Tuesday, January 23, 2007

ஞானம் கொடுத்த பல்வலி

கடந்த வாரம் முழுக்க பல்வலியால் ஒரே ரகளை. என்னவென்று பார்த்தால் இருக்கிற பல்லெல்லாம் பத்தாதென்று புதிதாய் ஒரு கடைவாய்ப்பல் முளைத்துக் கொண்டிருந்தது. இந்த வயதில் எதற்குப் புதிதாய்ப் பல்? "ஞானப்பல் முளைக்கிதுடா.." என்று என் அம்மா சொன்னார்கள்.

ஞானப்பல்லா?. ஞானத்திற்கும் பல்லுக்கும் என்ன சம்பந்தம்?. ஏதோ ஞானம் வேண்டுமென்றால் மூளை கொஞ்சம் வளர்ந்தாலாவது பரவாயில்லை.
இருந்த வலியில் சாப்பிடக்கூட வாயைத் திறக்க முடியவில்லை. சாப்பாட்டை உதட்டில் வைத்து பின் விரலால் வாய்க்குள் தள்ளி சாப்பாட்டை முழுங்கினேன்.

சரி என்னடா செய்வது என்று என் நண்பர்களிடம் கேட்டேன். ஒருவன் "டாக்டரிடம் போ. வலிக்கு ஏதாவது மாத்திரை கொடுப்பார்" என்றான். இன்னொருவன் "பல் முளைப்பதற்கு எளிதாக லேசாகக் கீறி விடுவார்" என்றான். அது சரி. இங்கே சும்மாவே இப்படி வலிக்குது இதுல கீறி வேற விட்டா?. இன்னொரு உயிர் நண்பன் "பல் முளைக்க சிக்கலாக இருந்தால் அந்த இடத்தைக் கீறி விட்டு பல்லைப் பிடுங்கி விடுவார்" என்றான். ஐயையோ! இவர்கள் சொல்லும் வழிகளை விட பல்வலியே மேல் என்று முடிவு செய்து சும்மா இருந்தேன். அந்த நேரம் என் அம்மா தொலைபேசியில் தொடர்பு கொண்டு "எங்கே பல் வலிக்குதோ அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கிராம்பை வைத்துக் கொள். சரியாகி விடும்" என்றார். அதைப் போல் செய்த பிறகு பல்வலி வெகுவாகக் குறைந்தது. ஆனாலும் சாப்பிடுவதற்கு வாயைத் திறக்க முடியவில்லை.

தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடியின் முன் நின்று கொண்டு சின்னப் பிள்ளைகளைப் பயமுறுத்துவது போல் இருகைகளாலும் வாயைக் கஷ்டப்பட்டு திறந்து கொண்டு பல் முளைக்கிறதா என்று தினமும் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக எட்டாவது நாள் ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது. ஹையா! ஞானப்பல் பிறந்துவிட்டது. பிறகு வலி தானாகக் குறையத் தொடங்கியது.

இந்தப் பல் முளைத்ததால் கிடைத்த ஞானம் இவை தான்.

1. பல்வலி ஒரு வாரத்தில் சரியாகி விடும்.
2. கிராம்பு ஒரு சிறந்த பல்வலி நிவாரணி.
3. எக்காரணம் கொண்டும் பல்வலிக்கு நண்பர்களிடம் அறிவுரை கேட்கக்கூடாது.

நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர் மற்றும் கிராம்பு

8 comments:

குமார் said...

யப்பா! எனக்கு எப்போ ஞானப்பல் முளைக்கப் போகுதுன்னு தெரியலையே ! கொடுமையா இருக்கும் போலயே!

பொன்வண்டு said...

// யப்பா! எனக்கு எப்போ ஞானப்பல் முளைக்கப் போகுதுன்னு தெரியலையே ! கொடுமையா இருக்கும் போலயே!
//

கவலைப்படாதீங்க குமார், நல்ல பல் டாக்டரா பார்த்து போங்க :)

pearl said...

எனக்கு இது வரைக்கும் பல் வலி வந்தது கிடயாது....
அப்படி வந்தால் உங்கலது அலொசனயை பின்பட்ருகிரென்...

உபயொகமான டிப் நன்ரி.......

-Muthu

pearl said...

எனக்கு இது வரைக்கும் பல் வலி வந்தது கிடயாது....
அப்படி வந்தால் உங்கலது அலொசனயை பின்பட்ருகிரென்...

உபயொகமான டிப் நன்ரி.......


- Muthu (பட்டாம் பூச்சி...)

பொன்வண்டு said...

// எனக்கு இது வரைக்கும் பல் வலி வந்தது கிடயாது....
அப்படி வந்தால் உங்கலது அலொசனயை பின்பட்ருகிரென்...

உபயொகமான டிப் நன்ரி.......
//
நன்றி முத்து. இ-கலப்பையை உபயோகிப்பதில் இன்னும் பயிற்சி பெறவும். அதனால் தான் உங்களால் சரியாக டைப் செய்ய முடியவில்லை என நினைக்கிறேன் அல்லது இது தான் உங்களுக்குத் தெரிந்த தமிழா? சும்மா வெளையாட்டுக்கு .. :-)

வல்லிசிம்ஹன் said...

பல்லுக்கும் ஞானத்துக்கும் சம்பந்தம் கிடையாதுனு யார் சொல்றது.?
அம்மா சொல்றதைக் கேட்டு கிராம்பு வச்சதே ஞானம் தான்.:-)
எனக்கு இன்னும் ஞானம் வரவில்லை.அதாவது பல்வலி வந்தும்
கடைவாய்ப்பல் தோன்றவில்லை!
பல்வலிக்கு மருந்து மட்டும் ஒரு மாதத்துக்கு முழுங்கியதாக நினைவு வருகிறது.
நண்பர்கள் சொன்னதலேயே பல் டாக்டரிடம் போகவில்லை.
அவர் கனவில் கத்தியும் கொறடாவுமாக மிரட்டி விட்டுப் போவார் அவ்வப்போது.:-)

sknow on web said...

எனக்கும் 2 நாளா ஞானப்பல் முளைச்சுகிட்டிருக்கு , பல் முளைக்கிற பக்கம் இருக்கற கண்ணம் கூட வீங்கியிருக்கு , உங்களுக்கு வீக்கம் ஏதாவது இருந்ததா . என்னமோ உங்க போஸ்ட் பாத்த உடனதான் இது ஒரு வாரத்துல போயிடும்னு ஒரு நிம்மதி வந்துருக்கு .

பொன்வண்டு said...

அடேயப்பா! இந்தப் பதிவு போட்டு ஒரு வருசத்துக்கிட்ட இருக்கும். அதுக்கு இப்பவும் பின்னூட்டம் வருதே!

பதிவைத் தேடிப்பிடித்து பின்னூட்டம் போட்ட sknow on web-க்கு நன்றி !!