Wednesday, January 31, 2007

கடன் தந்தார் நெஞ்சம்

எங்கள் தாத்தா ஒருமுறை சென்னையில் இருக்கும் எங்கள் தூரத்து உறவு மாமா ஒருவருக்கு 2000 ரூபாய் கடனாகக் கொடுத்திருந்தார்.ரொம்ப நாளாகியும் அவர் திரும்பக் கொடுக்காததால் அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் உடனே அனுப்பி வைக்குமாறும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினார்.

பதிலுக்கு எங்கள் மாமா கோபமாக ஒரு கடிதம் அனுப்பினார். அதில் எங்கள் தாத்தா அவரை அவமானப்படுத்தி விட்டதாகவும் அதற்கு மிக்க நன்றி எனவும் அத்துடன் எங்களுக்கு கணக்கு எதுவும் இல்லாத வங்கி ஒன்றின் வரைவோலை ஒன்றையும் அனுப்பி இருந்தார்.

எங்கள் தாத்தா மிகவும் குழம்பி "என்னடா இது? கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டது அவ்வளவு பெரிய அவமானமா?" என எண்ணி மிகவும் கவலை கொண்டார். பின்பு ஒரு நாள் இன்னொரு உறவினரிடம் இது பற்றிச் சொன்னபோது தான் எங்கள் மாமாவின் கோபத்துக்கான காரணம் புரிந்தது.

சென்னையில் எங்கள் மாமா இருப்பது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. எங்கள் தாத்தா எழுதிய அஞ்சல் அட்டை அங்கே ஒரு பொதுவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை ஊர்வம்பில் ஆர்வமுள்ள வீட்டுக்காரம்மா எடுத்துப் படித்து விட்டு அதை சுற்றுவட்டாரத்தில் போட்டு விட அதைச் சிலர் எங்கள் அத்தையிடம் போட்டுவிட்டார்கள். விஷயம் மாமா காதுக்குப் போய் இதற்குக் காரணம் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பிய எங்கள் தாத்தாதான் என முடிவு செய்து அதற்குப் பழி வாங்க முடிவு செய்தததன் விளைவு தான் அந்தத் திட்டுக் கடிதமும், வரைவோலையும்.

விடுவாரா எங்கள் தாத்தா?. அந்த வங்கியிலே கணக்கு ஒன்றையும் ஆரம்பித்து வரைவோலையையும் பணமாக்கிக் கொண்டார்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் - இது கம்பராமாயணம்
கடன்தந்தார் நெஞ்சம் போல் கலங்கினார் காளிமுத்து (எங்க தாத்தா தாங்க) - இது கலிகாலம்

நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர் மற்றும் தமிழ்மணம்

Tuesday, January 23, 2007

ஞானம் கொடுத்த பல்வலி

கடந்த வாரம் முழுக்க பல்வலியால் ஒரே ரகளை. என்னவென்று பார்த்தால் இருக்கிற பல்லெல்லாம் பத்தாதென்று புதிதாய் ஒரு கடைவாய்ப்பல் முளைத்துக் கொண்டிருந்தது. இந்த வயதில் எதற்குப் புதிதாய்ப் பல்? "ஞானப்பல் முளைக்கிதுடா.." என்று என் அம்மா சொன்னார்கள்.

ஞானப்பல்லா?. ஞானத்திற்கும் பல்லுக்கும் என்ன சம்பந்தம்?. ஏதோ ஞானம் வேண்டுமென்றால் மூளை கொஞ்சம் வளர்ந்தாலாவது பரவாயில்லை.
இருந்த வலியில் சாப்பிடக்கூட வாயைத் திறக்க முடியவில்லை. சாப்பாட்டை உதட்டில் வைத்து பின் விரலால் வாய்க்குள் தள்ளி சாப்பாட்டை முழுங்கினேன்.

சரி என்னடா செய்வது என்று என் நண்பர்களிடம் கேட்டேன். ஒருவன் "டாக்டரிடம் போ. வலிக்கு ஏதாவது மாத்திரை கொடுப்பார்" என்றான். இன்னொருவன் "பல் முளைப்பதற்கு எளிதாக லேசாகக் கீறி விடுவார்" என்றான். அது சரி. இங்கே சும்மாவே இப்படி வலிக்குது இதுல கீறி வேற விட்டா?. இன்னொரு உயிர் நண்பன் "பல் முளைக்க சிக்கலாக இருந்தால் அந்த இடத்தைக் கீறி விட்டு பல்லைப் பிடுங்கி விடுவார்" என்றான். ஐயையோ! இவர்கள் சொல்லும் வழிகளை விட பல்வலியே மேல் என்று முடிவு செய்து சும்மா இருந்தேன். அந்த நேரம் என் அம்மா தொலைபேசியில் தொடர்பு கொண்டு "எங்கே பல் வலிக்குதோ அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கிராம்பை வைத்துக் கொள். சரியாகி விடும்" என்றார். அதைப் போல் செய்த பிறகு பல்வலி வெகுவாகக் குறைந்தது. ஆனாலும் சாப்பிடுவதற்கு வாயைத் திறக்க முடியவில்லை.

தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடியின் முன் நின்று கொண்டு சின்னப் பிள்ளைகளைப் பயமுறுத்துவது போல் இருகைகளாலும் வாயைக் கஷ்டப்பட்டு திறந்து கொண்டு பல் முளைக்கிறதா என்று தினமும் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக எட்டாவது நாள் ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது. ஹையா! ஞானப்பல் பிறந்துவிட்டது. பிறகு வலி தானாகக் குறையத் தொடங்கியது.

இந்தப் பல் முளைத்ததால் கிடைத்த ஞானம் இவை தான்.

1. பல்வலி ஒரு வாரத்தில் சரியாகி விடும்.
2. கிராம்பு ஒரு சிறந்த பல்வலி நிவாரணி.
3. எக்காரணம் கொண்டும் பல்வலிக்கு நண்பர்களிடம் அறிவுரை கேட்கக்கூடாது.

நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர் மற்றும் கிராம்பு

ரொம்பப் பெருமையா இருக்கு..

எனது நண்பர்கள் அனைவருக்கும் பட்டப்பெயர்கள் உண்டு. இப்பதிவில் அவற்றுக்கான பெயர்க்காரணங்களைக் கீழே கூறுகிறேன்.

சொறி - கப்பலில் வேலை பார்க்கும் பொறியாளர். இவனுக்கு வெயில் காலத்தில் வியர்க்குரு வந்து அவதிப்படுவான். ஆனால் நாங்கள் வேண்டுமென்றே "இல்லை. இது சொறி. பக்கத்தில் வராதே" என்று விரட்டுவோம்.

சாவு - கட்டிடப் பொறியாளர். மிகவும் ஒல்லியான உடம்புடன் மிதிவண்டியை அழுத்த முடியாமல் அழுத்தி வருவான். எதிலும் விருப்பம் இல்லாமல் டெட் பாடி போல் உட்கார்ந்து இருப்பான்.

தோசை - உயிரியல் வல்லுநர். தோசை என்றால் பேயைப் போல் பறப்பவன். தோசையைக்கு சட்னி, சாம்பார் இல்லாமல் அப்படியே முழுங்குபவன்.

வெள்ளாத்தா - உரித்த கோழியைப் போல் வெள்ளை வெளேர் என இருப்பான்.

டவர் - தொலைபேசி நிலைய கோபுரம் போல் உயரமானவன்.

பிட்டு மணி - பள்ளியில் படிக்கும் போது கேவலம் வகுப்பில் நடத்திய சாதாரண தேர்வில் பிட் அடித்து மாட்டி எங்கள் எல்லாரையும் அவமானப்படவைத்தவன்.

குரங்கு - சேட்டைகள் செய்வதில் நம் முன்னோரை அப்படியே கண் முன் நிறுத்தியவன். மேலும் பள்ளி மைதானத்தில் நிழலுக்காக அங்குள்ள கருவேலமரத்தில் ஏறி அமர்ந்து கொள்வான். எங்கள் உடற்கல்வி ஆசிரியர் வைத்த பெயர் தான் அது.

காக்கா - மிகவும் அமைதியான, நன்றாகப் படிப்பவன். குரல் அப்படியே 'குயில்' தான்.

ஜந்து - ஆப்பிரிக்காவில் பிறந்திருக்க வேண்டியவன். இருட்டில் பற்கள் மட்டுமே தெரியும். பல பட்டங்களை வாங்கி எங்கள் குழுவிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறவன். சில நாட்களில் டாக்டர் பட்டம் வாங்க இருக்கிறான். கோபமே படாத மிகவும் நல்ல நண்பன்.

ஓட்டை பல்லன் - பள்ளியில் ஓவராக ஆடியதில் கீழே விழுந்து பல்லை உடைத்துக் கொண்டவன்.

ஆயா - எங்கள் குழுத் தலைவன். கணிப்பொறி வல்லுநர். எங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்பவன்.

மாமா - தன்னை மாமா என்று அழைத்த 7ம் வகுப்பு படித்த பெண்ணுக்கு ரூட் விட்டவன்.

கோந்தான் - தனக்கு மீசை முளைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கோந்தைப் முடியில் தடவி
ஒட்டி அழகு பார்த்தவன்.

ஓட்டை - சரியான உளறுவாயன்.

தடியன் - சரியான குண்டன். பெருந்தீனிக்காரன்.

குந்தி - இருந்த இடத்தை விட்டு அசைவதற்கு காசு கேட்பவன். சரியான சோம்பேறி நண்பன்.
முதுகலை பொறியியல் படிக்கின்றான்.

லூசு பாலா - சொல்வது ஒன்று செய்வது ஒன்று. அதனால் தான்.

கோவணம் - தலைவர் ஊருணியில் குளிக்கும் போது அணிவது இது தான். பெயர்க்காரணம் சொல்ல வேண்டுமா என்ன?.

அன்ரோ - இவனுக்குத் தான் ரொம்ப நாள் பேரே இல்லாமல் இருந்ததால் கண்டிப்பாக பேர் வைத்தே ஆக வேண்டுமென்று வைத்த பெயர்.


இவர்கள் அனைவரிடமும் இன்னும் நல்ல தொடர்பு உள்ளது.

இந்தப் பெயரையெல்லாம் நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கு ..

எனக்கு என்ன பெயர் என்று கேட்கிறீர்களா? மேலே இருப்பதில் ஒன்று தான்.


நன்றி : இ-கலப்பை மற்றும் ப்ளாக்கர்

எங்க ஏரியா உள்ள வாங்க ..

வணக்கம். இது தான் எனது முதல் பதிவு. சில மாதங்களாக தமிழ்மணத்தில் இடப்பட்ட பதிவுகளைப் படித்து பிறகு நாமும் கூட இப்படி எழுதலாமோ என பல நாட்கள் யோசித்த பிறகு இப்பதிவை இடுகை செய்திருக்கிறேன். பின்னூட்டங்களில் கிடைக்கும் திட்டு மற்றும் வசவுகளைப் பொறுத்து தொடர்ந்து எழுத முடிவு செய்துள்ளேன்.

எங்கள் ஊர் தமிழகத்தின் தென்கிழக்கில் உள்ள இராமநாதபுரம். கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது இராமேஸ்வரம் கோயில் மற்றும் பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சென்றேன்.நானும் எனது சித்தி பையனும் இராமநாதபுரத்தில் இருந்து பேருந்தில் கிளம்பினோம். ஆரம்பம் முதல் ஒரே குஷி மூடில் விளையாடிக் கொண்டேசென்றோம். பரவாயில்லை தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் மிகவும் குறைவு தான். பாம்பன் பாலத்தைத் தாண்டிச் செல்லும் போது எனது செல் கேமராவில் இரயில் பாலத்தை வீடியோவில் பதிவு செய்து கொண்டேன்.

இராமேஸ்வரத்திற்கு வட இந்தியர்கள் அதிகம் பேர் வருவார்கள். அவர்கள் காசியில் தொடங்கும் யாத்திரை இங்குதான் முடியும். நிறைய பேர் நினைப்பது போல் இராமேஸ்வரத்தில் உள்ளது இராமர் ஆலயம் அல்ல - இராமர் வழிபட்ட சிவன் ஆலயம் (சமீபத்தில் வெளியான தர்மபுரி படத்தில் கூட அப்படித்தான் தவறாகக் காட்டுகின்றனர்).

(கோவில் கோபுரம்)



(புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரம்)



(மூன்றாம் பிரகாரத்தில் உள்ள புகழ் பெற்ற ஓவியம்)



இங்குள்ள கடல் ஆழம் இல்லாதது. குளம் போலத் தான் இருக்கும். கரைக்கு அருகில் அவ்வளவு சுத்தமாக இருக்காது. கொஞ்சம் உள்ளே சென்றால் நன்றாகக் குளிக்கலாம்.நாங்கள் கடலில் காலை மட்டும் நனைத்து விட்டு கோவிலுக்கு உள்ளே சென்றோம். கோவிலின் உள்ளே நிறைய தீர்த்தக்கிணறுகள் இருக்கின்றன. யாத்திரிகர்கள் அங்கு குளித்துவிட்டு ஈர உடையுடன் வலம் வருவதால் கோவில் எப்போதும் ஈரமாகவே இருக்கும்.சுவாமியைத் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றும் நன்றாக கும்பிட முடியாமல் தீட்சிதர்களால் விரட்டப்பட்டோம்.பின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டு புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் உட்கார்ந்து அதிரசம் சாப்பிட்ட பின் அங்கு சில புகைப்படங்கள் எடுத்தோம்.

பின் மெதுவாக கிளம்பி இராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறி பாம்பன் பாலத்தைப் பார்ப்பதற்காக பாம்பனில்இறங்கினோம். பாம்பன் பாலம் மண்டபம் ஊரையும் பாம்பன் தீவையும் இணைப்பதாகும். பாம்பனைக் கடந்து தான் இராமேஸ்வரம் செல்ல
வேண்டும். இங்கு இரண்டு பாலங்கள் கடலுக்கு நடுவில் உள்ளன. இரயில் மற்றும் பேருந்து பாலங்கள் (நந்தா மற்றும் இயற்கை படங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்). பேருந்து பாலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டு இந்திராகாந்தி அவர்களால் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இரயில் பாலம் 1922 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பு சிறிய வகை கப்பல்கள் வரும் போது பாலம் இரண்டாகத் தூக்கி வழிவிடும்.



(இரண்டு பாலங்கள் - ஒரே பார்வை)


(இரயில் பாலம்)


(மிகப் பெரிய தொலைக்காட்சி கோபுரம்)


(அழகான பாம்பன் கடற்கரை)





நாங்கள் பேருந்து நிறுத்ததில் இறங்கி பேருந்து பாலத்திற்கு நடந்தே சென்றோம். பாலத்தில் காற்று பலமாக வீசியதால் செல் எங்கே கடலில் விழுந்து விடுமோ என்று இறுகப் பிடித்துக் கொண்டே படங்கள் எடுத்தேன். இப்போது இரயில் பாலத்தில் அகலப்பாதையாக மாற்றும் வேலை நடைபெறுவதால் இரயில்கள் செல்வது மற்றும் கப்பல்களுக்குவழிவிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

(பாலத்தில் அகலப்பாதையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன)





கடலையும்,பாலத்தையும், சுற்றுலாப் பயணிகளையும் நிறைய நேரம் வேடிக்கை பார்த்தபின் ஊருக்கு போகலாம் என்று எண்ணி பேருந்துக்கு கை காட்டினால் ஒரு வண்டி கூட நிற்கவில்லை. பாலத்தில் பேருந்துகள் நிற்கக் கூடாது என்று விதிகள் உள்ளன. அதை நமது ஓட்டுநர்கள் சரியாக கடைப்பிடித்தார்கள். ஒரு வேளை வட இந்தியர்கள் என்றால் நிறுத்தியிருக்கக்கூடும். வேறென்ன செய்ய..?. மீண்டும் பாம்பன் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

இருந்த களைப்பில் நன்றாகத் தூங்கிக் கொண்டே ஊருக்கு வந்தோம்.

நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்