Sunday, July 15, 2007

மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா! மக்களின் மத்தியில் காமராஜா!

இன்று ஜூலை15. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம். தமிழக அரசு இந்நாளை இனிவரும் ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாட வேண்டுமென்று அறிவித்திருக்கிறது. மிகவும் வரவேற்கத்தக்கதே.

இவ்வாறு காமரஜர் பிறந்தநாளைப் பள்ளிகளில் கொண்டாடுவது நான் படித்த பள்ளியில் காலகாலமாக நடந்து வரும் ஒன்று. அது நாடார் சமுதாயத்தினர் நடத்தி வந்த பள்ளி. பெருந்தலைவர் பிறந்ததினத்தின் முதல் நாள் எங்கள் பள்ளியில் இருக்கும் ஆளுயர காமராஜர் படத்தை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பிப்பதிலிருந்து பள்ளி களை கட்டிவிடும். பின்னர் கொஞ்சநேரத்தில் தலைமை ஆசிரியரிடமிருந்து வரும் சுற்றறிக்கையில் மறுநாள் எல்லோரும் கண்டிப்பாக சீருடை அணிந்து வரவேண்டும், ஒழுங்காக இத்தனை மணிக்கு பள்ளியில் இருக்கவேண்டும் என்ற கட்டளைகளுடன் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பொரி வழங்கப்படும் என்ற தூண்டிலும் இருக்கும்.

மறுநாள் காலையில் பள்ளிக்குள் நுழையும்போதே "மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா மக்களின் மத்தியில் காமராஜா" என்ற பாடல் வரவேற்கும். அந்தப் பெரிய காமராஜர் படம் சைக்கிள் ரிக்சாவில் வைக்கப்பட்டு பெரிய ரோஜா மாலையினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் அனைவருக்கும் காமராஜர் படம் போட்ட கொடி தரப்பட்டு அனைவரும் சட்டையில் குத்திக் கொள்வோம். அடுத்தவன் கொடி குத்திவிடச் சொன்னால் குத்தி விடுகிற சாக்கில் குண்டூசியால் நறுக்கென மார்பில் குத்தி விட்டு தெரியாமடா என்று சொல்லி வெறுப்பேற்றுவோம். எல்லா வகுப்பு மாணவர்களும் வரிசையில் நிற்க தலைமையாசிரியர் உரையுடன் தேசியக் கொடியேற்றப்பட்டு பின்னர் ஊர்வலம் தொடங்கும். கைகூப்பியபடியுள்ள காமராஜர் படத்துடன் செல்லும் ரிக்சாவைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்கள் காக்கி சீருடையுடன் முதலில் செல்ல அவர்கள் பின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வெள்ளை சீருடையிலும் பன்னிரெண்டாம் வகுப்பு, பதினொன்று என்று வந்து ஆறாம் வகுப்பில் முடியும். எங்கள் பின்னால் ஆண்கள், பெண்கள் தொடக்கப்பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் கடைசியாக அனைவரும் எதிர்பார்க்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் ஊர்வலம் செல்லும் வழியில் வந்து இணைந்து கொள்வர்.

இதற்கிடையில் கமுதியில் இருக்கும் காமராஜர் சிலையைப் பற்றிச் சொல்லவேண்டும். யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் பெரிய சிலையாக சாலை ஓரத்தில் மிகவும் பாதுகாப்பாக கம்பீரத்துடன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதியில் அமைத்திருப்பர். முக்கியமான விசயம் அந்தப் பெரிய சிலைக்கும் வேட்டி, சட்டை அணிவித்து இருப்பர். நான் ஒரு நாள் கூட வேட்டி சட்டை இல்லாமல் பார்த்ததில்லை. பிறந்த நாளன்று புது வேட்டி சட்டையுடன் ஏகப்பட்ட மாலைகளுடன் சிலை அழகாக இருக்கும்.

ஓவர் டு ஊர்வலம். இரண்டு மூன்று நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மட்டும் பந்தாவாக ரிக்சாவின் அருகிலேயே நடந்து செல்வர். ஏனென்றால் ரிக்சாவில் ஒலிப்பெருக்கி மாட்டி காமராஜர் புகழ்பாடும் பாடல்களை அவர்கள் தான் கேசட் மாற்றிப் போட்டு இயக்குவார்கள். மற்றவர்களை அருகிலேயே விடமாட்டார்கள். இவ்வாறாக பட்டையைக் கிளப்பும் ஊர்வலம் நாடார் பஜார், செட்டியார் பஜார், முஸ்லிம் பஜார், தெற்குத் தெரு, மேட்டுத் தெரு வழியாக அமர்க்களமாகச் செல்லும். அனைத்தும் சாதிப்பெயராக இருக்கிறதே என எண்ண வேண்டாம். கமுதியில் அவை மூன்றும் தான் முக்கிய வீதிகள்.

வழியில் சில பெரியவர்கள், வயதான பெண்கள் மட்டும் காமராஜர் படத்தைப் பார்த்துக் கையெடுத்து வணங்குவார்கள். எனக்கு அப்போதெல்லாம் வியப்பாக இருக்கும். சில வீடுகளின் வெளியில் காமராஜர் படம் வைத்து மாலையிட்டு ஏகப்பட்ட மிட்டாய்களை அருகில் தட்டுகளில் வைத்திருப்பார்கள். ஊர்வலத்தில் செல்லும் நாங்கள் போட்டி போட்டு அவற்றை எடுத்துக் கொள்வோம். இப்படி நாங்கள் ஊர்வலமாக வரும் போது எங்கள் எல்லோரது வீடுகளிலுமிருந்து ஆட்கள் வெளியில் வந்து எங்கள் ஊர்வலத்தைப் பார்ப்பார்கள். நாங்கள் அவரவர் வீடு வரும் போது அப்பா, அம்மாக்களைப் பார்த்து கையசப்பதும், வீட்டுக்குள் ஓடிச் சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதும் நடக்கும். எங்கள் உடற்கல்வி ஆசிரியருக்கு மட்டும் இது எல்லாம் பிடிக்காது. உர்ரென்று முறைத்தபடியே எங்களுடன் வருவார்.

ஒருவழியாக ஊர்வலம் முடியும் போது பிற பள்ளி மாணவ, மாணவிகளெல்லாம் அடுத்தடுத்து கழன்று கொள்ள நாங்கள் கடைசியாகப் பள்ளிக்கு வந்து சேருவோம். சிறிது நேரம் கழித்து வகுப்புவாரியாக பொரி விநியோகம் நடைபெறும். அதைத் தின்பது கொஞ்சமாகவும், தெருவில் சிதறுவது அதிகமாகவும் சேட்டைகள் செய்து கொண்டே வீட்டினைச் சென்றடவோம். இவ்வாறாக எனது பள்ளிக்காலம் முழுவதும் பன்னிரெண்டு ஆண்டுகள் பெருந்தலைவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மரியாதை செய்திருக்கிறேன். பள்ளி முடித்து கல்லூரியில் பயின்ற போது இவ்வாறான ஊர்வலம் சாலையோரம் எனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கடந்து சென்ற போது எங்கள் அனைவருக்குமே பழைய நினைவுகள் வந்து ஆட்கொண்டன. அதைக் காட்டிக் கொள்ளாமல் ஊர்வலத்தில் இருந்த மாணவர்களுக்குக் கையசைத்துவிட்டு நின்றோம். இப்போது அந்தப் பெருந்தலைவரின் பிறந்தநாளன்று, தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு அவரது குணத்தில் பத்து சதவீதமாவது கிடைக்கவேண்டும் என எண்ணிக் கொள்கிறேன்.

1 comment:

மாசிலா said...

//இப்போது அந்தப் பெருந்தலைவரின் பிறந்தநாளன்று, தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு அவரது குணத்தில் பத்து சதவீதமாவது கிடைக்கவேண்டும் என எண்ணிக் கொள்கிறேன்.//

இப்போதுள்ள அரசியல் வியாதிகளிடம் எந்த நல்லதையும் எதிர்பார்க்க முடியாதைய்யா. சுய நலத்தின் முழு உருவந்தான் இன்றைய அரசியல் வியாதிகள்.

அது என்னவோ தெரியவில்லை, பெருந்தலைவர் காமராசர் ஐயாவின் பெயரை கேட்ட உடனே எனக்கு கண்கள் கலங்குகின்றன. அவர் நம்மிடையே இருந்து வாழ்ந்து மறைந்த ஒரு 'கடவுள்'

ஐயா காமராசரின் புகழ் என்றென்றும் நிலைத்து ஓங்குக. இளைய சமுதாயத்தினர் இத்தகைய அரும்பெரும் கர்ம வீரரின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

நல்ல பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி பொன்வண்டு.