Wednesday, March 30, 2011

வைகோ - மீண்டு(ம்) வருக !!!


துரோகத்தையும், வஞ்சகத்தையும் மட்டுமே தன் அரசியல் வாழ்வில் எதிர்கொண்டவர்.

தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் குரல் கொடுத்தவர்.

ஈழத்தமிழர் பிரச்சினைகளை தமிழக மக்களிடையே கொண்டு சென்றதில் முக்கியப் பங்காற்றியவர்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக கேரள அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திப் பலமுறை சிறை சென்றவர். பலமுறை இப்பிரச்சினை குறித்து தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என நடைபயணம் சென்றவர்.

அத்தனை மீடியாக்களாலும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டவர். இவர் எத்தனை முறை நடைபயணம் சென்றாலும் எந்த டிவியிலும் இவர் முகமோ செய்தியோ வராது.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி - எந்த சமரசத்துக்கும் இடம் கொடாமல் - உச்சநீதிமன்றத்தில் தானே வாதாடி வெற்றிபெற்றவர்.

சேது சமுத்திரத் திட்டத்துக்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தவர். ஆனால் பேர் வாங்கியது வேறு சிலர்.

சிறந்த பேச்சாளர். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

சொந்தலாபங்களைத் தவிர கருணாநிதியோ, ஜெயாவோ மக்கள் நலனுக்காக ஸ்டன்ட் தவிர உருப்படியாக எதாவது செய்திருக்கிறார்களா ?

வைகோ செய்த மிகப்பெரிய தவறு ஒன்றே ஒன்றுதான். திமுக, அதிமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக தன்னை நினைக்காமல் திமுகவை எதிர்க்க அதிமுகவுடனும், அதிமுகவை எதிர்க்க திமுகவிடனும் கூட்டணி வைத்ததுதான்.

நடந்தது இருக்கட்டும்.

வைகோ அவர்களே ! மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் நீங்கள் மக்களுக்காகக் குரல் கொடுத்ததையும், தமிழகத்திற்காக, தமிழர்களின் நலனுக்காக நீங்கள் நடத்திய போராட்டங்களையும் மறக்க மாட்டான்.

ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்துவாருங்கள் வைகோவே !!!

Saturday, March 19, 2011

திருப்பதி - திருச்சானூர் - காளஹஸ்தி





நிகழும் சர்வதாரி வருடம் ஆடித் திங்கள் 31ம்நாள் (ஆகஸ்ட் 15). மூணு நாள் விடுமுறை இருந்ததால திருப்பதி போகலாம்னு ரெண்டு வாரத்துக்கு முன்னமே திட்டம் போட்டு டிக்கெட் எல்லாம் எடுத்து வச்சிருந்தோம். ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) இரவு மெஜஸ்டிக்ல 9:15க்கு பேருந்து. ஆனா பாருங்க அன்னிக்குன்னு பார்த்து பெங்களூர்ல சரியான மழை. அதுனால எந்த பஸ்ஸுமே ஒழுங்கா மெஜஸ்டிக் வரலை. அப்படின்னு இப்படின்னு எங்க பஸ்ஸைத் தேடி இரவு 1:30 வரை அழைந்தது தான் மிச்சம். கண்ணுல படவே இல்லை.

சரி வேற வழியில்லைன்னு எதாவ்து ஒரு திருப்பதி பஸ்ல நின்னுக்கிட்டுனாலும் போய்ச் சேருவோம்னு முடிவு பண்ணி ஒரு பஸ்ல ஏறுனோம். ஆனா பாருங்க எங்க நல்ல நேரம் நடத்துனருக்கும் இன்னும் மூனு பசங்களுக்கும் நடந்த சண்டையில், கடுப்பான நடத்துனர் அந்தப் பசங்களுக்குப் பதில் எங்களை உட்காரச் சொல்லிட்டார். நல்லவேளை. ஆறு மணி நேரத்துக்கும் மேல மழையில் நனைஞ்சி மெஜஸ்டிக்ல சுத்தினதால கால் எல்லாம் பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிருச்சி. அதுனால உட்கார்ந்தவுடனே சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கியாச்சு.

ஆகஸ்ட் 15 காலையில் பார்த்தா சிரஞ்சீவி ஜிலேபியோட போஸ் கொடுக்கிறார். கட்சி ஆரம்பிக்கப் போறாராம்ல. தெலுங்கு எழுத்தெல்லாம் வாசிக்க ரொம்ப சுலபமா இருக்கு. கன்னட எழுத்துக்களும், தெலுங்கு எழுத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்னுதான். சரி மேட்டருக்கு வருவோம்.

திருப்பதி பேருந்து நிலையத்துல போய் தரிசன டிக்கெட் எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா பாருங்க ஒரு ஆட்டோக்காரன் வந்து "வாங்க அலிப்பிரி போனா அங்க இருக்கிற கவுண்டர்ல கூட்டமே இருக்காது"ன்னு சொன்னான்னு ஏறிப்போனோம். அங்க பார்த்தாலும் கொஞ்சம் கூட்டமாத்தான் இருந்துச்சி. சரின்னு நின்னோம். சும்மா ரெண்டு மணி நேரம் கால்வலிக்க நின்னோம். அதாவது 7:30 - 9:30. கடைசியா நாங்க கவுண்டருக்குப் போய்ச்சேரும் போது தரிசன் டிக்கெட் முடிஞ்சி போச்சின்னு கவுண்டரை மூடிட்டாங்க.

உண்மையிலேயே அப்பத்தாங்க எனக்குக் கால் வலிக்க ஆரம்பிச்சிச்சி. நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நிக்கிறது. என்னடா இது கிளம்புனதுல இருந்து ஒரே சோதனையா இருக்குன்னு ஏழுமலையானை நினைச்சிக்கிட்டு தர்ம தரிசனம் பார்த்துவிடலாம்னு விக்கிரமாதித்தன் மாதிரி மலைக்கு பஸ் ஏறிட்டோம்.

அங்க போய் லாக்கர் பிடிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் திரும்பவும் வரிசை. ஒரு வழியா குளிச்சி முடிச்சி தர்ம தரிசனம் போறதுக்கு வரிசைக்குப் போனா மயக்கமே வந்துருச்சி. சும்மா ஒரு 30000 பேர் வரிசையில நிக்கிறாங்கப்பா. இவ்வளவு நேரம் அஞ்சா நெஞ்சனா இருந்த நானே ஒரு நிமிசம் சாமி பார்க்க முடியாமப் போயிருமோன்னு கலங்க ஆரம்பிச்சது அங்கதான்.

கடைசியா மெயின் என்ட்ரன்ஸ் போய் குறுக்கு வழியில உள்ள போகமுடியுமான்னு பார்த்தால், அங்க இருக்கிற போலீஸ் லத்தியைக் கொண்டு அடிக்க வாராங்க. வேற வழியில்லாம 'எங்க நண்பர்கள் எல்லாரும் உள்ள இருக்காங்க சார். நாங்க வெளிய மாட்டிக்கிட்டோம். ப்ளீஸ் உள்ள விடுங்க சார்னு' பொய் சொல்லி கெஞ்ச ஆரம்பிச்சிட்டோம். முதலில் எதுக்கும் போலீஸ்காரர்கள் மசியல. எங்க நிலைமையை நினைத்துப் பரிதாபப்பட்ட ஒரு போலீஸ் மட்டும் அரைமணி நேரம் கழித்து உள்ளே விட்டார்.

அப்பாடா எப்படியோ உள்ள வந்தாச்சுன்னு நினைச்சப்போ மணி மதியம் 3. எப்பவும் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் மண்டபத்தில் அடைச்சி வச்சிருந்து அதுக்கப்புறம் தான் திறந்து விடுவாங்க. அதுக்கப்புறம் வரிசையில் நின்னு சாமி பார்க்கிறதுக்கு ஒரு மணி நேரம் கூடுதலா ஆகிரும்.இப்பவும் அதுபோலத்தான் 11:30க்குத் திறந்து விட்டாங்க. ஓடிப்போய் லட்டு கவுண்டர்ல நின்னா ஒரு லட்டுதான்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் வரிசையில நின்னு சாமி பார்க்கிறதுக்கு 12:30 ஆகிருச்சி. நம்ம என்ன எடியூரப்பாவா? ஒரு மணி நேரம் உட்கார்ந்து சாமி கும்பிடுறதுக்கு? ஐந்து முதல் பத்து நொடிகள் தான் சாமி தரிசனம். அதுவும் உயரம் குறைவா இருந்ததால குதிச்சிக் குதிச்சி வேற பார்க்க வேண்டிய நிலைமை. சும்மா சொல்லக்கூடாது. உண்மையிலேயே சன்னிதியில் ஒரு ஆள் நிக்கிற மாதிரி அவ்வளவு தெளிவான தோற்றத்தில் பெருமாள். வேண்டுதலையெல்லாம் நிறைவேற்றுங்க சாமின்னு கும்பிட்டுட்டு லட்டையும் வாங்கிட்டு திரும்பவும் போய் தூங்குறதுக்கு 2 மணி ஆகிருச்சி.

காளஹஸ்தீஸ்வரர் - ஞானபிரசூனாம்பிகை


தூக்கம்னா தூக்கம் பேய்த் தூக்கம். திரும்பவும் 6:30க்கு எழுந்திருச்சி, குளிச்சி கிளம்பியாச்சு. வெளியில ஒரு கடையில் வாந்தி வர்ற டேஸ்ட்ல இருந்த இட்லியும், வடையும் சாப்பிட்டுட்டு கீழே போய் முதலில் திருச்சானூர் போய் பத்மாவதி தாயாரைக்ல் கும்பிட்டோம்.

இந்த ஊரில் இருப்பவர்கள் 100% தமிழர்களாம். ஆங்காங்கே தமிழில் பெயர்ப்பலகைகளையும் பார்க்க முடிந்தது. பின்னர் திரும்பவும் திருப்பதி வந்து அங்கிருந்து காளஹஸ்தி போய்ச் சேர்ந்தோம். காளஹஸ்தி கோவில் ரொம்பவே பெருசு. அப்புறம் சிற்ப வேலைப்பாடெல்லாம் நல்லா இருக்கு. இங்க ராகு-கேது தோசம் இருக்கிறவங்க பிரார்த்தனை செய்து வழிபட்டால் தோசம் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் சரியான கூட்டம். சிறப்பு தரிசன கூப்பன் வாங்கியே எங்களால 1 1/2 மணி நேரம் கழிச்சி தான் சாமி பார்க்க முடிந்தது.

பின்னர் அங்கிருந்து கிளம்பி திருப்பதி வந்து சாப்பிட்டுட்டு மதியம் 3 மணிக்கு பெங்களூர் பஸ் ஏறினோம்.

டிட் பிட்ஸ் :
  • திருமலையில் மண்டபத்தில் தங்கியிருந்த போது சுடச்சுட சாம்பார் சாதம், பால் எல்லாம் இலவசமாகக் கொடுத்தார்கள்.
  • ஒரு ராஜஸ்தான் கோஷ்டி தலையில் உருமாக் கட்டுடன் அங்கே டிவியில் போட்ட இராமாயணத்தைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். நம்ம ஊர் மக்கள் எவ்வளவோ தேவலை. படிப்பறிவு சுத்தமாக இல்லை போலும். ஆனாலும் இந்தி மட்டும் தெரிகிற தைரியத்தில் ரயிலேறி வந்திருக்கிறார்கள். நம் மக்களை விட இன்னும் 50 வருசம் பின் தங்கியே அவர்கள் இருந்தார்கள்.
  • திருப்பதி பேருந்து நிலையம் எதிரில் பாலாஜி உட்லன்ட்ஸ் உணவகத்தில் கொஞ்சம் சுவையான உணவு முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது.


குறிப்பு : 2008ல் எழுதி பதிவிட மறந்தது.