Sunday, November 30, 2008
எப்பத்தான் உங்களுக்குப் புத்தி வரும்?
மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு அதற்குக் காரணமானவர்களை விட அதை முன் கூட்டியே தடுக்கத்தவறிய அரசாங்கத்தின் மீது தான் கடும் கோபம் வருகிறது. ஏற்கனவே சாமானியன் வாழமுடியாத நிலையை ஏற்படுத்திப் பெருமை தேடிக் கொண்ட இந்த அரசாங்கத்தால் எங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கையில் பயம் வயிற்றைக் கவ்வுவதை மறைக்கமுடியவில்லை.
புயல், மழை, சுனாமி பேரிடர்கள் என்றாலும் விதியின் பேரில் குற்றம் சொல்லிவிட்டு சும்மா இருக்கலாம். ஆனால் ரயில்நிலையம், ஹோட்டல் போகக்கூட மனதைரியம், உயிர் மேல் ஆசை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்யமுடியும்?
ஏற்கனவே இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழாத முக்கிய நகரமே இல்லை என்னும் அளவுக்கு நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குப் பிறகும் இந்தக் கிழவர்களின் அரசாங்கம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றால் யாருடைய குற்றம் அது?
மும்பையை விட்டுத் தள்ளுவோம். தமிழகத்தில் பாதுகாப்பு கடந்த வாரம் வரை என்ன லட்சணத்தில் இருந்தது தெரியுமா? கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எப்பவும் பெயரளவுக்கு ஒரு சோதனை நுழைவு வைத்திருப்பார்கள். குண்டு வைப்பவன் தலைவாசல் வழியாகத்தான் வருவான் என்பது போல் எப்பவும் 5 போலீசார் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைப் போனவாரம் அங்கே காணவில்லை. காவலர்களும் இல்லை.
எழும்பூர் ரயில் நிலையத்தில் அதைவிட மோசம். பேருந்து நிறுத்தம் அருகில் கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு பயணிகள் நடைமேடைக்கு சாலையிலிருந்து நேரடியாகப் போகுமாறு இருந்தது. அந்த இடத்தில் காவலர்களும் இல்லை. இவையிரண்டும் சில உதாரணங்கள்தான். தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை என்றால் மதுரையில் கேட்கவா வேண்டும். மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் எடை தாங்காமல் சோதனை நுழைவாயில் கத்திக்கூப்பாடு போடுகிறது. அருகில் எந்த ஒரு காவலரும் இல்லை. இந்த மாதிரியான் ஓட்டை உடைசல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு எப்போது முழுஅர்ப்பணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நம்மவர்களுக்குத் தோன்றுமோ தெரியவில்லை.
இந்தியாவில் எல்லா இடங்களிலுமே இப்படித்தானா என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாகவே திருமலை திருப்பதியில் இருக்கிறது. மலையில் ஏறுவதற்குமுன் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி ஒவ்வொருவர் பைகளையும் சோதனை போடுகிறார்கள். பாதயாத்திரை செல்பவர்களுக்கும் முழுசோதனை நடக்கிறது. அத்தகைய பாதுகாப்பு எல்லா இடங்களிலும் இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான தாக்குதல்களைத் தடுக்கமுடியும்.
சந்திரனுக்கு விண்கலம் செலுத்தி மனிதனையும் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இருக்கும் நாட்டில் கேவலம் பொது இடங்களில் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்றால் நம்மை ஆள்பவர்களின் முகத்தில் காறி உமிழத்தான் வேண்டும். :(
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment