Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, May 09, 2010

ராஜன் புரோட்டா ஸ்டால்



ஊரில் உத்தமராஜன் என்றால் எல்லோருக்கும் தெரியும். காரணம் அவர் கட்சியில் இருந்தார். அரசியல் என்றால் என்னவென்று தெரியுமுன்பே உத்தமராஜனையும் அவரது கட்சிப்பற்றையும் பார்த்து அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொண்டோம் என்றால் அது பொய்யில்லை.

உத்தமராஜன் என் வகுப்புத்தோழன் காந்திராஜனின் தந்தை. பிறக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைக் கையில் பிடித்தபடியே வந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு விசுவாசமான திமுக தொண்டர். வாட்டசாட்டமான உருவம். முறுக்கு மீசை. விரலில் கலைஞர் படம் போட்ட தடிமனான மோதிரம். தேய்த்த வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியில் கறுப்பு சிவப்பு கரை. அவரது ட்ரேட்மார்க் அடையாளம் ஒரு மிதிவண்டி. வண்டியின் ஹெட்லைட்டில் மஞ்சள் கலர் ஸ்கார்ப். இரண்டு ரிவர்வியூ கண்ணாடிகள். சக்கரத்தின் கம்பிகளில் கறுப்பு சிவப்பு மணிகள். சைக்கிளின் பின்புறம் சிவப்பு விளக்கின் மேலே உதயசூரியனின் படம். மிதிவண்டியின் கைபிடியின் இரண்டுபுறமும் ஒலிநாடாவைக் கொத்தாக வெட்டி காற்றடித்தால் சரசரவென சத்தத்துடன் செல்லுமாறு செய்திருந்தார். மிதிவண்டியின் செயின் கார்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று கறுப்பு சிவப்பு மையினால் எழுதப்பட்டிருக்கும்.

நாங்கள் எல்லோரும் ஒரே தெருதான். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தெருவில் விளையாடும் போது தண்ணீர் தவித்து காந்தியின் வீட்டுக்குப் போக நேர்ந்தால் வீட்டின் நடுப்பத்தியில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கலைஞர் படங்கள் ஒரு வித்தியாமான உணர்வை ஏற்படுத்தும். ராஜன் ஒன்றும் கட்சியின் பொறுப்புகள் எதிலும் இருக்கவில்லை. ஆனால் கட்சியின் உண்மையான விசுவாசி என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உத்தமராஜனுக்கு ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கின் எதிரில் ஒரு புரோட்டாக் கடை இருந்தது. சிறிய கடை என்றாலும் சுவையான சால்னாவுடன் புரோட்டா கிடைக்கும் என்பதால் கூட்டம் நிரம்பி வழியும். கடையிலும் எல்லா இடத்திலும் கலைஞர்தான். கடையின் பெயர் கூட கறுப்பு சிவப்பில்தான் எழுதப்பட்டிருக்கும்.

காந்தியிடம் பேசும்போதெல்லாம் "ஏண்டா உங்க அப்பாவுக்கு கருணாநிதின்னா ரொம்ப பிடிக்குமாடா? உங்க வீடு பூராம் கலைஞர் படமா இருக்கு??"ன்னு ஆச்சரியத்துடன் கேட்டோம். "அவருக்கு கலைஞரை மட்டும் யாராவது குறை சொன்னால் கெட்ட கோவம் வரும்டா.. அடிபின்னிருவார்" ன்னான். எங்கள் நண்பர் குழுவில் இருந்த துடுக்கு ரீகன் மட்டும் "டேய் உங்க அப்பா இன்னிக்கு மதியம் வீட்டில் இருக்கிறப்போ நான் 'கலைஞர் ஒழிக'ன்னு உங்க வீட்டு வாசலில் நின்னு கத்துவேன். உங்கப்பா என்ன செய்றார்னு பார்ப்போம்"ன்னு சவால் விட, எங்களுக்கும் ஆவல் அதிகமாகி நடப்பதைப் பார்ப்போம்னு கமுக்கமா இருந்துட்டோம்.

அன்னிக்கு மதியம் ரீகன் காந்தி வீட்டு வாசலில் நின்று "கலைஞர் ஒழிக" அப்படின்னு கத்த, நடுப்பத்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உத்தமராஜன் திடுதிடுவென வாசலுக்கு வந்து ரீகனின் பிடறியில் ஒரு அறைவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத ரீகன் பொறி கலங்கிப் போய் அழுது கொண்டே ஓட்டமெடுத்தான். பொன்னம்மாள் அக்கா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குப் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் குப்பென வேர்க்க ஆரம்பித்தது.

அதன்பின் சிவருடங்களில் உத்தமராஜனின் தம்பிகள் பெரிய ஆட்களாகிவிட அவர்களின் உழைப்பால் ராஜன் புரோட்டா ஸ்டால் ஊருக்குள் மேலும் நான்கு இடங்களில் கிளைகளைத் தொடங்கியது. வருடங்கள் அதிகமாக ஆக ராஜனின் கட்சிப்பற்று கூடிக்கொண்டே போனது. ஊருக்குள் கட்சியின் முக்கியமான நிதி ஆதாரமாக மட்டுமே இருந்த ராஜன், கட்சியில் எந்தப் பதவியும் கேட்டு வாங்கவில்லை. உண்மையான விசுவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்கும் ஒரு ஏணியாகவே இருந்தார்.

வருடங்கள் ஓடின. 2001 தேர்தல் நிதிக்கு கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோல்வி. விரக்தியாலும், தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையினாலும் அதிகமாகக் குடித்து விட்டு வந்து தன் வீட்டின் கூரை மேல் தானே கல்லை விட்டு எறிந்து சத்தம் போட்டு புலம்பிக் கொண்டிருந்தார். காந்தியும் காந்தியின் அம்மாவும் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்த போது சின்னக் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். காந்தியின் தம்பி ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது கூட அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தத் தேர்தல் முடிவினால் அவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.

ராஜனின் தம்பிகளுக்கு இந்த அரசியல் எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அண்ணனை எதிர்த்துப் பேசமுடியாமல் இருந்தனர். இப்போது தேர்தலுக்காக எக்குத்தப்பாகப் பணத்தைச் செலவு செய்ததால் கடுப்பான அவர்கள் "எங்களிடம் கேட்காமல் எப்படி பொதுப்பணத்தில் இருந்து கட்சிக்குக் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டு அவரவர்கள் தனித்தனியே கடைகளைப் பிரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ராஜனின் வணிகம் இப்போது ஒரு கடையுடன் சுருங்கிவிட்டது. மூன்று பெரிய பிள்ளைகள் வேறு. நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது காந்தி பள்ளிப்படிப்புடன் நின்று விட்டு கடையைப் பார்த்துக் கொண்டான்.

நானும் அதன்பின்னர் இளங்கலை, முதுகலை படிப்புகள் முடித்து ஊரையும் காலி பண்ணிப் போய்விட்டதால், நிறையப் பேருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று மாதங்கள் முன்பு துபாயில் இருக்கும் முத்துவிடம் இணைய அரட்டையின் போது எதேச்சையாக காந்தியைப் பற்றி விசாரிக்க "டேய் அவங்க அப்பா இப்பவெல்லாம் முந்தி மாதிரி இல்லடா .. ரொம்ப மாறிட்டார்டா .. ஊருக்குப் போய் ஒருதடவை காந்தியைப் பாருடா.. உன்னை ரொம்ப கேட்டான்" என்று சொன்னதும் எனக்கும் ஊருக்குச் செல்லும் ஆவல் ஒட்டிக் கொண்டது.

பங்குனிப் பொங்கல் விழாவிற்கு ரொம்ப வருடங்கள் கழித்து இந்த வருடம் போன போது காந்தியின் புரோட்டாக் கடைக்குப் போனேன். வெளியில் ராஜனின் ட்ரேட்மார்க் சைக்கிளைக் காணவில்லை. அதற்குப் பதில் ஒரு பழைய சைக்கிள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் செயின் கார்டில் வெள்ளைப் பெயிண்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று எழுதப்பட்டிருந்தது. கடையின் உள்ளே பெரிய பெரிய கலைஞர் படங்கள் எல்லாம் கழட்டப்பட்டு, ராஜன் இளைஞராக இருக்கும் போது கலைஞருடன் எடுத்துக் கொண்ட கறுப்பு வெள்ளைப் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. உள்ளே ராஜன் கல்லாவில் நின்று கொண்டிருந்தார். கரைவேட்டி இல்லை. ஆனால் கலைஞர் படம் போட்ட மோதிரம் போட்டிருந்தார். முறுக்கு மீசையில் ஏகப்பட்ட நரைமுடிகள். பார்த்ததும் "ஏய் வாப்பா வாப்பா என்ன ஆளையே காண்றதில்லை? சொந்த ஊரை மறக்கக் கூடாதுப்பா"ன்னு அறிவுரை கூறினார்.

"அப்படியெல்லாம் இல்லை அப்பா ! வேலை அதிகமாக இருப்பதால் வரமுடிவதில்லை"ன்னு மழுப்பி, "காந்தி எங்கே?" "பலசரக்கு வாங்கப் போயிருக்கான்பா. நீ சாப்பிடு அதுக்குள்ள வந்துருவான்"ன்னு சொல்லி அவரே இலை எல்லாம் எடுத்துப் போட்டு மூன்று புரோட்டாக்களை பிய்த்துப் போட்டு மணக்கும் சால்னாவை அதில் ஊற்றிவிட்டுப் போனார். ஒரு வெட்டு வெட்டிவிட்டு கல்லாவில் நின்று கொண்டிருந்த அவரிடம் "எப்படி அப்பா ! இப்படி மாறிட்டீங்க?" "எதைச் சொல்ற கட்சி வேட்டி கட்டுறதில்லையே அதையா? அட ஆமாம்பா கட்சிப்பாசம், கொள்கையெல்லாம் மனசளவில் மட்டுமே இருக்கு. ஓட்டு மட்டும் என் தலைவனுக்கு மறக்காம போட்டுடுறோம்". "எனக்கு விவரம் தெரிஞ்சதிலயிருந்து கட்சியில் இருக்கீங்களே அப்பா! கண்டிப்பா அதுக்கான பலன் ஒருநாள் கிடைக்கும். கவலைப்படாதீங்கப்பா". "ஹஹாஹா ! அதுவும் இன்னிக்கு நடந்திருச்சுப்பா !" அப்படின்னு சொல்லி அன்றைய முரசொலியை எடுத்துக் காண்பித்தார்.

'பத்து வருடங்களுக்கு மேல் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்காக பொற்கிழி வழங்கப்படும்' என்ற செய்தியுடன் மாவட்டவாரியாக அவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழே உத்தமராஜனின் பெயர் மூன்றாவதாக இருந்தது. நான் அவரைப் பெருமிதத்துடன் பார்த்தேன். அவர் கையில் இருந்த மோதிரத்தில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார்.

Tuesday, November 03, 2009

இலங்கை வானொலிகள்


வானொலிகள். முந்தைய காலத்திலும் சரி,இன்றைய கால்த்திலும் சரி,எதிர்காலத்திலும் சரி. மிக முக்கியமான செய்தி ஊடகம் மட்டுமல்ல, மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஊடகமும் கூட. திரைப்பபடப் பாடல்களை ஒலிபரப்பி அவற்றின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பவை இன்றைய பண்பலை வானொலிகள் மட்டுமல்ல. இங்கு நான் குறிப்பிட விரும்புவது என் குழந்தைப் பருவத்தில் (90களில்) வானொலிகள் எவ்வளவு முக்கியமான பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது என்பதைத்தான்.

80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் தமிழகத்தின் மிகமுக்கிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தவை தூர்தர்சனும், இலங்கை வானொலியும் தான். அகில் இந்திய வானொலி செய்திகள் மற்றும் விவசாய செய்திகளுக்காக மட்டுமே பெயர்பெற்றவை. மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியதில்லை. என‌க்கு வானொலி கேட்ப‌தென்றால் கொள்ளை விருப்ப‌ம்.

"இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு". தமிழகத்தில் அனைத்துத் திரைப்படப்பாடல்களையும் ஒலிபரப்பி கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. காலை 7:00 மணிக்குத் தொடங்கும் ஒலிபரப்பு 10:00 வரையிலும். பின்னர் 3:00 மணிக்குத் தொடங்கி 5:30 வரையிலும் வகை தொகையில்லாமல் பாடல் பட்டாசுகளைக் கொளுத்திவிடுவார்கள்.

தினமும் மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகும் 'லீவியின் சினிமாப் பாடல்கள்' என்ற நிகழ்ச்சியின் அடிமையாக இருந்தேன். அப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த விளம்பரங்களும் இலங்கை வானொலிக்கே வழங்கப்பட்டிருந்தன. மத்திய அலை ஒலிபரப்பானாலும் தெள்ளத் தெளிவான ஒலிபரப்பு. தொகுப்பாளர்களின் தோழமையாகப் பேசும் விதம் என எல்லாமே அகில‌ இந்திய வானொலியின் சோம்பேறித்தனத்திலிருந்து வித்தியாசப்பட்டதால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

பிடித்த தொகுப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம். பாடல் ஒலிபரப்பும் முன்பு மிக அருமையாக சம்பந்தப்பட்ட‌ விசயங்களையும் சேர்த்துச் சொல்லுவார். இல்ங்கை வானொலியிடம் தான் தமிழ்த்திரைப்படங்கள் அனைத்தினுடைய பாடல் ஒலிநாடாக்களும் உள்ளனவாம். இப்போதும் இந்த ஒலிபரப்பு உள்ளதா இல்லையா எனத் தெரியவில்லை.

அது மட்டுமா? கொஞ்சம் பெரியவனாகி (15, 16 வயதில்) விவரம் தெரியவும் தொலைக்காட்சி ஆன்டனாவுடன் வானொலிப்பெட்டியை இணைத்து இலங்கையின் பண்பலை வானொலிகளையும் கேட்டு நானும், அண்ணனும் மகிழ்ந்து வந்தோம். இந்தியாவில் பண்பலைகள் வருவதற்குப் பல வருடங்கள் முன்பே இலங்கையில் பண்பலை வானொலிகள் கொடிகட்டிப் பறந்து வந்தன.



சூரியன் பண்பலை, சக்தி பண்பலை, இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இன்னும் நிறைய. எனக்கு சக்தி பண்பலை தான் மிகவும் பிடிக்கும். மேகமூட்டம் இல்லாத காலங்களில் மிகத் தெளிவாக அனைத்துப் பண்பலை வானொலிகளும் கேட்டிருக்கிறோம்.

ஒருமுறை சூரியன் பண்பலைக்குத் தொலைபேசிய சிறுமி "மியாவ்!!!" என்று கத்த "ம்ஹூம்.இது போன்ற ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவர் தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்" என பெண்தொகுப்பாளர் அவர் உதவியாளரிடம் சொன்னார். அதை நினைத்து ஒருநாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன். ம்ம்ம்... சூதுவாது தெரியாத பருவமது.... மிக‌ முக்கிய‌மாக‌ அவ‌ர்க‌ள்து தூய த‌மிழ். தொகுப்பாளர்கள் 95 ச‌த‌வீத‌ம் ஆங்கில‌க்க‌ல‌ப்பின்றிப் பேசுவார்க‌ள். இன்றும் க‌தைத்துக் கொண்டுதான் இருக்கிறார்க‌ள். இலங்கையில் இப்பொழுது இன்னும் நிறைய தமிழ் பண்பலை வானொலிகள் இருப்பதாக அறிகிறேன்.

வெகுஅரிதாக கோடைகாலத்தில் 'புலிகளின் குரல்' வானொலியில் வரும். ஒருமுறை விடுதலைப்போராளி ஒருவரது வாழ்க்கை வரலாற்றையும், செய்திகளும் கேட்கமுடிந்தது. அலைவரிசை தெளிவின்மை, வானிலை ஆகியவற்றால் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கேட்கமுடிந்திருக்கிறது.

இதோடு விட்டுவிடவில்லை வானொலி கேட்கும் விருப்பம். சிற்றலையில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு , லண்டன் பிபிசியின் தமிழோசை, சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றையும் தேடிப்பிடித்து நிகழ்ச்சிகளை ரசித்திருக்கிறேன்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் இருந்து பண்பலை வானொலி தொடங்கப்பட்டது. துல்லியமான ஒலிபரப்பாக இருந்தாலும், நிகழ்ச்சிகள் மொக்கையாக இருந்தால் யார் கேட்பார்கள்? "பண்பலையில் விளம்பரம் செய்யுங்கள். இந்த நாட்டின் செல்வம் இங்கேயே இருக்கட்டும்" என இலங்கை வானொலியின் சர்வதேச ஒலிபரப்பின் போட்டியை ஈடுகொடுக்க முடியாமல் புலம்பித் தள்ளுவார்கள்.

அதன்பின்னர் நான் கல்லூரியில் சேர்ந்த காலம். இந்தியாவில் தனியார் பண்பலை வானொலிகளுக்கு அனுமதி கிடைத்தது. தமிழில் முதலி திருநெல்வேலியில் இருந்து சூரியன் பண்பலை தன் முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. திருநெல்வேலியில் ஒலிபரப்பாகும் வானொலி மதுரை வரை கேட்கும். எங்களுக்கு கல்லூரி விடுதியில் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. ஏனோ தனியார் பண்பலை வானொலிகளுக்கு செய்திகள் ஒலிபரப்பும் உரிமை மட்டும் கொடுக்கப்படவில்லை.

வேலை தேடி சென்னை வந்தால் .... அட சென்னையின் பண்பலை வானொலிகள் பற்றி உங்களுக்குத் தெரியாததா பாஸ்?

Tuesday, February 10, 2009

ரிச்சி ஸ்ட்ரீட் aka நரசிங்கபுரம் தெரு


உங்களுக்கு சென்னையில் நரசிங்கபுரம் தெரு எங்கே இருக்கிறதென்று தெரியுமா? என்னப்பா சத்யம் திரையரங்கம் தெரியுமாங்கிற மாதிரி கேட்கிறங்கிறீங்களா? அது சென்னையில் எல்லாருக்கும் தெரிஞ்ச இடம் தான். அதுதான் ரிச்சி ஸ்ட்ரீட் என தமிழில்(!) அழைக்கபடும் மின்னணு சாமான்கள் விற்கப்படும் தெரு.

ஜவுளிகளுக்கு எப்படி ரங்கநாதன் தெருவோ அதைப் போல மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) பொருட்களுக்குப் பேர் போன தெரு ரிச்சி ஸ்ட்ரீட். ஒரிஜினல் சாமான்கள், ஒரிஜினலைப் போலவே இருக்கும் டுபாக்கூர் சாமான்கள், கம்பெனி ப்ராண்டட் சாமான்களைவிட தரமான மின்னணு சாதனங்களை இங்கே வாங்கலாம். கணிப்பொறிக்குத் தேவையான திருகாணி முதல் ப்ராசசர் வரை சகலமும் கிடைக்கும் தெரு.

இந்தத் தெரு 1974ல் வெறும் 5 கடைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இப்போது 900க்கும் மேற்பட்ட கடைகளுடன் ஒட்டு மொத்த சென்னை/தமிழகத்துக்கும் தேவையான மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக உள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக உள்ளது. இங்கே கடை வைத்திருப்பவர்கள் முக்கால்வாசிப் பேர் குஜாராத்திகள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு (ரொம்பப் பெருமை ! ).

ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் அளவுக்கு இங்கேயும் கூட்டம் எல்லாக் கடைகளிலும் மொய்க்கிறது. பெரும்பாலான மக்கள் வாங்க வருவது கணினிக்குத் தேவையான பொருட்கள், USB pen drive, mobile memory card போன்றவை. இங்கே வாங்க முடியாத மின்னணு சாதனங்களே இல்லை எனலாம். நமக்குத் தெரிந்த எல்லா கம்பெனி ஐட்டங்களும், தெரியாத ஏகப்பட்ட சரக்குகளுக்கும் கிடைக்கின்றன. புதிதாக ஒரு கணினி வாங்க வேண்டும் என்றால் ஷோரூம் போய் அங்கே காட்டும் கணினியை வாங்குவதற்கு அதே configuration உடன் இங்கே 10000 குறைவாகவே வாங்கிவிடலாம்.

கணினி மட்டுமின்றி ’ரிச்சி ஸ்ட்ரீட் மேட்’ டிவிடி ப்ளேயர்கள், மெமரி கார்டுகள், மொபைல் போன்கள், கணினி உதிரி பாகங்கள் என வாரண்டி இல்லாத சரக்குகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. புதியன மட்டுமின்றி பழைய பொருட்களையும் சரி செய்து விற்கிறார்கள். கணினியில் அல்லது தனியாக Play station வைக்கத் தேவையான எல்லாப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. என்ன புது எலக்ட்ரானிக்ஸ் சாமான் வந்தாலும் அடுத்த நாளே இங்கே எதிர்பார்க்கலாம். ஒரிஜினலாகவோ அல்லது டுபாக்கூராகவோ !!! :)))

நான் ஒரு முறை மெமரி கார்ட் வாங்கப் போனபோது அந்தக் கடைக்காரர் ஒரு பேனாவை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார். என்ன வென்று பார்த்தால் அது ஒரு ரகசிய கேமராவுடன் உள்ள பேனா. 4 மணி நேர ரெக்கார்டிங் வசதியுடன் USB plug & play model. விலை வெறும் 700. இப்படி அன்றாட உபயோகத்துக்கு அல்லாத பல பொருட்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன.


இப்படி எல்லாமே இங்கே கிடைத்தாலும் சில பிரச்சினைகளும் இங்கே இருக்கின்றன. முதலாவது டூப்ளிகேட் சாமான்கள். நாங்கள் ஒரு முறை ஆப்பிள் ஐபாட் வாங்கப் போன போது அந்தக் கடைக்காரன் ”ஒரிஜினலா, டூப்ளிகேட்டா?” என்றான் (ரொம்ப நல்லவன்) . இரண்டிலும் கொஞ்சமும் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை. விலை மட்டுமே வித்தியாசம். டூப்ளிகேட் மூன்று மடங்கு விலை குறைவு. இது என்ன தங்கமா? உரசிப் பார்த்து வாங்க? அவன் ஒரிஜினல் என்று சொன்னதையே வாங்கித் தொலைத்தோம். ஒன்றும் பிரச்சினையில்லாமல் வருகிறது.

அடுத்தது இங்கே நிறைய கடைகள் இருப்பதால் எல்லாக் கடைகளிலும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். நாங்கள் புதிதாதகக் கணினி வாங்க வேண்டியிருந்ததால் நிறையக் கடைகளில் Configuration சொல்லி விலை விசாரித்தோம். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது 600 ரூபாய் விலை வித்தியாசம் இருந்தது. பின்னர் 'Delta peripherals' என்ற கடையில் வாங்கி விட்டு 250 கொடுத்து மாடியில் ஒரு இடத்தில் எல்லா பாகங்களையும் மாட்டினோம். கடையில் இருக்கும் பொடியன் சர்வ சாதரணமாக எல்லாவற்றையும் மாட்டுகிறான்.

அடுத்தது வாரண்டி. வாங்கும் வரை ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு பின்னால் எதாவது பிரச்சனை என்று அடுத்த நாள் போய்க் கேட்டால் “யார் நீ?” என்று கேட்பார்கள். இல்லையெனில் “கம்பெனி வாரண்டி. நாங்க எதுவும் பண்ண முடியாது” என்பார்கள்.

அடுத்த பிரச்சினை. கூட்டமாக உள்ள கடைகளில் நீங்கள் ஒரு சாமான் வாங்குவதற்குள் உங்களுக்கு பிபி ஏறி பின்னர் குளுக்கோஸ் தான் ஏற்றணும். பின்னே நீங்கள் எதாவது சாமான் கேட்டால் என்னவோ க்டன் கேட்ட மாதிரி கடையில் இருப்பவர்கள் மதிக்கவே மாட்டார்கள். ஒரு பத்து தடவை கேட்டு பின்னர் அங்கே இருப்பவன் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டால்தான் எடுத்துத் தருவான். எனவே ஹைபிபி மக்கள் தவிர்க்கவும். :)

சரி அப்படின்னா எதுக்கு இங்க போய் ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு தெரியாம ஒரு பொருளை வாங்குறதுக்கு நேரா ஷோரூமுக்குப் போய் வாங்கிரலாமே என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இங்கே ஒரிஜினல் சாமான்களும் விலை கம்மி. உதாரணத்துக்கு ஸ்பென்சரில் ஒரு கேமரா மெமரிகார்ட் 1GB 850 ரூபாய் சொன்னார்கள். அதே மெமரி கார்ட் 2GB 550க்கு ரிச்சி தெருவில் வாங்கினேன். எனவே நாம் நம்பிக்கையான கடையைத் தேர்ந்தெடுத்துப் போனால் ஒரு பிரச்சினையும் இல்லை.

என் அனுபவத்தில் கணினி உதிரி பாகங்கள், உதா. எலி, விசைப்பலகை, ஹெட்போன் மற்றும், USB pendrive, Mobile memory card போன்றவை வாங்க 'Oasis networks' என்ற கடையில் குறைவான விலைக்கு ஒரிஜினல் சாமான்களை வாங்கலாம். இது பிரதான வீதியிலேயே உள்ளது.

புதிய கணினிக்கு எல்லா பாகங்களும் வாங்கி பின்னர் தனியாகப் பொருத்த வேண்டுமானால் 'Delta peripherals' என்ற கடை உள்ளது. நாங்கள் விசாரித்தவரை இங்கே எல்லாப் பொருட்களும் விலை குறைவாகவே கிடைக்கின்றன. 'Oasis networks' க்கு எதிரில் கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸின் உள்ளே இருக்கிறது.

எந்தக் கடைக்குப் போனாலும் பிராண்ட் பெயரைச் சொல்லியே கேளுங்கள். உதா USB pendrive, Mobile memory card வாங்க வேண்டுமானால் Kingston, Transcend, Sandisk போன்றவை பிரபலமானவை. பேர் சொல்லாமல் கேட்டால் அவர்கள் வைத்திருக்கும் டுபாக்கூரைக் கொடுப்பார்கள். நினைவிருக்கட்டும் ஒரிஜினல் சாமான்கள் எப்பவும் மூடிய உறையில் (Sealed pack) மட்டுமே வரும். உறை கிழிந்திருந்தாலோ, இல்லாமல் இருந்தாலோ வாங்க வேண்டாம்.

குறிப்பாக ஆளே இல்லாத கடையில் வாய் நிறைய பீடா போட்டுக் கொண்டு ஷோக்காக எவனாவது உட்கார்ந்திருந்தால் அவன் கடைக்குப் போகவே வேண்டாம். கண்டிப்பாக அவன் டுபாக்கூர்தான். (அனுபவம் இருக்கில்ல !!!)

Thursday, August 07, 2008

'சூப்பர்'மணியபுரம் !





மதுரை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எனக்குள் ஓர் ஆர்வம் எப்பவும் தொற்றிக் கொள்வது உண்மை. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. வாழ்க்கையின் முக்கியகட்டமான கல்லூரிக்காலத்தை நண்பர்களுடன் மதுரையில் கழித்ததால், அந்த நினைவுகளை மறக்கமுடியாமலும் திரும்பவும் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல முடியாமலும், அதற்கான வடிகாலாக மதுரை குறித்த செய்திகள், திரைப்படங்கள் மேல் எப்பவும் ஆர்வம் காட்டுவதுண்டு.

அந்த வகையில் காதல் திரைப்படத்திற்கு அடுத்து சுப்ரமணியபுரம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோவில், தெப்பக்குளம், அண்ணே என்ற பாசச்சொல்லை மட்டும் காட்டாமல் அதற்கும் மேலாக முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த வாழ்க்கைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையின் இளமைக்கால வாழ்க்கையையும் திரையில் காட்டியிருப்பதற்காகவே இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். 1980ம் காலகட்டம் இன்றைய அரைக்கிழவர்களின் இளமைக்காலம்.

படத்தைப் பாராட்டி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டன. இந்தப்பதிவு படத்திற்கான விமர்சனம் இல்லை. இது போன்ற இயல்பான கதையமைப்பும், கவரும் அம்சங்களும் கொண்ட திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பும், வெற்றியும் பெறும் போது நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் ஒருவித மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.

  • ஐந்திலக்கத் தொலைபேசிஎண்
  • குழாய் ஒலிபெருக்கி
  • வஜ்ரதந்தி, காளிமார்க், டார்டாய்ஸ் விளம்பரங்கள்
  • ரப்பர் செருப்பு
  • பெல்பாட்டம் பேண்ட், நீளக்காலர் சட்டை
  • தாவணிப்பெண்கள்
  • பாண்டியன் நகரப்பேருந்து
  • கூடைச்சேர்
  • கதவு வைத்த பெட்டியில் இருக்கும் தொலைக்காட்சி
  • சித்ரஹார், ஒலியும் ஒளியும்

இவையெல்லாம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் கண்ணில்பட்ட்வை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம் வீட்டிலிருக்கும் பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிப்பார்த்த உணர்வு !

தமிழ்த்திரையுலகில் எப்போதாவது வரும் இது போன்ற படங்களைத் திருட்டு விசிடியில் பார்க்காமல் தாராளமாகத் திரையரங்கில் சென்று பார்க்கலாம்.

இயக்குனர் சசிகுமார், ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோருக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும் :)

உளியின் ஓசை, குருவி போன்ற சப்பையான படங்களை இன்னமும் முதலிடத்தில் வைத்து அழகுபார்த்துக்கொண்டு சுப்ரமணியபுரம் படத்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கண்டனங்கள்.

Wednesday, July 30, 2008

'அஞ்சாநெஞ்சன்' சம்சு !




சம்சு என்கிற சம்சுதீன் தான் நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எல்லா வகுப்புகளிலும் வகுப்புத்தலைவன் அதாவது க்ளாஸ் லீடர். தான் பிறப்பெடுத்ததே வகுப்பில் ஒழுக்கத்தைக் கட்டிக்காக்கத்தான் என்பது போல அவன் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது.

க்ளாஸ் லீடரின் கடமைகளான காலையில் வருகைப்பதிவு எடுப்பது, கரும்பலகையைச் சுத்தம் செய்வது, தினமும் பதிவு=45 வருகை=43 மலர்=102 இதழ்=64 என்று எழுதுவது, பையன்களிடம் காசு வாங்கி வகுப்புக்குச் சொந்தமாகப் பிரம்பு (அப்பவே சொந்தச் செலவில் சூனியம்!), கரும்பலகையை அழிக்க டஸ்டர் வாங்குவது என அவன் வேலைப்பட்டியல் நீளும். இது போக நாங்கள் எல்லோரும் இரண்டாவது பீரியட் முடியவும் சூச்சூ போனால் அவன் மட்டும் வகுப்பில் அமர்ந்து காவல் காப்பான். அதாவது வேற வகுப்பு பையன்கள் யாரும் வந்து எதையும் திருடிரக்கூடாதாம் அதுக்காக. மேலும் எப்பவும் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்குவதாலயும், வாத்தியார்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதாலும் ஒவ்வொரு வருடமும் அவனே வகுப்புத்தலைவனாக வாத்தியாரின் ஒருமனதாக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தான்.

சம்சுவின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டது முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நோஞ்சான் பசங்களான நான்,யோகானந்த் என்ற யோகு, பேரையூர் சுரேஷ் மற்றும் எங்கள் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்தான். வகுப்பில் மூன்று வரிசைகளாகப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதிலும் நடுபெஞ்சில் அமர்ந்திருக்கும் நாங்கள் தான் அவன் இம்சையினால் பாதிக்கப்பட்டது. நாங்கள் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்ததால் நன்றாகப் படிக்கிற பசங்க என்று தப்பால்லாம் நினைக்கப்படாது.

நான் குட்டை+சோடாபுட்டி வேறு. யோகுவும் சுரேஷும் அதே. அதான் காரணம். அப்படி என்னன்ன இம்சையெல்லாம் சம்சுவால் எங்களுக்கு வந்தது? வகுப்பில் ஒவ்வொரு பீரியட் முடிந்ததும் போர்டின் முன்னால் வந்து நின்று கொண்டு "டாய் யாரும் பேசாதீங்க. பேர் எழுதுவேன்" என்பான். பின்பெஞ்சில் கழுதை மாதிரிக் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது.

நான் சுரேஷிடம் "இப்ப என்ன அறிவியல் பீரியடாடா?" அப்படின்னு மெல்லமாக் கேட்டால், கழுகு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல என்பேரை போர்டில் எழுதிப்போட்டுவிடுவான். "டேய் இப்ப என்னடா அடுத்து என்ன பீரியட் அப்புடின்னுதான்டா கேட்டேன்" என்று வாக்குவாதம் பண்ணினால் மறுபடியும் என்பேரை எழுதிபோட்டுவிடுவான். அதாவது லீடர் சொல்லியும் கேட்காமல் பேசினேன்னு அர்த்தமாம். அடுத்து வரும் வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கவேண்டும்.

இது பராவாயில்லை. போர்டு அழிக்க டஸ்டரைக் காணவில்லையென்றால் முதல் பெஞ்சில் இருக்கும் எங்கள் யார் நோட்டையாவது எடுத்து டர்ர்ர்ர்ன்னு பேப்பர் கிழித்து போர்டை கீச் கீச்னு சத்தம் வர அழிப்பான். நாங்கள்லாம் நோஞ்சான் வேறு. அவனை எதிர்த்து என்ன செய்யமுடியும்? சுரேஷ் ஒருமுறை நோட்டைக் கிழித்ததற்கு கெட்டவார்த்தையில் திட்ட அவன் பேரை போர்டில் எழுதி அடைப்புக்குறிக்குள் கெட்டவார்த்தை என்று எழுதிப்போட்டுவிட்டான். மாயா என அழைக்கப்பட்ட கணக்கு வாத்தியார் அடி பின்னிவிட்டார்.

விதியை நொந்துகொண்டு சம்சுவின் இம்சைகளைத் தாங்கிக் கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் அறிவியல் பீரியட் பாதியில் எங்கள் வகுப்பு வாசலில் ஒருபையன் காக்கி பேண்ட், வெள்ளைச்சட்டை, டக்இன் செய்து பெல்ட் போட்டுக்கொண்டு "எக்ஸ்க்யூஸ்மி சார்!" அப்படின்னு கூப்பிட்டான். 'யாருப்பா இது துர இங்கிலீசெல்லாம் பேசுது'ன்னு நாங்க வாயைப் பொளந்து பார்க்க "மே ஐ கம் இன் சார்?" அப்படின்னு மறுபடியும் ஆங்கில ஆசிட்டை வீசினான்.

"என்னப்பா வேணும்?" - வாத்தியார்.

"சார் என் பேரு மணிகண்டன். புதுசா சேர்ந்திருக்கேன் சார்"

"சரி உள்ள வாப்பா". வந்தவன் எங்கள் பெஞ்சில் நெரித்துக் கொண்டு உட்கார்ந்தான். பீரியட் முடிந்ததும் சம்சிடம் "டேய் எங்களுக்கே இடம் இல்லை. இவனைப் போய் பின்னால உக்காரச் சொல்லுடா" னு சொன்னால், "போங்கடா .. எலிக்குட்டி மாதிரி எல்லாரும் இருந்துக்கிட்டு முழு பெஞ்சும் வேணுமா? அவன் இங்கதான் இருப்பான்னு" சர்வாதிகாரக் கட்டளை போட்டுட்டான்.

பின் மெதுவாக மணிகண்டனிடம் அவன் பூர்வீகம் விசாரிக்க, அவன் சென்னையில் ஆங்கில வழியில் படித்தவனாம். அவன் அப்பா வேலை பார்க்கும் இடத்தில் கோல்மால் பண்ணிவிட தண்ணியில்லாக் காடுன்னு எங்க ஊருக்கு அனுப்பிட்டாங்களாம். எப்பவும் அவன் தான் முதல் ரேங்க் வாங்குவானாம்.




விசயம் சம்சுக்குக் கேள்விப்பட்டு பேயடித்தது போலாகிவிட்டான். என்னடா இது நமக்குப் போட்டியா ஒரு படிக்கக்கூடிய பையன் வந்திருக்கானேன்னு ரொம்பவும் பயந்து போய்ட்டான். அவன் பயப்படறது தெரிஞ்சதும் நாங்க ஒரே குஷியாகிட்டோம். எப்பவும் மணிகண்டனோடவே சுத்துறது, ஒன்னா சேர்ந்துதான் வீட்டுக்குப் போறது ன்னு திரிஞ்சோம்.

நம்ம தான் 'ஏபிசிடி எங்கப்பன் தாடி' ன்னு ஆங்கிலம் பேசுற ஆளாச்சே! ஆனால் அவன் ஆங்கிலத்தில் பேசி , ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்லி, ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பேசி என ஆங்கிலத்தில் பொளந்து கட்டினான். சம்சுக்கு சரியான ஆப்புடா என நினைச்சிருந்தோம்.

அவனிடம் சம்சுவைப் பற்றி சொல்லியிருந்தோம். "டேய் நீ மாதப் பரிட்சையில சம்சுவை விடக் கூட மதிப்பெண் வாங்கி நீ இந்தக் க்ளாஸ் லீடரா வரணும்டா"ன்னு அடிவாங்கின கையைத் தடவிப் பார்த்துக்கொண்டே சொல்லிவச்சிருந்தோம். மணிகண்டன் வந்தால் எங்களுக்கு இனிமேல் வகுப்பில் எந்தத் தொல்லையும் இருக்காது என நம்பி அவனை நல்லா ஏத்திவிட்டுக்கிட்டிருந்தோம். அவனும் கவலையேபடாதீங்கடான்னு சொல்லியிருந்தான்.

இதுக்கிடையில் காண்டாகிப் போன சம்சு, மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். நாங்கள் அவனுடன் சுற்றுவதால் எங்களையும் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் சாயங்காலம் மைதானத்தில் விளையாடி விட்டு வீட்டுக்குக் கிளம்புறப்போ தூங்குமூஞ்சி மரத்துக்குப் பின்னால இருந்து யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சின்னு போய்ப் பார்த்தால் சம்சு அறிவியல் புத்தகத்தைத் தொறந்து வச்சிக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கான்.

ஒரு பேச்சுக்குப் போய் "ஏண்டா அழுற?"ன்னு கேட்க "பொத்திக்கிட்டுப் போங்கடா. உங்களுக்கென்ன?" ன்னான். இருந்தாலும் எங்களுக்கெல்லாம் அளவிடமுடியாத சந்தோசம். எல்லாம் மணிகண்டனை நினைச்சுப் பயந்து போய்தான் அழுகிறான்னு தெரியும். 'ங்கொய்யால எங்களையா திட்டுற? மவனே! மாட்டுனடி! இந்த மாசத்தோட உன்னோட லீடர் பதவி காலி!'ன்னு சந்தோசமா வீட்டுக்குப் போனோம்.

அடுத்த வாரம் மாதப்பரீட்சை எழுதினோம். மணிகண்டன் எல்லாப் பரீட்சையும் நல்லா எழுதியிருக்கிறதா வேற சொன்னான். சனி, ஞாயிறு விடுமுறை முடிஞ்சி திங்கள்கிழமை எல்லாருக்கும் திருத்தின விடைத்தாள்களைக் கொடுத்தார்கள். வரிசையாக ஒவ்வொரு மதிப்பெண்ணும் வரவும் எங்கள் மதிப்பெண்ணைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மணிகண்டன் மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தோம்.

அடப்படுபாவி!! இப்படி ஏமாத்திட்டியடா !! ஆங்கிலம் தவிர எல்லாத்திலயும் அவன் பெயில்!! திக்கித்திணறி 36 மதிப்பெண் வாங்கியிருந்தான் ஆங்கிலத்தில் !! எங்களுக்கே அவன் முகத்தைப் பார்க்கக் கூச்சமா இருந்தது, ஆஹா ! இவனைப் போய் நம்பி ஏமாந்திருக்கமே!! ன்னு ரொம்ப வருத்தமாப் போச்சு.

அதெல்லாம் விட, சம்சு வந்து அவனைக் கேவலமா ஒரு பார்வை பார்த்தான் பாருங்க .. கொடுமை. அடுத்த வினாடியே சம்சு வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டான்.

"டேய் மணிகண்டா நீ போய் கடைசி பெஞ்சுல உட்காருடா!"

"எதுக்குடா?"

"ம். மக்குப்பசங்கெல்லாம் அங்கதான் உட்காரணும்" அப்படின்னு தெனாவெட்டா சொன்னான். மணிகண்டன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டான்.

என்னது? அப்புறம் நாங்க என்ன பண்ணினோமா?? வாலைச் சுருட்டிக்கிட்டு நம்மளே நல்லாப் படிச்சி முதல் மதிப்பெண் வாங்கி க்ளாஸ் லீடர் ஆகிரணும்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டோம்.

Wednesday, June 18, 2008

மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு

'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.

ஒரு சின்ன ப்ளாஷ் பேக். ரெண்டு மாதம் முன்னாடி தூங்கிறப்போ கனவில் கையில் வேலோட முருகனும், அவர் மாமன் அழகரும் வந்து "ஏம்பா, ரெண்டு வருசம் மதுரையில் படிச்சியே எங்களை ஒரு தடவையாவது வந்து எட்டிப் பார்த்தியா? வாராவாரம் அல்வா வாங்கித் திங்கிறதுக்காகவே டவுன்ஹால் சாலை வழியா மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போன நீ அல்வா கிடைக்காதுங்கிறதுக்காக திருப்பரங்குன்றத்துக்கும், அழகர்கோவிலுக்கும் வராம டபாய்ச்சல்ல.. பாரு உனக்கு விடுப்பு கிடைக்காது" அப்படின்னு சொன்னதால "அப்படியெல்லாம் இல்லீங்கோ. நான் கூப்பிட்டப்போ துணைக்கு யாரும் வரமாட்டேன்னு சொன்னதால வரமுடியலீங்கோ. எனக்கு விடுமுறை கிடைச்சா கண்டிப்பா வந்து பார்க்கிறேன்"னு வாக்கு கொடுத்துட்டேன்.

கோவில் குளம்னு கூப்பிட்டாலே கம்பளிப் பூச்சியைப் பார்க்கிற மாதிரி நண்பர்கள் பார்க்கிறதால இப்பவும் தனியாகவே போக வேண்டிய சூழ்நிலை ஆகிப் போச்சு. சரியா இந்த நேரத்துல புரட்சிப்பதிவர் டிபிசிடி வேற மதுரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னதை நம்பி அதையும் என் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கிட்டேன். ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய் அடிக்க முடிவு பண்ணியாச்சு.


கிடைச்சது 9 நாட்கள் விடுமுறை. ஜூன் 7 முதல் 15 வரை. விடு ஜூட். விடுப்புக்கு முதல் நாள் நான் வேலையே பார்க்கலை. எல்லோர்கிட்டயும் போய் "நான் ஊருக்குப் போறேன். ஒரு வாரம் லீவு" அப்படின்னு பீத்திக்கிட்டே திரிஞ்சேன். ரொம்ப பேர் காண்டாகிட்டாங்க. வரும்போது எதாவது திங்கிறதுக்குக் கொண்டு வா. (அட உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதாப்பா? ஊருக்குப் போனா எதாவது திங்க கொண்டு வரணும்னு எவன் சட்டம் போட்டான்?). ஒரு வழியா மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது அதிகாலை மணி 2. டவுன் ஹால் சாலையில் அலைஞ்சு திரிஞ்சு ஒரு விடுதியைக் கண்டுபிடித்து தூங்க ஆரம்பிச்ச போது மணி 2:30.

என் திட்டம் இது தான். முதலில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம். பின்னர் திருப்பரங்குன்றம். அடுத்து அழகர் கோவில். அதற்கப்புறம் மலை மேல் பழமுதிர்ச்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம்.

மீனாட்சி அம்மன் கோவில்
சீக்கிரமே மீனாட்சி அம்மன் கோவில் போகணும்னு முடிவு பண்ணியதால் வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே தூக்கம் போட்டேன். காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டமே இல்லாத தரிசனம். அம்மன் சன்னிதியிலேயே கூட்டம் இல்லை. சுவாமி சன்னிதியில் விழாக்காலங்களிலே கூட கூட்டம் இருக்காது. அதுவும் நான் சென்ற போது கூட்டமில்லாமல் ஒரு தரிசனம். பின்னர் பரிவாரங்களை வணங்கிவிட்டு வெளியில் வந்து தெப்பக்குளப் படிக்கட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாயிற்று.


மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் கோபுரம் முழுவதும் தென்னை ஓலையால் மூடிவைத்திருந்தார்கள். கோவிலுக்கு வெளியே சித்திரை வீதி முழுவதும் சாலையைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் சாலையோரக் கடையில் மதுரை ஸ்பெசல் சுடச் சுட இட்லி சாப்பிடலாமென்றால் என் நேரம் ஒரு கடையும் தென்படவில்லை. சரின்னு வெறும் வயிற்றோடவே திருப்பரங்குன்றம் பேருந்து ஏறிய போது மணி 7:30.

திருப்பரங்குன்றம்
பெரியாரிலிருந்து கால் மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன். முருகனின் முதல் படை வீட்டைத் தரிசிக்கப் போறோமே, கடவுளை நினைத்துக் கொண்டே செல்லணும் என்று 'சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா' என்ற முருகன் துதியைப் பாடிக்கொண்டே கோவிலுக்குள் வந்து சேர்ந்தேன்.


திருப்பரங்குன்றம் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கோவிலின் அமைப்பு ரொம்பவே வித்தியாசமானது. மலைதான் கோவிலின் ஒரு பக்கம். அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,சிலைகளைச் சுற்றிக் கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் இரண்டு தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் நந்தி, மயில், எலி வாகனங்களின் சிலைகள் உள்ளன. அவற்றுக்கு எதிரே இரண்டாவது தளத்தில் முருகர், துர்க்கை, விநாயகர், முருகனுக்குப் பக்கவாட்டில் பெருமாளும், விநாயகருக்குப் பக்கவாட்டில் சிவனும் உள்ளனர்.

துர்க்கைக்கு சன்னிதிக்கு நேரேதான் ராஜகோபுரம் உள்ளது. முருகர் துர்க்கைக்குப் பக்கவாட்டில், தெய்வானையுடன் பக்கவாட்டில் சிற்பமாகக் காணப்படுகிறார். முருகனுக்கு அருகில் ஒருவர் தாடியுடன் உள்ளார். நாரதர் என்று குருக்கள் சொன்னார், அது தவறு இந்திரன் அல்லது அகத்தியராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இங்கும் கூட்டமில்லை. ரொம்ப நேரம் நின்று வணங்கிய பிறகு தெப்பக்குளம் மற்றும் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் ஒரு அக்கா தெருவோரத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். வெறும் ஐந்து ரூபாய்க்கு சில பல இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு திரும்பவும் பெரியார் நிலையம் வந்து சேர்ந்தேன்.

அழகர் கோவில்
அங்கிருந்து பேருந்தில் அழகர் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது மணி 10:15. சுற்றிலும் பச்சை பசேல் என்று மலை. மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில். உள்ளே சென்றால் கோவிலின் வெளியே முதலில் வருவது பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னிதி. இங்கு சாமிக்கு சிலை கிடையாது. மூடப்பட்ட கதவில் சந்தனம் பூசப்பட்டு அதையே கருப்பசாமியாக வழிபடுகிறார்கள். ஏன் என்ற காரணமும், வரலாறும் தெரியவில்லை. ரொம்பவும் சக்திவாய்ந்த கடவுள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெளியே



உள்ளே


மிகுந்த பயபக்தியோடு வணங்கிவிட்டு அழகர் கோவிலின் உள்ளே சென்றால் இங்கும் கூட்டமில்லை. சனிக்கிழமையாதலால் பூஜைகள் நடந்து கொண்டிருந்ததன. கொஞ்ச நேரத்தில் அது முடியவும் அழகரையும் தரிசித்துவிட்டு பிற சன்னிதிகளையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் நம் முன்னோர்களின் குறும்பு. பூஜை முடிந்து வாழைப்பழம் வைத்திருந்தவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.

பழமுதிர்ச்சோலை

அழகர்மலையின் மேலே முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை உள்ளது. இங்கு செல்வதற்கு அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் இருப்பது போல. மலைப்பாதையில் பத்து நிமிடப் பயணம். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இறக்கிவிடுகிறார்கள். இந்த முருகன் கோவில் கொஞ்சம் சிறியது தான். விநாயகர், முருகர், பெருமாள் சன்னிதிகள் மட்டுமே உள்ளன.

இராக்காயி அம்மன் கோவில்

பழமுதிர்ச்சோலையில் இருந்து அதே மலைச்சாலையில் ஒரு பத்து நிமிடம் நடந்தால் நூபுரகங்கை எனப்படும் வற்றாத தீர்த்தக்கிணறு மற்றும் அதை ஒட்டி இருக்கும் இராக்காயி அம்மன் கோவிலையும் தரிசிக்கலாம். எல்லோரும் தீர்த்தக் கிணற்றில் குளித்து விட்டு வந்து தரிசிக்கிறார்கள். நான் தலையில் தெளித்துக் கொண்டு இராக்காயி அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் என் புயல்வேக ஆன்மீகப் பயணம் முடிவுக்கு வந்தது. அப்போது மணி 12:10.

வௌவால் தெரியுதா?



அழகர்மலையின் அழகிய தோற்றம்



திரும்பவும் மலையில் இருந்து இறங்கி அழகர்கோவில் சென்று பின் பெரியார் நிலையத்தில் இறங்கி, சாப்பிட்டு விட்டு டவுன்ஹால் சாலை பிரேமாவிலாஸில் அல்வா சாப்பிட்டுவிட்டு விடுதிக்குச் சென்று பேய்த்தூக்கம் போட்டேன்.

மதுரையில் கண்ட மாற்றங்கள்
1. பண்பலை வானொலிகள்
2. மாற்றம் செய்யப்பட்ட பெரியார் நிலையம் மற்றும் புதிய மேம்பாலம்
3. ஏகப்பட்ட ஏர்பஸ்கள். இரண்டுமடங்கு கட்டணம்.
4. தங்கரீகல் திரையரங்கு மாற்றம் செய்து கட்டப்படுகிறது. DTS,ACயுடன்.
5. டவுன்ஹால் சாலையில் ஒரு தேநீர் 4 ரூபாய். அநியாயம்.

என்றும் மாறாதது
வாங்கண்ணே என்னும் மக்களின் அன்பு. (ஐஸ் ஐஸ்... நானெல்லாம் உங்களுக்கு அண்ணனா? எப்பவும் அன்புத்தம்பிதேன்)

பெருமாள் தெப்பம் - டவுன்ஹால் சாலை

இந்த அழகான தெப்பக்குளம் நேதாஜி சாலைக்கும் டவுன்ஹால் சாலைக்கும் இடையில் இருக்கிறதென்றால் நம்பமுடிகிறதா? தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்து விட்டதால் இப்பொழுது தெப்பக்குளத்துக்குப் போக வழியே கிடையாது.

சின்ன சந்தேகம்
ஏன் அழகர்கோவில் கருப்பசாமி சன்னிதியில் சிலை வழிபாடு இல்லை? யாருக்காவது தெரியுமா?

பதிவர் சந்திப்பு
மதுரை வந்ததிலிருந்தே பதிவர் டிபிசிடியின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்தன. முதலில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என்று சொன்னபோது என் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு திடீரென்று ஒருநாள் "நான் டிபிசிடி பேசுறேன். இது தான் என் கைப்பேசி எண்" என்று சொல்லிவிட்டு நான் "அப்புறம்" என்பதற்குள் டீங் டீங் டீங். தொடர்பைத் துண்டித்துவிட்டார். அப்புறம் இரண்டு நாட்களாக பேச்சு மூச்சைக் காணோம்.

சந்திப்புக்கு முதல் நாள் தொலைபேசி "எங்க சந்திப்பு நடத்துறீங்க?"ன்னு கேட்க "நாளைக்கு சந்திப்புக்கு நாளைக்குத்தான் முடிவு பண்ணனும்" அப்படின்னு மர்மச்சிரிப்பு சிரிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி.'நான் அவசரமாக போடி போகிறேன். என்னால் உங்களைச் சந்திக்க முடியாது' என்று. பின்னூட்ட பாணியில் ஒரு சோக ஸ்மைலியை அவருக்கு குறுஞ்செய்தியில் அனிச்சையாக அனுப்பிவிட்டேன்.

ஆகக் கூடி சந்திப்பு இருக்குன்னு ஆசையைக் கிளப்பிவிட்டு கடைசியில் எஸ்ஸாகிப் போன டிபிசிடியின் நடவடிக்கைகளில் சந்தேகமும் ஒரு வித பதற்றமும் இருப்பதால் எதற்கும் மலேசியா காவல்துறை அவர்மேல் ரெண்டு கண்ணையும் வைப்பது நல்லது. சந்திப்பு இல்லாததால் சாவகாசமாகக் கிளம்பி இரவு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

Thursday, July 12, 2007

கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சிறுவயதில் எனக்கு மரம், செடி வளர்த்தல் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் நாங்கள் சொந்த ஊரில் இருந்தபோது எங்கள் வீட்டில் அதற்கான இடம் கிடையாது. ஆனாலும் காலியான பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி காட்டுரோஜா(இப்போ பட்டுரோஸ்?!)ச் செடிகளை வளர்த்து வந்தேன். இசை கேட்டால் செடி நன்றாக வளரும் என்பதால் எங்கள் வீட்டு வானொலி இருக்குமிடத்துக்கு அருகில் சன்னலுக்கு வெளியே வைத்து வளர்த்து வந்தேன். ஆனாலும் மரம் வளர்ப்பது என்பது ஓரு கனவாகவே இருந்து வந்தது.

பின்னர் வேறொரு வீட்டிற்கு மாறியபோதும் இதே நிலைதான் என்றாலும், வீட்டிற்கு முன்புறம் நிறைய காலி இடமிருந்ததால் மரம் வளர்க்கும் ஆசை மீண்டும் முளைத்தது. வீட்டு வாசலுக்கு அருகில் ஒரு மரம் வளர்க்கப் போகிறேன் என அம்மாவிடம் சொல்லி வைத்தேன். "என்ன மரம்டா?"ன்னு கேட்டபோது "வேப்பமரம்" என்றேன். மறுநாள் காலையில் என் அம்மா இடுப்பில் தண்ணீர்க் குடமும், கையில் சிறிய வேப்பங்கன்றையும் வைத்திருந்தார்கள். தண்ணீர் பிடிக்கும் குழாயடியில் இருந்து எடுத்து வந்ததாகச் சொன்னார்கள். இரண்டு இலைகள் மட்டுமே முளைத்திருந்த சிறிய செடி அது.

பின்னர் ஒரு காலி பாலித்தின் பையில் மண் நிரப்பி அதில் ஊன்றி வீட்டின் பின்புறம் வெயில் படும் இடத்தில் வைத்து வளர்த்து வந்தேன். ஒரு மரம் மட்டும் போதுமா? இன்னொன்றும் வளர்ப்போம் என எண்ணி பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த மரமான மயில் கொன்றை மரத்தின் விதைகளை சேகரித்துக் கொண்டு வந்து முளைக்கவைத்தேன். தினமும் தண்ணீர் ஊற்றியும் வேப்பமரம் மட்டுமே வளர்ந்தது. மயில் கொன்றை முளைக்கவே இல்லை. பின் விதையைத் திரும்ப எடுத்து தண்ணீரில் மூன்று நாட்கள் ஊற வைத்த பின் அது லேசாக முளைக்கத் தொடங்கியதும் திரும்பவும் பையில் வைத்து வளர்த்து வந்தேன்.

சில நாட்களில் இரண்டும் நன்கு பெரியனவாக வளர்ந்து விட்டன. தரையில் ஊன்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்கள் வீட்டு வாசலில் ஒரு மரம் மட்டுமே வைக்க இடமிருந்ததால் வேப்பமரத்தை மட்டும் வீட்டு வாசலில் வைப்பது என்றும் மயில் கொன்றை மரத்தை எங்கள் வீட்டு எதிரில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து வளர்ப்பது என்றும் முடிவு செய்தோம். அதன்படியே மரக்கன்றுகளுக்கு வேலியெல்லாம் போட்டு தினமும் தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து வந்தேன். இரண்டு வருடங்களில் மிகவும் நன்றாகவே வளர்ந்து விட்டன.

பின்னர் அந்த ஊரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது எனது நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆசையாய் வளர்த்த மரங்கள் என எல்லோரையும் பிரிய வேண்டியதாயிற்று. கிளம்பும் முன் வீட்டு வாசலில் இருந்த வேப்பமரத்தையும், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று மயில் கொன்றை மரத்தையும் நன்றாக ஒருமுறை பார்த்துவிட்டு வந்தேன்.
பின்னர் இராமநாதபுரத்தில் தற்காலிகமாக ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான் மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு வேறொரு வீடு பார்த்திருப்பதாகவும் வீடு நன்றாக இருப்பதாகவும், அங்கு ஒரு ஆச்சரியம் எனக்காக இருப்பதாகவும் என் அம்மா தொலைபேசியில் சொன்னார்கள். நான் எனது நண்பர்கள் யாராவது பக்கத்து வீட்டில் இருக்கிறார்களா என்று கேட்டதற்கு நீ வந்து நேரடியாகப் பார் என்று சொல்லிவிட்டார்கள். நானும் என்னடா இது என்னவாக இருக்கும் என எண்ணியபடியே அந்த வாரம் ஊருக்கு வந்தபின் புது வீட்டைப் பார்க்கக் கிளம்பினேன்.

உண்மையிலேயே ஆச்சரியம் தான். அந்த வீட்டின் வாசலில் ஒருபுறம் வேப்பமரமும், மறுபுறம் மயில்கொன்றை மரமும் இருந்தன. கிட்டத்தட்ட நான் எங்கள் சொந்த ஊரில் வளர்த்த மரங்களின் அளவிலேயே இருந்தன. அம்மா "பார்த்தாயா! இது தான் நான் சொன்ன ஆச்சரியம்"ன்னார்கள். "என்னால் நம்பவே முடியவில்லை" என்றேன். "நீ கஷ்டப்பட்டு இரு மரங்களை வளர்த்தாய். அதன் பலன் உனக்குச் சேரவேண்டியது. அது நீ எங்கிருந்தாலும் உனக்குக் கிடைக்கும் "
ன்னு அம்மா சொன்னார்கள். இன்றும் அந்த மரங்கள் என்னதான் வெயில் அடித்தாலும் வீட்டுக்குள் குளுமையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இப்போதும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றால் எனது மரங்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவது வழக்கம்.

Wednesday, January 31, 2007

கடன் தந்தார் நெஞ்சம்

எங்கள் தாத்தா ஒருமுறை சென்னையில் இருக்கும் எங்கள் தூரத்து உறவு மாமா ஒருவருக்கு 2000 ரூபாய் கடனாகக் கொடுத்திருந்தார்.ரொம்ப நாளாகியும் அவர் திரும்பக் கொடுக்காததால் அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் உடனே அனுப்பி வைக்குமாறும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினார்.

பதிலுக்கு எங்கள் மாமா கோபமாக ஒரு கடிதம் அனுப்பினார். அதில் எங்கள் தாத்தா அவரை அவமானப்படுத்தி விட்டதாகவும் அதற்கு மிக்க நன்றி எனவும் அத்துடன் எங்களுக்கு கணக்கு எதுவும் இல்லாத வங்கி ஒன்றின் வரைவோலை ஒன்றையும் அனுப்பி இருந்தார்.

எங்கள் தாத்தா மிகவும் குழம்பி "என்னடா இது? கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டது அவ்வளவு பெரிய அவமானமா?" என எண்ணி மிகவும் கவலை கொண்டார். பின்பு ஒரு நாள் இன்னொரு உறவினரிடம் இது பற்றிச் சொன்னபோது தான் எங்கள் மாமாவின் கோபத்துக்கான காரணம் புரிந்தது.

சென்னையில் எங்கள் மாமா இருப்பது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. எங்கள் தாத்தா எழுதிய அஞ்சல் அட்டை அங்கே ஒரு பொதுவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை ஊர்வம்பில் ஆர்வமுள்ள வீட்டுக்காரம்மா எடுத்துப் படித்து விட்டு அதை சுற்றுவட்டாரத்தில் போட்டு விட அதைச் சிலர் எங்கள் அத்தையிடம் போட்டுவிட்டார்கள். விஷயம் மாமா காதுக்குப் போய் இதற்குக் காரணம் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பிய எங்கள் தாத்தாதான் என முடிவு செய்து அதற்குப் பழி வாங்க முடிவு செய்தததன் விளைவு தான் அந்தத் திட்டுக் கடிதமும், வரைவோலையும்.

விடுவாரா எங்கள் தாத்தா?. அந்த வங்கியிலே கணக்கு ஒன்றையும் ஆரம்பித்து வரைவோலையையும் பணமாக்கிக் கொண்டார்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் - இது கம்பராமாயணம்
கடன்தந்தார் நெஞ்சம் போல் கலங்கினார் காளிமுத்து (எங்க தாத்தா தாங்க) - இது கலிகாலம்

நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர் மற்றும் தமிழ்மணம்

Tuesday, January 23, 2007

ஞானம் கொடுத்த பல்வலி

கடந்த வாரம் முழுக்க பல்வலியால் ஒரே ரகளை. என்னவென்று பார்த்தால் இருக்கிற பல்லெல்லாம் பத்தாதென்று புதிதாய் ஒரு கடைவாய்ப்பல் முளைத்துக் கொண்டிருந்தது. இந்த வயதில் எதற்குப் புதிதாய்ப் பல்? "ஞானப்பல் முளைக்கிதுடா.." என்று என் அம்மா சொன்னார்கள்.

ஞானப்பல்லா?. ஞானத்திற்கும் பல்லுக்கும் என்ன சம்பந்தம்?. ஏதோ ஞானம் வேண்டுமென்றால் மூளை கொஞ்சம் வளர்ந்தாலாவது பரவாயில்லை.
இருந்த வலியில் சாப்பிடக்கூட வாயைத் திறக்க முடியவில்லை. சாப்பாட்டை உதட்டில் வைத்து பின் விரலால் வாய்க்குள் தள்ளி சாப்பாட்டை முழுங்கினேன்.

சரி என்னடா செய்வது என்று என் நண்பர்களிடம் கேட்டேன். ஒருவன் "டாக்டரிடம் போ. வலிக்கு ஏதாவது மாத்திரை கொடுப்பார்" என்றான். இன்னொருவன் "பல் முளைப்பதற்கு எளிதாக லேசாகக் கீறி விடுவார்" என்றான். அது சரி. இங்கே சும்மாவே இப்படி வலிக்குது இதுல கீறி வேற விட்டா?. இன்னொரு உயிர் நண்பன் "பல் முளைக்க சிக்கலாக இருந்தால் அந்த இடத்தைக் கீறி விட்டு பல்லைப் பிடுங்கி விடுவார்" என்றான். ஐயையோ! இவர்கள் சொல்லும் வழிகளை விட பல்வலியே மேல் என்று முடிவு செய்து சும்மா இருந்தேன். அந்த நேரம் என் அம்மா தொலைபேசியில் தொடர்பு கொண்டு "எங்கே பல் வலிக்குதோ அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கிராம்பை வைத்துக் கொள். சரியாகி விடும்" என்றார். அதைப் போல் செய்த பிறகு பல்வலி வெகுவாகக் குறைந்தது. ஆனாலும் சாப்பிடுவதற்கு வாயைத் திறக்க முடியவில்லை.

தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடியின் முன் நின்று கொண்டு சின்னப் பிள்ளைகளைப் பயமுறுத்துவது போல் இருகைகளாலும் வாயைக் கஷ்டப்பட்டு திறந்து கொண்டு பல் முளைக்கிறதா என்று தினமும் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக எட்டாவது நாள் ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது. ஹையா! ஞானப்பல் பிறந்துவிட்டது. பிறகு வலி தானாகக் குறையத் தொடங்கியது.

இந்தப் பல் முளைத்ததால் கிடைத்த ஞானம் இவை தான்.

1. பல்வலி ஒரு வாரத்தில் சரியாகி விடும்.
2. கிராம்பு ஒரு சிறந்த பல்வலி நிவாரணி.
3. எக்காரணம் கொண்டும் பல்வலிக்கு நண்பர்களிடம் அறிவுரை கேட்கக்கூடாது.

நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர் மற்றும் கிராம்பு

எங்க ஏரியா உள்ள வாங்க ..

வணக்கம். இது தான் எனது முதல் பதிவு. சில மாதங்களாக தமிழ்மணத்தில் இடப்பட்ட பதிவுகளைப் படித்து பிறகு நாமும் கூட இப்படி எழுதலாமோ என பல நாட்கள் யோசித்த பிறகு இப்பதிவை இடுகை செய்திருக்கிறேன். பின்னூட்டங்களில் கிடைக்கும் திட்டு மற்றும் வசவுகளைப் பொறுத்து தொடர்ந்து எழுத முடிவு செய்துள்ளேன்.

எங்கள் ஊர் தமிழகத்தின் தென்கிழக்கில் உள்ள இராமநாதபுரம். கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது இராமேஸ்வரம் கோயில் மற்றும் பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சென்றேன்.நானும் எனது சித்தி பையனும் இராமநாதபுரத்தில் இருந்து பேருந்தில் கிளம்பினோம். ஆரம்பம் முதல் ஒரே குஷி மூடில் விளையாடிக் கொண்டேசென்றோம். பரவாயில்லை தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் மிகவும் குறைவு தான். பாம்பன் பாலத்தைத் தாண்டிச் செல்லும் போது எனது செல் கேமராவில் இரயில் பாலத்தை வீடியோவில் பதிவு செய்து கொண்டேன்.

இராமேஸ்வரத்திற்கு வட இந்தியர்கள் அதிகம் பேர் வருவார்கள். அவர்கள் காசியில் தொடங்கும் யாத்திரை இங்குதான் முடியும். நிறைய பேர் நினைப்பது போல் இராமேஸ்வரத்தில் உள்ளது இராமர் ஆலயம் அல்ல - இராமர் வழிபட்ட சிவன் ஆலயம் (சமீபத்தில் வெளியான தர்மபுரி படத்தில் கூட அப்படித்தான் தவறாகக் காட்டுகின்றனர்).

(கோவில் கோபுரம்)



(புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரம்)



(மூன்றாம் பிரகாரத்தில் உள்ள புகழ் பெற்ற ஓவியம்)



இங்குள்ள கடல் ஆழம் இல்லாதது. குளம் போலத் தான் இருக்கும். கரைக்கு அருகில் அவ்வளவு சுத்தமாக இருக்காது. கொஞ்சம் உள்ளே சென்றால் நன்றாகக் குளிக்கலாம்.நாங்கள் கடலில் காலை மட்டும் நனைத்து விட்டு கோவிலுக்கு உள்ளே சென்றோம். கோவிலின் உள்ளே நிறைய தீர்த்தக்கிணறுகள் இருக்கின்றன. யாத்திரிகர்கள் அங்கு குளித்துவிட்டு ஈர உடையுடன் வலம் வருவதால் கோவில் எப்போதும் ஈரமாகவே இருக்கும்.சுவாமியைத் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றும் நன்றாக கும்பிட முடியாமல் தீட்சிதர்களால் விரட்டப்பட்டோம்.பின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டு புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் உட்கார்ந்து அதிரசம் சாப்பிட்ட பின் அங்கு சில புகைப்படங்கள் எடுத்தோம்.

பின் மெதுவாக கிளம்பி இராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறி பாம்பன் பாலத்தைப் பார்ப்பதற்காக பாம்பனில்இறங்கினோம். பாம்பன் பாலம் மண்டபம் ஊரையும் பாம்பன் தீவையும் இணைப்பதாகும். பாம்பனைக் கடந்து தான் இராமேஸ்வரம் செல்ல
வேண்டும். இங்கு இரண்டு பாலங்கள் கடலுக்கு நடுவில் உள்ளன. இரயில் மற்றும் பேருந்து பாலங்கள் (நந்தா மற்றும் இயற்கை படங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்). பேருந்து பாலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டு இந்திராகாந்தி அவர்களால் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இரயில் பாலம் 1922 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பு சிறிய வகை கப்பல்கள் வரும் போது பாலம் இரண்டாகத் தூக்கி வழிவிடும்.



(இரண்டு பாலங்கள் - ஒரே பார்வை)


(இரயில் பாலம்)


(மிகப் பெரிய தொலைக்காட்சி கோபுரம்)


(அழகான பாம்பன் கடற்கரை)





நாங்கள் பேருந்து நிறுத்ததில் இறங்கி பேருந்து பாலத்திற்கு நடந்தே சென்றோம். பாலத்தில் காற்று பலமாக வீசியதால் செல் எங்கே கடலில் விழுந்து விடுமோ என்று இறுகப் பிடித்துக் கொண்டே படங்கள் எடுத்தேன். இப்போது இரயில் பாலத்தில் அகலப்பாதையாக மாற்றும் வேலை நடைபெறுவதால் இரயில்கள் செல்வது மற்றும் கப்பல்களுக்குவழிவிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

(பாலத்தில் அகலப்பாதையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன)





கடலையும்,பாலத்தையும், சுற்றுலாப் பயணிகளையும் நிறைய நேரம் வேடிக்கை பார்த்தபின் ஊருக்கு போகலாம் என்று எண்ணி பேருந்துக்கு கை காட்டினால் ஒரு வண்டி கூட நிற்கவில்லை. பாலத்தில் பேருந்துகள் நிற்கக் கூடாது என்று விதிகள் உள்ளன. அதை நமது ஓட்டுநர்கள் சரியாக கடைப்பிடித்தார்கள். ஒரு வேளை வட இந்தியர்கள் என்றால் நிறுத்தியிருக்கக்கூடும். வேறென்ன செய்ய..?. மீண்டும் பாம்பன் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

இருந்த களைப்பில் நன்றாகத் தூங்கிக் கொண்டே ஊருக்கு வந்தோம்.

நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்