Wednesday, March 30, 2011

வைகோ - மீண்டு(ம்) வருக !!!


துரோகத்தையும், வஞ்சகத்தையும் மட்டுமே தன் அரசியல் வாழ்வில் எதிர்கொண்டவர்.

தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் குரல் கொடுத்தவர்.

ஈழத்தமிழர் பிரச்சினைகளை தமிழக மக்களிடையே கொண்டு சென்றதில் முக்கியப் பங்காற்றியவர்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக கேரள அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திப் பலமுறை சிறை சென்றவர். பலமுறை இப்பிரச்சினை குறித்து தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என நடைபயணம் சென்றவர்.

அத்தனை மீடியாக்களாலும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டவர். இவர் எத்தனை முறை நடைபயணம் சென்றாலும் எந்த டிவியிலும் இவர் முகமோ செய்தியோ வராது.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி - எந்த சமரசத்துக்கும் இடம் கொடாமல் - உச்சநீதிமன்றத்தில் தானே வாதாடி வெற்றிபெற்றவர்.

சேது சமுத்திரத் திட்டத்துக்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தவர். ஆனால் பேர் வாங்கியது வேறு சிலர்.

சிறந்த பேச்சாளர். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

சொந்தலாபங்களைத் தவிர கருணாநிதியோ, ஜெயாவோ மக்கள் நலனுக்காக ஸ்டன்ட் தவிர உருப்படியாக எதாவது செய்திருக்கிறார்களா ?

வைகோ செய்த மிகப்பெரிய தவறு ஒன்றே ஒன்றுதான். திமுக, அதிமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக தன்னை நினைக்காமல் திமுகவை எதிர்க்க அதிமுகவுடனும், அதிமுகவை எதிர்க்க திமுகவிடனும் கூட்டணி வைத்ததுதான்.

நடந்தது இருக்கட்டும்.

வைகோ அவர்களே ! மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் நீங்கள் மக்களுக்காகக் குரல் கொடுத்ததையும், தமிழகத்திற்காக, தமிழர்களின் நலனுக்காக நீங்கள் நடத்திய போராட்டங்களையும் மறக்க மாட்டான்.

ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்துவாருங்கள் வைகோவே !!!

No comments: