அகதியாய் வந்த சிறுமியின் காயத்துக்குக்
கட்டுப்போடுகையில் சொன்னாள்
"குருதி தோய்ந்த உன் கரங்களால்
என்னைத் தொடாதே!"
பக்குவமாய் எடுத்துச் சொன்னேன்
"நான் இந்தியன் என்ற சட்டையை
எப்போதோ கழற்றிவிட்டேன்" என்று
கோபத்தோடு கூறினாள்
"தமிழனாய் இருந்து மட்டும் என்ன கிழித்தாய்?"
அழுகையோடு தொடர்ந்தாள்
"என் தந்தை முடமாக்கப்பட்டார்
தாய் பைத்தியமானாள்
அண்ணன் கடத்தப்பட்டான்
அக்காள் கெடுக்கப்பட்டாள்
நான் மட்டும் தப்பிவந்தேன் எப்படியோ ..
தாய்நாடு ஈழமென்றும்
தந்தைநாடு பாரதமென்றும்
என் தாய்க்கு அவள் தாய்
சொல்வாளாம் ஒரு காலத்தில்.
ஆனால் நீர் எமக்குச் செய்தது?"
மெதுவாய்த் தொடர்ந்தேன்.
"போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள்
தீக்குளிப்புகள் உண்ணாநிலைகள்
மனிதச் சங்கிலிகள்
எவையும் எட்டவில்லை
எமை ஆள்பவரின் செவிகளை
ஏன் தெரியுமா?"
மெதுவாய்க் காதில் சொன்னேன்
"இலங்கையில் மட்டுமல்ல
இந்தியாவிலும் தமிழரை எவரும்
மதிப்பதில்லை"
ஏளனமாய்ச் சிரித்துச் சொன்னாள்
"சொல்லித் தெரிய அவசியமில்லை
எல்லாம் தெரியுமெனக்கு
உன் மக்கள் ஓட்டுப் போட்ட லட்சணத்திலிருந்தே!
சொரணையற்ற இனமென்று
சொந்த நாட்டவரும் மதிக்க மாட்டார்கள் !
எமைக் கைவிட்ட சனமென்று
சகோதரமக்களும் மதிக்க மாட்டார்கள் !"
கையை உதறிவிட்டு எழுந்து சென்றாள்
காறியுமிழ்ந்த உணர்வுடன் அமர்ந்திருந்தேன் நான் !
2 comments:
:(
//காறியுமிழ்ந்த உணர்வுடன் அமர்ந்திருந்தேன் நான் !//
உங்க கவிதையை படித்ததும் எனக்கும் அப்படிதான் இருக்கு :(
Post a Comment