Thursday, January 17, 2008

க.கா.கா, மதுரை மற்றும் காதலிக்க நேரமில்லை !


KKK சுருக்கமாக கனா காணும் காலங்கள்

ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ரசிகர்களாக வைத்திருக்கும் தொடர். கதை இது தான். சென்னையின் ஒரு தனியார் பள்ளியில் +2 மாணவர்களில் இரண்டு குழுக்கள். எல்லாவற்றிலும் எதிரும் புதிரும் தான். பாலா, பச்சை, பாண்டி, ஜோ என ஒரு குழு. வினீத், உன்னி, கிருஷ் அப்புறம் இன்னொரு பையன் இவர்கள் அடுத்த குழு. இரு குழுவினருக்கும் பொதுவான தோழி ராகவி. இவர்களுக்குள் வரும் மோதல்கள் தான் கதையின் கருவாக இருந்தது. இப்போ கொஞ்சமே மாற்றப்பட்டுவிட்டது.

முதலில் நூறு நாட்களுக்கு நன்றாக பள்ளிகளில் அடிக்கும் அட்டகாசங்கள், ஊர் சுற்றுதல, நண்பர்களுக்குள் சண்டை பின் சமாதானம் என அமர்க்களமாகக் காட்டினார்கள். இத்தொடர் எல்லோரையும் கவர்ந்தது இந்தக் கால கட்டத்தில் தான். அதற்குப் பிறகு கதைப் பஞ்சம் வந்து இப்போ நொண்டியடிக்கிறது.

பச்சை, ராகவியைக் காதலிப்பதாகக் கூற அவளிடம் செவுள் தெறிக்க அறை வாங்குகிறான். பின்னர் ராகவி அவனை மன்னித்தாலும் அவன் அவள் மீது கோபமாகவே இருக்கிறான். இதுவரை தான் கதை வந்திருக்கிறது. இனிமேல் என்ன ஆகுமெனத் தெரியவில்லை.

தொடரின் முக்கிய ப்ளஸ் பாண்டி. பாண்டி வந்தாலே எல்லாக் காட்சிகளிலும் கலகலப்பாக இருக்கும். மைனஸ் பாய்ண்ட் திடீர் திடீரென சிலர் காணாமல் போய் விடுவது. ஜோவுக்கு இப்போ பரீட்சையாம் அதுனால இன்னும் கொஞ்ச நாள் வரமாட்டானாம். அப்புறம் மிண்டு, கார்த்தி அப்புறம் இன்னொரு பொண்ணு என மூன்று பேரைக் கொண்டு வந்து பாலா கோஷ்டி ஜொள்ளு விடுவது போலக் காட்டினார்கள். இப்போ அவர்களும் இல்லை. பச்சையும், ராகவியும் எப்போதும் அழுது வழிகிறார்கள். ஷேம் ஷேம்.

ஆர்குட்டில் இதன் குழுமத்தில் 10,000க்கும் மேலான உறுப்பினர்கள். என்னமோ! காதல் விசயத்தை விடுத்து மீண்டும் கலகலப்பைக் கூட்டினால்தான் டிஆர்பி வாங்கமுடியுமப்பு !!

கொசுறு : ராகவியாக வரும் ஹேமா சூர்யவம்சம் படத்தில் மகன் சரத்குமாருக்கு மகனாக வரும் குட்டிப்பையன் தான்.

**********************************************************************************



கதை என்னன்னு எனக்கும் தெரியாதுங்க. ஏன்னா நான் தற்செயலா இத்தொடரின் கதாநாயகியைப் பார்த்த பிறகு தான் அவருக்காக இந்தத் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன்.

கதையின் ஒருவரி இதுதான். போக்கிரியாகத் (ரவுடிக்கு தமிழில் போக்கிரின்னு தான் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் சொல்கிறார்கள்) திரியும் சரவணனின் முறைப்பொண்ணு மீனாட்சி. மீனாட்சி சரவணனைத் திருத்த முயற்சிக்கிறாள். அவன் திருந்துவது மாதிரி தெரியவில்லை. எனவே தன் காதலை மறைத்து அவனை வெறுப்பது மாதிரி நடித்து அவனைத் திருத்த முயற்சிப்பதுதான் கதை.

கதை முழுக்க முழுக்க மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் எடுக்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். அப்புறம் எல்லாத் தொடரிலும் இருக்கும் அழுகாச்சி தொல்லையெல்லாம் கிடையாது. சரவணன் கோஷ்டி அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது.

சரவணனாக மிர்ச்சி செந்தில். இதில் சொந்தக் குரல் இல்லை. இவருக்குக் குரல் கொடுத்திருப்பவர் மதுரை ஸ்லாங்கில் பொளந்து கட்டுகிறார். மீனாட்சியாக ஸ்ரீஜா சந்திரன் (கேரளா). கண்களை உருட்டி உருட்டிப் பேசும் போது கொள்ளை அழகு. முக்கியமான விசயம் தொடரில் வயதுப் பெண்கள் எல்லோரும் தாவணியில் தான் வருகிறார்கள்.

இப்பல்லாம் தாவணி கட்டி பொண்ணுங்களை எங்கே பார்க்க முடிகிறது? அதற்காகவே இந்தத் தொடரைப் பார்க்கலாம்.

கொசுறு : ஆர்குட் மீனாட்சி ரசிகர்கள் குழுமத்தில் நானும் உறுப்பினர் ;)

**********************************************************************************



இளைஞர்களையும் நெடுந்தொடர் பார்க்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். கதை நடப்பது சிங்கப்பூரில். அங்கே வசிக்கும் சக்திக்கும் திவ்யாவுக்கும் காதல் மலர்கிறது. கல்யாணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம், பிரச்சினையென்றால் காதலும் வேணாம் கேரட்டும் வேண்டாம் (இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் கத்தரிக்காய்?) என்று பிரிந்து விடலாம் என்று முடிவு செய்து சேர்ந்து வாழ்கிறார்கள். இதுவரைதான் கதை வந்துள்ளது.

தலைப்புப் பாடல் அருமை. இந்தப் பாடலை மேலும் ஹிட்டாக்கியதில் கணினித் துறையில் இருப்பவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஈமெயிலில் சுட்டி அனுப்பி தரவிறக்கம் செய்து கேட்டுப் பார்க்கச் சொன்னார்கள்.

சக்தியாக ப்ரஜின். திவ்யாவாக சந்திரா லட்சுமணன். முதலில் இவர் ப்ரஜினுக்கு சரியான பொருத்தம் இல்லை என்று சொன்னாலும் இப்போ மெள்ள மெள்ள ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

தொடரின் மிகப்பெரிய ப்ளஸ் 'உன்னாலே உன்னாலே' ஸ்ரீநாத். ப்ரஜினின் நண்பனாக வரும் இவர் டைமிங் ஜோக் அடித்துக் கிளப்புகிறார். திரைப்படங்களில் மேலும் வாய்ப்புகள் கிடைத்து கலக்க வாழ்த்துக்கள்.மைனஸ் விளம்பரங்கள். ஆமாம் மொத்தம் 12 நிமிடங்கள் மட்டுமே தொடரைக் காட்டுகிறார்கள்.

கோலங்கள் அழுகாச்சியைப் பார்ப்பதற்கு இந்தத் தொடர் எவ்வளவோ மேல். தாய்மார்களே மாறுங்கள்.

கொசுறு : இந்த நாடகம் பார்க்க அடித்துப் பிடித்து அலுவகத்திலிருந்து ஓடி வருகிறார்கள் நண்பர்கள.

2 comments:

கண்மணி/kanmani said...

கனாக் காணும் காலங்களின் ரசிகரா நீங்கள்?
எனக்கு பள்ளிக்கூட காதல் கதைகள் பிடிப்பதில்லை.அடலசெண்ட் வயதில் வரும் அது காதலே இல்லை.
மேலும் இப்போதுள்ள பாட திட்டத்தின்படி படித்து மாளாத அளவிற்கு பாடச் சுமை இருக்கும் போது எப்படி இவர்கள் எந்நேரமும் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ராகவி சூர்ய வம்சத்தில் சூட்டிகையாக நடித்தவர்.
இதில் ஏதோ ஆர்ட் பிலிம் கதாநாயகி போலயோசித்து யோசித்து பேசுகிறார்.
என்னமோ போங்க தானாக் கெட்டுபோகும் வயதில் உள்ள பசங்களுக்கு நாமும் சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம் அலைகள் ஓய்வதில்லை காலத்திலிருந்து.;(

Yogi said...

வாங்க டீச்சர் !

ஆமாம் நானும் ரசிகர்தான் இருந்தேன் முன்னால. இப்பல்லாம் ரொம்பவே மொக்கை போடுறாங்க. தாங்க முடியல.

இந்தக் காதல் விவகாரம் கதைப் பஞ்சத்தால் திணிக்கப்பட்ட ஒன்று. விரைவில் முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.

// எனக்கு பள்ளிக்கூட காதல் கதைகள் பிடிப்பதில்லை.அடலசெண்ட் வயதில் வரும் அது காதலே இல்லை. //

ஆமாம் . அனுபவப்பட்டவன் ஒத்துக்குறேன் :)

// மேலும் இப்போதுள்ள பாட திட்டத்தின்படி படித்து மாளாத அளவிற்கு பாடச் சுமை இருக்கும் போது எப்படி இவர்கள் எந்நேரமும் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். //

ஒரு நாடகத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது இல்லையா?