Monday, February 11, 2008

தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் ! பிரம்மாண்டமாய் !


போன வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராமேஸ்வரம் சென்று வந்தது தான் என் முதல் பதிவாக மலர்ந்தது. அது போல இந்த வருடமும் ஒரு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்து இதுவரை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் மட்டுமே பார்த்திருந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.

கூட வருவதாக சொல்லியிருந்த நண்பன் கடைசி நேரத்தில் கழன்று கொள்ள நான் மட்டும் இராமநாதபுரத்தில் இருந்து தனியே புறப்பட வேண்டியதாயிற்று. ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பின் தஞ்சை சென்றடையும் போது காலை மணி 11. பிரம்மாண்டமான கோபுரம் வரவேற்க ஆச்சரியத்துடன் உள்ளே சென்றேன்.

பெருவுடையார் சன்னிதி்

சன்னிதியின் கூரையில் ஒரே கல்லில் செய்யப்பட்ட கல் வளையம்பொன்னியின் செல்வராகிய இராஜராஜ சோழர், சோழர் பெருமையை தமிழுலகம் என்றென்றும் பேசவேண்டும் என்று பெருமிதத்துடன் கட்டிய பிரம்மாண்டக் கோவில். முதலில் சுவாமியைத் தரிசித்து விட்டுப் பின்னர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் முதலில் பிரம்மாண்ட நந்தியையும், பின்னர் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) சன்னிதியையும் சென்று தரிசித்தேன். மிகப்பெரிய சிவலிங்கம். எட்டி எட்டிப் பார்த்து தரிசிக்க வேலையே வைக்காமல் வாயிலிலிருந்தே நல்ல தரிசனம் கிடைத்தது. கூட்டமும் குறைவு. சிறப்பு தரிசனம், தர்ம தரிசனம் என்ற பேச்சே இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை. சாமியைப் பார்க்க அடிதடி இருந்தால் தானே இந்த முறைகளெல்லாம் தேவை?

பின்னர் பிரகாரத்தை சுற்றி வந்து விநாயகர், முருகர், குரு, சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகி (பிரஹன்நாயகி) சந்நிதிகளுக்கும் சென்று தரிசித்தேன். பின்னர் கோவிலைச் சுற்றி வந்து சிற்பங்களைப் பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஆரம்பித்தேன். பெருவுடையார், நந்தி, பெருவுடையார் சன்னிதியின் மேல் கலசம் இருக்கும் பெரிய விமானம் எல்லாமே ஒரே கல்லால் செய்யப்பட்டவை என்று தெரிந்தபோது ஆச்சரியமே மிஞ்சியது.

பெரிய நந்திஒரு கல்வெட்டுகோவிலின் ஒரு பகுதிகோவிலின் வெளிச்சுவர், பிரகாரச்சுவர் என எல்லா இடங்களிலும் கல்வெட்டுகள், கல்வெட்டுகள் மட்டுமே. அதனால் தான் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இந்தக் கோவில் இருக்கிறது. இவை அனைத்தும் இராஜராஜசோழன் காலத்தவை. அவரின் ஆட்சிக்கால சிறப்பையும், கொடைகளையும் இதில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். பெருவுடையார் சன்னிதியைச் சுற்றி முழுவதும் அழகழகான சிற்பங்கள் உள்ளன. பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் பெருவுடையார் சன்னிதியின் உட்புறம் இருக்கும் சுவர்களிலும் பெரிய பெரிய தூண்களிலும் சிற்பங்களே இல்லாமல் வெறுமனே இருக்கின்றன. காரணம் தெரியவில்லை. ஒருவேளை சிற்பங்களால் கோபுரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் வலிமை குறையக் கூடும் என்ற காரணமாக இருக்கலாம்.

அழகான சில ஓவியங்கள்

கோவிலின் உள்புறம் நாயன்மார்கள் மற்றும் 108 சிவலிங்கங்கள் இருக்கும் சுற்று மண்டபம் முழுவதும் அழகழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நம் ஆட்கள் அதன் அருமை தெரியாமல் தங்கள் பெயர்களையும், I love you என்றெல்லாம் ஓவியங்களின் மேல் கிறுக்கி வைத்திருக்கிறார்கள். :(

பூங்கா மற்றும் நடைபாதை
கோவிலில் கவனித்த இன்னொரு முக்கியமான விசயம் சுத்தம். ஒரு சிறிய காகிதம் கூட இல்லாமல் அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். அறநிலையத்துறை கவனிக்கவும். அப்புறம் கோவிலின் வெளிச்சுவருக்கும், உள்சுற்றுச் சுவருக்கும் இடையில் அருமையான பூங்கா மற்றும் நடைபாதை. கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே ஒரு கோட்டை போன்ற அமைப்பும், ஒரு அகழி போன்ற வாய்க்காலும் காணப்படுகிறது. இது அகழி அல்லது கோவிலின் பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் வரும் வாய்க்காலாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அழகிய குதிரைஅழகான பூதம்இந்தக் கோவில் ஒரு புராதனச் சின்னம்கோவில் வரலாறுதோளில் நார்ப்பையுடனும் கையில் கேமராவுடனும் சுற்றிக் கொண்டிருந்த என்னிடம் "போட்டோ எடுத்துத் தருவீங்களா? எவ்வளவு?" என்று கேட்டு வெறுப்பேற்றினார் ஒரு வேலூர்க்காரர். :). மதியம் 2மணிக்கு எல்லாவற்றையும் பார்த்து விட்டு, வசந்தபவனில் சாப்பிட்டு விட்டு, தஞ்சை வராமல் டேக்கா கொடுத்த நண்பனைப் பார்க்க திருச்சிக்கு பேருந்தில் ஏறினேன்.

40 comments:

குசும்பன் said...

எங்கள் ஊருக்கு சென்று வந்த அனுபவம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

//இருக்கும் பெரிய விமானம் எல்லாமே ஒரே கல்லால் செய்யப்பட்டவை என்று தெரிந்தபோது ஆச்சரியமே மிஞ்சியது.//

ஒரு சின்ன திருத்தம் அந்த விமான கல் ஒரே கல்லால் செய்யப்பட்டது என்று சொல்லபட்டாலும் அது ஆரஞ்சு சுளை போல் பொருத்தப்பட்டது என்று ஆய்வு சொல்கிறது, மேலும் பலர் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது அவ்வளோ பெரியகோபுரம் என்பார்கள் அதுவும் தவறு பல முறை தரையில் கோபுரம் நிழல் விழுவதை பார்த்து இருக்கிறேன்.

படங்கள் அருமையாக இருக்கு.

குசும்பன் said...

//இது அகழி அல்லது கோவிலின் பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் வரும் வாய்க்காலாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.//

அது அகழிதான் அது முன்பு தஞ்சையை சுற்றி இருந்தது பின் காலபோக்கில் மறைந்துவிட்டது இப்பொழுது கோயிலையும் அதை சுற்றி இருக்கும் இடங்களிலும் மட்டும் இருக்கிறது..

பாச மலர் said...

படங்கள் அருமை பொன்வண்டு..முழுத்தேர்வு விடுமுறையென்றால் தஞ்சாவூர்(அம்மா ஊர்) சென்று போட்ட ஆட்டட்ங்களுக்கெல்லாம் ஒரு கொசுவர்த்தி சுற்ற வைத்து விட்டீர்கள்..

கோவிலிலேயே எனக்குப் பிடித்த கோவில் இதுதான்...

//மேலும் பலர் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது அவ்வளோ பெரியகோபுரம் என்பார்கள் அதுவும் தவறு பல முறை தரையில் கோபுரம் நிழல் விழுவதை பார்த்து இருக்கிறேன்.//

நிழல் விழுவதை நானும் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அந்த நிழல் கோபுரத்து மேலேயே பெரும்பாலும் விழும்..தரையில் விழுவது நீளமாக இருக்காது என்று சொல்வார்கள்..வித்தியாசமான கோபுர அமைப்பு காரணம்..

நம் தமிழ்நாட்டில் மற்ற கோவில்களின் கோபுர வடிவத்துக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் நிழலின் அளவைக் குறைத்துக் காட்டும் என்று கேள்வி..

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

கோவிலைச் சுற்றியிருக்கும் அகழி பகைவர் ஊடுருவலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டது.படங்கள் அருமை.
வெளிப்புறம் இருக்கும் இந்த பூங்காவில்தான் பள்ளி,கல்லூரி நாட்களில்"group study"ங்கிற பேரில் கூத்தடித்துவிட்டு செல்வோம்.

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி குசும்பன் !

// எங்கள் ஊருக்கு சென்று வந்த அனுபவம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன். //

ஆமாம் ! மறக்க முடியாத அனுபவம்! சரஸ்வதி மகால் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். திருச்சி போகவேண்டியிருந்ததால் முடியவில்லை.

// ஒரு சின்ன திருத்தம் அந்த விமான கல் ஒரே கல்லால் செய்யப்பட்டது என்று சொல்லபட்டாலும் அது ஆரஞ்சு சுளை போல் பொருத்தப்பட்டது என்று ஆய்வு சொல்கிறது //

தகவலுக்கு நன்றி.

// பல முறை தரையில் கோபுரம் நிழல் விழுவதை பார்த்து இருக்கிறேன். //

நானும் பார்த்தேன். யார் இப்படி கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை :)

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி பாசமலர் !

// கோவிலிலேயே எனக்குப் பிடித்த கோவில் இதுதான்... //

இங்கே பார்த்த சுத்தம் நான் வேறு எந்தக் கோவிலிலும் பார்த்ததில்லை.

வெயில் தான் மண்டையைப் பிளந்தது.

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி நாடோடி இலக்கியன் !

நான் சென்ற போதும் உங்களின் வழித்தோன்றல்களை அங்கே பார்த்தேன் ;). படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

2004 ல் பார்த்துள்ளேன். தங்கள் படங்கள் அருமை அத்துடன் புற்றரைகள் பசுமையாகவும் உள்ளன;
நான் சென்ற போது காய்ந்து கிடந்தன.

வடுவூர் குமார் said...

கோவில் பராமரிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
படங்கள் அருமை.

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ் மற்றும் வடுவூர் குமார் !

கோவிலில் பராமரிப்பு அருமையாக இருக்கிறது. பிற கோவில்களிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று.

உமையணன் said...

பொன்னியின் செல்வன் படிப்பதற்கு முன்பு போனது. இப்போது இன்னொரு முறை போக ஆசையாக இருக்கிறது.

பிப்ரவரி 14 நெருங்கும்போது தஞ்சாவூரை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். பழைய நினைவெல்லாம் வருகிறது.

சுந்தரவடிவேல் said...

Great pictures!

துளசி கோபால் said...

அருமையான படங்கள்.

அந்தக் கல்வளையத்தை நான் பார்த்த நினைவு இல்லை(-:

கோயில் நல்ல சுத்தமா இருக்கு. நான் போனது 18 வருசம் முன்பு.

வாசலில் யானை ஒருத்தர் இருந்தார்:-)

கருப்பன்/Karuppan said...

தஞ்சைக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன... கிட்டத்தட்ட 15 வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் பதிவு எனக்கு மீண்டும் பார்க்கும் ஆசையை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் மீண்டும் தஞ்சைக்கு வருவேன்!!

தங்கவேல் said...

Day before yesterday i had visited Tanjore periya koil and took photographs. Very soon I will write my views about the great temple in my blog.
Your photographs are really good. Thanks for sharing them.

thanjavurkaran said...

மிகவும் அருமையான புகைப்படங்கள்.
கோயில் மிகவும் சுத்தமாக இருப்பதை நானும் சென்ற முறை விடுமுறைக்கு போனபோது கவனித்தேன். நீங்கள் போன நேரம்தான் சரி. நான் மாலை ஆறு மணி வாக்கில் போய்விட்டு கூட்டம் அதுவும் காதல் ஜோடிகளின் செய்கையை கண்டு உடன் வந்து விட்டேன். அதற்கும் சில மாதங்களுக்கு முன் போலீஸ் ஆப்பு வைத்துவிட்டது.
நான் சிறுவனாய் இருந்த பொது சதய விழாவிற்கு தவறாது போவோம். ஆர்.எம்.வீ. நெடுஞ்செழியன், வெள்ளூர் வீராசாமி போன்ற மந்திரிகள் வருவார்கள். எல்லாருமே செல்வாக்கா தான் இருந்தார்கள்.
ராசி எல்லாம் சில துப்பறியும் (துப்பற்ற) பத்திரிக்கைகள் கிளப்பிவிட்ட புரளி.

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி உமையணன் !!

// பிப்ரவரி 14 நெருங்கும்போது தஞ்சாவூரை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். பழைய நினைவெல்லாம் வருகிறது. //

ஹிஹிஹி என்ன இது ??? அதையும் கொஞ்சம் பதிவாப் போடுங்க... (ஓசில காதல் கதை கேட்கிறதுன்னா எங்களுக்கெலாம் அல்வா சாப்பிடுற மாதிரி :))))))) )

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி சுந்தரவடிவேல் !!

// Great pictures! //

மிக்க நன்றி. எல்லோருமே படங்கள் நல்லா இருக்குன்னு சொல்றாங்க.. எல்லோருக்கும் நன்றி... நான் ரொம்பல்லாம் மெனக்கெட்டு எடுக்கலை. எடுத்த 130(!) படத்துல நல்லா இருந்ததை மட்டும் போட்டிருக்கேன்.... :)

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி துளசி டீச்சர்!

// அந்தக் கல்வளையத்தை நான் பார்த்த நினைவு இல்லை(-: //

உள்ளே நுழையும் போது அண்ணாந்து பார்த்தால் தெரியும். அந்த இடத்தில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. தெரியாமல் எடுத்தது. :)

// வாசலில் யானை ஒருத்தர் இருந்தார்:-) //

இப்பவும் இருக்கார் ... கொஞ்சம் குட்டியா!! :)

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி கருப்பன் !

// உங்கள் பதிவு எனக்கு மீண்டும் பார்க்கும் ஆசையை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் மீண்டும் தஞ்சைக்கு வருவேன்!! //

கண்டிப்பாக.. போய்ட்டு வந்து மறக்காம பதிவு போடுங்க.. :)

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி தங்கவேல் !

// Very soon I will write my views about the great temple in my blog. //

சீக்கிரம். நிறைய படமெல்லாம் பதிவிலே போடுங்க .... :)

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி தஞ்சாவூர்காரன் !

நான் போனபோது கூட்டம் ரொம்பவே குறைவு .. ஆனால் 1 மணிக்கு மேல் நிறைய சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குள் நான் முக்கால்வாசி் சுற்றிப் பார்த்திருந்தேன். :)

சதயவிழா இராஜராஜருக்கு நாம் செய்யும் மரியாதை. அதை ராசி அது இது என்று கொச்சைப்படுத்துவது இன்றைய அரசியல்வியாதிகளின் தேவையற்ற பயம்.

cheena (சீனா) said...

நான் பிறந்த தஞ்சையின் அரிய பெரிய கோவிலைப் பற்றிய பதிவு அருமை. அக்கோவிலின் மூலை முடுக்கெல்லாம் ஓடி விளையாடிய சிறுவயது மகிழ்ச்சியை மனதில் அசை போட வைத்துவிட்டீர்கள். எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் நான் தான் அவர்களுக்கு வழி காட்டி. கோவிலின் அருகே ஓடும் புதாறு - சிறு வயதில் குளித்து மகிழ்ந்த ஆறு. இரவினிலே ஓடீப்போய் உணவுண்ணும் பெரிய நந்தியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்த கட்டுக்கதையும் சொன்னதுண்டு. குடியரசுத்தலைவர் இராஜேந்திரப் பிரசாத் வருகை புரிந்த போது, படிக்கட்டின் ஓரத்தில் - பெருவுடையார் சன்னிதிக்கு முன்புறம் சாரம் கட்டினார்கள் (Slope). கோபுரத்தில் ஒரு வெள்ளையனின் பொம்மை இருக்கும். முதலை போன்ற பல்லி (ஓணான் ?) ஒன்றும் இருக்கும் அக்கோவிலில். பெருவுடையார் கருவறையில் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு ஒரு சுரங்கப் பாதையும் உண்டு. நான் சொன்னதெல்லாம் 1955-1963 காலகட்டத்தில்.

கையேடு said...

ஊருக்கு சென்று திரும்பிய உணர்வைக் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி.

இந்தக் கோபுர நிழல் குறித்த கதைகள் பலவகையில் உலவிக்கொண்டுதானிருக்கிறது. எனது பள்ளி நாட்களில் எனது தமிழாசிரியர் அளித்த ஒரு விளக்கத்தை மீண்டும் நினைவு கூர்கிறேன்.

முதலில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்பதே தவறு. அதன் உச்சியிலிருக்கும் கலசத்தின் நிழல்தான் தரையில் விழாது என்று கூறுவார். அதற்கான காரணம் - நீங்கள் பார்க்கின்ற அந்த அரைகோளவடிவச் சிற்பம் என்பது தனியாக கோபுரத்தின் மேல் பொருத்தப்பட்ட ஒன்று. (இதன் பின்னரும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது).

அச்சிற்பத்தைச் சுற்றி நீங்கள் எட்டு நந்திகளைப் பார்க்க முடியும்(உங்கள் இரண்டாவது படத்தில் ஓரளவிற்குத் தெரிகிறது). அந்த நந்திகளின் உருவம் எவ்வளவு பெரியது என்று தெரிய வேண்டுமா, நீங்கள் உங்கள் இரண்டாவது புகைப்படத்தை நின்று கொண்டு எடுத்திருக்கும் இடத்திற்குப் பின்னால் ஒரு தனி மண்டபம் போன்ற ஒரு அமைப்பு கோயிலைச்சுற்றியிருக்கும். ஏறக்குறைய நீங்கள் நின்று கொண்டு படம் எடுத்த இடத்திற்குப் பின்னர் ஒரு குறைபாடுடைய நந்தியிருக்கும், அது அங்கே கோபுரத்தின் மேல் உட்கார வைக்கப்படவேண்டியது (குறைபாட்டினால் கீழேதான் இருக்கிறார்).

இது எதற்குக் கூறுகிறேன் இப்போது என்று நினைக்கலாம். அந்த அரைகோள வடிவ உச்சிக்கும் அதன் கீழேயிருக்கும் இவ்வெட்டுநந்திகளுக்கும் இடையே ஒரு அகலமான நடைபாதையே இருக்கிறது(ஏறக்குறைய ஒரு இரட்டை மாட்டுவண்டியின் அகலம். இதனால் கோபுரத்தின் நிழல் பெரும்பாலும் அதன் கட்டிடத்திலேயே விழுந்தாலும், இக்கலசத்தின் நிழல் நான் மேலே குறிப்பிட்ட இடைவெளியிலேயே விழுந்துவிடும். அதனால் அக்கலசத்தின் நிழல்தான் தரையில் காணமுடியாதே தவிர கோபுரத்தின் நிழல் அல்ல.
இங்கும் ஒரு குறையிருக்கிறது என்பதுகளின் முற்பகுதியிலென்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லை, கடுமையான புயல் காற்றினால் கலசம் அருகிலிருக்கும் சிவகங்கைப் பூங்காவில் விழுந்துவிட்டதாகவும் அதன் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட புதிய கலசம் பழையதைவிட சற்று உயரமானதாகிவிட்டதாகவும், அதனால் காலைவேளையில் மட்டும் கலசத்தின் நுணிப்பகுதியை மட்டும் ஓரளவிற்குத் தரையில் பார்க்கலாம் என்றும் கூறினார்.

இதுவும், ஒரு செவிவழிச்செய்திதான் ஆனால் தமிழாசிரியர் வகுப்பறையில் கூறியதால் ஓரளவுக்கு நம்பலாம் என்று நினைக்கிறேன்.

18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வகுப்பறைச் சம்பவத்தை நினைவுக்குகொண்டுவந்துவிட்டீர்கள் நன்றி.

பின்னூட்டம் கொஞ்சம் பெரியதாகிவிட்டது மன்னிக்கவும். சொந்த ஊர்கதையென்றவுடன் கட்டுப்படுத்தமுடியவில்லை.

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி சீனா சார்!

உங்கள் சிறுவயது சம்பவங்களை நினைவுபடுத்தியதில் மகிழ்ச்சி. :)

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி கையேடு !

// நீங்கள் உங்கள் இரண்டாவது புகைப்படத்தை நின்று கொண்டு எடுத்திருக்கும் இடத்திற்குப் பின்னால் ஒரு தனி மண்டபம் போன்ற ஒரு அமைப்பு கோயிலைச்சுற்றியிருக்கும். ஏறக்குறைய நீங்கள் நின்று கொண்டு படம் எடுத்த இடத்திற்குப் பின்னர் ஒரு குறைபாடுடைய நந்தியிருக்கும், அது அங்கே கோபுரத்தின் மேல் உட்கார வைக்கப்படவேண்டியது (குறைபாட்டினால் கீழேதான் இருக்கிறார்). //

ஆமாம்!! இருந்தது!! மிகச் சரியாகச் சொல்கிறீர்கள்!!! அந்த நந்தியையும் புகைப்படம் எடுத்தேன். :)

தங்கள் விளக்கம் சந்தேகங்களைப் போக்குகிறது. மிக்க நன்றி . :)

வரலாறு.காம் said...

அருமையான புகைப்படங்கள்.

//அந்த அரைகோள வடிவ உச்சிக்கும் அதன் கீழேயிருக்கும் இவ்வெட்டுநந்திகளுக்கும் இடையே ஒரு அகலமான நடைபாதையே இருக்கிறது(ஏறக்குறைய ஒரு இரட்டை மாட்டுவண்டியின் அகலம்.//

எங்கள் தமிழாசிரியரும் இதே கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஏறிப் பார்த்தபோது ஒரு ஆள் தள்ளாடாமல் நிற்கக்கூட இடமில்லை.

பார்க்க :

கட்டுரை :
http://www.varalaaru.com/default.asp?articleid=362

கலசத்தின் நிழல் புகைப்படங்கள் :

http://www.varalaaru.com/default.asp?articleid=352

நன்றி
கமல்
www.varalaaru.com

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி 'வரலாறு' கமல் :). சுட்டிகளுக்கு நன்றி. சென்று பார்க்கிறேன் :)

கண்மணி said...

கோயில் என்னவோ பிரம்மாண்டமாய் கலைநயம் மிக்கதுதான் .
ஆனால் அரசியல் ரீதியாக அதை ராசியில்லாக் கோயிலாக்கிட்டாங்க.
இன்னமும் முக்கியத்துவம் பெறவேண்டியது.

வீரசுந்தர் said...

அருமையான படங்கள்!

அந்த அழகான பூதம் வாழைப்பழம் சாப்பிடுற மாதிரியே எனக்கு தோனுது, உங்களுக்கு?

நிஜமா நல்லவன் said...

பலமுறை தஞ்சை பெரியகோவிலுக்கு சென்று வந்திருந்த போதிலும் உங்கள் பதிவை படிக்கும் போது மீண்டும் புதிதாய் ஒருமுறை சென்றது போல் உள்ளது. உங்கள் எழுத்து நடை பிரமாதம். வாய்ப்பு கிடைத்தால் கங்கை கொண்ட சோழபுரமும் சென்று வாருங்கள்.

நெல்லைக் கிறுக்கன் said...

பொன்வண்டு,
தமிழனின் கலைப் பொக்கிஷத்தைப் படத்துடன் பதிவிட்டதற்கு நன்றி. உலகில் 200, 300 வருடங்களுக்கு முன் தோன்றிய நகரங்கள் எல்லாம் மிகவும் பெரிதாக பேசப்படுகிற இந்த காலத்தில் இத்தகைய ஒரு மாபெரும் வரலாற்று சின்னத்தையும், அது அமைந்துள்ள மிகச் சிறந்த ஊரையும் நாம் சிறிது உணராமல் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம் என்ற வருத்தம் எனக்கு உண்டு. தஞ்சை, மதுரை போன்ற பழமை வாய்ந்த ஊர்களின் பெருமையை, சிறப்பை எல்லா ஊர்களிலும் உள்ள தமிழ்ர்கள் உணர வேண்டும், மற்ற நாட்டினருக்கும் பரப்ப வேண்டும். கேரள, கர்நாடக சுற்றுலாத் துறைகளோடு ஒப்பிடும் போது நம் தமிழக சுற்றுலாத்துறையின் பங்கீடு மிகக் குறைவு.

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி டீச்சர்.

// ஆனால் அரசியல் ரீதியாக அதை ராசியில்லாக் கோயிலாக்கிட்டாங்க.
இன்னமும் முக்கியத்துவம் பெறவேண்டியது. //

ஆமாம்!

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி வீரசுந்தர் !

// அந்த அழகான பூதம் வாழைப்பழம் சாப்பிடுற மாதிரியே எனக்கு தோனுது, உங்களுக்கு? //

:))))

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன் !

// உங்கள் எழுத்து நடை பிரமாதம். //

நன்றி நன்றி நன்றி !!!! :)

// வாய்ப்பு கிடைத்தால் கங்கை கொண்ட சோழபுரமும் சென்று வாருங்கள். //

எப்பவும் கிறிஸ்துமஸை ஒட்டித்தான் நாலைந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனால் அடுத்தமுறை முயல்கிறேன். :)

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி நெல்லைக் கிறுக்கன் ! :)

// உலகில் 200, 300 வருடங்களுக்கு முன் தோன்றிய நகரங்கள் எல்லாம் மிகவும் பெரிதாக பேசப்படுகிற இந்த காலத்தில் இத்தகைய ஒரு மாபெரும் வரலாற்று சின்னத்தையும், அது அமைந்துள்ள மிகச் சிறந்த ஊரையும் நாம் சிறிது உணராமல் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம் என்ற வருத்தம் எனக்கு உண்டு. //

எனக்கும் :(

RAMASUBRAMANIA SHARMA said...

"படங்களூம், விளக்கங்களூம் அருமை"...

hari raj said...

படங்கள் அருமையாக இருக்கு.தொடர்ந்து எழுதவும். நன்றி.

தமிழ்நெஞ்சம் said...

அருமைங்க. படங்கள் Classic