Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, August 08, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 5


தொடர் முடிந்து திரை போடுற நேரம் வந்தாச்சு. எனவே இப்பதிவில் சில பொதுவான விசயங்களை மட்டும் சொல்லிடுறேன். போன பதிவில் என் அனுபவத்தில் ஒரு வங்கியின் ஏமாற்று வேலையையும், ஒரு வங்கியின் நல்ல மனசையும் பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

என்னிடம் சுமார் எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் உள்ளன. அதில் ஏபிஎன் ஆம்ரோ வங்கியின் அட்டையும் ஒன்று. அதை நான் உபயோகிப்பதில்லை. ஆனால் முதல் மாதம் பில்லில் 150 ரூபாய் செலுத்தவேண்டும் என்று போட்டிருந்தார்கள். நான் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "அது இன்சூரன்ஸ் சார். நீங்கள் கட்டுறதுன்னா கட்டலாம். இல்லைன்னா தேவையில்லை" என்றனர். எதற்கு இன்சூரன்ஸ்? அதை எதற்கு இவர்கள் பில்லில் போடுகின்றனர்? ஒருவேளை கட்டினால் எப்படி அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குவது? நான் எந்த இன்சூரன்ஸும் கட்டுவதாக அட்டைக்கு விண்ணப்பித்திருந்த போது குறிப்பிடவில்லையே? என நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அந்த மாதம் நான் அட்டையை உபயோகிக்காததால் நான் சுலபமாக பில்லில் அந்த 150ரூபாய் விசயத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்போ ஒரு 10,15 முறை அட்டையை உபயோகித்துப் பொருள்கள் வாங்கியிருந்தால் பில்லில் அந்த 150ரூபாயை இன்சூரன்ஸை நாம் சரியாகக் கண்டுபிடிப்பது கடினம் தான். என்னைப் பொறுத்தவரை இது அந்த வங்கியின் ஏமாற்று வேலையே!

அப்புறம் நான் ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையும் வைத்திருக்கிறேன். எனது சேமிப்புக் கணக்கு அந்த வங்கியில் இருந்ததால் முதலில் என் அனுமதி பெறாமலேயே எனக்கு ஒரு கடன் அட்டையை அனுப்பிவிட்டார்கள். கடுப்பில் ரொம்ப நாள் அதை உபயோகிக்காமலேயே வைத்திருந்தேன். பின்னர் சில மாதங்கள் கழித்து 1000 ரூபாய்க்கு அந்த அட்டையை உபயோகித்துப் பொருள் வாங்கினால் ஒரு வெள்ளி விளக்கு (Silver Diya) பரிசு என்று தூண்டில் போட்டனர். நானும் 1000 ரூபாய்க்கு மொபைல் ரீசார்ஜ் செய்து விட்டேன். சரியாக அடுத்த மாதம் ஒரு சிறிய வெள்ளி விளக்கு பார்சலில் அனுப்பிவிட்டனர். என்ன முதலில் படத்தில் பெரியதாகப் போட்டிருந்தனர். வந்திருந்தது அதில் கால்வாசிதான். பின்னர் ஒருதடவை பில் கட்ட மறந்துபோனதால் Late Fee என்று சுமார் 400 ரூபாய் போட்டு விட்டார்கள். தொடர்பு கொண்டு பேசியதும் Genuine Customer(?!) என்பதால் அதை விலக்கிவிட்டனர். எனது கடன் அட்டை வாழ்வில் நான் இதுவரை Late Fee கட்டியதில்லை எனற பெருமையைக் காப்பாற்றிக் கொடுத்தது அந்த வங்கி. அதற்காக நான் அந்த வங்கி நல்ல வங்கி என்று கூறவில்லை. எனது நண்பர்கள் சிலர் அந்த வங்கியைப் பற்றிக் குறைகளும் கூறுகின்றனர்.



அடுத்து HSBC, CITI, HDFC, ICICI, DEUTSCHE, ABN AMRO, STANDARD CHARTED, SBI. இந்த வங்கிகளின் கடன் அட்டைகள் அனைத்தும் நான் வைத்திருக்கிறேன். இவை போக Add-on என்ற பெயரில் வந்து சேர்ந்த அட்டைகளும் வேறு உள்ளன.அதனால் இந்த அட்டைகளை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு வீடு கட்டலாம் என முடிவு செய்து பெவிகால் மட்டும் வாங்கி அந்த அட்டைகளை ஒட்டி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு அட்டைகள் தேவை கூரை போடுவதற்கு. வீடு கட்டி முடிந்தவுடன் சொல்கிறேன். பால் காய்ச்சும் போது எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும். :)

(முற்றும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Tuesday, July 31, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4

ஏடிஎம் பற்றிக் கொஞ்சம் தெளிவாகவே பார்த்தாச்சு. அடுத்து EDC (Electornic Data Capture Machine) எனப்படும் இயந்திரம் எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போம்.

EDC என்பது வேறொன்னும்மில்லங்க. நாம கடையில் சாமான் வாங்கும் போது நமது அட்டையை ஒரு இயந்திரத்தில் தேய்க்கிறார்களே அந்த இயந்திரம் தான். இதுவும் ஏடிஎம் போல Switch -உடன் தொடர்பு கொண்டிருக்கும். நாம் அட்டையைத் தேய்த்தவுடன் தொலைபேசி ஊடகத்தின் வாயிலாக வங்கியைத் தொடர்பு கொண்டு தகவலை வாங்கித் தரும். Telephone network இந்த மாதிரியான Data Transferக்கும் பயன்படுகிறது.

இப்போ திநகரில் இருக்கும் கடைகள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக ஒரு EDCயாவது இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் EDCயெல்லாம் NAC(Network Access Controller) எனப்படும் பெட்டியுடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு வங்கியும் NAC எனப்படும் பெட்டியை ஒவ்வொரு பகுதி அல்லது ஊருக்கும் வைத்திருப்பார்கள். எப்படின்னா ஒவ்வொரு NACக்கிற்கும் ஒரு தொலைபேசி எண் இருக்கும். அந்த NACக்கின் தொலைபேசி எண் EDCயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் அட்டையை EDCயில் தேய்க்கும் போது அது அந்த NACக்கினுடைய எண்ணுக்கு டயல் செய்யும். பின்னர் EDCயானது ஏடிஎம் போலவே ஒரு தகவலை(Request Message) NAC வழியாக Switchக்கு அனுப்பி வங்கியிலிருந்து தகவலைப் (Response Message) பெற்றவுடன் Charge Slip எனப்படும் ரசீதினைத் தரும்.

மேலதிகத் தகவலுக்குப் படத்தைப் பார்க்கவும்.



சரி. அடுத்து கடன் அட்டைகளை வைத்து என்ன செய்யலாம், செய்யக்கூடாதுன்னு பார்ப்போம்.

1. ஓசியில கிடைக்குதுன்னு அட்டைகளை வாங்கிக் குவிக்க வேண்டாம். ஒன்று அல்லது இரண்டு அட்டைகள் போதும். ஒரு அட்டையில் 20000 வரை உபயோகிக்கலாம் என்றால் இரண்டு அட்டைக்கு 40000 ஆச்சு. ஒரு மாதத்திற்கு இதற்கு மேலா தேவைப்படும்?

2. ரொம்ப முக்கியம் ஒரு கடன் அட்டையை வைத்து இன்னொன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். இது ஏன்னா நீங்கள் உங்களது கடன் அட்டையின் முன்,பின் பக்கங்களை நகல் எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி செய்தால் உங்கள் அட்டையின் பின்புறம் இருக்கும் CVV2வும் அதில் தெரியும். CVV2 நமக்காக Online shopping செய்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ரகசிய எண். அதைப் போய் முன் பின் தெரியாத ஒருவரிடம் கொடுக்கலாமா? அந்த நபர் அதை வைத்து கோல்மால் செய்து விட்டால் கஷ்டம். அதனால் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

3. Balance Transfer தயவு செய்து வேண்டாம். சேவை வரி,Processing Fee என்று ஒரு 200, 250 பிடுங்கிவிடுவார்கள்.

4. இப்போது Verified By Visa (VBV), Mastercard Secure போன்ற பாதுகாப்பான Online shopping வழிமுறைகள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. அவற்றில் பதிவு செய்து கொண்டு விட்டால் Online Shoppingக்கு ரொம்பவே பாதுகாப்பு.

5. Online Shopping செய்த பிறகோ அல்லது Onlineல் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பிறகோ மறக்காமல் Signout செய்த பிறகு இணைய உலாவியை மூடுங்கள்.

6. அதேபோல் வங்கிகள் நாம் கடன் அட்டையை உபயோகிப்பதைப் பொறுத்து Points வழங்குவார்கள். அதிகம் செலவு செய்தால் அதிக Points கிடைக்கும் என்பது உண்மை. நூறு ரூபாய்க்கு ஒரு Point என்று வைத்தால் 1000 Pointச் கிடைக்க நாம் 100000 செலவு செய்ய வேண்டும். பின்னர் அந்த Pointsக்கு ஏற்றவாறு நமது கடன் அட்டை பில்லில் தள்ளுபடி கிடைக்கும். அதாவது தள்ளுபடி 1000 ரூபாய். இந்த 1000 ரூபாய் தள்ளுபடிக்கு செலவு செய்ய வேண்டியது 100000 ரூபாய். நான் சொல்வது Cash back Credit card. சில வங்கிகள் இந்த வசதியும் தராது. அவர்கள் ஒரு லிஸ்ட் அனுப்புவார்கள். அதிலிருக்கும் பாடாவதிப் பொருளை வாங்கி நமது Pointsஐக் கழித்துக் கொள்ளலாம் என்பார்கள். எனவே Pointsக்காக செலவழிக்க வேண்டாம்.

யப்பப்பா. இப்படி பயமுறுத்துறியேங்கிறீங்களா? கடன் அட்டைகளால் நன்மைகளும் உண்டுங்க. மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் கடன் அட்டைகள். மாதக்கடைசியில் கையில் பணம் இல்லாதபோது உபயோகித்துவிட்டு பின் சம்பளம் வந்தவுடன் சுலபமாக செலுத்திவிடலாம். என்ன வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது. கை அரிப்பு எடுத்தால் சொரிந்து கொள்ளவும். கடன் அட்டையை உபயோக்கிக்க வேண்டாம். :)

சரி. வங்கிகள் வாடிக்கையாளர்களை ரொம்பவே ஏமாற்றுகின்றன என்பது பொதுவாக எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டு. என் அனுபவத்தில் ஒரு வங்கியின் ஏமாற்று வேலையையும், ஒரு வங்கியின் நல்ல மனசையும், அப்புறம் கிரெடிட் கார்டுகளை வைத்துத் தான் நான் ஒரு வீடே கட்டிக் கொண்டிருக்கிறேன் அது எப்படி என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(அடுத்த பதிவில் முடியும்)


ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Thursday, July 26, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3

முந்தைய பதிவுகளில் ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னும், அது எப்படி நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்குதுன்னும் பார்த்தோம். இப்போ ஒரு வங்கியின் ஏடிஎம்மில் வேறொரு வங்கியின் அட்டையை உபயோகித்தால் எப்படிப் பணம் வருதுன்னு பார்க்கலாம்.

உதாரணத்துக்கு ஒரு சிட்டி வங்கியின் ஏடிஎம்மில் ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையை உபயோகித்தால் அது எப்படி செயல்படுதுன்னு பார்க்கலாம். ஏடிஎம்க்கு நமது அட்டையை வைத்து அது எந்த வங்கியின் அட்டை என்றெல்லாம் கண்டுபிடிக்கத் தெரியாது. ஆகவே நாம் பணம் கேட்டால் வழக்கம் போல் ஒரு தகவலை உருவாக்கி அதை ஏடிஎம் கண்ட்ரோலருக்கு அனுப்பி வைக்கும். ஏடிஎம் கண்ட்ரோலர் அந்தத் தகவலை Switchக்கு அனுப்பி வைக்கும்.

Switch தான் அந்தத் தகவலில் இருக்கும் அட்டை எண் அந்த வங்கியினுடையதா அல்லது வேறு ஏதாவது வங்கியினுடையதா எனக் கண்டுபிடிக்கும். அது ஒன்றும் பெரிய வித்தை எல்லாம் இல்லைங்க.உங்களது அட்டை எண்ணின் முதல் 6 இலக்கங்களை 'வங்கி அடையாள எண்' (BIN - Bank Identification No) என அழைப்பர். இந்த BINஐ வைத்துத் தான் அது அந்த வங்கியின் அட்டையா அல்லது பிற வங்கியின் அட்டையா எனக் கண்டுபிடிக்கும்.

உதாரணத்துக்கு நீங்கள் சிட்டி வங்கி டெபிட் அட்டை வைத்திருக்கிறீர்களா?. அதில் உங்கள் அட்டையின் முதல் 6 இலக்கங்கள் 508159,508125,508126 என்ற மூன்றில் ஒன்றாகத் தான் இருக்கும். சரி தானே?. இதே போல் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட இலக்கங்களைத் தங்களுக்காக வைத்திருப்பார்கள். Switch எப்படி மற்ற வங்கியின் அட்டைகளைக் கண்டுபிடிக்கிறது? ரொம்ப சிம்பிள். ஒரு வங்கி 3 BIN வைத்திருக்கிறதென்றால் அவை தவிர மற்றவையெல்லாம் பிற வங்கியினுடையது தான் அல்லவா? :) . இந்த லாஜிக்கில் தான்.

சரி. அந்த அட்டை பிற வங்கியின் அட்டை என்று கண்டுபிடித்தாயிற்று. அப்போ அந்தத் தகவலை அந்தக் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது?. இங்கே தான் உதவிக்கு வருகின்றன விசா மற்றும் மாஸ்டர் கார்ட்.

விசாவும், மாஸ்டர் கார்டும் ஏஜெண்ட்கள். அவற்றின் வேலையே இந்த மாதிரி வங்கிகளுக்கிடையில் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பது தான். எனவேதான் நாம் உலகில் எங்கு சென்றாலும் நமது அட்டையை ஏடிஎம்மில் உபயோகித்தால் பணம் கிடைக்கிறது. விசா, மாஸ்டர் கார்ட் போல பல ஏஜண்ட்கள் (Diners, American Express) உள்ளன. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் மிகவும் பிரபலமானவை விசா மற்றும் மாஸ்டர் கார்ட் தான்.

சரி. ஓவர் டு Transaction. Switch அந்தத் தகவலை விசாவிற்கோ அல்லது மாஸ்டர் கார்டுக்கோ அனுப்பும். உங்கள் அட்டை விசா அட்டை என்றால் அட்டை எண் '4'லும், மாஸ்டர் கார்ட் அட்டை என்றால் அட்டை எண் '5'லும் ஆரம்பிக்கும். சரிதானே? உங்கள் அட்டை எண் '4'ல் ஆரம்பித்தால் விசாவுக்கும், '5'ல் ஆரம்பித்தால் மாஸ்டர் கார்டுக்கும் Switch அனுப்பி வைக்கும்.

விசா அல்லது மாஸ்டர் கார்டு உங்கள் அட்டைக்குச் சொந்தமான வங்கியைத் தொடர்பு கொண்டு உங்கள் தகவலுக்கான பதிலை (Response message) பெற்றுத் தரும்.அப்புறம் என்ன ஏடிஎம் பணத்தை வாரி வழங்கும். நல்லாப் புரியணும்னா கீழே இருக்கிற படத்தைப் பாருங்க.



முக்கியமான விசயம் இவையெல்லாம் இரண்டு, மூன்று வினாடிகளுக்குள் நடந்து முடிந்துவிடும். என்னே அறிவியலின் வளர்ச்சி. அவ்வளவுதாங்க ஏடிஎம் வேலை பார்க்கிற விதம். அடுத்த பதிவில் Switch, Online shopping மற்றும் சில பாதுகாப்பு முறைகள் குறித்து சொல்கிறேன்.

(தொடரும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Tuesday, July 24, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2

நீங்கள் ஏடிஎம்மில் அட்டையை சொருகியவுடன் Card Reader கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களை எடுத்து தற்காலிகமாக சேமித்து வைத்துக் கொள்ளும் என சொல்லியிருந்தேன். அதன் பிறகு உங்களது நான்கிலக்க கடவுச்சொல்லைத் (PIN) தருமாறு கேட்கும். பின்னர் உங்களுக்குத் தேவையான தொகையைக் கேட்கும்.

இவ்வாறு அட்டையிலிருந்தும், நம்மிடம் இருந்தும் பெற்ற விசயங்களையெல்லாம் மொத்தமாக சேர்த்து ஒரு தகவலை (Request Message) உருவாக்கும். அந்தத் தகவலில் நமது அட்டை எண், காலாவதியாகும் தேதி, உருமாற்றப்பட்ட (Encrypt செய்யப்பட்ட) நமது கடவுச்சொல், நமக்குத் தேவையான தொகை ஆகிய எல்லாமும் இருக்கும். இப்படி ஏடிஎம் தகவல்களை உருவாக்குவதற்கு ஒரு ISO 8580 என்ற ஒரு முறை உள்ளது. உலகில் உள்ள எல்லா ஏடிஎம்களும் இதே முறையில் தான் தகவல்களை உருவாக்கும். இந்தத் தகவலை உருவாக்குவதற்கான மென்பொருள் ஏடிஎம்மில் நிறுவப்பட்டிருக்கும்.

பின்னர் அந்தத் தகவலை ஏடிஎம் கண்ட்ரோலர் (ATM Controller) என்ற மென்பொருளுக்கு அனுப்பும். இந்த கண்ட்ரோலர் தான் ஒரு வங்கியின் அனைத்து ஏடிஎம்களையும் கட்டுப்படுத்தும் மென்பொருள் ஆகும். ஒரு வங்கிக்கு இந்தியாவில் சுமார் 400 ஏடிஎம்கள் இருந்தாலும் ஒரு ஏடிஎம் கண்ட்ரோலர் தான் இருக்கும். ஏடிஎம் கண்ட்ரோலர் ஒரு Centralised software ஆகும். இது கணினி மென்பொருள் வல்லுனர்களால் அந்தந்த வங்கியின் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும்.

ஏடிஎம் கண்ட்ரோலர் சில அடிப்படை சோதனைகளை மட்டும் அந்தத் தகவலில் செய்து விட்டு பின்னர் அந்தத் தகவலை Switch எனப்படும் மென்பொருள் பகுதிக்கு அனுப்பும். Switch என்பது ஏடிஎம் கண்ட்ரோலர், Internet banking, விசா, மாஸ்டர் கார்ட் போன்ற பிறவற்றுடனும் தொடர்பு கொண்டிருக்கும். அவை பற்றி பின்னர் தெளிவாக சொல்கிறேன்.

பின்னர் Switch ஏடிஎம் அனுப்பிய அந்தத் தகவலை பிரித்து மேயும். அந்தத் தகவலின் எல்லாப் பகுதிகளும் சரியாக இருக்கிறதா (Message format validation) செய்யும். உதாரணத்திற்கு, அட்டை எண் கண்டிப்பாக 14,16 அல்லது 19 இலக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அப்புறம் CVV1 என்று சொன்னேன் இல்லையா? அது எல்லாம் சரிதானா என்று algorithm உபயோகித்து சரி பார்க்கும். இந்த மாதிரி பல வேலைகளை switch செய்யும். வங்கிக்கான மென்பொருள்களில் Switch மிகவும் முக்கியமானதாகும். அது பற்றி பின்னர் சொல்கிறேன்.

பின்னர் நமது கடவுச்சொல்லை சரிபார்க்க RACAL/HSM (Host Security Module) என்னும் ஒரு வன்பொருளுக்கு அனுப்பும். அந்த வன்பொருளில் உள்ள மென்பொருள் ஒரு algorithm உபயோகித்து நாம் கொடுத்த கடவுச்சொல் சரிதானா எனப் பார்க்கும். சரி என்றால் அடுத்து நேராக அந்தத் தகவலை Switch வழியாக நமது வங்கிக் கணக்கு விபரங்கள் இருக்கும் Databaseக்கு அனுப்பும்.

அங்கே நமது வங்கிக் கணக்கில் நாம் கேட்ட அளவு பணம் இருக்கிறதா என சோதனை செய்து விட்டு திரும்பவும் ஒரு தகவலை (Response message) அனுப்பும். அதாவது 'இவன் கணக்கில் பணம் உள்ளது. ஆகவே இவனுக்குப் பணம் கொடு ஏடிஎம்மே' என்பது போல ஒரு தகவல். அந்தத் தகவல் திரும்பவும் Switch, ஏடிஎம் கண்ட்ரோலர் வழியாக ஏடிஎம்மை வந்தடைந்து ஏடிஎம் அந்தத் தகவலைச் சரிபார்த்தவுடன் நமக்குப் பணத்தை வாரி வழங்கும்.

கீழே இருக்கும் படத்தைக் கிளிக்கிப் பார்த்தால் புரியும்.


இன்னொரு முக்கியமான விசயம் நமது கடவுச் சொல் (PIN) எந்த ஒரு இடத்திலும் வங்கியினால் சேமித்து வைக்கப்பட்டிருக்காது. வைக்கவும் கூடாது. எல்லாம் RBI உத்தரவு. ஆகவே தான் RACAL/HSM அந்தக் கடவுச்சொல் சரியா, தவறா என்று மட்டுமே பார்க்கும். வேறு எங்குமே சேமித்து வைக்காது.

சரி. மேலே சொன்னது எல்லாம் நமது வங்கிக் கணக்கு எந்த வங்கியில் இருக்கிறதோ அதே வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் நடைபெறும் முறை. அதாவது ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையைக் கொண்டு ஹெச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முறை. அப்ப சிட்டி பேங்க் அட்டையை வைத்து ஹெச்டிஎப்சி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் என்ன ஆகும்? அது அடுத்த பதிவில்.

(தொடரும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1


Wednesday, July 18, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

நான் இரண்டு வருடங்கள் Banking domain-ல வேலை பார்த்ததுனால ஓரளவுக்கு ஏடிஎம்,கடன்/வங்கிக் கணக்கு அட்டை, இணைய வியாபாரம்(?) (Online shopping) இதிலெல்லாம் கொஞ்சம் ஞானம் உண்டு. அவை பற்றித் தான் எழுதலாம்னு இருக்கேன். படிக்கிறவுங்க சும்மா போகாம, புரிஞ்சுதா இல்லையாங்கிறதையும், ரொம்ப Technical terms உபயோகிக்கிறேனாங்கிறதையும் கருத்தாகச் சொல்லிவிட்டுப் போங்கள்.சந்தேகங்கள் இருந்தாலும் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இப்போது ஏடிஎம் வசதியில்லாத வங்கியே இல்லைன்னு சொல்லலாம். நாம் ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பித்த உடனே அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு நமக்கு ஒரு பிளாஸ்டிக் அட்டையை வழங்குவார்கள். அதைதான் நாம் ஏடிஎம் அல்லது கடையில் சாமான் வாங்கும் போது பணத்துக்குப் பதிலாக உபயோகிக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். (அப்புறம் எதுக்கு நீ வேற ஒரு தடவை சொல்றன்னு கேட்கக் கூடாது. அப்பத்தான ஒரு flow கிடைக்கும்). அந்த அட்டையில் அப்படி என்ன இருக்குன்னு தெரிந்து கொள்வோம்.

அந்த அட்டையில் உங்கள் அழகான முகம், அட்டை எண், காலாவதியாகும் தேதி போக பின்னால் ஒரு கருப்புப் பட்டையிருக்கும். அதன் பேர் Magnetic Stripe. பிளாப்பியில் இருக்கிறதல்லவா அதேதான். தண்ணீரில் போட்டால் கூட ஒன்றும் ஆகாது(போட்டுப் பார்த்துட்டு ஒப்பேந்து போச்சுன்னா நான் பொறுப்பில்லை). அந்தக் கருப்புப் பட்டையிலும் நமது கார்டு எண், காலாவதியாகும் தேதி போக CVV1(Card Verification Value 1) என்ற ரகசிய எண்ணும் இருக்கும். இது ஒவ்வொரு கார்டுக்கும் வேறாக இருக்கும். உங்களுக்குக் கொடுப்பதற்காக அட்டை செய்யும் போதே அந்த ரகசிய எண்ணை அந்த கருப்புப் பட்டையில் பதிந்து விடுவார்கள்.இது எதற்காக என்றால் ஒருவருடைய அட்டை எண்ணும், காலாவதியாகும் தேதியும் தெரிந்துவிட்டால் வேறு யார் வேண்டுமானாலும் போலி அட்டை செய்து கொள்ளமுடியுமல்லவா? அதைத் தடுக்கத்தான்.

CVV1 என்று இருக்கிறதே CVV2 வேறு இருக்கிறதா என்றால் ஆமாம். உங்கள் அட்டையைத் திருப்பிப் பார்த்தால் கருப்புப் பட்டையின் கீழ் நீங்கள் கையெழுத்திடுவதற்காக வெள்ளை நிறத்தில் ஒரு பட்டையிருக்கும். அதில் கடன் அட்டை என்றால் உங்கள் அட்டை எண்ணும், வங்கிக் கணக்கு அட்டை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணும் அதைத் தொடர்ந்து ஒரு 3 இலக்க எண்ணும் இருக்கும். அது தான் CVV2. இது எதுக்குன்னா இணையத்தில் உபயோகப்படுத்துகிற போது நம்மளோட அட்டைதானா இல்ல போலியான்னு கண்டுபிடிக்கிறதுக்காக. இதுவும் ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபடும். இது ஒவ்வொன்றின் பயன் பற்றியும் பின்னால் விபரமா சொல்கிறேன். இப்போ ஏடிஎம் பற்றிப் பார்க்கலாம்.

ஏடிஎம்ங்கிறது கொஞ்சம் ஹைடெக் அலமாரி. NCR, Diebold நிறுவனங்கள தான் இவைகளின் தயாரிப்புக்குப் புகழ் போனவை. ஏடிஎம் மிகவும் உறுதியானது. அதன் கண்ணாடியைக் கூட யாரும் எளிதில் உடைக்க முடியாது.அதற்குள் ஒரு கணினி இருக்கும். அது தான் நாம் பார்க்கும் screen எல்லாம் காட்டும். விசைப்பலகைக்குப் பதில் நாம் அமுக்கும் எண்கள் கொண்ட Key Pad இருக்கும். அப்புறம் ஒரு Card Reader. நாம ஒரு துவாரத்தில் நமது அட்டையை சொருகுகிறோமே அது தான். அது தான் நமது அட்டையின் பின்னால் இருக்கும் கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களைப் படித்து தற்காலிகமாகச் சேமித்து வைத்துக் கொள்ளும்.

அப்புறம் ஒரு பெட்டகம் (Locker). அதில் தான் பணம் வைக்கும் Slots இருக்கும். ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் இந்த பெட்டகத்தைத் திறந்து ஒவ்வொரு Slotடிலும் 1000,500,100 என்று வைத்து எந்த ஸ்லாட்டில் எந்த ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன என்பதை ஏடிஎம்-மின் கணினியில் பதிந்து விடுவார்கள். மாற்றிப் பதிந்து விட்டால் சீன் தான். 500 எடுப்பவனுக்கு 1000மும், 1000 எடுப்பவனுக்கு 100ம் போகும். அதனால் இதை செய்யும் போது கவனமாக இருப்பார்கள். குறிப்பாக இந்தியாவில் தற்போதுள்ள ஏடிஎம் வகைகளில் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் வசதியும், எந்த ரூபாய் நோட்டு என்று அறிந்து கொள்ளும் வசதியும் கிடையாது. வெளிநாடுகளில் இருக்கலாம் என நினைக்கிறேன்.

மேலும் ரசீது கொடுக்கும் ஒரு ஸ்லாட்டும், ஏடிஎம்மில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக EJ (Electronic Journal) எனப்படும் காகித ரோலும் இருக்கும். இந்தக் காகித ரோலில நாம் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலோ, ஏடிஎம்மைத் திறந்தாலோ, நாம் என்ன செய்தாலும் அந்தக் காகித ரோலில் எழுதிக் கொண்டே வரும். காகிதம் தீர்ந்து போனால் கூட memoryயில் பதிந்து வைத்துக் கொண்டு காகித ரோலை மாட்டின உடனே 'ஒரு கடமை தவறாத காவல்துறை அதிகாரி' போல கட கட வென எழுதித் தள்ளிவிட்டு தான் மறுவேலை பார்க்கும். இது விமானங்களில் இருக்கும் கருப்புப் பெட்டி போல் பின்னால் என்ன பிரச்சினையென்றாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள உதவும்.

அப்புறம் ஒரு குப்பைத் தொட்டி. இது எதுக்குன்னா உங்களுக்கு ரசீது கொடுக்கும் போதோ, அல்லது பணம் கொடுக்கும் போதோ கிழிந்து அல்லது எசகு பிசகாக மாட்டி விட்டாலோ அதை அப்படியே உள்ளே இழுத்து இந்தக் குப்பைத் தொட்டியில் போட்டு விடும். இது போக பணம் கொடுக்கும் Cash dispenser, பணம் அல்லது செக் டெபாசிட் செய்ய உதவும் Slotகளும் இதில் உள்ளன.

ஆக இவ்வளவு சாமான் சட்டுகளும் ஒரு ஏடிஎம் பெட்டியில் உள்ளன. சரி அட்டையைப் போட்டவுடனே கொஞ்ச நேரத்தில் எப்படிப் பணம் வருது? அது அடுத்த பதிவில்.

(தொடரும்)