மரணம் மனிதனுக்கு இயற்கை தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அதை நேர்கொள்ளும் போது மரணிப்பவரைச் சார்ந்தவர்கள் தான் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். குடும்பத்தினர் ஒருபுறம் அவருக்கு வெளியில் பழக்கமானவர்கள் என மனரீதியான பாதிப்பும், நமக்கு எப்போது ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு அலைக்கழிக்கின்றன.
டிசம்பர் மாதம் பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் போது ஓசூர் தாண்டியதும் ஒரு விபத்து. 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையின் நடுவில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எதோ கனரக வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருந்தார். நான் சென்ற பேருந்து சம்பவ இடத்தைக் கடந்து சென்ற போது சம்பவம் நிகழ்ந்து 10 நிமிடங்களுக்குள் தான் இருக்கும். அன்றைய பயணம் முழுவதும் அதே நினைப்பிலேயே முடிந்தது. இந்த நினைப்பிலிருந்து விடுபடவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. அதன் பின்னர் செய்திகளில் விபத்து, மரணம் குறித்தவைகளைப் பார்க்கும் போது மனம் மிகவும் வருத்தப்பட்டது. முன்பெல்லாம் விபத்து, மரணச் செய்திகளைப் படிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட ஒரு மரணத்தை நேரில் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகவே இருந்தது.
அதன் பின்னர் சிலநாட்கள் கழித்து ஊரில் இருந்து பெங்களூர் திரும்பி வரும்போது எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணத்தையும் காண நேர்ந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்திருந்தார். தலையில் மட்டுமே அடி. தலைக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் முழுவதுமாக தலையை மறைக்காமல்,தொப்பி போல இருக்கும் தலைக்கவசம். ஒருவேளை தலைமுழுவதும் மறைக்கும் கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிர் தப்பியிருப்பாராயிருக்கும். 2,3 நொடிகளுக்கு மேல் அந்த இடத்தைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இந்த சம்பவத்தின் பாதிப்பும் சில நாட்கள் இருந்தது.
மேலே படத்தில் இருக்கும் பையனின் பெயர் சுப்பிரமணியன். ஊர் திருவண்ணாமலை. சென்னையில் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஃப்ரஷராக வேலைக்கு சேர்ந்தவன். வயது 23. நாங்கள் எல்லோரும் சுப்பு என்று அழைப்போம். நான் பெங்களூரில் வேலை கிடைத்ததும் அந்த அலுவலகத்தில் வேலையை விட்ட போது, என் பணிகள் அனைத்தையும் இவனிடம்தான் ஒப்படைத்துவிட்டு வந்தேன். மிகவும் அமைதியான பையன். அழகான சிரிப்பு. அதிர்ந்துகூட பேசமாட்டான். நான் செய்த எல்லா ப்ராஜக்ட்களையும் விளக்கிய போது கவனமாகவும், பொறுப்பாகவும் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டான். அதன்பின் குழுமடல்கள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்தோம்.
சுப்பு இப்போது உயிருடன் இல்லை. :(
அந்த அலுவலகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்த பின் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் இருக்கும் விப்ரோவில் (பழைய MPower) கடந்த டிசம்பரில் வேலைக்குச் சேர்ந்தான். போனமாதம் அலுவகத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இரத்த வாந்தி எடுத்திருக்கிறான். உடனே நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்திருந்திருக்கிறார்கள். எல்லா பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவர்கள் சொன்னது அவனுக்கு ப்ரைன் ட்யூமர் இறுதி நிலை. மறுநாள் சாயங்காலம் சுப்பு உலகை விட்டுச் சென்றுவிட்டான்.
சுப்புவின் மரணம் நண்பர்கள் மூலம் தெரியவந்தபோது ஏற்பட்ட மனச்சங்கடங்களுக்கு அளவே இல்லை. இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலையே பார்க்க முடியவில்லை. பழைய நினைவுகளே ஆட்கொண்டன. 23 வயதில் மரணமா? ஏன் இப்படி? என்ன என்ன கனவுகள் கண்டிருப்பான்? தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? சுப்புவின் மரணம் அவனை நம்பியிருந்த குடும்பத்துக்கு பேரிடி தான்.
ப்ரைன் ட்யூமர் முதல்நிலையிலேயே கண்டுபிடித்திருந்தால் சரிசெய்திருக்க முடியும் என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். அதன் அறிகுறி கடுமையான தலைவலி இருக்குமாம். சுப்புவுக்கும் அப்படி இருந்து அறியாமையால் கவனிக்காமல் இருந்துவிட்டானோ?
எல்லோரும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். மரணம் எல்லோரையும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
சிலரை ரொம்ப தூரத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. அது எப்பவும் சீரான வேகத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வேகம் குறையும் போது நம்மைப் பற்றிக் கொள்கிறது.
சிலரை ரொம்ப அருகில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம்.
சிலரை மரணம் எதிர்நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. இதை ஒன்றும் செய்ய முடியாது. விதி என்று கூட சொல்லிவிடலாம்.
ஆனால் தவிர்க்கக் கூடிய மரணங்களை ஏன் நம் உடல் நலத்தில் அக்கறை கொள்வதன் மூலம் தவிர்க்கக் கூடாது? நம் மரணத்தால் நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்வோம். எனவே உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் நண்பர்களே !!
3 comments:
எல்லோரும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். மரணம் எல்லோரையும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
சிலரை ரொம்ப தூரத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. அது எப்பவும் சீரான வேகத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வேகம் குறையும் போது நம்மைப் பற்றிக் கொள்கிறது.
அருமை ,
மரணம் என்று ஒன்று உள்ளதால்தான் மனிதன் இன்னமும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் வாழ்கின்றான்....
இல்லையென்றால்.....?
மரணம் வெல்ல முடியாததே. தன்னை நம்பியே தன்குடும்பம் என்ற நிலையை மாற்றி தன்னைச்சாராமலும் குடும்பம் இயங்கும் வழிகளை வாழும் காலத்திலேயே ஏற்படுத்த வேண்டும். இளமையில் ஏற்படும் மரணங்களின் வலி மிக கொடுமையானது.
:(
//, மரணச் செய்திகளைப் படிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட ஒரு மரணத்தை நேரில் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகவே இருந்தது.//
உண்மை. எதிர்வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள் ஒரு வலி.
தோழியின் தோழிக்கு ப்ரெயின் ட்யூமர். அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. ஆனாலும் லிவரில் பரவியுள்ளதாம்.
ஒருவருசம் காலக்கெடு கொடுத்துருக்காங்க.
Post a Comment