Monday, January 05, 2009

அபியும் நானும் அபிராமி மெகாமாலும்


புத்தாண்டு அன்னிக்கு படம் பார்த்தால் வருசம் பூராவும் படம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்கிற நல்ல நம்பிக்கையில் கண்டிப்பாகப் பார்க்கணும்னு நினைச்சிருந்த 'அபியும் நானும்' பார்க்கப்போனேன். என் தம்பி அபிராமி மெகா மால்ல பார்க்கலாம்னு சொன்னதால் அங்கேயே போக முடிவு பண்ணிக் கிளம்பிட்டோம். விளம்பரங்களில் வரும் படத்தலைப்பே ஒரு குழந்தை தன் கையெழுத்தில் எழுதியிருப்பது போல் அழகாகக் கவர்ந்ததால் ஒரு எதிர்பார்ப்பு.

என்ன மாலோ கன்றாவியோ நச நசன்னு இத்தினியோண்டு இடத்துல இம்புட்டுக் கடைகளா இதுல தியேட்டர்கள் வேற. சும்மா சுத்தி சுத்திக் கடைகளாக் க‌ட்டியிருக்காங்க. மாடிப்படியெல்லாம் சின்னதா ஒடுக்கமா வச்சி ... ச்சை... எரிச்சல்.

கவுண்டர்ல போய் டிக்கெட் கேட்டால் 10 மணிக் காட்சிக்குத்தான் இருக்குன்னு சொன்னாங்க. மணி 7 தானே ஆகுது அதுவரைக்கும் என்ன பண்றது? 'கிஸ்ஸிங் கார்ஸ்' விளையாடலாம்னு என் தம்பி நச்சரிச்சான். நாலு கழுதை வயசாகுது கார் ஓட்டி விளையாடணுமான்னு டிக்கெட் வாங்கப் போனா அங்க எட்டு கழுதை வயசானதெல்லாம் டிசர்ட் போட்டுக்கிட்டு வரிசையில நிக்கிறாங்க. ஏழு நிமிசம் விளையாடலாம்னு என் தம்பி சொன்னான். படு பாவிங்க கூட்டமா இருக்குன்னு நாலு நிமிசத்துலயே விரட்டி விட்டுட்டாங்க.

ஒரு வழியா பொழுதை ஒப்பேத்திட்டு திரையரங்குக்கு உள்ளே சென்றால் என்னடா வேற படத்துக்கு வந்துட்டமான்னு நினைக்கிற அளவுக்கு 'பஞ்சாமிர்தம்' பட விளம்பரம் ஒரு பத்து தடவை போட்டார்கள். அந்தப் படம் அபிராமி திரையங்க் உரிமையாளரின் தயாரிப்பாம். அடப் போங்கய்யா சன்டிவிக்காரனுங்கதான் காதல் கொண்டேன், தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதின்னு அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தரம் தொல்லை பண்றானுங்கன்னா நீங்களுமா?

ஒரு வழியாப் படத்தைப் போட்டாங்க. ஒரு அப்பா தன் புத்திசாலியான் செல்ல மகளின் மேல் கண்மூடித்தனாமான பாசத்துடன் இருக்கிறார். அவள் தான் தன் உலகம். அவள் இருப்பதால் தான் தனக்குப் பொழுதே போகிறது என எண்ணும் அளவிற்குப் பாசம். தன் மகளின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் தானே சில முடிவுகள் எடுக்கும்போது முதலில் அது சரியா தவறா என அப்பா எண்ணும் போது அது சரியே என மகள் தன் அப்பாவிற்கு உணர்த்துகிறாள்.

சாதாரண சைக்கிள் வாங்குவதற்குக் கூட முதலில் எதிர்ப்புக் காட்டும் அப்பா காதல் திருமணம் செய்து கொண்ட தன் பெற்றோரைப் போலவே தானும் ஒருவரைக் காதலிப்பாதாகச் சொன்னால்? அதுவும் காதலிப்பவர் சர்தார்ஜி என்றால்? வேண்டாவெறுப்பாக இருக்கும் தந்தையின் மனம் எப்படி மாறுகிறது என்ப‌தே கதை.

நாயகனும் காமெடியனும் பிரகாஷ்ராஜே. சொல்லியா கொடுக்கவேண்டும் சும்மா பின்னியிருக்கிறார். மகளாக த்ரிஷா. சின்ன வயது அபியாக வரும் குட்டிப்பாப்பாக்கள் எல்லாம் கொள்ளை அழகு. பிரகாஷ்ராஜிடம் அபியின் கதையைக் கேட்கும் சிறப்புத் தோற்றத்தில் பிருத்விராஜ். 'மொழி' படத்தைப் போலவே படம் முழுவதும் காட்சிகளிலும் வசனத்திலும் நகைச்சுவைப் பட்டாசு. மாப்பிள்ளையாகச் சர்தார்ஜியைக் காட்டும் போது திரையரங்கில் வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு. அதைப்போலவே கதை கேட்கும் பிருத்வியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

தொய்வில்லாமல் நகரும் காட்சியமைப்பு, பிச்சைக்காரராக வந்து பின் குடும்பத்தில் ஒருவராக‌ மாறும் நடிகர் குமரவேலுவின் வசனங்கள் செம காமெடி. படத்தின் வேகத்தைக் குறைப்பவை பாடல்கள் மட்டுமே. குமரவேலு அபியின் குடும்பத்தைப் பற்றிப் பாடும் ஒரு பாடல் மட்டுமே பரவாயில்லை.

ப்ரீகேஜி அட்மிசனுக்காகப் பிரகாஷ்ராஜ் வரிசையில் நிற்பதை முதல் நாள் படத்தில் பார்க்க அடுத்தநாள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை கான்வென்ட்டில் அதைப்போலவே வரிசை. எல்கேஜி அட்மிசனாம். எனக்கு அடக்க முடியாத சிரிப்பு. (மவனே உனக்கும் அந்த நிலைமை வரும்டி!)

ரொம்பவும் எதிர்பார்க்காமல் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு நல்ல படத்தைப் பார்க்க நினைத்தால் கண்டிப்பாக அபியும் நானும் போகலாம்.

கடந்த வாரம் தனது பிறந்தநாளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடிய த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள். லாபநோக்கில்லாமல் தரமான படங்களை மட்டுமே தர வேண்டும் என முடிவெடுத்திருக்கும் பிரகாஷ்ராஜிற்குப் பாராட்டுக்கள்.

அபியும் நானும் ‍- அட்டகாசம்.

7 comments:

பொன்வண்டு said...

PI KA

ச்சின்னப் பையன் said...

இந்த விளம்பர ஸ்டில்லை இப்பத்தான் பாக்கறேன்...

'அபியும் நானும்'னு குழந்தை அபி எழுதினா ' நானும் அப்பாவும்'னுதானே இருக்கணும்?
ஒரு வேளை அப்பா 'அபியும் நானும்'னு எழுதினா , அவர் ச்சின்ன வயசிலேயே எழுதிட்டாரா?

எனக்கு புரியல.. படம் பாத்த நீங்க விளக்குங்க...

TBCD said...

அது காதலில் விழுந்தேன்...

அத்தனை தடவைப் போட்டும் நீர் சரியாப் பார்க்கவில்லை..என்பதாலே திருப்பி திருப்பி போடுறாங்க போலிருக்கு..


//
சன்டிவிக்காரனுங்கதான் காதல் கொண்டேன்,
//

TBCD said...

இது தொடர்ச்சிக்கு...

Vee said...

/* 'அபியும் நானும்'னு குழந்தை அபி எழுதினா ' நானும் அப்பாவும்'னுதானே இருக்கணும்?
ஒரு வேளை அப்பா 'அபியும் நானும்'னு எழுதினா , அவர் ச்சின்ன வயசிலேயே எழுதிட்டாரா? */
Sometimes a dad might mime his son's/daughter's behavior. Have not you seen some adults talking like toddlers to get more intimacy? This one is like that. Here the dad imitates his daughter's handwriting style.

viji said...

அருமையான் பதிவு.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

*~Pearl~* said...

பொன்வண்டு..!! :)


தங்கள் எழுத்து நடை அருமை..!! வாழதுக்கள்..!!!
- முத்து..!!