சம்சு என்கிற சம்சுதீன் தான் நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எல்லா வகுப்புகளிலும் வகுப்புத்தலைவன் அதாவது க்ளாஸ் லீடர். தான் பிறப்பெடுத்ததே வகுப்பில் ஒழுக்கத்தைக் கட்டிக்காக்கத்தான் என்பது போல அவன் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது.
க்ளாஸ் லீடரின் கடமைகளான காலையில் வருகைப்பதிவு எடுப்பது, கரும்பலகையைச் சுத்தம் செய்வது, தினமும் பதிவு=45 வருகை=43 மலர்=102 இதழ்=64 என்று எழுதுவது, பையன்களிடம் காசு வாங்கி வகுப்புக்குச் சொந்தமாகப் பிரம்பு (அப்பவே சொந்தச் செலவில் சூனியம்!), கரும்பலகையை அழிக்க டஸ்டர் வாங்குவது என அவன் வேலைப்பட்டியல் நீளும். இது போக நாங்கள் எல்லோரும் இரண்டாவது பீரியட் முடியவும் சூச்சூ போனால் அவன் மட்டும் வகுப்பில் அமர்ந்து காவல் காப்பான். அதாவது வேற வகுப்பு பையன்கள் யாரும் வந்து எதையும் திருடிரக்கூடாதாம் அதுக்காக. மேலும் எப்பவும் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்குவதாலயும், வாத்தியார்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதாலும் ஒவ்வொரு வருடமும் அவனே வகுப்புத்தலைவனாக வாத்தியாரின் ஒருமனதாக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தான்.
சம்சுவின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டது முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நோஞ்சான் பசங்களான நான்,யோகானந்த் என்ற யோகு, பேரையூர் சுரேஷ் மற்றும் எங்கள் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்தான். வகுப்பில் மூன்று வரிசைகளாகப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதிலும் நடுபெஞ்சில் அமர்ந்திருக்கும் நாங்கள் தான் அவன் இம்சையினால் பாதிக்கப்பட்டது. நாங்கள் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்ததால் நன்றாகப் படிக்கிற பசங்க என்று தப்பால்லாம் நினைக்கப்படாது.
நான் குட்டை+சோடாபுட்டி வேறு. யோகுவும் சுரேஷும் அதே. அதான் காரணம். அப்படி என்னன்ன இம்சையெல்லாம் சம்சுவால் எங்களுக்கு வந்தது? வகுப்பில் ஒவ்வொரு பீரியட் முடிந்ததும் போர்டின் முன்னால் வந்து நின்று கொண்டு "டாய் யாரும் பேசாதீங்க. பேர் எழுதுவேன்" என்பான். பின்பெஞ்சில் கழுதை மாதிரிக் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது.
நான் சுரேஷிடம் "இப்ப என்ன அறிவியல் பீரியடாடா?" அப்படின்னு மெல்லமாக் கேட்டால், கழுகு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல என்பேரை போர்டில் எழுதிப்போட்டுவிடுவான். "டேய் இப்ப என்னடா அடுத்து என்ன பீரியட் அப்புடின்னுதான்டா கேட்டேன்" என்று வாக்குவாதம் பண்ணினால் மறுபடியும் என்பேரை எழுதிபோட்டுவிடுவான். அதாவது லீடர் சொல்லியும் கேட்காமல் பேசினேன்னு அர்த்தமாம். அடுத்து வரும் வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கவேண்டும்.
இது பராவாயில்லை. போர்டு அழிக்க டஸ்டரைக் காணவில்லையென்றால் முதல் பெஞ்சில் இருக்கும் எங்கள் யார் நோட்டையாவது எடுத்து டர்ர்ர்ர்ன்னு பேப்பர் கிழித்து போர்டை கீச் கீச்னு சத்தம் வர அழிப்பான். நாங்கள்லாம் நோஞ்சான் வேறு. அவனை எதிர்த்து என்ன செய்யமுடியும்? சுரேஷ் ஒருமுறை நோட்டைக் கிழித்ததற்கு கெட்டவார்த்தையில் திட்ட அவன் பேரை போர்டில் எழுதி அடைப்புக்குறிக்குள் கெட்டவார்த்தை என்று எழுதிப்போட்டுவிட்டான். மாயா என அழைக்கப்பட்ட கணக்கு வாத்தியார் அடி பின்னிவிட்டார்.
விதியை நொந்துகொண்டு சம்சுவின் இம்சைகளைத் தாங்கிக் கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் அறிவியல் பீரியட் பாதியில் எங்கள் வகுப்பு வாசலில் ஒருபையன் காக்கி பேண்ட், வெள்ளைச்சட்டை, டக்இன் செய்து பெல்ட் போட்டுக்கொண்டு "எக்ஸ்க்யூஸ்மி சார்!" அப்படின்னு கூப்பிட்டான். 'யாருப்பா இது துர இங்கிலீசெல்லாம் பேசுது'ன்னு நாங்க வாயைப் பொளந்து பார்க்க "மே ஐ கம் இன் சார்?" அப்படின்னு மறுபடியும் ஆங்கில ஆசிட்டை வீசினான்.
"என்னப்பா வேணும்?" - வாத்தியார்.
"சார் என் பேரு மணிகண்டன். புதுசா சேர்ந்திருக்கேன் சார்"
"சரி உள்ள வாப்பா". வந்தவன் எங்கள் பெஞ்சில் நெரித்துக் கொண்டு உட்கார்ந்தான். பீரியட் முடிந்ததும் சம்சிடம் "டேய் எங்களுக்கே இடம் இல்லை. இவனைப் போய் பின்னால உக்காரச் சொல்லுடா" னு சொன்னால், "போங்கடா .. எலிக்குட்டி மாதிரி எல்லாரும் இருந்துக்கிட்டு முழு பெஞ்சும் வேணுமா? அவன் இங்கதான் இருப்பான்னு" சர்வாதிகாரக் கட்டளை போட்டுட்டான்.
பின் மெதுவாக மணிகண்டனிடம் அவன் பூர்வீகம் விசாரிக்க, அவன் சென்னையில் ஆங்கில வழியில் படித்தவனாம். அவன் அப்பா வேலை பார்க்கும் இடத்தில் கோல்மால் பண்ணிவிட தண்ணியில்லாக் காடுன்னு எங்க ஊருக்கு அனுப்பிட்டாங்களாம். எப்பவும் அவன் தான் முதல் ரேங்க் வாங்குவானாம்.
விசயம் சம்சுக்குக் கேள்விப்பட்டு பேயடித்தது போலாகிவிட்டான். என்னடா இது நமக்குப் போட்டியா ஒரு படிக்கக்கூடிய பையன் வந்திருக்கானேன்னு ரொம்பவும் பயந்து போய்ட்டான். அவன் பயப்படறது தெரிஞ்சதும் நாங்க ஒரே குஷியாகிட்டோம். எப்பவும் மணிகண்டனோடவே சுத்துறது, ஒன்னா சேர்ந்துதான் வீட்டுக்குப் போறது ன்னு திரிஞ்சோம்.
நம்ம தான் 'ஏபிசிடி எங்கப்பன் தாடி' ன்னு ஆங்கிலம் பேசுற ஆளாச்சே! ஆனால் அவன் ஆங்கிலத்தில் பேசி , ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்லி, ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பேசி என ஆங்கிலத்தில் பொளந்து கட்டினான். சம்சுக்கு சரியான ஆப்புடா என நினைச்சிருந்தோம்.
அவனிடம் சம்சுவைப் பற்றி சொல்லியிருந்தோம். "டேய் நீ மாதப் பரிட்சையில சம்சுவை விடக் கூட மதிப்பெண் வாங்கி நீ இந்தக் க்ளாஸ் லீடரா வரணும்டா"ன்னு அடிவாங்கின கையைத் தடவிப் பார்த்துக்கொண்டே சொல்லிவச்சிருந்தோம். மணிகண்டன் வந்தால் எங்களுக்கு இனிமேல் வகுப்பில் எந்தத் தொல்லையும் இருக்காது என நம்பி அவனை நல்லா ஏத்திவிட்டுக்கிட்டிருந்தோம். அவனும் கவலையேபடாதீங்கடான்னு சொல்லியிருந்தான்.
இதுக்கிடையில் காண்டாகிப் போன சம்சு, மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். நாங்கள் அவனுடன் சுற்றுவதால் எங்களையும் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் சாயங்காலம் மைதானத்தில் விளையாடி விட்டு வீட்டுக்குக் கிளம்புறப்போ தூங்குமூஞ்சி மரத்துக்குப் பின்னால இருந்து யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சின்னு போய்ப் பார்த்தால் சம்சு அறிவியல் புத்தகத்தைத் தொறந்து வச்சிக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கான்.
ஒரு பேச்சுக்குப் போய் "ஏண்டா அழுற?"ன்னு கேட்க "பொத்திக்கிட்டுப் போங்கடா. உங்களுக்கென்ன?" ன்னான். இருந்தாலும் எங்களுக்கெல்லாம் அளவிடமுடியாத சந்தோசம். எல்லாம் மணிகண்டனை நினைச்சுப் பயந்து போய்தான் அழுகிறான்னு தெரியும். 'ங்கொய்யால எங்களையா திட்டுற? மவனே! மாட்டுனடி! இந்த மாசத்தோட உன்னோட லீடர் பதவி காலி!'ன்னு சந்தோசமா வீட்டுக்குப் போனோம்.
அடுத்த வாரம் மாதப்பரீட்சை எழுதினோம். மணிகண்டன் எல்லாப் பரீட்சையும் நல்லா எழுதியிருக்கிறதா வேற சொன்னான். சனி, ஞாயிறு விடுமுறை முடிஞ்சி திங்கள்கிழமை எல்லாருக்கும் திருத்தின விடைத்தாள்களைக் கொடுத்தார்கள். வரிசையாக ஒவ்வொரு மதிப்பெண்ணும் வரவும் எங்கள் மதிப்பெண்ணைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மணிகண்டன் மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தோம்.
அடப்படுபாவி!! இப்படி ஏமாத்திட்டியடா !! ஆங்கிலம் தவிர எல்லாத்திலயும் அவன் பெயில்!! திக்கித்திணறி 36 மதிப்பெண் வாங்கியிருந்தான் ஆங்கிலத்தில் !! எங்களுக்கே அவன் முகத்தைப் பார்க்கக் கூச்சமா இருந்தது, ஆஹா ! இவனைப் போய் நம்பி ஏமாந்திருக்கமே!! ன்னு ரொம்ப வருத்தமாப் போச்சு.
அதெல்லாம் விட, சம்சு வந்து அவனைக் கேவலமா ஒரு பார்வை பார்த்தான் பாருங்க .. கொடுமை. அடுத்த வினாடியே சம்சு வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டான்.
"டேய் மணிகண்டா நீ போய் கடைசி பெஞ்சுல உட்காருடா!"
"எதுக்குடா?"
"ம். மக்குப்பசங்கெல்லாம் அங்கதான் உட்காரணும்" அப்படின்னு தெனாவெட்டா சொன்னான். மணிகண்டன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டான்.
என்னது? அப்புறம் நாங்க என்ன பண்ணினோமா?? வாலைச் சுருட்டிக்கிட்டு நம்மளே நல்லாப் படிச்சி முதல் மதிப்பெண் வாங்கி க்ளாஸ் லீடர் ஆகிரணும்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டோம்.