Monday, September 17, 2007

நாமும் பங்கேற்கலாமே 'மதுரைத் திட்டத்தில்' !வலைப்பதிவர்களில் நிறையப் பேருக்கு மதுரைத் திட்டம்(Project Madurai) பற்றித் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மதுரைத்திட்டம் என்பது தமிழில் இருக்கும் நூல்களை எல்லாம் மின் தொகுப்பிற்கு மாற்றுவதாகும். அதாவது புத்தகங்களில் இருக்கும் நூல்களைக் கணினியில் படிக்க வகை செய்வதாகும். ஏற்கனவே பல தன்னார்வலர்கள் பங்கேற்று நிறைய நூல்கள் மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. இப்போது இத்திட்டம் எல்லோரும் பங்கெடுக்கும் வகையில் DP-PM (Distriputed Proof Reading - Project Madurai) என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதன்மூலம் ஆர்வம் மிக்க எவரும் பங்குகொண்டு நூல்களை மின் தொகுப்பாக மாற்றும் இத்திட்டத்திற்கு உதவலாம். நாம் நேரடியாக தட்டச்சுதல் மற்றும் ஏற்கனவே பிறர் தட்டச்சு செய்த பக்கங்களை சரிபார்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபடலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்பது மிகவும் சுலபம்.

1. முதலில் http://groups.yahoo.com/group/pmadurai/ என்ற சுட்டிக்குச் சென்று மதுரைத்திட்டம் மடற்குழுவில் உறுப்பினராகுங்கள்.
2. பிறகு http://www.projectmadurai.org.vt.edu - யில் ஒரு பயனர் கணக்கு துவங்க வேண்டும்.
3. பின்னர் தற்போது மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்படும் நூல்களில் நமக்கு விருப்பமான நூலைத் தெரிவு செய்து அதில் நமது பங்களிப்பாக தட்டச்சு/சரிபார்த்தல் தேர்வு செய்ய வேண்டும்.
4. பின்னர் அந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் படங்களாகத் தோற்றமளிக்கும். அவற்றைப் பார்த்துத் தட்டச்சு செய்ய வேண்டும்.
5. ஏற்கனவே பிறர் தட்டச்சு செய்த பக்கங்களையும் இதே முறையில் சரிபார்க்கலாம்.

முழுக்க முழுக்க ஒருங்குறியே பயன்படுத்தப்படுகிறது. எ-கலப்பை அல்லது தமிழ்99 தட்டச்சு முறை தெரிந்த எவரும் பங்கேற்று நம்மால் இயன்றதைச் செய்யலாம்.

நாம் ஒரு பக்கத்தைத் தட்டச்சு செய்யும் போது அந்தப் பக்கம் மற்றொரு பயனருக்குத் தோற்றமளிக்காது. ஒரு பக்கம் என்றால் நிறைய இருக்குமோ என எண்ண வேண்டாம். அதிகபட்சம் இருபது முதல் இருபத்தைந்து வரிகளே உள்ளன. ஒரு பக்கம் தட்டச்சு செய்ய 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. (நான் கொஞ்சம் மெதுவாகத் தட்டச்சுவேன்).

கீழே உள்ள நூல்கள் தற்சமயம் மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.ஒரு நூலின் ஒவ்வொரு பக்கமும் படங்களாகத் தெரியும். நாம் அவற்றைப் பார்த்து தட்டச்சு செய்து சேமிக்க வேண்டும்.


ஒரே சமயத்தில் இரண்டு பேர் ஒரே பக்கத்தைத் தட்டச்சிட முடியாது. கீழே பார்க்கவும்.


மதுரைத்திட்டத்தில் தொகுக்கப்படும் நூல்கள் விக்கிநூல்களிலும் தொகுக்கப்படுகின்றன.

தமிழார்வமிக்க பதிவர்கள் பங்கேற்கலாமே!

ஏற்கனவே மின் தொகுப்பாக மாற்றப்பட்ட நூல்களின் தொகுப்பு இங்கே.

மேலும் விபரங்களுக்கு மதுரைத்திட்டத்தின் வலைப்பதிவைப் பார்க்கவும்.

Thursday, September 13, 2007

ஆர்குட்டில் தமிழ் !
கூகுள் கொஞ்சம் கொஞ்சமாக தனது சேவைகளை பிராந்திய மொழிகளில் மாற்றி வருகிறது. அதன் சமுதாய வலைத்தளமான ஆர்குட்டில் இப்போது எல்லாம் தமிழில் தெரிகிறது. நீங்களும் தமிழில் வேண்டுமானால் 'Settings -> Language -> தமிழ்' தேர்வு செய்யவும். ஆனால் இது தனித்தமிழ் அல்ல. தமிங்கிலம் தான். தனித்தமிழ் வேண்டி கூகுளுக்குத் தெரிவிக்க ஏதேனும் வழி உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லவும்.
Monday, September 10, 2007

நாகர்கோவில் நண்பர்கள் - 2

கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சிணை கேட்டால் நமக்கு மயக்கம் வரும் அல்லது வயிறெரியும். பின்னே கொஞ்ச நஞ்சமா கொடுக்கிறார்கள். லட்ச,லட்சமா அதுவும் பத்தின் மடங்கில்தான். இது குறித்து என் அறை நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவனிடம் "அப்புறம் நீதான் நல்லா செட்டில் ஆயாச்சே! பொண்ணு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான?"ன்னேன்.
"நான் எதுக்கு தேடிப் போகணும். எல்லாம் தானா வரும். இப்போதைக்கு என்னோட மதிப்பு எழுபது லட்ச ரூபாய்."ன்னு சிரிச்சான்.
"என்னது எழுபது லட்சம்?"
"எனக்குக் கிடைக்கும் வரதட்சணை"
"டேய்ய்ய்ய்ய்ய்ய்... அம்புட்டாடா குடுப்பாங்க" நம்பமுடியாமல் கேட்டேன்.
"ஆமா சும்மாவா மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிறோம்ல"
"அதுக்காக எழுபது லட்சம் எவண்டா குடுப்பான். சும்மா கதை விடாதே"
"அடப்போடா.. நான் எதுவுமே கேடக வேண்டியதில்லை. எல்லாம் தானா வரும். முப்பது லட்சம் ரொக்கம். ஒரு நாப்பது லட்சத்துக்கு சொத்து. ஒரு கார். ஒன்றரை கிலோ நகை"

நான் மயங்கிவிட்டேன். இன்னொரு நண்பன் தொடர்ந்தான்.

"என் அக்காவுக்கு நாங்கள் பார்த்தது துபாய் மாப்பிள்ளை. நகை இரண்டு கிலோ. எங்க வாழைத்தோப்பிலும், இரப்பர் தோப்பிலும் ஒரு பகுதி. அதோட மதிப்பு ஐம்பது லட்சம். முப்பது லட்சம் ரொக்கம். இவ்வளவும் கொடுத்தோம்". சோடா குடுத்தால் கூட தெளியாத மயக்கம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்று சொல்கிறார்கள். படிப்பறிவு அதிகம் இருந்தால் இதெல்லாம் குறையத்தான் வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.

அடுத்து நான் என் நண்பனிடம் ஒரு பிட்டைப் போட்டேன். "நான் உங்க ஊரில் கல்யாணம் செய்துக்கிட்டா என்னடா குடுப்பாங்க?". "உனக்கெல்லாம் எவன் பொண்ணு குடுப்பான் எங்க ஊருல இருந்து? எங்க பார்த்தாலும் ஏரி,குளம்னு எங்க ஊரு. கண்மாய்க்குள்ளயே ஊத்துத் தோண்டித் தண்ணியைப் பாக்குறவுங்க நீங்க. சான்ஸே இல்லை. அதே மாதிரி, பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்த்தால் அது எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே பார்ப்பார்கள். அதிகபட்சம் பாளையங்கோட்டை வரைதான் எங்க லிமிட்"ன்னு கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

"அதே போல மாப்பிள்ளைகளையெல்லாம் தலையில் தூக்கி வைத்து மரியாதை கொடுப்பார்கள் உங்க ஊரில். இங்கெல்லாம் அப்படியில்லை. அவரும் வீட்டில் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான். உங்க ஊரில் மாப்பிள்ளை வந்தால் மாமியார் சமையல்கட்டை விட்டு வெளியே வரமாட்டார். இங்கு மாமியார் மாப்பிள்ளையின் முன்னால் கால் மேல் கால் போட்டு பரீட்சைப் பேப்பர் திருத்திக் கொண்டிருப்பார். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். ஆனால் நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். இன்னொன்னு சொல்றேன். இரண்டு பசங்க ஒரு வீட்டில் இருந்தால், அதுவும் படித்திருந்தால் அந்தக் குடும்பம் பிற்காலத்தில் கோடீஸ்வரக் குடும்பம்.வரதட்சணை அவ்வளவு வரும்." என்றான் நண்பன்.

அதே போல உறவுமுறைக்குள் திருமணம் என்றால் முகம் சுளிக்கிறார்கள். மாமா மகள், அத்தை(மாமி-ன்னு சொல்லுவார்கள் பேச்சு வழக்கில்) மகனையெல்லாம் திருமணம் செய்யும் வழக்கம் இல்லை. மாமா மகள், அத்தை மகன்களுடன் சகோதர உண்ர்வுடன்தான் பழகுகிறார்கள். அடுத்து இவர்கள் கேரளத்தில் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ அரிதாம். கேட்டால் அவர்கள் மதிக்கமாட்டார்கள் என்கிறார்கள்.

இவர்கள் இப்படி வரதட்சணை வாங்குவதைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. அந்த எரிச்சல் இப்படிப் பகல் கொள்ளை அடிக்கிறார்களே என்பதால் வந்ததா அல்லது எனக்கு இப்படியெல்லாம் கிடைக்காதே என்ற பொறாமையால் வந்த வயிற்றெரிச்சாலா என்பது தெரியவில்லை. ;) . சும்மா தமாசுக்கு. வரதட்சணை வாங்குவது கேவலம் என்பதே என் எண்ணம்.

எங்க ஊர் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். அதிகபடசம் ஒரு லட்சம் குடுப்பார்கள். அதுவும் வம்படியாகக் கேட்டால் தான். ஒரு நடுத்தரக் குடும்பம் என்றால் நாற்பது பவுன் நகை போடுவார்கள். ரொம்பப் பெரிய பணக்காரக் குடும்பம் என்றால் கார் கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

சரி போதும் வரதட்சணை புராணம்.

என்பீல்ட், புல்லட் போன்ற வண்டிகள் தான் இவர்களின் முதல் காதலிகள். கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான இந்த ஊர்ப்பசங்களின் கனவு அவைகளாகத் தான் இருக்கின்றன. என்னதான் மலையாளப் படம் பார்த்தாலும், மலையாளம் பேசினாலும் தமிழன் என்ற உணர்வு மேலோங்கியே இருக்கிறது. சந்தேகம் இருந்தால் சென்ற இடுகையின் பின்னூட்டங்களைப் பார்க்கவும். அடுத்த விசயம் இவர்கள் மற்ற மாவட்டத் தமிழர்களை (குறிப்பாக மதுரை) "ஏய் பாண்டிக்காரா" என்று நக்கலுக்குக் கூப்பிடுவார்கள். என்ன தான் மலையாளம் பேசினாலும் இவர்கள் கேரளாவுக்குப் போனால் இவர்களும் 'பாண்டி' தான் மலையாளிகளுக்கு. பாண்டியின் அர்த்தம் என்னன்னு தெரியவில்லை. யாராவது சொல்லுங்கள்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் சில ஊர்களின் பெயர்கள் வித்தியாசமானவை.
'தொளையாவட்டை (எழுதியிருப்பது சரியா?)
களியக்காவிளை
தக்கலை'
முதலிரண்டும் தான் வாய்க்குள் நுழையாமல் பேஜார் செய்தவை. அடுத்துப் பழக்கமாகிவிட்டது. வேறு ஏதாவது ஊர் பெயர் இப்படியிருந்தால் சொல்லுங்கள்.

இங்கு ஊர் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளனவாம். எல்லோருக்கும் தெரிந்த திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, விவேகானந்தர் மண்டபம் தவிர நிறைய இடங்கள் உள்ளனவாம். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறையவே காணப்படுமாம். நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போவதற்குத்தான் நேரமில்லை. போய்ட்டு வந்து அதைப் பற்றியும் எழுதுகிறேன்.

நண்பர் ஜோ அவரது பதிவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் அழகான புகைப்படங்களைப் போட்டிருக்கிறார். இங்கேயும் போய்ப் பாருங்கள்.

Thursday, September 06, 2007

இணையத்தில் தமிழ் வானொலிகள்

இணையத்தில் தமிழ் வானொலி கேட்க எல்லோருக்குமே விருப்பம் இருக்கும். கீழே உள்ள கோப்பைத் தரவிறக்கி மீடியா பிளேயரிலோ அல்லது வின்ஆம்ப்பில் கேளுங்கள்.

கிட்டத்தட்ட எல்லா இணையத் தமிழ் வானொலிகளின் முகவரிகளும் இந்தக் கோப்பில் உள்ளன.

கோப்புக்கு இங்கே கிளிக்கவும்.

நாகர்கோவில் நண்பர்கள் - 1

நண்பர்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பள்ளி, கல்லூரி நண்பர்கள் எல்லோரும் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். நான் இப்பொழுது சொல்லப்போவது என்னுடைய நாகர்கோவில் நண்பர்களைப் பற்றித் தான்.


நாகர்கோவில் என்றொரு ஊர் உண்டு அங்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பது நான் கல்லூரியில் முதுகலை படிக்கும்போது தான் தெரியும். விடுதியில் தங்கிப்படிக்கும் போது என் அறைத் தோழர்கள் மனோ மற்றும் மைக்கேல். இவர்கள் தமிழகத்தின் தென் கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்டக்காரர்கள். முதன் முதலில் தமிழை வித்தியாசமாகப் பேசக் கேட்டது இவர்களிடம் தான். இளங்கலை அருப்புக்கோட்டையில் படித்ததால் எல்லோரும் மதுரை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்துதான் வந்திருந்தோம். எனவே அங்கு வித்தியாசமான தமிழ் உச்சரிப்பைக் கேட்க முடியவில்லை.

நாகர்கோவில்காரர்கள் வெப்பத்தைத் தாங்கமுடியாதவர்கள். மைக்கேல் எப்போதும் நீர்யானை மாதிரி தண்ணீரில் ஊறுவான். இரண்டு முறை குளிப்பது, ஸ்டடி அவரில் பத்து தடவை பாத்ரூமுக்குப் போய் தண்ணில் விளையாண்டுட்டு வருவது அலும்புவான். கேட்டால் "ஒரே சூடு மக்கா!" என்பான். இவர்கள் தமிழை மலையாளம் கலந்து பேசுவார்கள். அநியாயத்துக்கு ஊர்ப்பெருமை பேசுவார்கள்.

இவர்களையும் வாழைப்பழத்தையும் பிரிக்க முடியாது. ஒரு நாள் கல்லூரி எதிரில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்து கொண்டு "மக்கா, இங்க என்ன பழம் கிடைக்குது? எங்க ஊருல எல்லாம் வகைவகையாக் கிடைக்கும். கேட்டியா?" என்றான். "எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாட்டுப்பழம், ரஸ்தாளி, பூவன் பழம், பச்சைப்பழம் மட்டும் தான். வாழைப்பழத்துல கூட உங்க ஊர் முன்னால இருக்காடா?"ன்னேன். "ஆமா கேளு" ன்னு ஒரு லிஸ்ட்டே சொன்னான்.

"யாத்தம்பழம்
ரசகதளி
மாவுகதளி
பாளையங்கொட்டை
செந்துளுவன்
மோரிஸ்
மட்டி
சிங்கன்
பேயன்பழம்
வெள்ளைத்துளுவன்
மொந்தம்பழம்
கற்பகவள்ளி
பூங்கதளி"


அசந்துட்டேன். "அப்புறம் இங்க கிடைக்கிற பழமெல்லாம் எங்க ஊருல நாங்க தின்னவே மாட்டோம். இப்பப்பாரு ஒரு மேஜிக். இந்தப் பழத்தோட நுனியில விரலை வச்சு அமுக்குனா பழம் மூணாப் பிரியும் பாரு"ன்னுட்டு அமுக்கிக் காட்டினான் பழம் மூன்றாகப் பிரிந்தது. "அட! வாழைப்பழத்துல இவ்வளவு விசயம் இருக்கா?"ன்னு வாயைப் பிளந்தேன். "எல்லாம் எங்க ஊருல கத்துக்கிட்டது மக்கா!"ன்னான்.

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் பெரும்பாலும் கிறித்தவர்கள் நிறைந்த பகுதி. எல்லோரும் அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரும்பாலும் ஆசிரியர் பணியிலும், அரசு வேலையிலும் இருப்பவர்கள். எனவே பிள்ளைகளின் கையில் தாராளமாகப் பணம் புரளும். எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக அசையாத சொத்து இருக்குமாம். மைக்கேல், மனோவுக்கு இரப்பர் தோட்டம் இருக்கிறதாம்.

இவர்கள் பேசும் சில தமிழ் வார்த்தைகள் நமக்கு வித்தியாசமாகத் தெரியும்.
கருக்கு - இளநீர்
தூத்துதல் - வீட்டைப் பெருக்குதல்
சவட்டீருவேன் - மிதிப்பேன்
நாசம் ஆயிரும் - வீணாகிவிடும்
தொட்டெடுத்து - பக்கத்தில்

அப்புறம் எல்லா வாக்கியத்திலும் 'கேட்டியா?' என்று கடைசியாக சேர்த்துக் கொள்வார்கள். "மக்கா! இந்த ஊர் ரொம்ப மோசம் கேட்டியா?" இப்படி. இவர்கள் ஊரிலெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே கிடையாதாம். எனக்கு ஒரே பொறாமை. இருக்காதே பின்னே. நானெல்லாம் ஒரு குடம் தண்ணீரை அடிபம்பில் அடித்து அதிலே குளித்த ஆளு.


மலையாளத் திரைப்படத்தைப் பற்றி விவரமாக அலசி ஆராய்வார்கள். நமக்கு கொட்டாவி வரும். மோகன்லாலை மிகவும் புகழ்ந்து பேசுவார்கள்.


அடுத்து இந்த மக்களிடம் முக்கியமானது இவர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சணை.


((அடுத்த பதிவில் சொல்லுறேன்))


பி.கு: நாகர்கோவில்காரங்க யாரும் சண்டைக்கு வந்துராதீங்க.. உங்க ஊரை உயர்வாத்தான் சொல்லியிருக்கேன். அப்படி எதாவது தப்பா இருந்தா அது எங்க ஊரிலெல்லாம் அந்த மாதிரி இல்லையே என்று எனக்கு வந்த பொறாமையே காரணமாயிருக்கும்.

Tuesday, September 04, 2007

அப்பாவியின் போட்டி ! கமெண்ட் போடு் ! டொமைன் வெல்லு !

அப்பாவி தனது பிளாகில் “கமெண்ட் செய்யுங்கள், பரிசு வெல்லுங்கள்” என்ற போட்டியை ஆரம்பித்துள்ளார். இப்போட்டியில் பங்குபெற அவ்ரது இந்த பதிவுக்கு ஜஸ்ட் ஒரு மறுமொழி செய்தால் போதும்.

மேலும் விபரங்கள் அவரது பிளாகில்>>