Sunday, November 30, 2008
சென்னையில் ஒரு மழைக்காலம்
'சென்னையில் மழை பெய்யாது, வெயில் அதிகம், வேர்க்கும், தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும், ஊர் ரொம்ப அழுக்கா இருக்கும், அதெல்லாம் ஒரு ஊரா?' நீங்க அப்படி நினைக்கிற ஆளா?. குறிப்பா பெங்களூர் மக்கள் :). இவை எல்லாம் இருந்ததுதான். ஆனால் 2004 கோடைகாலம் வரை.
அதன்பிறகு 2004 மழைக்காலத்தில் கொட்டித்தீர்க்க ஆரம்பித்த மழை இப்பொழுது வரை வருடாவருடம் தொடர்கிறது. அதனால் சென்னையைப் பத்தி தப்பா நினைக்காம நடப்பு நிலவரத்தையும் தெரிஞ்சுக்கங்க. 2004க்குப் பிறகு இப்போ மீண்டும் நிஷாவின் கோரத்தாண்டவத்தால் சென்னை திரும்பவும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.
ஏற்கனவே இரண்டு வாரங்கள் முன்பு மழை நன்கு பெய்து ஓய்ந்து போய் டிசம்பரில் வரவேண்டிய பனிக்காலம் முன்பே தொடங்கியிருந்தது. (உலகம் வெப்பமயமாதல் காரணமா?) இப்போ தொடர்ந்து ஐந்து நாட்களாகப் பெய்துவரும் மழையால் முதலில் மகிழ்ச்சியாயிருந்தாலும் வெள்ளம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது, 90 பேர் பலி ஆகிய செய்திகளைப் படிக்கவும் நின்று போனது. இப்போதைக்கு மழை பெய்யாமலிருந்தால் போதும் என்று நினைத்தாலும் இதோ இப்போதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டுதான் இருக்கிறது. பெய்யெனப் பெய்யும் மழை. பெய்தும் கெடுக்கும் மழை.
2003ம் வருடம் டிசம்பரில்தான் நானும் பிராஜெக்ட் பண்ண சென்னைக்கு வந்தேன். வடபழனியில் வீடு. இரண்டு படுக்கையறை வாடகை வெறும் 3600. 5 பேர் தங்கியிருந்தோம். அரசல் புரசலாக சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் தெரிந்திருந்தாலும் வாழக்கையே வெறுத்துப் போனது அப்போது தான். ஜனவரியில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை. நாங்கள் தங்கியிருந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் எல்லோரும் சேர்ந்து தண்ணீர் லாரியில் காசு கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினோம். அதுவும் மகா மட்டமாக இருக்கும். கூவத்தின் ஓரத்தில் தெளிந்திருக்கும் தண்ணீரை எடுத்து வந்திருப்பானுங்களோன்னு நினைக்கத் தோணும். வெறும் ஒரு வாளித்தண்ணீரில் குளியல். ஒரு வாளித்தண்ணீரில் ஒரு வாரம் போட்டிருக்கும் உடைகளைத் துவைத்து அலசுவது என மகா கொடுமை.
அந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவு என்பது போல 2004ல் மழைக்காலத்தில் கொட்டித் தீர்த்தது மழை. ஊர் முழுவதும் வெள்ளமென்றாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. அப்பொழுதிலிருந்து இதோ இப்போது வரை தண்ணீர்ப் பிரச்சினையெல்லாம் கிடையாது. தொடர்ந்து மழைபெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டதால் வீடு வாடகையையும் கண்டமேனிக்கு உயர்த்தி விட்டார்கள். நாங்கள் இருந்த வீட்டின் தற்போதைய வாடகை 8500.
இந்த மழைக்காலத்தில் நான் இருக்கும் சூளைமேடு பகுதி எவ்வளவோ தேவலை. எப்பவும் போல வேளச்சேரி, மடிப்பாகம் பகுதிகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. வண்டியை வெளியில் எடுத்து 5 நாட்களாகிறது. ஸ்டெர்லிங் சாலை, கல்லூரி சாலைகளில் தண்ணீர் தேங்கிப் போய் நிற்கிறது. ஆச்சரியம் இவ்வளவு மழைக்குப் பிறகும் சூளைமேடு சப் வேயில் தண்ணீர் தேங்கவேயில்லை. கல்லூரி சாலையில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மகளிர் கிறித்தவக் கல்லூரி, சங்கர நேத்ராலயா போன்ற கூறுகெட்ட குப்பைகள் உள்ளே தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றுகிறேன் என சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.
2000 ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நிகழ்ந்தது போல திரும்பவும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக்கூடாது. அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விடுமுறை என ஒரு தலைபட்சமாக ஆணை பிறப்பித்த அரசைக் கண்டிக்கிறேன். ஏன் தனியார் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் நீச்சலடித்தா அலுவலகம் செல்ல முடியும்? ;) . அடுத்த முறையாவது அளவோடு பெய்யட்டும் மழை.
வெயில், வேர்வையெல்லாம் இப்போ சென்னையில் இல்லையா எனக் கேட்கும் பெங்களூர் பெருமான்களே ஒரு வாரமா சென்னையில் ஓசி ஏசி தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஏனுங்க, பெங்களூர் மேல இவ்வளவு காண்டா இருக்கீங்க.
எப்படியோ சென்னையில் தண்ணீர் பிரச்சனை இல்லன்னா சந்தோஷம் தான்
கபீஷ் நானும் ரெண்டு வருசம் பெங்களுரில் குப்பை கொட்டிட்டு இப்போ சென்னையில் இருக்கேன். என் நண்பர்களின் அடாவடி தாங்கவில்லை அதான். :)))
ஓசியில் ஏசி காற்று வாங்குவது பற்றி வெளியில் சொல்லாதீர்கள்.அதற்கும் சேர்த்து 2000 ரூபாய் வாடகை ஏற்றிவிடப்போகிறார்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
அருமையான் பதிவு
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
Post a Comment