Saturday, January 12, 2008

ஆல் டே ஜாலி டே ! ஹேப்பி ஹேப்பி மொக்கை டே !

ஒரு நாள் அலுவலகத்தில் மதியம் நல்லா சாப்பிட்டுட்டு பொழுது போகாம - எவ்வளவு நேரம் தான் தமிழ்மணத்தையே மேயுறது?- கணினி முன்னால கையைத் தலையணையா வச்சிட்டுத் தூங்கிட்டேன். அட ரொம்ப நேரமெல்லாம் இல்லங்க. சும்மா ஒரு ஒன்றரை மணி நேரம் தான். கொஞ்ச நேரம் கழிச்சி என்னோட டீம்லீட் வந்து தட்டி எழுப்பி "எழுந்திரு. போதும். நீ விட்ட குறட்டையில் இங்க யாருமே வேலை செய்ய முடியல. கம்ப்யூட்டரெல்லாம் அதிருது. ரெண்டு மானிட்டர் வைப்ரேட் ஆகி உடைஞ்சிருச்சி"ன்னு சொன்னாங்க. நானும் "ஆபீஸ்ல இதெல்லாம் சாதாரணமப்பா"ங்கிற மாதிரியே தூக்கக் கலக்கத்தில உக்கார்ந்திருந்தேன்.

உடனே எங்க மேனஜர்கிட்ட இருந்து போன். வாய் ஓரம் வழிஞ்ச எச்சிலைத் துடைத்துக் கொண்டே பவ்யத்தோட எழுந்து போனை எடுத்தேன். "உடனே என்னை வந்து பார்"னு சொல்லிட்டு போனை வைச்சிட்டார். நான் பயந்து போய் என் டீம் லீடைப் பார்க்க அவங்க "ம். நீ பண்ணுற எல்லா அட்டகாசத்தையும் நான் சொல்லிட்டேன். அதான் கூப்பிடுறார்"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அடிப்பாவின்னு மனசுக்குள்ளயே திட்டிட்டு பயந்து போய் அவருகிட்ட போனேன்.

கொஞ்ச நேரம் என்னைக் கண்டுக்காம ரொம்ப பிஸியா இருக்குற மாதிரி சீன் போட்டார். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே "இந்த வருசம் பெஸ்ட் பெர்ஃபார்மர் அவார்டுக்கு உன்னை செலக்ட் பண்ணியிருக்கோம். கங்கிராட்ஸ்"ன்னு கை குடுத்தார். இந்தத் தாக்குதலை முற்றிலும் எதிர்பார்க்காததால் என்ன செய்வதென்றே தெரியாமல் அவரிடம் "ரொம்ப தேங்கிஸு சார்"ன்னேன். "நீ பண்ற எல்லாத்துலயும் ஒரு நல்ல இன்வால்வ்மெண்ட் இருக்கு. அதுனாலதான் இந்த அவார்ட் உனக்கு"ன்னார். "ஆமா சார். அதுனாலதான் ஒன்றரை மணி நேரம் தூங்கினது கூடத் தெரியலை"ன்னு மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டு வந்துட்டேன். டீம்லீட் என்னைப் பார்த்து சிரிச்சாங்க.

கூட வேலை பாக்குற பசங்ககிட்ட வந்து சொன்னேன். அவார்ட் விசயம் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சாங்க. "அடப் போடா அதெல்லாம் தமிழ்மணத்தில அப்பப்போ 'மொக்கை பதிவர்' அவார்டுன்னு கொடுப்பாங்களே அந்த மாதிரி. பிளாக்குல சைடில போட்டு வைச்சுக்கிற மாதிரி சர்டிபிகேட்டை வாங்கி பிரேம் போட்டு வச்சுக்க வேண்டியதுதான். எக்ஸ்ட்ரா ஒரு பைசா கூட தரமாட்டானுங்க கஞ்சப் பசங்க.ஆமா அது ஏன் உன்னை செலக்ட் பண்ணினாங்க? நீ ஆபிஸுக்கு வர்றதே 10 1/2 மணிக்கு. வந்தவுடனே தினமலர், தமிழ்மணம் அப்புறம் ஆர்குட். இதெல்லாம் முடிச்சிட்டு பொழுது போகலைன்னா ஆபிஸ் மெயில் ஓப்பன் பண்ணி எதாவது வந்திருக்கான்னு பாக்குற. உடனே டீ. திரும்ப வந்து கொஞ்ச நேரம் வேலை பாக்குற மாதிரி சீன். அப்புறம் லஞ்ச். அதுக்கப்புறம் ஒரு ஒன்றரை மணி நேரம் தூக்கம். அதுவும் குறட்டை விட்டு. அப்புறம் ஒரு டீயைக் குடிச்சிட்டு வீட்டுக்கு ஓடிடுற. அது எப்படிடா இந்த மேனேஜர் மட்டும் எப்பவுமே கரெக்டா கண்டுபிடிச்சி இப்படி தப்பான முடிவு எடுக்குறாங்க"ன்னு 'உன்னாலே உன்னாலே' ஸ்ரீநாத் மாதிரி புலம்புனாங்க.

இதுக்கு என்னோட பதில் "கண்ணா எப்படி வேலை பார்க்குறோம்ங்கிறது முக்கியமில்லை. எப்படி வேலையை முடிக்கிறோம்கிறது தான் முக்கியம்".

------X------

எங்கள் அறையில் இப்போ ஒரு நாலு மாசமா நாங்களே சமையல் செய்து சாப்பிடுகிறோம். ஒரு நாள் இரவு என் அறை நண்பர்கள் "வாங்க சாமானெல்லாம் வாங்கணும். கடைக்குப் போலாம்"னு கூப்பிட்டானுங்க. நான் ஆகா செலவில்லாம ஒரு போர்ட்டர் ரெடி பண்றானுங்கன்னு உஷாராகி "இல்லடா நான் இன்னிக்கு நைட் சமையல் பண்ணுறேன். நீங்களே போய் வாங்கிட்டு வந்துடுங்கன்னு சொல்லிட்டேன். அதாவது சொ.செ.சூ வச்சிக்கிட்டேன். என்ன பண்றதுன்னு கேட்டதுக்கு உப்புமா செய்யுங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டானுங்க.

ஏற்கனவே நான் பல குழம்பு, சாதம் எல்லாம் வச்சிருந்தாலும் உப்புமா நான் முயற்சி செய்து பார்த்ததே இல்லை. எனவே அம்மாவிடம் தொலைபேசி எப்படின்னு கேட்டுட்டு வெங்காயம், மிளகாய் எல்லாம் நறுக்கிட்டு ரவையை வறுக்க ஆரம்பிச்சேன். அப்படியே பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நல்லாக் கொதிக்கவச்சு அது கொதிக்க ஆரம்பிச்சதும் ரவையைப் போட்டேன்.

அடப்பாவமே பொசுக்குன்னு எல்லாத் தண்ணியையும் ரவை உறிஞ்சிடுச்சி. ஆகா என்னடா இது கிண்டுறதுக்கு கஷ்டமா இருக்கேன்னு இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்த திரும்பவும் உறிஞ்ச இப்படியே ஒரு ஏழு எட்டு டம்ளர் தண்ணி ஊத்தியாச்சு. அதாவது ரெண்டு டம்ளர் ரவைக்கு ஒரு பன்னிரெண்டு டம்ளர் தண்ணி.அப்பத்தான் ரவை ரொம்ப குழைவா வரஆரம்பிச்சது. அப்புறம் தான் சுதாரிச்சுப் பார்த்தா அப்படியே கிட்டத்தட்ட கொஞ்சம் கெட்டியான பாயசம் மாதிரி இருக்கு.

ஆகா தப்புப் பண்ணிட்டோமே சும்மாவே இம்சையைக் கூட்டுவானுங்க இதுல இந்த உப்புமாவைப் பார்த்தானுங்கன்னு ரூமைவிட்டே துரத்திருவானுங்களேன்னு யோசிச்சிட்டுக்கிருந்தப்பவே வந்துட்டானுங்க. "அட அதுக்குள்ள பண்ணிட்டீங்களா?"ன்னு ஒருத்தன் வேகமாப் போய் சட்டியைத் திறந்து பார்த்தான். "அட உப்புமாவுக்குப் பதிலா கேசரி பண்ணிட்டீங்களா? ஆனா கேசரியில எதுக்கு பச்சைமிளகாய், வெங்காயமெல்லாம் கிடக்கு?"ன்னு சந்தேகமாக் கேட்டான். "அது வந்து"ன்னு நான் இழுக்குறப்பவே தலையில கையை வச்சிக்கிட்டு தரையில உக்காந்துட்டானுங்க. "இதை இப்போ என்ன பண்றது"ன்னு ஒருத்தன் கேட்க "ம். பக்கத்தில் இருக்கிற சந்தியா தியேட்டருல கொஞ்சம் பசை இருக்கு. கம்மி ரேட்டுக்கு வாங்கிக்கிறீங்களான்னு கேட்டுட்டு வா"ன்னான்.

உடனே ரோசம் வந்து வீட்டில் இருந்து வெளியேறிய நான் நேராக ஓட்டலுக்குப் போய் எல்லோருக்கும் என் செலவில் முட்டை புரோட்டா பார்சல் வாங்கிட்டு வந்துட்டேன். :)

------X------

ஒருநாள் பெங்களூர்ல பேருந்தில் போன போது நாங்க இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தும் பஸ் நிக்கலை. உடனே நான் "ஹோல்டான். டோர் ஓப்பன் மாடி சார்"ன்னு சவுண்ட் விடவும் பஸ் நின்னுருச்சு. என் பசங்க எல்லாம் "என்ன இவ்வளவு சூப்பரா கன்னடம் பேசுற. கலக்கிட்ட போ. வா உனக்கு ஒரு ஜூஸ் வாங்கித்தாரேன்"னு பார்ட்டி வச்சுக் கொண்டாடிட்டானுங்க. இதுல என்ன காமெடின்னா நான் சொன்னதுல 'மாடி'(பண்ணுங்க)ங்கிறது மட்டும் தான் கன்னட வார்த்தை. இது எப்படி இருக்கு?


மொக்கை டேக்கு என்னை அழைத்த கண்மணி டீச்சருக்கு மீண்டும் நன்றி. 'ஏய் பார்த்துக்க பார்த்துக்க நானும் மொக்கைப் பதிவர் தான்'ன்னு சொல்லிக்கிட்டே நானும் ஜீப்பில ஏறிக்கிறேன். :)

அப்புறம் ஒரு முக்கியமான விசயம் இது எனது 50வது பதிவுங்கோ!!!!!!!!!!

நான் மொக்கை போட அழைக்கும் மூன்று பேர்.

1. எப்பவும் சீரியஸாவே எழுதி பொழந்து கட்டுற நண்பர் பிரின்ஸ் என்.ஆர். சாமா.

2. ஊர்ப்பாசத்தில் தனியா ஒரு இணையதளமே கன்னியாகுமரிக்காக நடத்துற நண்பர் அப்பாவி.

3. ரொம்ப நாள் கழிச்சி திரும்பவும் பதிவு எழுத வந்திருக்கிற நம்ம அண்ணாத்த மகேஸ்.

நாங்க ஏற்கனவே மொக்கை தானே போட்டுக்கிட்டிருக்கோம்னு மொக்கை காமெடி எல்லாம் பண்ணக் கூடாது. :))

6 comments:

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் பொன்வண்டு
50 பதிவு என்னால் மொக்கை பதிவானாலும் சுவாரஸ்யமான பேச்சுலர் கதைகள் வெளி வந்துடுச்சே.
100 ஆக வாழ்த்துக்கள்
ரெண்டு அட்வைஸ்.
1.அப்பப்ப ஆணியும் புடுங்குங்க ஆபிஸ்ல
2.குறட்டையை சத்தமில்லாம பாத்துக்கங்க.;)

கண்மணி/kanmani said...

நீங்க யாராசும் சிலரை இன்வைட் செய்யுங்க.அப்பத்தான் சுவாரஸ்யம் கூடும்.விதியும் அதான்.

Yogi said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கண்மணி டீச்சர் ! நானும் மூணு பேரை TAG செய்திருக்கிறேன்.

Anonymous said...

super mokkai nadathungga

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

பொன்வண்டுஜி கண்டிப்பா ஒரு மொக்கை போட்டிருவோம்.... கரும்பு தின்ன கூலி வேணுமா! உங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.