Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

Sunday, May 09, 2010

ராஜன் புரோட்டா ஸ்டால்



ஊரில் உத்தமராஜன் என்றால் எல்லோருக்கும் தெரியும். காரணம் அவர் கட்சியில் இருந்தார். அரசியல் என்றால் என்னவென்று தெரியுமுன்பே உத்தமராஜனையும் அவரது கட்சிப்பற்றையும் பார்த்து அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொண்டோம் என்றால் அது பொய்யில்லை.

உத்தமராஜன் என் வகுப்புத்தோழன் காந்திராஜனின் தந்தை. பிறக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைக் கையில் பிடித்தபடியே வந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு விசுவாசமான திமுக தொண்டர். வாட்டசாட்டமான உருவம். முறுக்கு மீசை. விரலில் கலைஞர் படம் போட்ட தடிமனான மோதிரம். தேய்த்த வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியில் கறுப்பு சிவப்பு கரை. அவரது ட்ரேட்மார்க் அடையாளம் ஒரு மிதிவண்டி. வண்டியின் ஹெட்லைட்டில் மஞ்சள் கலர் ஸ்கார்ப். இரண்டு ரிவர்வியூ கண்ணாடிகள். சக்கரத்தின் கம்பிகளில் கறுப்பு சிவப்பு மணிகள். சைக்கிளின் பின்புறம் சிவப்பு விளக்கின் மேலே உதயசூரியனின் படம். மிதிவண்டியின் கைபிடியின் இரண்டுபுறமும் ஒலிநாடாவைக் கொத்தாக வெட்டி காற்றடித்தால் சரசரவென சத்தத்துடன் செல்லுமாறு செய்திருந்தார். மிதிவண்டியின் செயின் கார்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று கறுப்பு சிவப்பு மையினால் எழுதப்பட்டிருக்கும்.

நாங்கள் எல்லோரும் ஒரே தெருதான். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தெருவில் விளையாடும் போது தண்ணீர் தவித்து காந்தியின் வீட்டுக்குப் போக நேர்ந்தால் வீட்டின் நடுப்பத்தியில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கலைஞர் படங்கள் ஒரு வித்தியாமான உணர்வை ஏற்படுத்தும். ராஜன் ஒன்றும் கட்சியின் பொறுப்புகள் எதிலும் இருக்கவில்லை. ஆனால் கட்சியின் உண்மையான விசுவாசி என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உத்தமராஜனுக்கு ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கின் எதிரில் ஒரு புரோட்டாக் கடை இருந்தது. சிறிய கடை என்றாலும் சுவையான சால்னாவுடன் புரோட்டா கிடைக்கும் என்பதால் கூட்டம் நிரம்பி வழியும். கடையிலும் எல்லா இடத்திலும் கலைஞர்தான். கடையின் பெயர் கூட கறுப்பு சிவப்பில்தான் எழுதப்பட்டிருக்கும்.

காந்தியிடம் பேசும்போதெல்லாம் "ஏண்டா உங்க அப்பாவுக்கு கருணாநிதின்னா ரொம்ப பிடிக்குமாடா? உங்க வீடு பூராம் கலைஞர் படமா இருக்கு??"ன்னு ஆச்சரியத்துடன் கேட்டோம். "அவருக்கு கலைஞரை மட்டும் யாராவது குறை சொன்னால் கெட்ட கோவம் வரும்டா.. அடிபின்னிருவார்" ன்னான். எங்கள் நண்பர் குழுவில் இருந்த துடுக்கு ரீகன் மட்டும் "டேய் உங்க அப்பா இன்னிக்கு மதியம் வீட்டில் இருக்கிறப்போ நான் 'கலைஞர் ஒழிக'ன்னு உங்க வீட்டு வாசலில் நின்னு கத்துவேன். உங்கப்பா என்ன செய்றார்னு பார்ப்போம்"ன்னு சவால் விட, எங்களுக்கும் ஆவல் அதிகமாகி நடப்பதைப் பார்ப்போம்னு கமுக்கமா இருந்துட்டோம்.

அன்னிக்கு மதியம் ரீகன் காந்தி வீட்டு வாசலில் நின்று "கலைஞர் ஒழிக" அப்படின்னு கத்த, நடுப்பத்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உத்தமராஜன் திடுதிடுவென வாசலுக்கு வந்து ரீகனின் பிடறியில் ஒரு அறைவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத ரீகன் பொறி கலங்கிப் போய் அழுது கொண்டே ஓட்டமெடுத்தான். பொன்னம்மாள் அக்கா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குப் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் குப்பென வேர்க்க ஆரம்பித்தது.

அதன்பின் சிவருடங்களில் உத்தமராஜனின் தம்பிகள் பெரிய ஆட்களாகிவிட அவர்களின் உழைப்பால் ராஜன் புரோட்டா ஸ்டால் ஊருக்குள் மேலும் நான்கு இடங்களில் கிளைகளைத் தொடங்கியது. வருடங்கள் அதிகமாக ஆக ராஜனின் கட்சிப்பற்று கூடிக்கொண்டே போனது. ஊருக்குள் கட்சியின் முக்கியமான நிதி ஆதாரமாக மட்டுமே இருந்த ராஜன், கட்சியில் எந்தப் பதவியும் கேட்டு வாங்கவில்லை. உண்மையான விசுவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்கும் ஒரு ஏணியாகவே இருந்தார்.

வருடங்கள் ஓடின. 2001 தேர்தல் நிதிக்கு கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோல்வி. விரக்தியாலும், தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையினாலும் அதிகமாகக் குடித்து விட்டு வந்து தன் வீட்டின் கூரை மேல் தானே கல்லை விட்டு எறிந்து சத்தம் போட்டு புலம்பிக் கொண்டிருந்தார். காந்தியும் காந்தியின் அம்மாவும் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்த போது சின்னக் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். காந்தியின் தம்பி ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது கூட அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தத் தேர்தல் முடிவினால் அவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.

ராஜனின் தம்பிகளுக்கு இந்த அரசியல் எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அண்ணனை எதிர்த்துப் பேசமுடியாமல் இருந்தனர். இப்போது தேர்தலுக்காக எக்குத்தப்பாகப் பணத்தைச் செலவு செய்ததால் கடுப்பான அவர்கள் "எங்களிடம் கேட்காமல் எப்படி பொதுப்பணத்தில் இருந்து கட்சிக்குக் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டு அவரவர்கள் தனித்தனியே கடைகளைப் பிரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ராஜனின் வணிகம் இப்போது ஒரு கடையுடன் சுருங்கிவிட்டது. மூன்று பெரிய பிள்ளைகள் வேறு. நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது காந்தி பள்ளிப்படிப்புடன் நின்று விட்டு கடையைப் பார்த்துக் கொண்டான்.

நானும் அதன்பின்னர் இளங்கலை, முதுகலை படிப்புகள் முடித்து ஊரையும் காலி பண்ணிப் போய்விட்டதால், நிறையப் பேருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று மாதங்கள் முன்பு துபாயில் இருக்கும் முத்துவிடம் இணைய அரட்டையின் போது எதேச்சையாக காந்தியைப் பற்றி விசாரிக்க "டேய் அவங்க அப்பா இப்பவெல்லாம் முந்தி மாதிரி இல்லடா .. ரொம்ப மாறிட்டார்டா .. ஊருக்குப் போய் ஒருதடவை காந்தியைப் பாருடா.. உன்னை ரொம்ப கேட்டான்" என்று சொன்னதும் எனக்கும் ஊருக்குச் செல்லும் ஆவல் ஒட்டிக் கொண்டது.

பங்குனிப் பொங்கல் விழாவிற்கு ரொம்ப வருடங்கள் கழித்து இந்த வருடம் போன போது காந்தியின் புரோட்டாக் கடைக்குப் போனேன். வெளியில் ராஜனின் ட்ரேட்மார்க் சைக்கிளைக் காணவில்லை. அதற்குப் பதில் ஒரு பழைய சைக்கிள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் செயின் கார்டில் வெள்ளைப் பெயிண்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று எழுதப்பட்டிருந்தது. கடையின் உள்ளே பெரிய பெரிய கலைஞர் படங்கள் எல்லாம் கழட்டப்பட்டு, ராஜன் இளைஞராக இருக்கும் போது கலைஞருடன் எடுத்துக் கொண்ட கறுப்பு வெள்ளைப் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. உள்ளே ராஜன் கல்லாவில் நின்று கொண்டிருந்தார். கரைவேட்டி இல்லை. ஆனால் கலைஞர் படம் போட்ட மோதிரம் போட்டிருந்தார். முறுக்கு மீசையில் ஏகப்பட்ட நரைமுடிகள். பார்த்ததும் "ஏய் வாப்பா வாப்பா என்ன ஆளையே காண்றதில்லை? சொந்த ஊரை மறக்கக் கூடாதுப்பா"ன்னு அறிவுரை கூறினார்.

"அப்படியெல்லாம் இல்லை அப்பா ! வேலை அதிகமாக இருப்பதால் வரமுடிவதில்லை"ன்னு மழுப்பி, "காந்தி எங்கே?" "பலசரக்கு வாங்கப் போயிருக்கான்பா. நீ சாப்பிடு அதுக்குள்ள வந்துருவான்"ன்னு சொல்லி அவரே இலை எல்லாம் எடுத்துப் போட்டு மூன்று புரோட்டாக்களை பிய்த்துப் போட்டு மணக்கும் சால்னாவை அதில் ஊற்றிவிட்டுப் போனார். ஒரு வெட்டு வெட்டிவிட்டு கல்லாவில் நின்று கொண்டிருந்த அவரிடம் "எப்படி அப்பா ! இப்படி மாறிட்டீங்க?" "எதைச் சொல்ற கட்சி வேட்டி கட்டுறதில்லையே அதையா? அட ஆமாம்பா கட்சிப்பாசம், கொள்கையெல்லாம் மனசளவில் மட்டுமே இருக்கு. ஓட்டு மட்டும் என் தலைவனுக்கு மறக்காம போட்டுடுறோம்". "எனக்கு விவரம் தெரிஞ்சதிலயிருந்து கட்சியில் இருக்கீங்களே அப்பா! கண்டிப்பா அதுக்கான பலன் ஒருநாள் கிடைக்கும். கவலைப்படாதீங்கப்பா". "ஹஹாஹா ! அதுவும் இன்னிக்கு நடந்திருச்சுப்பா !" அப்படின்னு சொல்லி அன்றைய முரசொலியை எடுத்துக் காண்பித்தார்.

'பத்து வருடங்களுக்கு மேல் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்காக பொற்கிழி வழங்கப்படும்' என்ற செய்தியுடன் மாவட்டவாரியாக அவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழே உத்தமராஜனின் பெயர் மூன்றாவதாக இருந்தது. நான் அவரைப் பெருமிதத்துடன் பார்த்தேன். அவர் கையில் இருந்த மோதிரத்தில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார்.

Wednesday, July 30, 2008

'அஞ்சாநெஞ்சன்' சம்சு !




சம்சு என்கிற சம்சுதீன் தான் நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எல்லா வகுப்புகளிலும் வகுப்புத்தலைவன் அதாவது க்ளாஸ் லீடர். தான் பிறப்பெடுத்ததே வகுப்பில் ஒழுக்கத்தைக் கட்டிக்காக்கத்தான் என்பது போல அவன் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது.

க்ளாஸ் லீடரின் கடமைகளான காலையில் வருகைப்பதிவு எடுப்பது, கரும்பலகையைச் சுத்தம் செய்வது, தினமும் பதிவு=45 வருகை=43 மலர்=102 இதழ்=64 என்று எழுதுவது, பையன்களிடம் காசு வாங்கி வகுப்புக்குச் சொந்தமாகப் பிரம்பு (அப்பவே சொந்தச் செலவில் சூனியம்!), கரும்பலகையை அழிக்க டஸ்டர் வாங்குவது என அவன் வேலைப்பட்டியல் நீளும். இது போக நாங்கள் எல்லோரும் இரண்டாவது பீரியட் முடியவும் சூச்சூ போனால் அவன் மட்டும் வகுப்பில் அமர்ந்து காவல் காப்பான். அதாவது வேற வகுப்பு பையன்கள் யாரும் வந்து எதையும் திருடிரக்கூடாதாம் அதுக்காக. மேலும் எப்பவும் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்குவதாலயும், வாத்தியார்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதாலும் ஒவ்வொரு வருடமும் அவனே வகுப்புத்தலைவனாக வாத்தியாரின் ஒருமனதாக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தான்.

சம்சுவின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டது முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நோஞ்சான் பசங்களான நான்,யோகானந்த் என்ற யோகு, பேரையூர் சுரேஷ் மற்றும் எங்கள் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்தான். வகுப்பில் மூன்று வரிசைகளாகப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதிலும் நடுபெஞ்சில் அமர்ந்திருக்கும் நாங்கள் தான் அவன் இம்சையினால் பாதிக்கப்பட்டது. நாங்கள் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்ததால் நன்றாகப் படிக்கிற பசங்க என்று தப்பால்லாம் நினைக்கப்படாது.

நான் குட்டை+சோடாபுட்டி வேறு. யோகுவும் சுரேஷும் அதே. அதான் காரணம். அப்படி என்னன்ன இம்சையெல்லாம் சம்சுவால் எங்களுக்கு வந்தது? வகுப்பில் ஒவ்வொரு பீரியட் முடிந்ததும் போர்டின் முன்னால் வந்து நின்று கொண்டு "டாய் யாரும் பேசாதீங்க. பேர் எழுதுவேன்" என்பான். பின்பெஞ்சில் கழுதை மாதிரிக் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது.

நான் சுரேஷிடம் "இப்ப என்ன அறிவியல் பீரியடாடா?" அப்படின்னு மெல்லமாக் கேட்டால், கழுகு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல என்பேரை போர்டில் எழுதிப்போட்டுவிடுவான். "டேய் இப்ப என்னடா அடுத்து என்ன பீரியட் அப்புடின்னுதான்டா கேட்டேன்" என்று வாக்குவாதம் பண்ணினால் மறுபடியும் என்பேரை எழுதிபோட்டுவிடுவான். அதாவது லீடர் சொல்லியும் கேட்காமல் பேசினேன்னு அர்த்தமாம். அடுத்து வரும் வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கவேண்டும்.

இது பராவாயில்லை. போர்டு அழிக்க டஸ்டரைக் காணவில்லையென்றால் முதல் பெஞ்சில் இருக்கும் எங்கள் யார் நோட்டையாவது எடுத்து டர்ர்ர்ர்ன்னு பேப்பர் கிழித்து போர்டை கீச் கீச்னு சத்தம் வர அழிப்பான். நாங்கள்லாம் நோஞ்சான் வேறு. அவனை எதிர்த்து என்ன செய்யமுடியும்? சுரேஷ் ஒருமுறை நோட்டைக் கிழித்ததற்கு கெட்டவார்த்தையில் திட்ட அவன் பேரை போர்டில் எழுதி அடைப்புக்குறிக்குள் கெட்டவார்த்தை என்று எழுதிப்போட்டுவிட்டான். மாயா என அழைக்கப்பட்ட கணக்கு வாத்தியார் அடி பின்னிவிட்டார்.

விதியை நொந்துகொண்டு சம்சுவின் இம்சைகளைத் தாங்கிக் கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் அறிவியல் பீரியட் பாதியில் எங்கள் வகுப்பு வாசலில் ஒருபையன் காக்கி பேண்ட், வெள்ளைச்சட்டை, டக்இன் செய்து பெல்ட் போட்டுக்கொண்டு "எக்ஸ்க்யூஸ்மி சார்!" அப்படின்னு கூப்பிட்டான். 'யாருப்பா இது துர இங்கிலீசெல்லாம் பேசுது'ன்னு நாங்க வாயைப் பொளந்து பார்க்க "மே ஐ கம் இன் சார்?" அப்படின்னு மறுபடியும் ஆங்கில ஆசிட்டை வீசினான்.

"என்னப்பா வேணும்?" - வாத்தியார்.

"சார் என் பேரு மணிகண்டன். புதுசா சேர்ந்திருக்கேன் சார்"

"சரி உள்ள வாப்பா". வந்தவன் எங்கள் பெஞ்சில் நெரித்துக் கொண்டு உட்கார்ந்தான். பீரியட் முடிந்ததும் சம்சிடம் "டேய் எங்களுக்கே இடம் இல்லை. இவனைப் போய் பின்னால உக்காரச் சொல்லுடா" னு சொன்னால், "போங்கடா .. எலிக்குட்டி மாதிரி எல்லாரும் இருந்துக்கிட்டு முழு பெஞ்சும் வேணுமா? அவன் இங்கதான் இருப்பான்னு" சர்வாதிகாரக் கட்டளை போட்டுட்டான்.

பின் மெதுவாக மணிகண்டனிடம் அவன் பூர்வீகம் விசாரிக்க, அவன் சென்னையில் ஆங்கில வழியில் படித்தவனாம். அவன் அப்பா வேலை பார்க்கும் இடத்தில் கோல்மால் பண்ணிவிட தண்ணியில்லாக் காடுன்னு எங்க ஊருக்கு அனுப்பிட்டாங்களாம். எப்பவும் அவன் தான் முதல் ரேங்க் வாங்குவானாம்.




விசயம் சம்சுக்குக் கேள்விப்பட்டு பேயடித்தது போலாகிவிட்டான். என்னடா இது நமக்குப் போட்டியா ஒரு படிக்கக்கூடிய பையன் வந்திருக்கானேன்னு ரொம்பவும் பயந்து போய்ட்டான். அவன் பயப்படறது தெரிஞ்சதும் நாங்க ஒரே குஷியாகிட்டோம். எப்பவும் மணிகண்டனோடவே சுத்துறது, ஒன்னா சேர்ந்துதான் வீட்டுக்குப் போறது ன்னு திரிஞ்சோம்.

நம்ம தான் 'ஏபிசிடி எங்கப்பன் தாடி' ன்னு ஆங்கிலம் பேசுற ஆளாச்சே! ஆனால் அவன் ஆங்கிலத்தில் பேசி , ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்லி, ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பேசி என ஆங்கிலத்தில் பொளந்து கட்டினான். சம்சுக்கு சரியான ஆப்புடா என நினைச்சிருந்தோம்.

அவனிடம் சம்சுவைப் பற்றி சொல்லியிருந்தோம். "டேய் நீ மாதப் பரிட்சையில சம்சுவை விடக் கூட மதிப்பெண் வாங்கி நீ இந்தக் க்ளாஸ் லீடரா வரணும்டா"ன்னு அடிவாங்கின கையைத் தடவிப் பார்த்துக்கொண்டே சொல்லிவச்சிருந்தோம். மணிகண்டன் வந்தால் எங்களுக்கு இனிமேல் வகுப்பில் எந்தத் தொல்லையும் இருக்காது என நம்பி அவனை நல்லா ஏத்திவிட்டுக்கிட்டிருந்தோம். அவனும் கவலையேபடாதீங்கடான்னு சொல்லியிருந்தான்.

இதுக்கிடையில் காண்டாகிப் போன சம்சு, மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். நாங்கள் அவனுடன் சுற்றுவதால் எங்களையும் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் சாயங்காலம் மைதானத்தில் விளையாடி விட்டு வீட்டுக்குக் கிளம்புறப்போ தூங்குமூஞ்சி மரத்துக்குப் பின்னால இருந்து யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சின்னு போய்ப் பார்த்தால் சம்சு அறிவியல் புத்தகத்தைத் தொறந்து வச்சிக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கான்.

ஒரு பேச்சுக்குப் போய் "ஏண்டா அழுற?"ன்னு கேட்க "பொத்திக்கிட்டுப் போங்கடா. உங்களுக்கென்ன?" ன்னான். இருந்தாலும் எங்களுக்கெல்லாம் அளவிடமுடியாத சந்தோசம். எல்லாம் மணிகண்டனை நினைச்சுப் பயந்து போய்தான் அழுகிறான்னு தெரியும். 'ங்கொய்யால எங்களையா திட்டுற? மவனே! மாட்டுனடி! இந்த மாசத்தோட உன்னோட லீடர் பதவி காலி!'ன்னு சந்தோசமா வீட்டுக்குப் போனோம்.

அடுத்த வாரம் மாதப்பரீட்சை எழுதினோம். மணிகண்டன் எல்லாப் பரீட்சையும் நல்லா எழுதியிருக்கிறதா வேற சொன்னான். சனி, ஞாயிறு விடுமுறை முடிஞ்சி திங்கள்கிழமை எல்லாருக்கும் திருத்தின விடைத்தாள்களைக் கொடுத்தார்கள். வரிசையாக ஒவ்வொரு மதிப்பெண்ணும் வரவும் எங்கள் மதிப்பெண்ணைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மணிகண்டன் மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தோம்.

அடப்படுபாவி!! இப்படி ஏமாத்திட்டியடா !! ஆங்கிலம் தவிர எல்லாத்திலயும் அவன் பெயில்!! திக்கித்திணறி 36 மதிப்பெண் வாங்கியிருந்தான் ஆங்கிலத்தில் !! எங்களுக்கே அவன் முகத்தைப் பார்க்கக் கூச்சமா இருந்தது, ஆஹா ! இவனைப் போய் நம்பி ஏமாந்திருக்கமே!! ன்னு ரொம்ப வருத்தமாப் போச்சு.

அதெல்லாம் விட, சம்சு வந்து அவனைக் கேவலமா ஒரு பார்வை பார்த்தான் பாருங்க .. கொடுமை. அடுத்த வினாடியே சம்சு வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டான்.

"டேய் மணிகண்டா நீ போய் கடைசி பெஞ்சுல உட்காருடா!"

"எதுக்குடா?"

"ம். மக்குப்பசங்கெல்லாம் அங்கதான் உட்காரணும்" அப்படின்னு தெனாவெட்டா சொன்னான். மணிகண்டன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டான்.

என்னது? அப்புறம் நாங்க என்ன பண்ணினோமா?? வாலைச் சுருட்டிக்கிட்டு நம்மளே நல்லாப் படிச்சி முதல் மதிப்பெண் வாங்கி க்ளாஸ் லீடர் ஆகிரணும்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டோம்.

Monday, September 10, 2007

நாகர்கோவில் நண்பர்கள் - 2

கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சிணை கேட்டால் நமக்கு மயக்கம் வரும் அல்லது வயிறெரியும். பின்னே கொஞ்ச நஞ்சமா கொடுக்கிறார்கள். லட்ச,லட்சமா அதுவும் பத்தின் மடங்கில்தான். இது குறித்து என் அறை நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவனிடம் "அப்புறம் நீதான் நல்லா செட்டில் ஆயாச்சே! பொண்ணு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான?"ன்னேன்.
"நான் எதுக்கு தேடிப் போகணும். எல்லாம் தானா வரும். இப்போதைக்கு என்னோட மதிப்பு எழுபது லட்ச ரூபாய்."ன்னு சிரிச்சான்.
"என்னது எழுபது லட்சம்?"
"எனக்குக் கிடைக்கும் வரதட்சணை"
"டேய்ய்ய்ய்ய்ய்ய்... அம்புட்டாடா குடுப்பாங்க" நம்பமுடியாமல் கேட்டேன்.
"ஆமா சும்மாவா மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிறோம்ல"
"அதுக்காக எழுபது லட்சம் எவண்டா குடுப்பான். சும்மா கதை விடாதே"
"அடப்போடா.. நான் எதுவுமே கேடக வேண்டியதில்லை. எல்லாம் தானா வரும். முப்பது லட்சம் ரொக்கம். ஒரு நாப்பது லட்சத்துக்கு சொத்து. ஒரு கார். ஒன்றரை கிலோ நகை"

நான் மயங்கிவிட்டேன். இன்னொரு நண்பன் தொடர்ந்தான்.

"என் அக்காவுக்கு நாங்கள் பார்த்தது துபாய் மாப்பிள்ளை. நகை இரண்டு கிலோ. எங்க வாழைத்தோப்பிலும், இரப்பர் தோப்பிலும் ஒரு பகுதி. அதோட மதிப்பு ஐம்பது லட்சம். முப்பது லட்சம் ரொக்கம். இவ்வளவும் கொடுத்தோம்". சோடா குடுத்தால் கூட தெளியாத மயக்கம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்று சொல்கிறார்கள். படிப்பறிவு அதிகம் இருந்தால் இதெல்லாம் குறையத்தான் வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.

அடுத்து நான் என் நண்பனிடம் ஒரு பிட்டைப் போட்டேன். "நான் உங்க ஊரில் கல்யாணம் செய்துக்கிட்டா என்னடா குடுப்பாங்க?". "உனக்கெல்லாம் எவன் பொண்ணு குடுப்பான் எங்க ஊருல இருந்து? எங்க பார்த்தாலும் ஏரி,குளம்னு எங்க ஊரு. கண்மாய்க்குள்ளயே ஊத்துத் தோண்டித் தண்ணியைப் பாக்குறவுங்க நீங்க. சான்ஸே இல்லை. அதே மாதிரி, பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்த்தால் அது எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே பார்ப்பார்கள். அதிகபட்சம் பாளையங்கோட்டை வரைதான் எங்க லிமிட்"ன்னு கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

"அதே போல மாப்பிள்ளைகளையெல்லாம் தலையில் தூக்கி வைத்து மரியாதை கொடுப்பார்கள் உங்க ஊரில். இங்கெல்லாம் அப்படியில்லை. அவரும் வீட்டில் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான். உங்க ஊரில் மாப்பிள்ளை வந்தால் மாமியார் சமையல்கட்டை விட்டு வெளியே வரமாட்டார். இங்கு மாமியார் மாப்பிள்ளையின் முன்னால் கால் மேல் கால் போட்டு பரீட்சைப் பேப்பர் திருத்திக் கொண்டிருப்பார். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். ஆனால் நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். இன்னொன்னு சொல்றேன். இரண்டு பசங்க ஒரு வீட்டில் இருந்தால், அதுவும் படித்திருந்தால் அந்தக் குடும்பம் பிற்காலத்தில் கோடீஸ்வரக் குடும்பம்.வரதட்சணை அவ்வளவு வரும்." என்றான் நண்பன்.

அதே போல உறவுமுறைக்குள் திருமணம் என்றால் முகம் சுளிக்கிறார்கள். மாமா மகள், அத்தை(மாமி-ன்னு சொல்லுவார்கள் பேச்சு வழக்கில்) மகனையெல்லாம் திருமணம் செய்யும் வழக்கம் இல்லை. மாமா மகள், அத்தை மகன்களுடன் சகோதர உண்ர்வுடன்தான் பழகுகிறார்கள். அடுத்து இவர்கள் கேரளத்தில் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ அரிதாம். கேட்டால் அவர்கள் மதிக்கமாட்டார்கள் என்கிறார்கள்.

இவர்கள் இப்படி வரதட்சணை வாங்குவதைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. அந்த எரிச்சல் இப்படிப் பகல் கொள்ளை அடிக்கிறார்களே என்பதால் வந்ததா அல்லது எனக்கு இப்படியெல்லாம் கிடைக்காதே என்ற பொறாமையால் வந்த வயிற்றெரிச்சாலா என்பது தெரியவில்லை. ;) . சும்மா தமாசுக்கு. வரதட்சணை வாங்குவது கேவலம் என்பதே என் எண்ணம்.

எங்க ஊர் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். அதிகபடசம் ஒரு லட்சம் குடுப்பார்கள். அதுவும் வம்படியாகக் கேட்டால் தான். ஒரு நடுத்தரக் குடும்பம் என்றால் நாற்பது பவுன் நகை போடுவார்கள். ரொம்பப் பெரிய பணக்காரக் குடும்பம் என்றால் கார் கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

சரி போதும் வரதட்சணை புராணம்.

என்பீல்ட், புல்லட் போன்ற வண்டிகள் தான் இவர்களின் முதல் காதலிகள். கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான இந்த ஊர்ப்பசங்களின் கனவு அவைகளாகத் தான் இருக்கின்றன. என்னதான் மலையாளப் படம் பார்த்தாலும், மலையாளம் பேசினாலும் தமிழன் என்ற உணர்வு மேலோங்கியே இருக்கிறது. சந்தேகம் இருந்தால் சென்ற இடுகையின் பின்னூட்டங்களைப் பார்க்கவும். அடுத்த விசயம் இவர்கள் மற்ற மாவட்டத் தமிழர்களை (குறிப்பாக மதுரை) "ஏய் பாண்டிக்காரா" என்று நக்கலுக்குக் கூப்பிடுவார்கள். என்ன தான் மலையாளம் பேசினாலும் இவர்கள் கேரளாவுக்குப் போனால் இவர்களும் 'பாண்டி' தான் மலையாளிகளுக்கு. பாண்டியின் அர்த்தம் என்னன்னு தெரியவில்லை. யாராவது சொல்லுங்கள்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் சில ஊர்களின் பெயர்கள் வித்தியாசமானவை.
'தொளையாவட்டை (எழுதியிருப்பது சரியா?)
களியக்காவிளை
தக்கலை'
முதலிரண்டும் தான் வாய்க்குள் நுழையாமல் பேஜார் செய்தவை. அடுத்துப் பழக்கமாகிவிட்டது. வேறு ஏதாவது ஊர் பெயர் இப்படியிருந்தால் சொல்லுங்கள்.

இங்கு ஊர் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளனவாம். எல்லோருக்கும் தெரிந்த திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, விவேகானந்தர் மண்டபம் தவிர நிறைய இடங்கள் உள்ளனவாம். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறையவே காணப்படுமாம். நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போவதற்குத்தான் நேரமில்லை. போய்ட்டு வந்து அதைப் பற்றியும் எழுதுகிறேன்.

நண்பர் ஜோ அவரது பதிவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் அழகான புகைப்படங்களைப் போட்டிருக்கிறார். இங்கேயும் போய்ப் பாருங்கள்.

Thursday, September 06, 2007

நாகர்கோவில் நண்பர்கள் - 1

நண்பர்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பள்ளி, கல்லூரி நண்பர்கள் எல்லோரும் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். நான் இப்பொழுது சொல்லப்போவது என்னுடைய நாகர்கோவில் நண்பர்களைப் பற்றித் தான்.


நாகர்கோவில் என்றொரு ஊர் உண்டு அங்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பது நான் கல்லூரியில் முதுகலை படிக்கும்போது தான் தெரியும். விடுதியில் தங்கிப்படிக்கும் போது என் அறைத் தோழர்கள் மனோ மற்றும் மைக்கேல். இவர்கள் தமிழகத்தின் தென் கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்டக்காரர்கள். முதன் முதலில் தமிழை வித்தியாசமாகப் பேசக் கேட்டது இவர்களிடம் தான். இளங்கலை அருப்புக்கோட்டையில் படித்ததால் எல்லோரும் மதுரை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்துதான் வந்திருந்தோம். எனவே அங்கு வித்தியாசமான தமிழ் உச்சரிப்பைக் கேட்க முடியவில்லை.

நாகர்கோவில்காரர்கள் வெப்பத்தைத் தாங்கமுடியாதவர்கள். மைக்கேல் எப்போதும் நீர்யானை மாதிரி தண்ணீரில் ஊறுவான். இரண்டு முறை குளிப்பது, ஸ்டடி அவரில் பத்து தடவை பாத்ரூமுக்குப் போய் தண்ணில் விளையாண்டுட்டு வருவது அலும்புவான். கேட்டால் "ஒரே சூடு மக்கா!" என்பான். இவர்கள் தமிழை மலையாளம் கலந்து பேசுவார்கள். அநியாயத்துக்கு ஊர்ப்பெருமை பேசுவார்கள்.

இவர்களையும் வாழைப்பழத்தையும் பிரிக்க முடியாது. ஒரு நாள் கல்லூரி எதிரில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்து கொண்டு "மக்கா, இங்க என்ன பழம் கிடைக்குது? எங்க ஊருல எல்லாம் வகைவகையாக் கிடைக்கும். கேட்டியா?" என்றான். "எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாட்டுப்பழம், ரஸ்தாளி, பூவன் பழம், பச்சைப்பழம் மட்டும் தான். வாழைப்பழத்துல கூட உங்க ஊர் முன்னால இருக்காடா?"ன்னேன். "ஆமா கேளு" ன்னு ஒரு லிஸ்ட்டே சொன்னான்.

"யாத்தம்பழம்
ரசகதளி
மாவுகதளி
பாளையங்கொட்டை
செந்துளுவன்
மோரிஸ்
மட்டி
சிங்கன்
பேயன்பழம்
வெள்ளைத்துளுவன்
மொந்தம்பழம்
கற்பகவள்ளி
பூங்கதளி"


அசந்துட்டேன். "அப்புறம் இங்க கிடைக்கிற பழமெல்லாம் எங்க ஊருல நாங்க தின்னவே மாட்டோம். இப்பப்பாரு ஒரு மேஜிக். இந்தப் பழத்தோட நுனியில விரலை வச்சு அமுக்குனா பழம் மூணாப் பிரியும் பாரு"ன்னுட்டு அமுக்கிக் காட்டினான் பழம் மூன்றாகப் பிரிந்தது. "அட! வாழைப்பழத்துல இவ்வளவு விசயம் இருக்கா?"ன்னு வாயைப் பிளந்தேன். "எல்லாம் எங்க ஊருல கத்துக்கிட்டது மக்கா!"ன்னான்.

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் பெரும்பாலும் கிறித்தவர்கள் நிறைந்த பகுதி. எல்லோரும் அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரும்பாலும் ஆசிரியர் பணியிலும், அரசு வேலையிலும் இருப்பவர்கள். எனவே பிள்ளைகளின் கையில் தாராளமாகப் பணம் புரளும். எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக அசையாத சொத்து இருக்குமாம். மைக்கேல், மனோவுக்கு இரப்பர் தோட்டம் இருக்கிறதாம்.

இவர்கள் பேசும் சில தமிழ் வார்த்தைகள் நமக்கு வித்தியாசமாகத் தெரியும்.
கருக்கு - இளநீர்
தூத்துதல் - வீட்டைப் பெருக்குதல்
சவட்டீருவேன் - மிதிப்பேன்
நாசம் ஆயிரும் - வீணாகிவிடும்
தொட்டெடுத்து - பக்கத்தில்

அப்புறம் எல்லா வாக்கியத்திலும் 'கேட்டியா?' என்று கடைசியாக சேர்த்துக் கொள்வார்கள். "மக்கா! இந்த ஊர் ரொம்ப மோசம் கேட்டியா?" இப்படி. இவர்கள் ஊரிலெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே கிடையாதாம். எனக்கு ஒரே பொறாமை. இருக்காதே பின்னே. நானெல்லாம் ஒரு குடம் தண்ணீரை அடிபம்பில் அடித்து அதிலே குளித்த ஆளு.


மலையாளத் திரைப்படத்தைப் பற்றி விவரமாக அலசி ஆராய்வார்கள். நமக்கு கொட்டாவி வரும். மோகன்லாலை மிகவும் புகழ்ந்து பேசுவார்கள்.


அடுத்து இந்த மக்களிடம் முக்கியமானது இவர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சணை.


((அடுத்த பதிவில் சொல்லுறேன்))


பி.கு: நாகர்கோவில்காரங்க யாரும் சண்டைக்கு வந்துராதீங்க.. உங்க ஊரை உயர்வாத்தான் சொல்லியிருக்கேன். அப்படி எதாவது தப்பா இருந்தா அது எங்க ஊரிலெல்லாம் அந்த மாதிரி இல்லையே என்று எனக்கு வந்த பொறாமையே காரணமாயிருக்கும்.

Wednesday, July 04, 2007

கண்ணால் கண்ட காதல் கதை

என்னுடன் பணிபுரிந்த சக அலுவலகத் தோழியின் சுவாரஸ்யமான காதல் கல்யாணக் கதை இது. என் தோழி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எல்லோரிடமும் மிகவும் நன்றாகப் பழகுவார். அவரும் எனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இன்னொருவரும் காதலித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அங்கேயே காதலாகிக் கசிந்துருகி பிறகு இருவரும் ஒரே இடத்தில் வேலை கிடைத்ததும் மிகத் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்தனர். இது இருவரின் வீட்டுக்கும் தெரியாது.

ஒரு நாள் தோழி தனது அக்காவிற்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும், அடுத்த மாதம் கல்யாணம் என்றும் சொன்னார். அவரது அக்கா சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். அக்காவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை கணினித்துறையில் ஒரு பெரிய பதவியில் இருப்பதாகக் கூறினார். நாங்களும் "உங்களுக்கு எப்போ கல்யாணம்?" என்று வழக்கமான பல்லவியை எடுத்துவிட்டோம். அவர் "எங்க மேட்டரை வீட்டில் சொல்ல வேண்டியதுதான் பாக்கி" என்றார்.

தன் அக்காவிற்குத்தான் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதே தன் காதலை வீட்டில் சொல்ல இது தான் சரியான சமயம் என எண்ணி சில நாட்களில் இவர் தங்கள் காதலை வீட்டில் சொல்லிவிட்டார். என் தோழியின் அப்பா தலைமைச் செயலகத்தில் பெரிய பதவியில் இருப்பவர். மிகவும் கண்டிப்பானவராம். என்ன ஆச்சரியம்! அவர் கோபமேபடாமல் யாரைக் காதலிக்கிறாய், இருவரும் ஒரே சாதி தானா என்று விசாரித்த போது பையன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகளுக்காக இவர் பையனின் வீட்டிலும் பேசி அவர்கள் சம்மதத்தையும் வாங்கிவிட்டார். தனது இளையமகளுக்கும் மாப்பிள்ளை பார்த்து விட்ட மகிழ்ச்சியான செய்தியை தனது மூத்த மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் சொல்லியிருக்கிறார். நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

என் தோழியின் அக்காவிற்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் தாம் தூம் எனக் குதித்திருக்கிறார்கள். தாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தினர், இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது, நீங்கள் செய்தது சரியில்லை, என் தோழியின் தந்தை அவர் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் பெண் எடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டனராம். என் தோழியின் அப்பா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பயனில்லை. கடைசியில் சம்பந்தம் வேண்டாம் என முறித்துக் கொண்டு விட்டனர். என் தோழியோ தன் காதலினால் தனது அக்காவின் திருமணம் நின்று போனதில் மிகுந்த வருத்தத்திலிருந்தார். "சாதியைப் பெரிசாக நினைக்கிறவர்கள் சம்பந்தம் ஒன்றும் நமக்கு வேண்டாம்மா" என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் திரைப்படங்களில் வருவது போன்ற திருப்பம். அதாவது எனது தோழியின் அக்காவிற்கு ஏற்கனவே இன்னொருவருடன் காதல். இவர் தன் தங்கையைப் போல காதலை வீட்டில் சொல்ல தைரியமில்லாமல் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறார். இப்போது தான் எல்லாம் சரியாகிவிட்டதே! அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது காதலை லேட்டாக வீட்டில் சொல்லியிருக்கிறார். இவரது காதலர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தபோது காதலாம். பிறகென்ன முதலில் அக்கா கல்யாணம், பிறகு தங்கை கல்யாணம் என இரு கல்யாணங்களும் ஜாம் ஜாமென நடந்தன. நாங்கள் இரண்டு கல்யாணங்களுக்கும் போய் நன்றாக சாப்பிட்டுவிட்டு வந்தோம்.

இதில் எனக்கு மிகவும் பிடித்தது என் தோழியின் தந்தையின் குணம் தான். தன் இளைய மகளின் காதலால் தன் மூத்த மகளின் திருமணம் நின்றுவிட்டதே என்று எண்ணாமல் அவர்கள் சம்பந்தம் வேண்டாம் என்ற பிறகும் தன் இளையமகளின் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டதால் கடைசியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

Wednesday, February 28, 2007

ஜி-யின் காதல் கடிதம்

இப்பதிவு நமது பதிவர் ஜி-யைக் குறிப்பிடுவது அல்ல. நான் மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம். நாங்கள் சுமார் 20 எம்சிஏ,எம்பிஏ மாணவர்கள் ஒரே மாடியில் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தோம். அங்கு எங்கள் குழுவில் ஒருவன் 'ஜி'. அவன் பெயர் 'ஜி' அல்ல. எங்களை விட வயதில் மூத்தவனாக இருந்ததால் நாங்கள் அவனுக்கு மரியாதையாக 'ஜி' என்று பெயர் சூட்டி இருந்தோம். 'ஜி' எனது அறைக்குப் பக்கத்து அறையில் தங்கியிருந்தான். எங்கள் நண்பர்களில் அப்போது காதலித்துக் கொண்டிருந்த ஒரே ஆள் என்ற பெருமையும் அவனையே சாரும். வேறு யாருக்கும் காதலிகளோ, தோழிகளோ அப்போது கிடையாது. ஆனால் 'ஜி' மட்டும் கல்லூரிக்கு வரும் முன்பே ஊரில் இருக்கும் அவன் மாமா மகளைக் காதலித்துக் கொண்டிருந்தான். நாங்கள் ஸ்டடி அவரில் நேரத்தை வீணாக்காமல் அனைவரும் அவனைச் சுற்றி அமர்ந்து அவன் காதல் கதைகளை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால் சில நாட்களில் காதலர்களுக்குள் ஊடல் ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருப்பதாக 'ஜி' வருத்தத்துடன் சொன்னான். இருப்பினும் நாங்கள் நேரத்தை வீணாக்காமல் அவனது பழைய காதல் கதைகளை சிரத்தையுடன் கேட்டு வந்தோம். அவ்வப்போது ஆறுதலும் சொல்லி வந்தோம்.

இந்நிலையில், எங்களுக்கு பருவ இடைத்தேர்வு வந்தது. தேர்வு மதியம் தான். ஆகவே காலையில் தனியாக விடுதியில் பேருக்கு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். ஒருநாள் நண்பகல் 12 மணிக்கு பொழுதுபோகமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். நான் மெஸ்ஸில் சாப்பாடு தயாராகி விட்டதா என்று பார்ப்பதற்காக கீழே சென்று பார்த்து விட்டு திரும்பும் போது 'ஜி'க்கு ஒரு கடிதம் வந்திருப்பதைப் பார்த்தேன். அனுப்புநர் முகவரியில் அவன் ஆள் பெயரும், ஊரும் இருந்தது. உடனே மேலே சென்று "நம்ம ஜி-க்கு அவன் ஆள் லெட்டர் போட்டிருக்கு" என்று கூவிக் கொண்டே சென்று ஜி-யிடம் கடிதத்தைக் கொடுத்தேன். ஜி-யின் காதலில் அக்கறை கொண்ட எங்கள் நண்பர்கள் அனைவரும் மொத்தமாக அவரவர் அறைகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். எதற்கு? அடுத்தவன் காதல் கடிதத்தை ஓசியில் படித்து ஜொள்ளு விடத்தான். ஏற்கனவே பொழுது போகாமல் மொக்கை போட்டுக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அவனைச் சுற்றி நின்று கொண்டு "ஏய் படிடா படிடா" என்று கெஞ்சிக் கொண்டிருந்தோம். கூட்டத்தையும், எங்கள் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்து பயந்து போன 'ஜி', கடிதத்தைப் படிப்பதற்காக உடனே குளியலறைக்குள் ஓடிச் சென்று கதவை மூடிக் கொண்டான். பதிவுலகக் கூற்றுப்படி 'தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டான்'.

காதல் கடிதத்தைப் படிக்க முடியாத ஆத்திரத்தில் ஜியைப் பழிவாங்க முடிவு செய்தோம். விடுதிக் குளியலறையின் மேல் பகுதி திறந்தவெளியாகத்தான் இருக்கும். மொத்தம் இருப்பது நான்கு குளியலறைகள் தான். ஆகவே மற்றவர்கள் குளிப்பதற்காக வெளியில் ஒரு தொட்டி நிறைய தண்ணீர் வைத்து இருப்பார்கள். நாங்கள் அனைவரும் அவரவர் வாளிகளில் தண்ணீரைத் தொட்டியில் இருந்து எடுத்து 'ஜி' ஒளிந்திருந்த குளியலறையின் மேல் பகுதி வழியாக ஊற்றத் தொடங்கினோம். அவன் வெளியே வரமுடியாமல் வெளியிலும் தாழ்ப்பாள் போட்டு கதவை மூடிவிட்டோம். ஜி "டேய் விடுங்கடா, விடுங்கடா" என்று கெஞ்சத் தொடங்கினான். சுமார் கால்மணி நேரம் அபிசேகம் செய்ததும் கதவைத் திறந்து விட்டோம். மழையில் நனைந்த கோழி மாதிரி ஆகியிருந்தான். எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜி-க்கும் தான்.

நாங்கள் வெளியில் வைத்து அவனை மொத்து மொத்தென மொத்தினோம். "ஏண்டா! உனக்கு உன் ஆள் உன்னிடம் பேசவில்லையென்றால் அதை எங்களிடம் சொல்லிப் புலம்பத் தெரியுது. லெட்டர் போட்டா எங்கள்ட்ட காட்டத் தெரியாதா?. எடுடா லெட்டரை" என்றோம். "என்னது லெட்டரா? டேய் அது எங்கனே எனக்குத் தெரியலடா" என்றான். இருபது பேர் சேர்ந்து தண்ணீரை ஊற்றியதில் கடிதம் கந்தலாகி அதுவும் தண்ணீரோடு சேர்ந்து போய்விட்டது. பிறகு சாயங்காலம் ஜி உடனடியாக அவனது காதலியைக் காண ஊருக்குக் கிளம்பினான். நாங்கள் அவனைப் படுத்தியபாட்டுக்குப் பிராயச்சித்தமாக டீ வாங்கிக் கொடுத்து ஊருக்கு வண்டி ஏற்றி விட்டு வந்தோம்.

நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு

Tuesday, January 23, 2007

ரொம்பப் பெருமையா இருக்கு..

எனது நண்பர்கள் அனைவருக்கும் பட்டப்பெயர்கள் உண்டு. இப்பதிவில் அவற்றுக்கான பெயர்க்காரணங்களைக் கீழே கூறுகிறேன்.

சொறி - கப்பலில் வேலை பார்க்கும் பொறியாளர். இவனுக்கு வெயில் காலத்தில் வியர்க்குரு வந்து அவதிப்படுவான். ஆனால் நாங்கள் வேண்டுமென்றே "இல்லை. இது சொறி. பக்கத்தில் வராதே" என்று விரட்டுவோம்.

சாவு - கட்டிடப் பொறியாளர். மிகவும் ஒல்லியான உடம்புடன் மிதிவண்டியை அழுத்த முடியாமல் அழுத்தி வருவான். எதிலும் விருப்பம் இல்லாமல் டெட் பாடி போல் உட்கார்ந்து இருப்பான்.

தோசை - உயிரியல் வல்லுநர். தோசை என்றால் பேயைப் போல் பறப்பவன். தோசையைக்கு சட்னி, சாம்பார் இல்லாமல் அப்படியே முழுங்குபவன்.

வெள்ளாத்தா - உரித்த கோழியைப் போல் வெள்ளை வெளேர் என இருப்பான்.

டவர் - தொலைபேசி நிலைய கோபுரம் போல் உயரமானவன்.

பிட்டு மணி - பள்ளியில் படிக்கும் போது கேவலம் வகுப்பில் நடத்திய சாதாரண தேர்வில் பிட் அடித்து மாட்டி எங்கள் எல்லாரையும் அவமானப்படவைத்தவன்.

குரங்கு - சேட்டைகள் செய்வதில் நம் முன்னோரை அப்படியே கண் முன் நிறுத்தியவன். மேலும் பள்ளி மைதானத்தில் நிழலுக்காக அங்குள்ள கருவேலமரத்தில் ஏறி அமர்ந்து கொள்வான். எங்கள் உடற்கல்வி ஆசிரியர் வைத்த பெயர் தான் அது.

காக்கா - மிகவும் அமைதியான, நன்றாகப் படிப்பவன். குரல் அப்படியே 'குயில்' தான்.

ஜந்து - ஆப்பிரிக்காவில் பிறந்திருக்க வேண்டியவன். இருட்டில் பற்கள் மட்டுமே தெரியும். பல பட்டங்களை வாங்கி எங்கள் குழுவிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறவன். சில நாட்களில் டாக்டர் பட்டம் வாங்க இருக்கிறான். கோபமே படாத மிகவும் நல்ல நண்பன்.

ஓட்டை பல்லன் - பள்ளியில் ஓவராக ஆடியதில் கீழே விழுந்து பல்லை உடைத்துக் கொண்டவன்.

ஆயா - எங்கள் குழுத் தலைவன். கணிப்பொறி வல்லுநர். எங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்பவன்.

மாமா - தன்னை மாமா என்று அழைத்த 7ம் வகுப்பு படித்த பெண்ணுக்கு ரூட் விட்டவன்.

கோந்தான் - தனக்கு மீசை முளைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கோந்தைப் முடியில் தடவி
ஒட்டி அழகு பார்த்தவன்.

ஓட்டை - சரியான உளறுவாயன்.

தடியன் - சரியான குண்டன். பெருந்தீனிக்காரன்.

குந்தி - இருந்த இடத்தை விட்டு அசைவதற்கு காசு கேட்பவன். சரியான சோம்பேறி நண்பன்.
முதுகலை பொறியியல் படிக்கின்றான்.

லூசு பாலா - சொல்வது ஒன்று செய்வது ஒன்று. அதனால் தான்.

கோவணம் - தலைவர் ஊருணியில் குளிக்கும் போது அணிவது இது தான். பெயர்க்காரணம் சொல்ல வேண்டுமா என்ன?.

அன்ரோ - இவனுக்குத் தான் ரொம்ப நாள் பேரே இல்லாமல் இருந்ததால் கண்டிப்பாக பேர் வைத்தே ஆக வேண்டுமென்று வைத்த பெயர்.


இவர்கள் அனைவரிடமும் இன்னும் நல்ல தொடர்பு உள்ளது.

இந்தப் பெயரையெல்லாம் நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கு ..

எனக்கு என்ன பெயர் என்று கேட்கிறீர்களா? மேலே இருப்பதில் ஒன்று தான்.


நன்றி : இ-கலப்பை மற்றும் ப்ளாக்கர்