'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.
ஒரு சின்ன ப்ளாஷ் பேக். ரெண்டு மாதம் முன்னாடி தூங்கிறப்போ கனவில் கையில் வேலோட முருகனும், அவர் மாமன் அழகரும் வந்து "ஏம்பா, ரெண்டு வருசம் மதுரையில் படிச்சியே எங்களை ஒரு தடவையாவது வந்து எட்டிப் பார்த்தியா? வாராவாரம் அல்வா வாங்கித் திங்கிறதுக்காகவே டவுன்ஹால் சாலை வழியா மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போன நீ அல்வா கிடைக்காதுங்கிறதுக்காக திருப்பரங்குன்றத்துக்கும், அழகர்கோவிலுக்கும் வராம டபாய்ச்சல்ல.. பாரு உனக்கு விடுப்பு கிடைக்காது" அப்படின்னு சொன்னதால "அப்படியெல்லாம் இல்லீங்கோ. நான் கூப்பிட்டப்போ துணைக்கு யாரும் வரமாட்டேன்னு சொன்னதால வரமுடியலீங்கோ. எனக்கு விடுமுறை கிடைச்சா கண்டிப்பா வந்து பார்க்கிறேன்"னு வாக்கு கொடுத்துட்டேன்.
கோவில் குளம்னு கூப்பிட்டாலே கம்பளிப் பூச்சியைப் பார்க்கிற மாதிரி நண்பர்கள் பார்க்கிறதால இப்பவும் தனியாகவே போக வேண்டிய சூழ்நிலை ஆகிப் போச்சு. சரியா இந்த நேரத்துல புரட்சிப்பதிவர் டிபிசிடி வேற மதுரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னதை நம்பி அதையும் என் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கிட்டேன். ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய் அடிக்க முடிவு பண்ணியாச்சு.

கிடைச்சது 9 நாட்கள் விடுமுறை. ஜூன் 7 முதல் 15 வரை. விடு ஜூட். விடுப்புக்கு முதல் நாள் நான் வேலையே பார்க்கலை. எல்லோர்கிட்டயும் போய் "நான் ஊருக்குப் போறேன். ஒரு வாரம் லீவு" அப்படின்னு பீத்திக்கிட்டே திரிஞ்சேன். ரொம்ப பேர் காண்டாகிட்டாங்க. வரும்போது எதாவது திங்கிறதுக்குக் கொண்டு வா. (அட உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதாப்பா? ஊருக்குப் போனா எதாவது திங்க கொண்டு வரணும்னு எவன் சட்டம் போட்டான்?). ஒரு வழியா மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது அதிகாலை மணி 2. டவுன் ஹால் சாலையில் அலைஞ்சு திரிஞ்சு ஒரு விடுதியைக் கண்டுபிடித்து தூங்க ஆரம்பிச்ச போது மணி 2:30.
என் திட்டம் இது தான். முதலில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம். பின்னர் திருப்பரங்குன்றம். அடுத்து அழகர் கோவில். அதற்கப்புறம் மலை மேல் பழமுதிர்ச்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம்.
மீனாட்சி அம்மன் கோவில்சீக்கிரமே மீனாட்சி அம்மன் கோவில் போகணும்னு முடிவு பண்ணியதால் வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே தூக்கம் போட்டேன். காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டமே இல்லாத தரிசனம். அம்மன் சன்னிதியிலேயே கூட்டம் இல்லை. சுவாமி சன்னிதியில் விழாக்காலங்களிலே கூட கூட்டம் இருக்காது. அதுவும் நான் சென்ற போது கூட்டமில்லாமல் ஒரு தரிசனம். பின்னர் பரிவாரங்களை வணங்கிவிட்டு வெளியில் வந்து தெப்பக்குளப் படிக்கட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாயிற்று.

மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் கோபுரம் முழுவதும் தென்னை ஓலையால் மூடிவைத்திருந்தார்கள். கோவிலுக்கு வெளியே சித்திரை வீதி முழுவதும் சாலையைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் சாலையோரக் கடையில் மதுரை ஸ்பெசல் சுடச் சுட இட்லி சாப்பிடலாமென்றால் என் நேரம் ஒரு கடையும் தென்படவில்லை. சரின்னு வெறும் வயிற்றோடவே திருப்பரங்குன்றம் பேருந்து ஏறிய போது மணி 7:30.
திருப்பரங்குன்றம்பெரியாரிலிருந்து கால் மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன். முருகனின் முதல் படை வீட்டைத் தரிசிக்கப் போறோமே, கடவுளை நினைத்துக் கொண்டே செல்லணும் என்று 'சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா' என்ற முருகன் துதியைப் பாடிக்கொண்டே கோவிலுக்குள் வந்து சேர்ந்தேன்.

திருப்பரங்குன்றம் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கோவிலின் அமைப்பு ரொம்பவே வித்தியாசமானது. மலைதான் கோவிலின் ஒரு பக்கம். அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,சிலைகளைச் சுற்றிக் கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் இரண்டு தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் நந்தி, மயில், எலி வாகனங்களின் சிலைகள் உள்ளன. அவற்றுக்கு எதிரே இரண்டாவது தளத்தில் முருகர், துர்க்கை, விநாயகர், முருகனுக்குப் பக்கவாட்டில் பெருமாளும், விநாயகருக்குப் பக்கவாட்டில் சிவனும் உள்ளனர்.
துர்க்கைக்கு சன்னிதிக்கு நேரேதான் ராஜகோபுரம் உள்ளது. முருகர் துர்க்கைக்குப் பக்கவாட்டில், தெய்வானையுடன் பக்கவாட்டில் சிற்பமாகக் காணப்படுகிறார். முருகனுக்கு அருகில் ஒருவர் தாடியுடன் உள்ளார். நாரதர் என்று குருக்கள் சொன்னார், அது தவறு இந்திரன் அல்லது அகத்தியராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இங்கும் கூட்டமில்லை. ரொம்ப நேரம் நின்று வணங்கிய பிறகு தெப்பக்குளம் மற்றும் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் ஒரு அக்கா தெருவோரத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். வெறும் ஐந்து ரூபாய்க்கு சில பல இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு திரும்பவும் பெரியார் நிலையம் வந்து சேர்ந்தேன்.
அழகர் கோவில்அங்கிருந்து பேருந்தில் அழகர் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது மணி 10:15. சுற்றிலும் பச்சை பசேல் என்று மலை. மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில். உள்ளே சென்றால் கோவிலின் வெளியே முதலில் வருவது பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னிதி. இங்கு சாமிக்கு சிலை கிடையாது. மூடப்பட்ட கதவில் சந்தனம் பூசப்பட்டு அதையே கருப்பசாமியாக வழிபடுகிறார்கள். ஏன் என்ற காரணமும், வரலாறும் தெரியவில்லை. ரொம்பவும் சக்திவாய்ந்த கடவுள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெளியே
உள்ளே
மிகுந்த பயபக்தியோடு வணங்கிவிட்டு அழகர் கோவிலின் உள்ளே சென்றால் இங்கும் கூட்டமில்லை. சனிக்கிழமையாதலால் பூஜைகள் நடந்து கொண்டிருந்ததன. கொஞ்ச நேரத்தில் அது முடியவும் அழகரையும் தரிசித்துவிட்டு பிற சன்னிதிகளையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் நம் முன்னோர்களின் குறும்பு. பூஜை முடிந்து வாழைப்பழம் வைத்திருந்தவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.
பழமுதிர்ச்சோலை
அழகர்மலையின் மேலே முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை உள்ளது. இங்கு செல்வதற்கு அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் இருப்பது போல. மலைப்பாதையில் பத்து நிமிடப் பயணம். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இறக்கிவிடுகிறார்கள். இந்த முருகன் கோவில் கொஞ்சம் சிறியது தான். விநாயகர், முருகர், பெருமாள் சன்னிதிகள் மட்டுமே உள்ளன.
இராக்காயி அம்மன் கோவில்
பழமுதிர்ச்சோலையில் இருந்து அதே மலைச்சாலையில் ஒரு பத்து நிமிடம் நடந்தால் நூபுரகங்கை எனப்படும் வற்றாத தீர்த்தக்கிணறு மற்றும் அதை ஒட்டி இருக்கும் இராக்காயி அம்மன் கோவிலையும் தரிசிக்கலாம். எல்லோரும் தீர்த்தக் கிணற்றில் குளித்து விட்டு வந்து தரிசிக்கிறார்கள். நான் தலையில் தெளித்துக் கொண்டு இராக்காயி அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் என் புயல்வேக ஆன்மீகப் பயணம் முடிவுக்கு வந்தது. அப்போது மணி 12:10.
வௌவால் தெரியுதா?
அழகர்மலையின் அழகிய தோற்றம்
திரும்பவும் மலையில் இருந்து இறங்கி அழகர்கோவில் சென்று பின் பெரியார் நிலையத்தில் இறங்கி, சாப்பிட்டு விட்டு டவுன்ஹால் சாலை பிரேமாவிலாஸில் அல்வா சாப்பிட்டுவிட்டு விடுதிக்குச் சென்று பேய்த்தூக்கம் போட்டேன்.
மதுரையில் கண்ட மாற்றங்கள்1. பண்பலை வானொலிகள்
2. மாற்றம் செய்யப்பட்ட பெரியார் நிலையம் மற்றும் புதிய மேம்பாலம்
3. ஏகப்பட்ட ஏர்பஸ்கள். இரண்டுமடங்கு கட்டணம்.
4. தங்கரீகல் திரையரங்கு மாற்றம் செய்து கட்டப்படுகிறது. DTS,ACயுடன்.
5. டவுன்ஹால் சாலையில் ஒரு தேநீர் 4 ரூபாய். அநியாயம்.
என்றும் மாறாததுவாங்கண்ணே என்னும் மக்களின் அன்பு. (ஐஸ் ஐஸ்... நானெல்லாம் உங்களுக்கு அண்ணனா? எப்பவும் அன்புத்தம்பிதேன்)
பெருமாள் தெப்பம் - டவுன்ஹால் சாலை
இந்த அழகான தெப்பக்குளம் நேதாஜி சாலைக்கும் டவுன்ஹால் சாலைக்கும் இடையில் இருக்கிறதென்றால் நம்பமுடிகிறதா? தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்து விட்டதால் இப்பொழுது தெப்பக்குளத்துக்குப் போக வழியே கிடையாது.
சின்ன சந்தேகம்ஏன் அழகர்கோவில் கருப்பசாமி சன்னிதியில் சிலை வழிபாடு இல்லை? யாருக்காவது தெரியுமா?
பதிவர் சந்திப்புமதுரை வந்ததிலிருந்தே பதிவர் டிபிசிடியின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்தன. முதலில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என்று சொன்னபோது என் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு திடீரென்று ஒருநாள் "நான் டிபிசிடி பேசுறேன். இது தான் என் கைப்பேசி எண்" என்று சொல்லிவிட்டு நான் "அப்புறம்" என்பதற்குள் டீங் டீங் டீங். தொடர்பைத் துண்டித்துவிட்டார். அப்புறம் இரண்டு நாட்களாக பேச்சு மூச்சைக் காணோம்.
சந்திப்புக்கு முதல் நாள் தொலைபேசி "எங்க சந்திப்பு நடத்துறீங்க?"ன்னு கேட்க "நாளைக்கு சந்திப்புக்கு நாளைக்குத்தான் முடிவு பண்ணனும்" அப்படின்னு மர்மச்சிரிப்பு சிரிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி.'நான் அவசரமாக போடி போகிறேன். என்னால் உங்களைச் சந்திக்க முடியாது' என்று. பின்னூட்ட பாணியில் ஒரு சோக ஸ்மைலியை அவருக்கு குறுஞ்செய்தியில் அனிச்சையாக அனுப்பிவிட்டேன்.
ஆகக் கூடி சந்திப்பு இருக்குன்னு ஆசையைக் கிளப்பிவிட்டு கடைசியில் எஸ்ஸாகிப் போன டிபிசிடியின் நடவடிக்கைகளில் சந்தேகமும் ஒரு வித பதற்றமும் இருப்பதால் எதற்கும் மலேசியா காவல்துறை அவர்மேல் ரெண்டு கண்ணையும் வைப்பது நல்லது. சந்திப்பு இல்லாததால் சாவகாசமாகக் கிளம்பி இரவு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.