட்ட போ. வா உனக்கு ஒரு ஜூஸ் வாங்கித்தாரேன்"னு பார்ட்டி வச்சுக் கொண்டாடிட்டானுங்க. இதுல என்ன காமெடின்னா நான் சொன்னதுல 'மாடி'(பண்ணுங்க)ங்கிறது மட்டும் தான் கன்னட வார்த்தை. இது எப்படி இருக்கு?


மொக்கை டேக்கு என்னை அழைத்த கண்மணி டீச்சருக்கு மீண்டும் நன்றி. 'ஏய் பார்த்துக்க பார்த்துக்க நானும் மொக்கைப் பதிவர் தான்'ன்னு சொல்லிக்கிட்டே நானும் ஜீப்பில ஏறிக்கிறேன். :)

அப்புறம் ஒரு முக்கியமான விசயம் இது எனது 50வது பதிவுங்கோ!!!!!!!!!!

நான் மொக்கை போட அழைக்கும் மூன்று பேர்.

1. எப்பவும் சீரியஸாவே எழுதி பொழந்து கட்டுற நண்பர் பிரின்ஸ் என்.ஆர். சாமா.

2. ஊர்ப்பாசத்தில் தனியா ஒரு இணையதளமே கன்னியாகுமரிக்காக நடத்துற நண்பர் அப்பாவி.

3. ரொம்ப நாள் கழிச்சி திரும்பவும் பதிவு எழுத வந்திருக்கிற நம்ம அண்ணாத்த மகேஸ்.

நாங்க ஏற்கனவே மொக்கை தானே போட்டுக்கிட்டிருக்கோம்னு மொக்கை காமெடி எல்லாம் பண்ணக் கூடாது. :))

Sunday, January 06, 2008

ஹர்பஜன் ஏன் இந்தக் கொலைவெறி?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் அரை சதம் கடந்ததும் சைமண்ட்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரிந்திருக்கும். இப்பிரச்சினைக்கு முழுக்காரணமும் ஹர்பஜனே என்பது தொலைக்காட்சியில் பார்த்தபோது தெளிவானது. என்டிடிவியில் ஒளிபரப்பான காட்சிகளைப் பார்த்தபோது அரைசதம் கடந்ததும் ஹர்பஜனே கையை ஆட்டி சைமண்ட்சை அழைக்கிறார். பின் அவரிடம் ஏதோ சொல்ல பின் அவரும் ஏதோ சொல்ல பின் சச்சினும் நடுவரும் அவரைத் தடுக்கிறார்கள். அவர் கண்டிப்பாக நிறவெறி குறித்து எதுவும் சொல்லியிருக்க மாட்டார் என்றே வைத்துக் கொள்வோம். இப்படித் தேவையில்லாமல் வம்பிழுப்பது தேவையா?

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியினரும் அந்நாட்டுப் பத்திரிக்கைகளும் எதிரணியினரைச் சாடி மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதில் வல்லவர்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் தான் யுவராஜ்சிங்கின் நடத்தை சரியில்லை என்று அணியினர் வருத்தப்படுவதாகக் கிளப்பிவிடப்பட்ட புரளி. அதுபோல ஏற்கனவே இந்தியாவில் சைமண்ட்சைப் பார்த்து 'குரங்கு' போல வாயைக் கோணிக்காட்டிக் கிண்டலடித்ததை 'நிறவெறி'ப் பிரச்சினையாக மாற்றி விட்டனர். முதலில் நம் ஆட்களுக்கு நிறவெறி என்பதெல்லாம் தெரியுமா என்பதே கேள்விக்குறியது. (நமக்குத் தெரிந்ததெல்லாம் சாதிவெறியும், மதவெறியும் தான். இப்படியிருக்க பாவம் இரு அப்பாவிகள் இப்போது சிறையில் இருக்கிறார்கள்.)

சரி பிரச்சினைக்கு வருவோம். ஏற்கனவே இந்தியாவில் நடந்த அந்தச் சம்பவத்தால் நல்ல அனுதாபம் தேடிய சைமண்ட்ஸ் இப்போது இந்தப் பிரச்சினையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். தன்னை நோக்கி ஹர்பஜன் 'குரங்கு' என்று திட்டியதாக அவர் நடுவர்களிடம் புகார் கூறியிருக்கிறார். இதன் மூலம் சைமண்ட்ஸுக்கு இன்னும் நிறைய அனுதாபம் கிடைக்கலாம். நம்ம ஷில்பாவுக்கு லண்டனில் கிடைத்த மாதிரி.

இது ஒருபுறம் இருக்க நமது வீரர்கள் என்னமோ எல்லாப் போட்டிகளிலும் 100,200 ன்னு அடித்து நொறுக்குவது போலத் தான் வாய்ச்சவடால்களும், அடுத்த நாட்டு வீரர்களைச் சீண்டிக் கொண்டும் இருக்கிறார்கள். இதை இந்திய அணியில் தொடங்கி வைத்த பெருமை மலையாளி ஸ்ரீசாந்தையே சேரும். எடுப்பது ஒரு மேட்சுக்கு ஒரு விக்கெட் கொடுப்பது 50 ரன். இதில் முறைப்புக்கும் வம்பிழுப்புக்கும் மட்டும் இவரிடம் குறைச்சல் இல்லை. இப்போ ஹர்பஜனும் சேர்ந்து கொண்டார். கேட்ச் பிடித்ததும் பந்தைக் காலால் உதைப்பது, பல்டி அடிப்பது போன்ற குரங்குச் சேட்டைகளை அதிகம் செய்கிறார்.

அடுத்தவன் வம்பிழுத்தால் அதை உன் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் காட்ட வேண்டியது தானே? அதை விடுத்து சரிக்குச் சமமாக சண்டை போட்டு அதிலும் ஜெயிக்கவாவது தெரிகிறதா? அனுதாபத்தையும் அடுத்தவனே தட்டிக் கொண்டு போய்விடுகிறான். என்னமோ சர்வதேசப் போட்டிகளில் 10,15 சதம் அடித்துவிட்டமாதிரியும், மூன்றாவது அரைசதம் அடித்த உடனே திமிர் தலைக்கேறி அடுத்தவனை அழைத்து வம்பிழுப்பெதென்றால் என்ன கொழுப்பிருக்கும்? ஏன் பாகிஸ்தானுடன் விளையாடும் போது அக்தரிடம் உன் வீரத்தைக் காட்டவேண்டியது தானே? உன் பேட்டைப் பிடுங்கி உன் காலையே அடித்து உடைத்து விடுவார் அங்கேயே.

இந்த மோதல் போக்கை ஏன் பிசிசிஐயும் ஐசிசியும் தடை செய்யமாட்டேன் என்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை கிரிக்கெட்டுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது என்று விட்டு விடுகிறார்கள் என்று தான் நினைக்க முடிகிறது.

இந்த விசயத்தில் சச்சினைப் பாராட்ட வேண்டும். எதிரணியினர் என்னதான் கோபப்படுத்தினாலும் அவர் பேட்டிங்கில் மட்டுமே அதற்கான பதிலைச் சொல்லுவார். உதாரணம் ஹென்றி ஒலங்கா. ஓட ஓட விரட்டினார் அந்த ஜிம்பாப்வே வீரரை.

சச்சின் நிறைகுடம். ஹர்பஜன்? அவரவர்க்குத் தெரிந்ததைச் செய்கிறார்கள்.

Wednesday, January 02, 2008

ஆர்குட்டில் டிஆர் படும் பாடு! கரடி காங் டிஆர் ரசிகர் மன்றமாம் !

நம்ம டிஆர் ஐ வச்சி எத்தனை காமெடிதான் பண்ணுவாங்களோ... இப்போ ஆர்குட்டிலும். சும்மா ஆர்குட்டில் உலாத்துனப்ப கண்ணுல பட்டதுதான் 'கரடி காங் டிஆர்' ரசிகர் மன்றம். பாவம் மனுசனைப் பாடாய்படுத்துறாங்க. ப்ரொபைல் படமே பயங்கரம். சிம்பன்சியும், டிஆரும் சிரிக்கிறாப்புல இருக்கு. இதில 4957 உறுப்பினர்கள் வேற. அவர் என்ன பண்ணுனாலும் கலாய்க்கிறதுதான் இங்க வேலை.இக்குழுமத்திலிருந்து ஒரு கருத்துக்கணிப்பு கீழே.

veerasami ya hollywood la dub panna enna peru vaipanga

the brave lord
return of the hipopotamus
wider_man
courage underwear fire
monky in the lungi's shadow
the zoolander
the last saavugaraki
manusan impossible
niiingala peru vachikingoooooooo


ஏற்கனவே டிஆர் ஐப் பத்தி ஒரு படம் நான் என் பதிவிலே போட்டதுக்கே சண்டைக்கு வந்த சிலர் இதுக்கு என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல.

முக்கிய குறிப்பு : நான் இக்குழுமத்தில் உறுப்பினர் இல்லை. இது தெரியாம என்னையப் போட்டுக் கும்மிறாதீங்க. ஆனால் அங்கே சில பதிவர்களின் ப்ரொபைல்கள் கண்ணில்படுகின்றன. கும்முறதுன்னா இங்க போய் கண்டுபிடிச்சிக் கும்முங்க. ஏதோ நம்மால முடிஞ்சது.

வியப்பூட்டும் சில சம்பவங்கள் - உண்மையா, பொய்யா, தற்செயலா?

எனக்கும் சமயங்களில் வியப்பூட்டும் வகையில் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நானும் பாரதியாரும் ஒன்று. கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது. கணக்கு எப்பவுமே பிணக்குதான். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வந்தவுடன் எனக்கெல்லாம் செம பயம். எல்லாம் கணக்கை நினைத்துதான். வீட்டிற்கு வந்தவுடன் நாள்காட்டியில் தேர்வுநாட்களுக்கான பலன்களை எடுத்துப் பார்த்தேன். கணக்குத்தேர்வன்று போட்டிருந்த பலன் என்ன தெரியுமா? 'வெற்றி'. ஆகா தப்பிச்சோமடா சாமின்னு கொஞ்சம் தைரியமாகவே இருந்தேன். அதைப் போலவே கணக்குத்தேர்வும் சுலபமாகவே இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் சாதாரணமாக கணக்கில் 55,60 என வாங்கு நான் முழுஆண்டுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் 95 :O. இதைக்கூட தற்செயல் என்று சொல்லிவிடலாம். அடுத்த சம்பவம் அப்படி அல்ல.

ஜாதகம் பார்ப்பதிலும் எனக்கு நம்பிக்கை அந்த அளவு இல்லை. இருப்பினும் வீட்டில் பெரியவர்கள் எதிர்த்துப் பேசும் தைரியம் இல்லாததாலும், அவர்கள் மனம் புண்படக் கூடாது என்பதாலேயும் பேசாமல் இருந்துவிடுவேன். இங்கே இருக்கும் பெரும்பாலோனோரும் அப்படித்தான் என நினைக்கிறேன். நான் எங்கள் சொந்த ஊரில் இருந்தபோது என்வீட்டின் அருகில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடிச் செல்வது வழக்கம். ஒருநாள் பொழுது போகாததால் கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். அக்கோவிலின் குருக்களிடம் ஒருவர் தன் மகளுக்கு ஜாதகம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவரும் தெரிந்தவர்தான். அவர் மகள் ஒரு சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். குருக்களும் அவரிடம் நட்சத்திரம், பிறந்ததேதி, நேரம் ஆகியவற்றைக் கேட்டுவிட்டு ஒரு புத்தகத்தில் எதையோ பார்த்துப் பார்த்து குறித்துக் கொண்டிருந்தார். பின்னர் குருக்கள் அவரிடம் "ஜாதகம் இப்பொழுது எழுத வேண்டாம். உன் மகளுக்கு 12 வயது முடிந்தவுடன் எழுதிக்கொள்ளலாம். அது தான் சரியான சமயம்" என்று சொல்லிவிட்டார். அச்சிறுமியின் தந்தையும் பேசாமல் போய்விட்டார். அவர் உடனிருந்த மற்றொரு குருக்கள் அவரிடம் "ஏன் ஓய் எழுதலை?" ன்னு கேட்க அவர் "அந்தப் பொண்ணுக்கு பன்னிரெண்டோட ஆயுள் முடியுது" ன்னு யாருக்கும் கேட்காமல் சொன்னது எனக்குக் கேட்டுவிட்டது. மனசுக்குக் கஷ்டமாயிருந்தது. அந்தப் பெண்ணும் முடியாமல் இருந்து 12வயதிலேயே இறந்துபோனாள். இது ஒரு மிகவும் சோகமான உதாரணம்.

அப்புறம் கும்பகோணத்தில் ஓலைச்சுவடியை வைத்துப் பலன்கள் சொல்கிறார்கள் என்று என் மாமா அங்கு சென்று வந்தார். அவர்கள் பலன்களை ஒரு ஒலிநாடாவில் பேசிப் பதிந்து கொடுத்திருந்தார்கள். என் மாமா அவர்களிடம் சொன்னது இரண்டு விசயங்கள் தான். ஒன்று அவர் பெயர். மற்றது அவரது கைரேகை. பிறந்த தேதி கேட்டபோது அவர்களை சோதனை செய்யும் விதமாக விவரமாக "தேதி தெரியாது" என்று சொல்லிவிட்டார். வீட்டில் வந்து ஒலிநாடாவைக் கேட்டால் அவர்கள் எங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லியிருந்தது 90% உண்மை. குடும்பத்தில் எத்தனை பேர், அவர்கள் பெயர், என்ன தொழில் என எல்லாமும் சொல்லியிருந்தனர். இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. எதாவது மை போட்டு(!) விசயத்தைக் கறந்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் அதன் ரகசியத்தைச் சொல்லவும்.

இன்னும் சில இருக்கின்றன ஞாபகம் வரும்போது சொல்கிறேன்.