Thursday, July 26, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3

முந்தைய பதிவுகளில் ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னும், அது எப்படி நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்குதுன்னும் பார்த்தோம். இப்போ ஒரு வங்கியின் ஏடிஎம்மில் வேறொரு வங்கியின் அட்டையை உபயோகித்தால் எப்படிப் பணம் வருதுன்னு பார்க்கலாம்.

உதாரணத்துக்கு ஒரு சிட்டி வங்கியின் ஏடிஎம்மில் ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையை உபயோகித்தால் அது எப்படி செயல்படுதுன்னு பார்க்கலாம். ஏடிஎம்க்கு நமது அட்டையை வைத்து அது எந்த வங்கியின் அட்டை என்றெல்லாம் கண்டுபிடிக்கத் தெரியாது. ஆகவே நாம் பணம் கேட்டால் வழக்கம் போல் ஒரு தகவலை உருவாக்கி அதை ஏடிஎம் கண்ட்ரோலருக்கு அனுப்பி வைக்கும். ஏடிஎம் கண்ட்ரோலர் அந்தத் தகவலை Switchக்கு அனுப்பி வைக்கும்.

Switch தான் அந்தத் தகவலில் இருக்கும் அட்டை எண் அந்த வங்கியினுடையதா அல்லது வேறு ஏதாவது வங்கியினுடையதா எனக் கண்டுபிடிக்கும். அது ஒன்றும் பெரிய வித்தை எல்லாம் இல்லைங்க.உங்களது அட்டை எண்ணின் முதல் 6 இலக்கங்களை 'வங்கி அடையாள எண்' (BIN - Bank Identification No) என அழைப்பர். இந்த BINஐ வைத்துத் தான் அது அந்த வங்கியின் அட்டையா அல்லது பிற வங்கியின் அட்டையா எனக் கண்டுபிடிக்கும்.

உதாரணத்துக்கு நீங்கள் சிட்டி வங்கி டெபிட் அட்டை வைத்திருக்கிறீர்களா?. அதில் உங்கள் அட்டையின் முதல் 6 இலக்கங்கள் 508159,508125,508126 என்ற மூன்றில் ஒன்றாகத் தான் இருக்கும். சரி தானே?. இதே போல் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட இலக்கங்களைத் தங்களுக்காக வைத்திருப்பார்கள். Switch எப்படி மற்ற வங்கியின் அட்டைகளைக் கண்டுபிடிக்கிறது? ரொம்ப சிம்பிள். ஒரு வங்கி 3 BIN வைத்திருக்கிறதென்றால் அவை தவிர மற்றவையெல்லாம் பிற வங்கியினுடையது தான் அல்லவா? :) . இந்த லாஜிக்கில் தான்.

சரி. அந்த அட்டை பிற வங்கியின் அட்டை என்று கண்டுபிடித்தாயிற்று. அப்போ அந்தத் தகவலை அந்தக் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது?. இங்கே தான் உதவிக்கு வருகின்றன விசா மற்றும் மாஸ்டர் கார்ட்.

விசாவும், மாஸ்டர் கார்டும் ஏஜெண்ட்கள். அவற்றின் வேலையே இந்த மாதிரி வங்கிகளுக்கிடையில் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பது தான். எனவேதான் நாம் உலகில் எங்கு சென்றாலும் நமது அட்டையை ஏடிஎம்மில் உபயோகித்தால் பணம் கிடைக்கிறது. விசா, மாஸ்டர் கார்ட் போல பல ஏஜண்ட்கள் (Diners, American Express) உள்ளன. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் மிகவும் பிரபலமானவை விசா மற்றும் மாஸ்டர் கார்ட் தான்.

சரி. ஓவர் டு Transaction. Switch அந்தத் தகவலை விசாவிற்கோ அல்லது மாஸ்டர் கார்டுக்கோ அனுப்பும். உங்கள் அட்டை விசா அட்டை என்றால் அட்டை எண் '4'லும், மாஸ்டர் கார்ட் அட்டை என்றால் அட்டை எண் '5'லும் ஆரம்பிக்கும். சரிதானே? உங்கள் அட்டை எண் '4'ல் ஆரம்பித்தால் விசாவுக்கும், '5'ல் ஆரம்பித்தால் மாஸ்டர் கார்டுக்கும் Switch அனுப்பி வைக்கும்.

விசா அல்லது மாஸ்டர் கார்டு உங்கள் அட்டைக்குச் சொந்தமான வங்கியைத் தொடர்பு கொண்டு உங்கள் தகவலுக்கான பதிலை (Response message) பெற்றுத் தரும்.அப்புறம் என்ன ஏடிஎம் பணத்தை வாரி வழங்கும். நல்லாப் புரியணும்னா கீழே இருக்கிற படத்தைப் பாருங்க.முக்கியமான விசயம் இவையெல்லாம் இரண்டு, மூன்று வினாடிகளுக்குள் நடந்து முடிந்துவிடும். என்னே அறிவியலின் வளர்ச்சி. அவ்வளவுதாங்க ஏடிஎம் வேலை பார்க்கிற விதம். அடுத்த பதிவில் Switch, Online shopping மற்றும் சில பாதுகாப்பு முறைகள் குறித்து சொல்கிறேன்.

(தொடரும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

6 comments:

அருள் குமார் said...

பயனுள்ள தொடர். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி!

பொன்வண்டு said...

நன்றி அருள்குமார் !

வடுவூர் குமார் said...

படிச்சு முடிச்சி கொஞ்சம் கீழ் பார்த்தா அருமையான, எளிமையான விளையாட்டை போட்டிருக்கீங்க.ஜாலியாக இருக்கு.
இது விளையாட பணம் கொடுக்கவேண்டாம் தானே??:-))

பொன்வண்டு said...

குமார், விளையாட்டுல நீங்க ஒரு நிமிடத்துக்கு மேல தாக்குப்பிடிச்சிட்டீங்கன்னா பெரிய ஆள்தான் !

பொன்வண்டு said...

நன்றி ராஜேஷ் !

பொன்வண்டு said...

// asrajesh said ..

அருமை பொன்வண்டு.... ரொம்ப நல்லா இருந்தது... மிக்க நன்றி..

உங்கள் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். //