Friday, April 09, 2010

Bear Grylls - பயம் அறியான் !!


Bear Grylls - பேர் கிரில்ஸ். இந்தப் பெயர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும் நீங்கள் டிஸ்கவரி சேனலை விரும்பிப் பார்ப்பவர் என்றால். இவர் தான் 'ஆபத்தை அரவணைக்கும் அசகாய சூரர்' என்ற அடைமொழியுடன் Man vs Wild என்ற நிகழ்ச்சியில் சாதித்துக் காட்டுபவர்.

தன்னந்தனியே காட்டிலோ, பாலைவனத்திலோ, பனிப்பிரதேசத்திலோ, கடலிலோ, தீவிலோ, ஆற்று வெள்ளத்திலோ நாம் மாட்டிக் கொண்டால் எப்படி சமயோசிதமாகச் சிந்தித்தும், இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மட்டுமே வைத்து அந்தச் சூழலிலிருந்து உயிர் தப்பிப்பது என்பதைக் காட்டுவது தான் இந்த Man vs Wild.

இந்த நிகழ்ச்சியில் தான் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் மனிதராக வந்து கலக்கும் ஹீரோதான் Bear Grylls - பேர் கிரில்ஸ். யார் இவர்? இவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை?

Bear Grylls - பேர் கிரில்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 35 வயதாகும் இவர் பிரிட்டனின் விமானப்படையில் பணியாற்றியவர். 24 வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் ஆங்கிலேயர். ஆபத்துகளை எதிர்நோக்கி அவற்றில் இருந்து மீண்டுவருவதில் கரைகண்டவர். அபாயங்களைக் கண்டு அஞ்சாதவர். ஏன் அதைப் பற்றியே சிந்திக்காதவர்.

தான் இராணுவத்தில் பணியாற்றியபோது கற்றுத் தரப்பட்ட உபாயங்களைக் கொண்டும் , தானாக அறிந்தவற்றைக் கொண்டும் இவர் இந்த நிகழ்ச்சியில் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றை வெல்கிறார்.

விமான விபத்துகளில் சிக்கியும், போர்க்காலங்களில் வேறுவழியின்றி தனிமையில் மாட்டிக் கொள்ள் நேரிடும் வீரர்கள் எப்படி அந்த சூழலை எதிர்கொண்டு உயிருடன் மீண்டு வருவது என்பதை மக்களுக்கு உணர்த்தவேயாம்.

அப்படி என்ன தான் இவர் சொல்லித் தருகிறார்? அதுதான் Survival Techniques.
மனிதன் உயிர்வாழ நெருப்பு அவசியம். கையில் தீப்பெட்டியோ, லைட்டரோ இல்லாத நிலையில் எப்படி நெருப்பு பற்ற வைப்பது, எப்படி காட்டுக்குள் குடில் அமைப்பது, எந்த‌ வ‌கையான‌ செடிக‌ள், ப‌ழ‌ங்க‌ள், காளான்க‌ளைச் சாப்பிட‌லாம், சூழலை உணர்ந்து எப்படி தப்பிப்பது உதாரணமாக ஆற்று வெள்ளம் திடீரென் அதிகமானால் அதை எப்படி உணர்வது போன்றவை.

மனிதர் வெளுத்துக் கட்டுகிறார். மலையேறுவதில் கில்லாடி. இண்டு இடுக்குகளில் நுழைந்து, கும்மிருட்டாய் வௌவால்கள் நிறைந்த குகைக்குள் அலைந்து, நீருக்குள் மூழ்கி என தன் சாகசத் திறமைகளால் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறார்.

இவர் பச்சையாக சாப்பிடாத பூச்சிகள், பாம்புகள், நத்தைகள், மீன்கள், தவளை, பல்லிகள் கிடையாது. 'புரதச்சத்து அதிகம் கிடைக்கும்' என்று எல்லாத்தையும் அப்படியே கடித்துத் தின்பார். ஏன் ஒருமுறை தண்ணீர் தாகம் என்று பாலைவனத்தில் சிறுநீரையும் குடித்தார். இதெல்லாம் செய்தால்தான் இக்கட்டான சூழலில் நாம் உயிர் வாழமுடியும் என்று சொல்கிறார். நமக்காக பாவம் மனிதர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?? இவர் வீட்டில் எப்படித்தான் பொறுத்துக் கொள்கின்றனரோ? சும்மா சொல்லக் கூடாது ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உலகம் முழுவதும்.

இவ்வளவு திறமைகள் இருந்தும் மனிதர் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் மாட்டியிருக்கிறார். முதன்முதலாய் இவரது நிகழ்ச்சி ஒளிபரப்பனபோது இவர் காட்டுக்குள் தனியே இருப்பது போல காட்டியவுடன், 'தனிமனிதனுக்கு எப்படி தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இப்படி தவிக்கவிடலாம்?' என்று சர்ச்சை எழுந்திருக்கிறது. அதன் பின்னர்தான் 'தனிமனித பாதுகாப்பு சட்டவிதிகளின் படி பாதுகாப்பு' வழங்கப்படுவதாக நிகழ்ச்சி துவங்கும் முன்னர் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுவாவது பரவாயில்லை. தான் நடத்தும் நிகழ்ச்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு உண்மை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு இவரது இமேஜ் அதலபாதாளம் சென்றுவிட்டது. அது என்ன? இவரைப் போன்றே 'Les Stroud - லெஸ் ஸ்ட்ராடு' என்றொரு 'காட்டுவாசி' இருக்கிறார். இவரது ரசிகர்களுக்கும், Bear Grylls - பேர்ல் கிரில்ஸின் ரசிகர்களுக்கும் இணையத்தில் ஒரே முட்டல் மோதல் தான். ஏன் இப்படி? Bear Grylls - பேர்ல் கிரில்ஸ் உண்மையிலே திறமையானவரா அல்லது அப்படி முன்னிறுத்தப்படுகிறாரா? Bear Grylls vs Les Stroud யார் சிறந்த காட்டுவாசி அல்லது ஆபத்துகளை வெல்பவர்? இதல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாமே?

6 comments:

infopediaonlinehere said...

very interesting article

Anonymous said...

நானும் எனது குழந்தைகளும் பியர் கிரில்ஸ்க்கு தீவிர ரசிகர்கள், அப்பப்பா என்ன பிரமாதம், நீங்கள் சொன்ன மற்றொரு நபரின் சாகசங்களை எந்த சானலில் பார்க்கலாம். தெரிவியுங்கள் நன்பரே.

பாரதி பரணி said...

சூப்பருங்க.....நான் கோடா க்ரில்சொட ரசிகைங்க....நிகழ்ச்சிய பார்க்கும்போது உடம்பு சிலிர்க்கும் பாருங்க, ச்சான்சே இல்ல....இப்போ நான் US -ல இருக்கேன்...ரொம்ப மிஸ் பண்றேங்க.உங்க பதிவ பார்த்ததும் ஒரே மலரும் நினைவுகள்தான் போங்க..

அந்த competitor -அ பத்தி தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு...சீக்கிரம் உங்க அடுத்த பதிவ எதிர் பார்க்கறேன்.

Yogi said...

நன்றி infopediaonlinehere !!!

Yogi said...

அனானி பேர் கிரில்சை பிடிக்காதவர்கள் இருப்பார்களா ?? விரைவில் அடுத்த பதிவு .... :-)

Yogi said...

உடுக்கை வருகைக்கு நன்றி !! விரைவில் அடுத்த பதிவு போடுகிறேன் .... :-)