Monday, May 05, 2008

கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்


உலகம் வெப்பமாவதும், பருவமழைக் குளறுபடிகளும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் விழிப்புணர்வையும், தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் பொறுப்புணர்வின்றி செயல்படும் போது கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சுகின்றன.

பெங்களூர் பூங்கா நகரம் என அழைக்கப்பட்டாலும் அந்தப் பெயரை இழக்கும் நாட்கள் வெகுவிரைவில் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரத்தில் தக்காண பீடபூமியின் தெற்கு எல்லையில் இருப்பதால் மிதமான வெப்பநிலையும், வனங்கள், மழைவளம், தேவையான நிலத்தடி நீர் என இயற்கை வளங்கள் மிகுந்தே இருக்கிறது. ஆனால் போகிற போக்கில் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் நிலை தோன்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பெங்களூர் மட்டுமல்லாது மொத்த கர்நாடகத்துக்கும் மிக முக்கிய வருவாய், வனங்களை அழித்து நிலம் ஒதுக்கிக் கொடுத்ததால் வளர்ந்த கணினி நிறுவனங்கள் கொடுப்பதேயாகும். அசுர வளர்ச்சியும், இந்த நிறுவனங்களின் ஊழியர்களும், இந்நிறுவனங்களில் வேலைதேடி வந்து இங்கே வந்து தங்கியிருப்பவர்கள் மட்டும் தான் இங்கே பெரும்பான்மை மக்கள். நகரின் முக்கிய பிரச்சினையான போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்கள் சிறிய நகரத்தில் அடைந்து கிடக்கும் மக்கள், அவர்களால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெருக்கடிகள், பெரும்பான்மையாக சாலையில் ஓடும் இரவு பகல் பாராமல் கணினி நிறுவன ஊழியர்களை ஏற்றி வரும் வாகனங்கள் தாம்.

போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சாலைகளை அகலப்படுத்தியும், பாலங்கள் கட்டியும் பார்த்தாயிற்று. முடிந்தபாடில்லை. இந்த போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டவை சாலை ஓரங்களில் இருந்த மரங்கள். பாரபட்சம் இல்லாமல் வெட்டிச் சாய்க்கப்பாட்டதன் விளைவு இன்று நகரில் வெப்பநிலை உயர்வு. இந்தக் கோடையில் இன்று வரை பெங்களூரின் அதிகபட்ச வெப்பநிலை 39டிகிரி செல்சியஸ். நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கன்னடர். தமிழ் நன்றாகப் பேசுவார். அவர் சொன்னது "15 வருடம் முன்பு பெங்களூரில் ஏப்ரல் மாதத்தில் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டுதான் வெளியே போகமுடியும். இப்போ பாருங்கள் எவ்வளவு வெயில்!" என்று மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார்.

இந்தப் போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்களுள் ஒன்று முக்கால்வாசிப் பேர் வாகனம் வைத்திருக்கிறார்கள். இங்கே நகரப் பேருந்துகளில் பயணக்கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்கு, தனிவாகனத்தில் சிரமமில்லாமல் செல்லலாம் என்ற எண்ணம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. போக்குவரத்தைக் குறைக்க மெட்ரோ ரயில் என்ற புதிய திட்டத்துக்காக மகாத்மா காந்தி சாலையில் இருக்கும் ஏகப்பட்ட மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அல்சூர் பழைய சென்னை சாலையில் இருக்கும் மரங்களும் சமீபத்தில் வெட்டப்பட்டன. மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதனால் பின்னாளில் ஏற்படும் பாதிப்புகளை ஆராயாமல் தற்காலிகமாகத் தீர்வுகாணும் அரசின் போக்கால் பிற்காலத்தில் பெரிய விளைவுகள் ஏற்படலாம்.

இதுவரை எத்தனையோ ஆயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பதில் புதிய மரக்கன்றுகள் எங்காவது நடப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை. வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் புதிய மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உள்ளது.

போனமாதம் மடிவாளாவில் வெட்டிச்சாய்க்கப்பட்ட மிகப்பெரிய ஆலமரத்தை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது. காரணம் சாலையை அகலமாக்குகிறார்களாம். மடிவாளா காவல் நிலையத்தில் இருந்து செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை நிறுத்தம் வரை உள்ள 200 மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மடிவாளா ஐயப்பன் ஆலயம் அருகில் - சாலையின் ஓரம் கூட இல்லை - அதையும் தாண்டி உள்ளே இருந்த ஒரு மிகப்பெரிய ஆலமரமும், அந்த சாலையில் இருந்த பிற மரங்களும் வெட்டப்பட்டன. என்னதான் இந்த 200 மீட்டருக்கு சாலையை அகலப்படுத்தினாலும், செயிண்ட் ஜான்ஸ் நிறுத்தம் தாண்டி திரும்பவும் சாலை குறுகலாகத்தான் செல்லும். என்ன ஒரு அறிவாளித்தனத்துடன் அரசு இயந்திரம் வேலை செய்கிறது பார்த்தீர்களா?

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 7


இந்த நிலை இங்கே மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் தான். தேசிய நெடுஞ்சாலை 7ல் நான்கு வழிப்பாதைக்காக போடப்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நடும் அறிகுறியே இல்லை. மாறாக சாலையின் நடுவில் மட்டும் பூச்செடிகளை வைத்து அழகு பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் அற்பத்தனமாக செயல்பட்டு மரங்களை வெட்டிவிட்டு, சாலையின் நடுவில் புற்களையும், குரோட்டன்ஸ் செடிகளை வளர்த்து அழகு பார்ப்பதால் மழை பெய்யாது மாறாக வெப்பநிலை மட்டுமே கூடும். கோவை மாவட்டத்தில் ஒரு நான்குவழிச்சாலைக்காக வெட்டப்பட்டு கணக்கு காட்டப்பட்ட மரங்கள் 1300. கணக்கில் வந்தது மட்டுமே இவ்வளவு என்றால் வராததை எல்லாம் நினைத்தால் கண்ணீர் மட்டும் மிஞ்சும்.

குறிப்பாக தமிழகத்தில் முக்கியமான சாலைகள் எல்லாம் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுவதால் ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. தேநெ 7 க்காக கன்னியாகுமரியிலிருந்து ஓசூர்வரை, மதுரை-சென்னை சாலையிலும் பணிகளுக்காக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு வருகின்றன.

மாறிவரும் சூழ்நிலையில் இவையெல்லாம் நாட்டுக்கு முக்கியமான திட்டங்கள்தாம். ஆனால் வெட்டப்படும் மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கும் பொறுப்பும் அரசிடமே உள்ளது என்பதையும் உணரவேண்டும். ஏற்கனவே பெரும்பாலும் வறண்ட பூமியாக உள்ள தமிழகத்தில் இருக்கும் மரங்களையும் வெட்டி விட்டு, பதிலுக்கு மரக்கன்றுகளும் நடாமல் மெத்தனமாக இருந்தால் மேலும் பாதிப்புகள் நமக்குத்தான் பிற்காலத்தில் ஏற்படும் என்பதை அரசுகள் உணரவேண்டும்.

இல்லையெனில் தொழில்வளம் பெருகும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் மழை பெய்யாது, கையில் காசிருந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. :(

8 comments:

ஆயில்யன் said...

//ஆயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பதில் புதிய மரக்கன்றுகள் எங்காவது நடப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை.//

:((((

//கையில் காசிருந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. :(//

இப்படித்தான் வசதிகள் இருந்து வாழ்க்கையின் அடிப்படை தேவைகளின்றி நம் வருங்காலத்தை - இளம்தலைமுறையை- வரவேற்கப்போகிறோம் :(

கிரி said...

வயிறு எரிவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.. இதை போல் செய்பவர்களை மற்றும் முயற்சி எடுக்காதவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும். அது ஏங்க நம்ம ஊர்ல எல்லோரும் இப்படி இயற்கை மேல் ஒரு பற்றுதல் இல்லாமையே இருக்காங்க.

இது தொடர்பான என் இடுகை http://girirajnet.blogspot.com/2008/05/blog-post.html

Thamiz Priyan said...

தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் மரங்கள் சரமாரியாக வெட்டப் படுகின்றன. அரசு இயந்திரங்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனக் குறைவாகவோ அல்லது அவர்களும் சேர்ந்தோ இயங்குகின்றன.... என்ன செய்வது வருத்தமான விஷ்யம் தான்....:(

கருப்பன் (A) Sundar said...

S.M கிருஷ்ணா முதல்வராக இருந்தவரை மரங்களின் கிளைகளை கூட வெட்டுவதற்கு கடும் சட்டங்கள் இருந்தன. ஜெயநகர் 4வது பிளாக்கில் சில ஹோட்டல்களுக்கு கிளைகளை வெட்ட அனுமதி கிடைக்காமல் கிளைகளை சுற்றி கட்டிடம் கட்டியிருப்பார்கள்!!

நிஜமா நல்லவன் said...

படிக்கும் போதே கண்ணீர் துளிர்க்கிறது. எதிர்கால சமுதாயம் வளமோடு வாழ எதையும் விட்டுவைக்க தயாரில்லை போலும். வெட்டப்படும் மரங்கள் ஒவ்வொன்றிக்கும் ஒரு மரக்கன்றாவது நடப்படவேண்டும்.

Tech Shankar said...


தொ(ல்)லை தூரக்கல்வியும் தொடர்ச்சியான வெய்யிலும்

Yogi said...

வருகைக்கு நன்றி ஆயில்யன், கிரி, கருப்பன், நிஜமா நல்லவன், தமிழ் நெஞ்சம்!!

எல்லோரும் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி ..
இதற்கு ஆக்கப்பூர்வமாக எதாவது முயற்சி செய்யமுடியுமானால் தெரிவிக்கலாம்...

Yogi said...

ஊப்ஸ் !!!!!!!!!

தமிழ்பிரியனை விட்டுவிட்டேன் !!!

வருகைக்கு நன்றி தல !!!