Saturday, July 11, 2009

நீங்க பேயைப் பார்த்திருக்கீங்களா பாஸ்?


எனக்கு எப்பவும் எது மேலயாவது ஆசை அல்லது விருப்பம் வந்தா வெறித்தனமா வரும். தேங்காய்ப்பால் ஊத்தி ஆப்பம் சாப்பிடணும்னு தோணினா ஒரு வாரம் தொடர்ந்து வெறுத்துப் போறவரைக்கும் ஆப்பம் மட்டும் சாப்பிடுவேன். அந்த மாதிரி இப்போ கொஞ்ச நாளா பேயைப் பார்க்கணும்னு ஆசை பிடிச்சி ஆட்டுது. பேய், ஆவி மேல நம்பிக்கை இல்லைன்னாலும் அப்பப்ப கேட்கிற தகவல்கள் ஒருவேளை பேய் இருக்குமோனு தோணவைக்குது.

நம்மில் யாருமே பேயை நேரில் பார்த்திருக்க மாட்டோம். பேய் பற்றிய தகவல்கள் எல்லாமே நம் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் நமக்கு சொல்லிய தகவல்களாகவே இருக்கும். அதில் பாதி புரளிகளாகவே இருக்கும். மீதமுள்ளவை நம்பலாமா வேண்டாமா என்று நம்மைக் குழப்பும்.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் 'தலையில்லாத முண்டம் ஊருக்குள்ள வந்துருச்சாம். அம்பிகா ஓட்டல்ல போய் இட்லி கொடுன்னு கேட்டுச்சாம். எல்லாரும் வீட்டில் வேப்பிலையைக் கட்டுங்க'ன்னு ஒரு புரளி. எங்கள் வீடு உள்பட எல்லோர் வீட்டிலும் வேப்பிலை. 'தலையில்லாத முண்டம் எப்படிடா இட்லி கொடுன்னு கேட்கும்'னு யாரும் யோசிக்கலை. அடுத்துப் பள்ளிக்கூடத்தில் 'ஒரு மணிக்கு சங்கு ஊதுறப்ப ஒத்தப் பனைமரத்திலருந்து பேய் பறந்து சுடுகாட்டுக்குப் போகும்'னு பசங்க வேற கிலியைக் கிளப்புவானுங்க. நம்ம பசங்களோட கற்பனை பேய் விசயத்தில் களைகட்டும்.

கல்லூரி விடுதியில் அதைவிடக் கொடுமை. பேய் ராத்திரி குழாயைப் பிடிச்சி ஏறி வந்து பாத்ரூமில் குளிக்குதுன்னு ஒரு பீதி. ஒரு நொன்னையும் கிடையாது. சீனியர் பசங்க ராத்திரி பாத்ரூமில் திருட்டு தம்மடிக்க கிளப்பிவிட்டிருந்த புரளி இது. இப்படி வதந்திகளை மட்டுமே பேய் விசயத்தில் கேட்டிருந்ததால் பேயின் இருப்பு குறித்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. நடுராத்திரியில் ஊர் சுற்ற, தனியாக வீட்டில் தூங்க என பேயை எல்லாம் நினைக்காமலே செய்தாகி விட்டது.

ஆனால் பேய் குறித்து எப்போதாவது நண்பர்களிடம் பேச்சு வரும் போது, உறவினர்கள் வீட்டில் யாருக்காவது பேய் பிடித்தது, பேய் விரட்டியது எனப் பேச்சு கிளம்பும். அந்தக் கதையெல்லாம் சுவாரஸ்யமாகக் கேட்டு விட்டு அதோடு மறந்துவிடுவதோடு சரி.

சமீபத்தில் நண்பர் ஒருவர் பேயை நேரில் பார்த்ததாகச் சொன்னவுடன் அதிர்ந்து போனேன். மதுரையின் ஒதுக்குப்புறமான இடமொன்றில் மாடியில் தண்ணியடித்துக் கொண்டிருந்த போது ஒரு உருவம் பூட்டியிருந்த கதவின் வழியே நுழைந்து அறைக்குள் சாவகாசமாக நடமாடிவிட்டுப் பின் வெளியே சென்றதாம். நான் நம்பவில்லை. 'யோவ், நீ முழுப் போதையில் இருந்தப்ப நிசமாலுமே எவனாவது உள்ள வந்து போயிருப்பான்யா..'ன்னு சொன்னா மனுசன் ரூம் பூட்டியிருந்துச்சுன்னு தலையிலடிச்சு சத்தியம் பண்றார்.

பட்ட காலிலேயே படும்கிற மாதிரி நண்பர் ஏற்படுத்திய குழப்பம் தீர்வதற்குள், நம்ம விஜய் தொலைக்காட்சி அடுத்த வெடிகுண்டை வீசியது. 'கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு' (தமிழில் Suicide Point) பற்றி 'குற்றம்-நடந்தது என்ன?'வில் ஒரு நிகழ்ச்சி. அதாவது இந்தப் பசுமைப் பள்ளத்தாக்கில் நிறையப் பேர் தற்கொலை செய்து கொள்வதால் அங்கே பேய்கள் உலாவுகின்றனவாம். அது உண்மையா என்று அறிவதற்கு அந்தப் பள்ளத்தாக்கின் கீழே இறங்கிப் பார்த்து உறுதி செய்யும் நிகழ்ச்சி.தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை மீட்கும் பணியில் இருப்பவர்களுடன், எழுத்தாளர் ராஜநாராயணனும் உடன் சென்றார். யாராவது தற்கொலை செய்து கொண்டால் அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்க்கிணங்க இவர்கள் பள்ளத்தாக்கில் இறங்கி உடலைத் தேட ஆரம்பிப்பார்களாம். இவர்கள் சொன்ன அனைத்துத் தகவல்களும் பயந்தவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போது ஒரு தெய்வத்தை வணங்கி விட்டு கையில் ஒரு எலுமிச்சம் பழத்துடன் பயணம் தொடங்குவார்களாம். பயணத்தின் இடையில் யாராவது அழுவது போன்றும், கூப்பிடுவது போன்றும் சத்தம் கேட்குமாம். திரும்பிப் பார்க்கக்கூடாதாம். இறந்தவரின் உடலைத் தேடிக்கண்டுபிடித்தபின் அதை மேலே இழுத்து வரும் போது பிற பேய்கள் எல்லாம் சேர்ந்து உடலைக் கீழே இழுக்குமாம். அப்போது கையில் வைத்திருக்கும் எலுமிச்சையைப் பிய்த்துப் போட்டு பேய்களை விரட்டுவார்களாம்.

அடுத்து இந்தப் பசுமைப் பள்ளத்தாக்கில் இருந்து தவறி விழுந்த ஒருவரும் பேய்களைத் தான் கண்டதாகக் கூறினார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கால் உடைந்து போய் பசுமைப் பள்ளத்தாக்கில் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவரையும் இவர்கள் தான் காப்பாற்றியிருக்கிறார்கள். இதுவரை பசுமைப் பள்ளத்தாக்கில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர் இவர் ஒருவரே.

யம்மாடி இந்த நிகழ்ச்சி பார்த்து முடித்தவுடன் ரொம்ப நேரம் பேயடித்தது போலத்தான் இருந்தது. அன்னிக்குத்தான் தெரிந்தது. இவ்வளவு நாள் நான் பயப்படாத மாதிரியே நடிச்சிருக்கேன்னு.

அடுத்த அணுகுண்டு நம் பதிவுலகிலிருந்தே வீசப்பட்டது. இலங்கையிலும் பேய்கள் உண்டு. அது உலகுக்கே தெரிந்த விசயம்தான். இலங்கை நண்பர் லோஷன் அவர்களின் அலுவலகத்தில் பேயைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் புகைப்படம் எடுத்தும் போட்டிருந்தார். அவ்வளவுதான் இனிமேலும் சும்மா இருக்கக்கூடாது என்று முடிவு செய்து பேய் பற்றி நிறையத் தகவல்களைத் தேடிப் பார்த்து சலித்து எல்லாம் கிலியை அதிகப்படுத்தும் தகவல்கள் அல்லது அப்படியெல்லாம் எதுவும் கிடையாது எனும் பகுத்தறிவுத் தகவல்கள்.

எனவே நண்பர்களே, நீங்களாவது சொல்லுங்க .. உண்மையிலேயே பேய் இருக்கா? இல்லையா? பார்த்துருக்காய்ங்களா? பார்க்கலையா?

குறிப்பு :
'பேயைப் பார்க்கணும்னா சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க' என்னும் அறிவுரைகளும், 'நாங்கலாம் பேய் கூடத்தான் குடும்பமே நடத்துறோம்' எனும் ரங்கமணிகளின் புலம்பல்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. :) :) :)

படம் நன்றி : ஸ்ரீகணேஷ்

5 comments:

chittoor.S.Murugeshan said...

கலப்பு திருமணம் செய்த நான் 1991 முதல் 1994 வரை என் தந்தையை விலகி வாழ்ந்தேன். 1994 ல் அவர் இறந்தார். பங்கு பிரித்ததில் வந்த ஒரு வெள்ளி டம்ளரை அடகு வைக்க எடுத்துக்கொண்டு திரும்பியபோது என் அப்பா படத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் யானை பொம்மை (உள்ளே வெற்றிடம் கொண்டது) படார் என்று வந்து என் முதுகில் அடித்தது. அதை மீறி டம்ளரை அடகு வைத்தேன். அப்போ விழ ஆரம்பிச்சவன் 1997 நவம்பர் வரைக்கும் பிச்சை எடுக்காத குறைதான்

Anonymous said...

பேய் இருக்குதோ இல்லையோ தெரியலை, ஆனால் உங்களிடம் நல்ல நகைச்சுவையும், எழுத்துத் திறமையும் இருக்கு. சுவாரசியமான பதிவு - வாழ்த்துக்கள்

Anonymous said...

பல பேய் வந்து தடுத்துதுனா ஒன்று இரண்டு எலுமிச்சைபழம்-s பத்துமா? ;-) எப்படி intelligent-a point-a பிடிச்சேன் பார்த்தீங்கள? Anyways, interestingly written and good humor.

Anonymous said...

நீங்கள் பேயை பார்த்திரிக்கிறீர்களா பாஸ்?

அது கூட தான்யா பாத்து வருசமா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன்.

LOSHAN said...

நல்லா எழுதியிருக்கீங்க .. தேடி விஷயம் எடுத்துள்ள உங்கள் முயற்சி அருமை..

என்ன சோகம் என்றால் படம் எடுத்து பதிவு போட்ட பிறகு அந்தப் பேயை மறுபடி எங்கள் அலுவலகத்தில் யாருமே காணவில்லை..