மீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.
பிரச்சினை தமிழக அரசு தான் திட்டமிட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகத் திசை திருப்பப்பட்டு கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாதிக்கப்படும் சூழல் வருவதற்கு முன் தமிழக அரசு "எங்களுக்கும் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கு" என்று தெளிவான விளக்கத்தைத் தக்க காலத்தில் அளித்தது. இல்லையென்றால் இந்நேரம் கர்நாடகத்தில் எல்லாக் கட்சிகளும் மீண்டும் போர்க்கோலம் பூண்டிருக்கும்.
முதலில் செம்மொழி என்றால் என்ன? 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருக்கும் மொழிக்குத்தான் செம்மொழி மரியாதை கிடைக்கும். இதற்கென்று மத்தியஅரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரையை ஆய்வு செய்து செம்மொழி மரியாதையை வழங்கும்.
ஏற்கனவே தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாம் நம் தமிழ்மொழிக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. காரணம் சொல்லவா வேண்டும்? 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், இலக்கியங்களும் கொட்டிக்கிடப்பதே காரணம்.
பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒருமுறை சொன்னார் "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு அதன் தோற்றம் 2000 ஆண்டுகள் எனக் குறைக்கப்பட்டு விட்டது" என்று. உண்மைதான் திருக்குறள் உள்ளிட்ட இலக்கணப்பிழையின்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி தோன்றியிருக்கும் காலத்தை வருடங்களால் கணக்கிடமுடியாது.
செம்மொழி மரியாதை கிடைப்பதால் என்ன லாபம்? சும்மா ஒரு கவுரவம் தான். இது போக தமிழ்மொழி ஆராய்ச்சிகள் நடக்க மத்திய அரசும் நிதியுதவி செய்யும்.
'அதற்காக தமிழும், கன்னடமும் ஒன்றா? தமிழையும் கன்னடத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பதா? தமிழில் இருந்து தோன்றியது தானே கன்னடம்?' என்ற மனநிலையில்தான் ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
இருக்கலாம். கன்னடர்கள் அவர்கள் மொழியும் செம்மொழி ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கான பரிந்துரையையும் செம்மொழி ஆய்வு மையத்திடம் வைத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்து செம்மொழி அந்தஸ்து வழங்கலாமா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
எந்த மொழி செம்மொழி ஆனால் நமக்கென்ன? ஏற்கனவே தமிழ் செம்மொழி ஆகிவிட்டதே? கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென்ன? தமிழின் பாரம்பரியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. நம் மத்திய அரசு செம்மொழி என்று சொல்லித்தான் தமிழ் மிகவும் தொன்மைவாய்ந்த மொழி என்று உலகுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தெரியாமலே எத்தனையோ நாடுகளில் தமிழ் மதிக்கப்பட்டு வருகிறது.
இன்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ நாடுகளின் சிற்றலை வானொலி ஒலிபரப்பில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்தது ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றன. நயாகரா நீர்வீழச்சியின் வரவேற்புப் பலகையில் 'நல்வரவு' என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் பச்சைத் தமிழர்களான நாம் தான் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். மருந்துக்குக் கூட அம்மா, அப்பா என்று சொல்லாத எத்தனையோ பேர் சென்னையில் இருக்கிறார்கள்.
இது போன்ற தேவையில்லாத வழக்குகள் தமிழர்-கன்னடர் உறவை மேலும் மோசமாக்கும். எப்படா வாய்ப்பு கிடைக்கும் தமிழர்களை எதிர்த்துக் களம் இறங்கலாம் எனத் திரியும் நாராயணகவுடா,பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்சன வேதிகே, வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளியா கட்சி போன்ற இனவெறி அமைப்புகளுக்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆகிவிடும்.
எனவே இந்த வழக்கு நமக்குத் தேவையில்லாத ஒன்று. காவேரி விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஒகேனக்கல் விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்தச் செம்மொழி விசயத்தில் தமிழுக்கோ, தமிழகத்துக்கோ, தமிழர்களுக்கோ எந்தவித இழப்பும் பாதிப்பும் இல்லை. வழக்குத் தொடர்ந்திருப்பவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றால் அது கர்நாடகத் தமிழர்களைப் பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்.
தாய்மொழியைப் போற்றுவோம். பிற மொழியைத் தூற்றாமலிருப்போம்.