Tuesday, November 03, 2009

இலங்கை வானொலிகள்


வானொலிகள். முந்தைய காலத்திலும் சரி,இன்றைய கால்த்திலும் சரி,எதிர்காலத்திலும் சரி. மிக முக்கியமான செய்தி ஊடகம் மட்டுமல்ல, மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஊடகமும் கூட. திரைப்பபடப் பாடல்களை ஒலிபரப்பி அவற்றின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பவை இன்றைய பண்பலை வானொலிகள் மட்டுமல்ல. இங்கு நான் குறிப்பிட விரும்புவது என் குழந்தைப் பருவத்தில் (90களில்) வானொலிகள் எவ்வளவு முக்கியமான பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது என்பதைத்தான்.

80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் தமிழகத்தின் மிகமுக்கிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தவை தூர்தர்சனும், இலங்கை வானொலியும் தான். அகில் இந்திய வானொலி செய்திகள் மற்றும் விவசாய செய்திகளுக்காக மட்டுமே பெயர்பெற்றவை. மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியதில்லை. என‌க்கு வானொலி கேட்ப‌தென்றால் கொள்ளை விருப்ப‌ம்.

"இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு". தமிழகத்தில் அனைத்துத் திரைப்படப்பாடல்களையும் ஒலிபரப்பி கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. காலை 7:00 மணிக்குத் தொடங்கும் ஒலிபரப்பு 10:00 வரையிலும். பின்னர் 3:00 மணிக்குத் தொடங்கி 5:30 வரையிலும் வகை தொகையில்லாமல் பாடல் பட்டாசுகளைக் கொளுத்திவிடுவார்கள்.

தினமும் மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகும் 'லீவியின் சினிமாப் பாடல்கள்' என்ற நிகழ்ச்சியின் அடிமையாக இருந்தேன். அப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த விளம்பரங்களும் இலங்கை வானொலிக்கே வழங்கப்பட்டிருந்தன. மத்திய அலை ஒலிபரப்பானாலும் தெள்ளத் தெளிவான ஒலிபரப்பு. தொகுப்பாளர்களின் தோழமையாகப் பேசும் விதம் என எல்லாமே அகில‌ இந்திய வானொலியின் சோம்பேறித்தனத்திலிருந்து வித்தியாசப்பட்டதால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

பிடித்த தொகுப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம். பாடல் ஒலிபரப்பும் முன்பு மிக அருமையாக சம்பந்தப்பட்ட‌ விசயங்களையும் சேர்த்துச் சொல்லுவார். இல்ங்கை வானொலியிடம் தான் தமிழ்த்திரைப்படங்கள் அனைத்தினுடைய பாடல் ஒலிநாடாக்களும் உள்ளனவாம். இப்போதும் இந்த ஒலிபரப்பு உள்ளதா இல்லையா எனத் தெரியவில்லை.

அது மட்டுமா? கொஞ்சம் பெரியவனாகி (15, 16 வயதில்) விவரம் தெரியவும் தொலைக்காட்சி ஆன்டனாவுடன் வானொலிப்பெட்டியை இணைத்து இலங்கையின் பண்பலை வானொலிகளையும் கேட்டு நானும், அண்ணனும் மகிழ்ந்து வந்தோம். இந்தியாவில் பண்பலைகள் வருவதற்குப் பல வருடங்கள் முன்பே இலங்கையில் பண்பலை வானொலிகள் கொடிகட்டிப் பறந்து வந்தன.சூரியன் பண்பலை, சக்தி பண்பலை, இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இன்னும் நிறைய. எனக்கு சக்தி பண்பலை தான் மிகவும் பிடிக்கும். மேகமூட்டம் இல்லாத காலங்களில் மிகத் தெளிவாக அனைத்துப் பண்பலை வானொலிகளும் கேட்டிருக்கிறோம்.

ஒருமுறை சூரியன் பண்பலைக்குத் தொலைபேசிய சிறுமி "மியாவ்!!!" என்று கத்த "ம்ஹூம்.இது போன்ற ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவர் தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்" என பெண்தொகுப்பாளர் அவர் உதவியாளரிடம் சொன்னார். அதை நினைத்து ஒருநாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன். ம்ம்ம்... சூதுவாது தெரியாத பருவமது.... மிக‌ முக்கிய‌மாக‌ அவ‌ர்க‌ள்து தூய த‌மிழ். தொகுப்பாளர்கள் 95 ச‌த‌வீத‌ம் ஆங்கில‌க்க‌ல‌ப்பின்றிப் பேசுவார்க‌ள். இன்றும் க‌தைத்துக் கொண்டுதான் இருக்கிறார்க‌ள். இலங்கையில் இப்பொழுது இன்னும் நிறைய தமிழ் பண்பலை வானொலிகள் இருப்பதாக அறிகிறேன்.

வெகுஅரிதாக கோடைகாலத்தில் 'புலிகளின் குரல்' வானொலியில் வரும். ஒருமுறை விடுதலைப்போராளி ஒருவரது வாழ்க்கை வரலாற்றையும், செய்திகளும் கேட்கமுடிந்தது. அலைவரிசை தெளிவின்மை, வானிலை ஆகியவற்றால் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கேட்கமுடிந்திருக்கிறது.

இதோடு விட்டுவிடவில்லை வானொலி கேட்கும் விருப்பம். சிற்றலையில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு , லண்டன் பிபிசியின் தமிழோசை, சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றையும் தேடிப்பிடித்து நிகழ்ச்சிகளை ரசித்திருக்கிறேன்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் இருந்து பண்பலை வானொலி தொடங்கப்பட்டது. துல்லியமான ஒலிபரப்பாக இருந்தாலும், நிகழ்ச்சிகள் மொக்கையாக இருந்தால் யார் கேட்பார்கள்? "பண்பலையில் விளம்பரம் செய்யுங்கள். இந்த நாட்டின் செல்வம் இங்கேயே இருக்கட்டும்" என இலங்கை வானொலியின் சர்வதேச ஒலிபரப்பின் போட்டியை ஈடுகொடுக்க முடியாமல் புலம்பித் தள்ளுவார்கள்.

அதன்பின்னர் நான் கல்லூரியில் சேர்ந்த காலம். இந்தியாவில் தனியார் பண்பலை வானொலிகளுக்கு அனுமதி கிடைத்தது. தமிழில் முதலி திருநெல்வேலியில் இருந்து சூரியன் பண்பலை தன் முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. திருநெல்வேலியில் ஒலிபரப்பாகும் வானொலி மதுரை வரை கேட்கும். எங்களுக்கு கல்லூரி விடுதியில் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. ஏனோ தனியார் பண்பலை வானொலிகளுக்கு செய்திகள் ஒலிபரப்பும் உரிமை மட்டும் கொடுக்கப்படவில்லை.

வேலை தேடி சென்னை வந்தால் .... அட சென்னையின் பண்பலை வானொலிகள் பற்றி உங்களுக்குத் தெரியாததா பாஸ்?

3 comments:

வாய்ப்பாடி குமார் said...

நல்ல தகவல்.

வாங்க , அப்படியே வந்து சர்வதேச வானொலி,லோஷன், பிரபா போன்ற வானொலி அறிவிப்பாளர்களோடு அப்படியே சேருங்க.

http://sarvadesavaanoli.blogspot.com/

http://prapaactions.blogspot.com/

http://loshan-loshan.blogspot.com/

LOSHAN said...

நல்ல பகிர்வு..
எங்கள் வெற்றி வானொலியையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்.. சிலவேளைகளில் பண்பலையில் வேலை செய்கிறது..
இல்லையெனில் இணையத்தில் கேட்கலாம்..
www.vettri.lk

அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்கள்..

www.vettrifm.blogspot.com

அண்மையில் தான் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ஒலிபரப்பு வாழ்க்கையில் தனது பொன்விழாவைக் கொண்டாடி இருந்தார்.

இந்த சுட்டியைப் பகிர்ந்த வாய்ப்பாடி குமாருக்கு நன்றிகள்..

யோகேஸ் said...

நன்றி வாய்ப்பாடி குமார், LOSHAN !!!