
உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை.
2800ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் குப்பையாகி மனித இனமே இல்லாமல் வெறிச்சோடிப்போய் எல்லோரும் பூமியைவிட்டே வெளியேறி வானவெளியில் ஒரு தனிஉலகம் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். குப்பை என்றால் கொஞ்ச நஞ்ச குப்பை அல்ல. அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை. மருந்துக்குக் கூட மரங்களே கிடையாது. எனவே குப்பைகளை எல்லாம் செங்கல்களை போல மாற்றி கோபுரம் கோபுரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி குப்பைகளைச் சேகரித்து அமுக்கி சதுரமாக, செங்கல்லாக மாற்றிக் கோபுரத்தில் ஏற்றும் பணி செய்யும் ஒரு குட்டி ரோபோட்தான் வால்-ஈ(wall-e).
மனிதர்கள் எல்லாம் பூமியை விட்டு வெளியேறிவிட்டாலும் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் தனக்கு இட்ட குப்பை பொறுக்கும் பணியை வால்-ஈ தொடர்ந்து செய்து வருகிறது. சுயமாக சிந்திக்கும் அறிவும் நன்றாகவே உள்ளது. வால்-ஈ சூரியஒளி பேட்டரியால் இயங்கக் கூடியதால் அதற்குப் பகலில் மட்டுமே பணி. பணிக்குச் சென்று திரும்பியதும் ஓய்வெடுக்க ஒரு குப்பைலாரி கன்டெய்னர். அதைத் தன் வீடாகப் பயன்படுத்துகிறது. குப்பை பொறுக்கும் போது தனக்குப் பிடித்தமான அழகான பொருட்களை எல்லாம் சேகரித்து வீடு முழுவதும் அலங்கரித்து வைக்கிறது.
அப்படி ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது தான் திடீரென்று வானத்தில் இருந்து ஒரு ராக்கெட் வந்து பூமியில் வெள்ளை நிறத்தில் யாரையோ இறக்கி விட்டு விட்டுச் செல்கிறது. வேறு யார் கதாநாயகிதான். ஆம் அதுவும் ஒரு அழகான ரோபோட். வால்-ஈயைப் போல அல்லாமல் கொஞ்சம் பெரிய டால்பின் போன்று அழகான நடக்கும் ரோபோட். அதன் பெயர் ஈவா. ரொம்ப புத்திசாலி.
ஈவாவை வால்-ஈ மறைந்து மறைந்து நோட்டம் பார்க்கிறது. வால் ஈ தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்து விட்ட ஈவா டமால் என்று சுட்டுவிட பாவமாக வால்-ஈ ஈவா முன் வந்து நிற்கிறது. வால்-ஈ முந்தைய நூற்றாண்டு ரோபோட். ஈவா ப்ரெஷ் பீஸ். எனவே வால்-ஈயைப் பற்றி தானே ஸ்கேன் செய்து அறிந்து கொள்கிறது ஈவா.
இக்கட்டத்தில் வால்-ஈக்கு ஈவாவின் மேல் விருப்பு+காதல் வந்துவிட அதைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் எல்லாப் பொருள்களையும் அதற்குக் காட்டுகிறது. அப்படித்தான் எடுத்து வைத்த ஒரு குட்டிச் செடியையும் வால்-ஈ ஈவாவுக்குக் காட்டுகிறது. அவ்வளவுதான் ஈவா அதைத் தடால் என்று பறித்து தன் உடலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்த இடத்திலேயே தியானம் செய்வது போல் நின்றுவிடுகிறது. அசையவே இல்லை. வால் ஈக்கு ஒன்றும் புரியவில்லை. "ஈவா ஈவா" என்று கூப்பிட்டுப் பார்க்கிறது. ஈவாவின் உடலில் ஒரு பச்சைவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.
திடீரென ஜடமாகிவிட்ட ஈவாவை வால்-ஈ வெயில், புயலிலிருந்து பாதுகாக்கிறது. சிலநாட்களில் ஈவாவைத் தேடி அதை விட்டுச்சென்ற ராக்கெட் வந்து அதை அழைத்துச் செல்கிறது. ஈவாவைப் பிரிய மனமில்லாத வால்-ஈ ராக்கெட்டில் புட்போர்ட் அடித்துத் தொங்கிக் கொண்டு செல்கிறது.

அந்த ராக்கெட் ஒரு கோள் மாதிரி இருக்கும் விணகலத்தின் உள்ளே செல்கிறது. அங்கே தான் மனிதர்கள் இருக்கிறார்கள் அதாவது பூமியிலிருந்து சென்றவர்கள். அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் இல்லை பரிணாம வளர்ச்சியில் எலும்புகள் எல்லாம் தேய்ந்து ரப்பர் ட்யூப் போன்ற கை கால்களை உடையவர்கள் (பரிணாமத் தேய்ச்சி?) . நடப்பதைக் கூட மறந்து போன எப்பவும் நாற்காலியில் அமர்ந்து உயிர் வாழ்பவர்கள். அவர்கள் உலகமே மிக மிக நவீனமானது. எல்லா வேலைகளுக்கும் ரோபோக்கள்தான்.
அந்த விண்கலத்திற்கும் ஒரு கேப்டன் உண்டு. அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி பூமிக்கு ரோபோக்களை அனுப்பி அங்கே மனிதர்கள் உயிர்வாழ சூழ்நிலை திரும்பிவிட்டதா என அறிவது. தலைமுறை தலைமுறையாக ரோபோக்கள் அனுப்பியும் இதுவரை பாசிட்டிவ் ரிசல்ட் இல்லை. ஆனால் இந்த முறை ஈவா அதைச் செய்திருக்கிறது. அதாவது பூமியிலிருந்து ஒரு தாவரத்தை அது எடுத்து வந்திருக்கிறது. எப்போது பூமியில் மனிதன் உயிர் வாழும் சூழ்நிலை வருகிறதோ அப்போது இவர்கள் எல்லோரும் பூமிக்குத் திரும்பிவிடவேண்டும் என்பது தான் கேப்டனுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.
தாவரங்கள் இருந்தால் கண்டிப்பாக மனிதர்கள் உயிர்வாழமுடியும் எனவே பூமிக்குத் திரும்பலாம் எனக் கட்டளை பிறப்பிக்க எண்ணும் வேளையில் அந்த விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ரோபோட் அதைத் தடுக்கிறது. அதை எப்படி கேப்டன், ஈவா, வால்-ஈ சேர்ந்து முறியடித்தார்கள் என்பது மிச்சக்கதை. (இப்பவே முக்கால்வாசி சொல்லியாச்சு, மிச்சத்தை டிவிடியில் பாருங்க :) )
படம் முழுவதும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன். வால்-ஈ யின் அப்பாவித்தனமான் செயல்கள் கலக்கல். ராக்கெட் பூமியை விட்டு வெளியே செல்லும் போது செயற்கைக்கோள் குப்பைகளை உடைத்துக் கொண்டு செல்லும் காட்சி சூப்பர். வால்-ஈ விண்கலம் முழுவதும் குப்பையாக்கி விட அதைத் துடைத்துக் கொண்டே துரத்தும் ரோபோ காட்சிகள் நல்ல நகைச்சுவை.
டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் இந்தப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்.
4 comments:
inuum padam parkallae...but intha pathivu...padam parthathu pontra mana niraivai tharukirathu. nalla pathivu...intha padam kuzanthakalukkana padamanalum, nichayam vetriperum...
நல்ல அலசல். குழந்தைகளுக்கான திரைப்படம் அறிமுகப்படுத்தியதற்கு
நன்றி.
உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.
நிறை / குறை சொல்லவும்.
வாழ்த்துக்கள்.
WALL-E HEEEE....HEEEEE..
பின்னூட்டத்தில் கருத்துக்களைத் தெரிவித்த வண்ணத்துபூச்சியார் , RAMASUBRAMANIA SHARMA, SKY அனைவருக்கும் நன்றி !!! :)
Post a Comment