Wednesday, June 13, 2007

ஒரே Blogger Account-ன் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் author name மாற்றலாம்!

எல்லோரும் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் ஜாவா ஸ்கிரிப்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கும் அப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என ஆவல் இருந்து வந்தது. அதற்கேற்றார் போல போன வாரம் நான் ஒரு பிரச்சினையை எதிர் கொண்டேன். ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் சரி செய்தேன். தீபா, ஜெகத் போன்ற ப்ளாக்கர் விஞ்ஞானிகளின் ; -) script-களை ஒப்பிடும்போது என்னுடையது மிகவும் சிறியது தான்.

எனது கூகுள் account-ன் கீழ் இரண்டு Blogs உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பொன்வண்டு வலைப்பதிவு தளம்.

ஆனால் நம்மால் ஒரு account-க்கு ஒரே ஒரு profile மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அந்த profile-ல் நாம் கொடுக்கும் display name-தான் நமது பதிவுகளில் author name-ஆக வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் ஒரு வலைப்பதிவில் பொன்வண்டு என்ற பெயரில் எழுதுகிறேன். எனது மற்றொரு வலைப்பதிவில் வேறொரு பெயரில் எழுத நினைத்தாலும் முடியவில்லை. ஏனென்றால் ஒரு account-ன் கீழ் இருக்கும் எல்லா வலைப்பதிவுகளுக்கும் ஒரே profile-ல் இருந்தே display name-ஐ எடுத்துக் கொள்கிறது. எனது ப்ளாக்கர் profile-ல் display name பொன்வண்டு என்று உள்ளது.

அதனால் என்னுடைய இரண்டாவது தளத்தில் நான் வேறொரு பெயரில் எழுத நினைத்தேன். எப்படி என்று யோசித்தபோது கை கொடுத்தது ஜாவா ஸ்கிரிப்ட்.

ஒரு வலைப்பதிவு தளத்தில் 2 இடங்களில் author name தெரியும்.

1. பதிவின் கீழ், எழுதியவர் பெயர் தெரியுமிடத்தில்.
2. பின்னூட்டங்களில்

எனவே எந்த வலைப்பதிவு தளத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அங்கு அந்த tag-களைக் கண்டுபிடித்து template-ல் மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகிவிடும்.

செய்ய வேண்டியது :

1. Edit HTML போய் Expand widgets தேர்வு செய்து கொள்ளவும்.

2. கீழே இருக்கும் script-ல் profile_name-ல் உங்கள் profile-ல் உள்ள name-ஐக் கொடுங்கள். new_name-ல் உங்கள் விருப்பப் பெயரைக் கொடுங்கள்.
வழக்கம் போல் script-ஐ </head> tag-க்கு மேலே copy-paste செய்யவும்.

<script type='text/javascript'>
function replace_profile_name(str)
{
var profile_name='பொன்வண்டு';
var new_name='கழுதை';
if (str == profile_name)
str = new_name;
return str;
}
</script>

3. பின்னர் <data:post.author/> tag-ஐக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:post.author/>'))</script>

4. பின்னர் <data:comment.author/> tag-களைக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:comment.author/>'))</script>

5. Template-ஐ Save மாடி.




என்னுடைய இன்னொரு வலைத்தளம் - மாற்றம் செய்வதற்கு முன்







மாற்றம் செய்த பின்



இது ஒரு வழி. இப்படி script உபயோகிக்காமல் வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா? அதாவது Blogger-லேயே ஏதாவது option உள்ளதா?

Monday, June 11, 2007

இளையராஜா இசையில் Cheeni Kum இந்திப் படப் பாடல்கள்


நேற்று தான் (ரொம்பவே லேட்) அமிதாப்பச்சன் நடிப்பில் நமது இளையராஜா இசையமைப்பில் வெளிவந்திருக்கும் 'சீனி கம்' திரைப்படப் பாடல்களைக் கேட்டேன். நமது இளையராஜா இசையமைத்த பழைய பாடல்களின் மெட்டுக்களை வைத்து தற்போதைய இசையையும் இணைத்து அருமையாகப் பாடல்களை வடிவமைத்திருக்கிறார். இதுவரை ரகுமான் தான் இந்த மாதிரி செய்து வந்தார். அதாவது தமிழில் தான் இசையமைத்த பாடல்களின் மெட்டுக்களிலேயே தான் இசையமைக்கும் இந்திப் படங்களுக்கும் பாடல்களை அமைத்துக் கொடுத்து வந்தார். இப்போது இளையராஜவும். ஆனால் பாடல்களில் மேற்கத்திய இசையையும் சேர்த்து இசையமைத்திருக்கிறார். இப்போது வட இந்தியர்கள் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்களை நாம் இருபது வருடங்களுக்கு முன்பே கேட்டுவிட்டோம் என்று பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

மெல்லத் திறந்தது கதவு படத்தின் 'குழலூதும் கண்ணனுக்கு' பாடலின் மெட்டில் ஒரு பாடலும், மௌனராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் மெட்டில் இரு பாடல்களும் இசையமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 'விழியிலே' பாடலின் மெட்டில் ஒரு பாடலும் உள்ளன.

இந்தப் பாடல்களில், குழலூதும் கண்ணனுக்கு மெட்டில் அமைந்த 'பாத்தீன் ஹவா' பாடல் இடையில் அமிதாப் பேசும் வரிகளுடன் மிகவும் அருமையாக உள்ளது. 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் மெட்டில் 'சீனி கம்', 'சூனி சூனி' பாடல்களும், 'விழியிலே' மெட்டில் 'ஜானே தோனா' பாடலும் நன்றாகவே உள்ளன.

எனவே தாமதிக்காமல் download செய்து கேட்டுக் கொள்ளுங்கள். பாடல் வரிகளுக்கும், படத்தின் தலைப்பிற்கும் அர்த்தம் புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்கலாம். :)

Monday, June 04, 2007

கானல் நீர் கதாநாயகனின் முதலமைச்சர் கனவு


ஒரு திரைப்படம் தயாரிப்பதற்குப் பின்னணியில் இருந்துவிட்டு அதே படத்தின் கதாநாயகனாகவும் நடித்துவிட்டு முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே அரசியல் ஆசை, முதலமைச்சர் கனவு எல்லாம் வந்து காணாமல் கானல் நீராகிப் போனதொரு கண்ணீர்க் கதையிது.

'முகவை குமார் என்கிற JK ரித்திஸ் நடிக்கும் கானல்நீர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இவண் JK ரித்திஸ் ரசிகர்(அல்லக்கை) பாசறை(!)' என்ற சுவர் விளம்பரங்களும், சுவரொட்டி மற்றும் பேனர்களும் சில மாதங்களாக இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைக் கலக்கி வந்தன. ஏனென்றால் ஒரு சுவர் அல்லது இடம் கூட விடாமல் விளம்பரம் செய்திருந்தார் கதாநாயகன். அவர் எங்கள் ஊர்க்காரராம். மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பலப்பல பள பள பேனர்களில் அவர் விதவிதமான போஸ்களில் காணப்பட்டார். என் தம்பி அதையெல்லாம் பார்த்துவிட்டு "ஏண்டா இவருக்கு கம்பியைக் காய்ச்சி சூடு போட்டாக் கூட நடிப்பு வராது போலருக்கு"ன்னான்.

கடைசியில் யார் அவர் திடீரென்று எப்படி இவ்வளவு பிரபலமாக முயற்சிக்கிறார் என்று சிலர் பூர்வாசிரமக் குறிப்புகளை எடுத்து விட்டபோது தலை சுற்றியது. அவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகில் 'பருத்திவீரன் டக்ளஸ்' போல டீ மாஸ்டராக இருந்தவராம். பின்னர் இப்போது ஆட்சியில் இல்லாமல் எதிரணியாக இருக்கும் குடும்பத்தின் பினாமியாக இருந்து ஆட்சி மாறியதும் அதை அப்படியே லவட்டி இப்போது லவட்டிய சொத்துக்களைக் காப்பாற்ற ஆட்சி செய்யும் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று பலராலும் ஊரறிந்த கிசுகிசு ஆணித்தரமாக சொல்லப்பட்டது. பரமக்குடியில் ஸ்டாலின் வந்தபோது அவருடன் மேடையில் கால் மேல் கால் போட்டு அமரும் அளவுக்கு அவர் கட்சியிலும் பெரிய ஆளாகிவிட்டார். பெரிய தொழிலபதிரும் இல்லை. இப்போதும் வட்டிக்கு விடுவது மட்டுமே தொழிலாம். என்ன கொஞ்சம் பெரிய அளவில்.

இவர் அப்படி என்னென்ன செய்தார்?

1. ஒரு படம் கூட வராமல் முகவை குமார் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், முகவை குமார் பேபி கிளப் (குழந்தை ரசிகர்களாம் !), வயதான தாத்தாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற போஸ்டர்கள், பேனர்களை ஊர் முழுதும் ஒட்டி கலக்கினார்.

2. ஊரிலிருக்கும் அனைத்து ஆட்டோக்காரர்களுக்கும் தலா 1000 கொடுத்து அவரது ஸ்டில்களை ஆட்டோவில் ஒட்டவைத்தார். அவர் படம் இல்லாத ஆட்டோ இங்கு இல்லை.

3. ஊரிலிருந்த எல்லா ஆட்டோ ஸ்டாண்டுகளையும் அவர் பேருக்கு மாற்றினார்.

4. ஒருநாள் தெரியாத்தனமா மதுரைக்குப் போய்ட்டுத் திரும்பி பஸ்ஸில் வந்த போது அவர் படத்தின் ஆடியோ கேசட் ரிலீஸிற்குப் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார் போல. கிட்டத்தட்ட 100 சுமோக்கள் பறக்க (சத்தியமா பரம்பரை அரசியல்வாதி கூட இப்படிப் பண்ணமாட்டான்) லவுட் ஸ்பீக்கரில் அவரது படத்தின் பாடல்கள் ஒலிக்கப் பறந்து கொண்டிருந்தனர். வழியில் இருக்கும் கிராம மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் வரவேற்க ஆரத்தித் தட்டுக்களுடன் நின்றனர் (அல்லக்கைகள் ஏற்பாடு). ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கெல்லாம் 500 ரூபாயாம் பஸ் டிரைவர் சொன்னார்.

5. நகரின் ஒட்டுமொத்த லோக்கல் சேனல்களையும் குத்தகைக்கு எடுத்து ஒரே விளம்பரம். தமிழ்ப்புத்தாண்டு அன்று எல்லா லோக்கல் சேனல்களின் அட்டு VJக்களும் அவரிடம் கேவலமாகப் பேட்டி வேறு.

VJ : எப்படி சார்(!) இருக்கிங்க? இப்ப எப்படி பீல் பண்றிங்க?
JK : நல்லாத்தான் இருக்கேன். பொது வாழ்வில் இருப்பதால் பேமிலியைக் கவனிக்கத்தான் நேரமில்லை.
VJ : எப்படி சார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறது கஷ்டமா இல்லயா?
JK : உங்க கேள்வியே தப்பு. நான் ஏற்கனவே அரசியலில் இருந்தேன்(!) (கட்சி மீட்டிங்க்கு போஸ்டர் எதுவும் ஒட்டினீங்களோ?). அரசியலில் இருந்தபடியே சினிமாவுக்குப் போனேன். இப்ப அரசியலில் ஒரு மேலான இடத்துக்கு வந்திருக்கிறேன்.
VJ : சரி சார். மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
JK : நல்லாப் படிங்க. படிக்க வைங்க. இப்ப இருக்கிற அரசாங்கம் நம்மளுது. ஸ்டேட், செண்ட்ரல் ரெண்டிலயும். அதுனால நம்ம ஸ்டேட் குறிப்பா நம்ம மாவட்டத்துக்கு நல்லது நடக்கும். ஏற்கனவே சேது சமுத்திரத்திட்டம் சிறப்பா நடந்துக்கிட்டிருக்கு. எதிர்கட்சிகள் இத்திட்டம் பத்தி தப்பா சொல்றாங்க. Fishers (மீனவர்களாம்) எல்லாம் தேவையில்லாம கவலைப்படத் தேவையில்லை.

பேட்டியினிடையில் அவர் சொன்ன கிரேட் காமெடிகள்.

* மும்பைக்கு அப்புறம் இந்தியாவில் land value அதிகமா இருக்கிற இடம் பரமக்குடியாம்!
* ஏர்போர்ட் இல்லாதது எங்கள் மாவட்டத்தின் பெரிய குறையாம். பரமக்குடி ஏர்போர்ட் அமைப்பதற்கு மிகவும் சரியான இடமாம்.
* அப்புறம் ஸ்போக்கன் இங்கிலீஸில் எங்கள் மாவட்ட மக்கள் வீக்கா இருக்காங்களாம். அதுனால சென்னைக்கு வேலை தேடிப் போறதுக்கு முன்னால இவருகிட்ட சொன்னா எதாவது அரேஞ்ஜ் பண்ணித் தருவாராம். (இங்கிலீஷ் தெரியலைன்னா கிளாசுக்குப் போறோம். உன்கிட்ட சொல்லி என்ன ஆவப் போகுது? முதல்ல மீனவர்கள்னா Fishers இல்ல Fishermen-ன்னு சொல்றதுக்குப் பழகு.)

லோக்கல் சேனல் அட்டு பிகர் கேட்காமல் விட்ட கேள்வி.
VJ : இப்போ ஆளும்கட்சி நிழலில் இருக்கிங்க. ஆட்டம் போடுறிங்க. வைகோ வேற ஆட்சி மாற்றம் வரும்னு மாசம் ரெண்டு தடவையாவது சொல்றாரு. சப்போஸ் அந்த மாதிரி ஆகிப் போய் எதிரணி ஆட்சிக்கு வந்து உங்களைக் கஞ்சாக் கேஸில் பிடித்துப் போட்டால் என்ன செய்வீர்கள்?
JK : ஊரில இருக்கிற ஆட்டோக்கெல்லாம் 500 ரூபாய் கொடுத்து உங்க வீட்டுக்கு வரச் சொல்லுவேன்.

எங்க வீட்டுக்கு வராம இருந்தா சரி. இப்படியாக அலும்புமன்னனாகத் திரிந்தவர் படம் ரிலீஸ் ஆனவுடன் அட்ரஸ் இல்லாமல் போனார். இங்கு முகவையில் படம் ஒரே வாரத்தில் திரையரங்கை விட்டு ஓடியது பெரும் சோகமாக அமைந்து போனது. ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் எங்கள் ஊரிலாவது அட்லீஸ்ட் மினிமம் 100 நாள் தாராளமாக ஓடும் என எதிர்பார்த்தோம். காசு கொடுத்து ஓட்டச் சொன்னதற்கு திரையரங்கின் முதலாளி ஒத்துக்கொள்ளவில்லையாம். முதலில் இவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டிருந்தவர் படத்தின் லட்சணத்தைப் பார்த்துவிட்டு மறுத்துவிட்டாராம்.

"அய்யய்யோ! ஆரத்தி எடுக்கும் போதெல்லாம் ஐநூறு கொடுத்தேனே அவங்க கூடப் படம் பார்க்க வரலியே. ஆட்டோக்காரனுக்கெல்லாம் ஆயிரம் கொடுத்தேனே அவனும் படம் பார்க்க வரலியே"ன்னு புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இப்படி புயல் அடித்து ஓய்ந்த மாதிரி ஊர் இருந்த போது போன வாரம் வாரமலரிலோ, குமுதத்திலோ வந்த செய்தி திரும்பவும் புயலைக் கிளப்பியிருக்கிறது. மக்களெல்லாம் பாதுகாப்பான இடத்துக்குப் போகும்படி எங்க ஊர் கிடேசன் பார்க்ல மீட்டிங் நடந்தப்போ கலெக்டரே சொல்லியிருக்காராம். நானும் ஊரைக் காலி பண்ணிட்டு ஒரிஸ்ஸாப் பக்கம் போய்டலாம்னு இருக்கேன்.

அந்த செய்தி என்னன்னா எங்க தலைவர் முகவை குமார் அடுத்து ஒரு படத்தில் நடிக்கப் போறாராம்.