
கடந்த வாரம் பெங்களூரில் 2 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற சம்பவம் ரொம்பவே மனதைப் பாதித்தது. எவ்வளவு நாள் தான் பொறுப்பது இந்த நாய்ப் பிரச்சினைக்கு. அதுவும் பெங்களூரில் ரொம்பவே ஓவர். பெங்களூரின் நாய்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அவற்றைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இங்கே இருக்கும் நாய்கள் நம்ம ஊர்த் தெருநாய்கள் மாதிரி சோப்ளாங்கி நாய்கள் அல்ல. நன்றாக கொழுக் மொழுக் என்று செர்லாக் பேபி மாதிரி இருக்கும் மலை நாய்கள் வகையைச் சேர்ந்தவை. பயம் என்பது அறவே கிடையாது. சாதாரணமாக நம் ஊரில் நாய்களை கையை ஓங்கி விரட்டினால் பயப்படுவது மாதிரி நடிக்கவாவது செய்யும். இங்கு அப்படி செய்தால் நம்மைப் பார்த்து முறைக்கும். கல்லெடுத்து அடிக்கப் போனால் குலைத்துக் கொண்டு கடிக்க வந்துவிடும்.
நீலச்சிலுவைச் சங்கத்தினர் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்றால் அவற்றைத் தனியிடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். விலங்குகளுக்கு சரணாலயம் மாதிரி. ஏற்கனவே கோரமங்களாவில் தெருவில் திரியும் பசு மற்றும் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகம் உண்டு. அது போல இவர்களும் செய்யலாம்.
அதை விடுத்து நாயைக் கொல்லாதே அது தெருவில்தான் திரியும் என்று சொல்வதும், கார் ஓட்டினால் விபத்தே நடப்பது இல்லையா? அதற்காக யாருமே கார் ஓட்டுவதில்லையா? அது போலத்தான் நாய்க்கடிக்கொலைகளும் சாதாரணம் என்று அபத்தமாக ஒப்பிட்டுப் பேசுவதும் தேவையில்லாதது. நான் ஒன்றும் நாய்களைப் பிடிக்காதவனோ வெறுப்பவனோ அல்ல. நானும் தெருநாய்களுக்கு சோறு போட்டு வளர்த்தவன்தான்.
உதாரணமாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கிருஷ்ணகிரி-கன்னியாகுமரி சாலையில் இருக்கும் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன. எதற்காக? மக்களின் வசதிக்காக. அதுபோலத்தான் இதுவும். மக்களுக்குச் சிரமம் தந்தால் நாய்களைக் கொல்வதில் என்ன தவறு?
குன்னூரில் இதே போன்று ஒரு சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிப்போட அவனது முகமே விகாரமாகி இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொஞ்சம் சரிசெய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு மக்கள் போராட்டம் நடத்திய பிறகும் நாய்களைக் கொல்ல நீலச்சிலுவைச்சங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்கள் வித்தியாசமாக ஒரு யோசனை செய்து அவர்களின் மூக்கை உடைத்தார்கள். அதாவது ஆட்டுக் குடலை துண்டு துண்டாக வெட்டி அதனுள் விசத்தை வைத்து தெருக்களில் போட்டு விட்டார்கள். அதைத் தின்ற நாய்கள் செத்து ஒழிந்தன. நீலச்சிலுவைச் சங்கத்தினரின் முகத்தில் ஈயாடவில்லை.
இனியும் இவர்கள் தொல்லை தொடர்ந்தால் குன்னூர் மக்களை நாமும் பின்பற்ற வேண்டியதுதான். அல்லது 'ரக்த ஜ்வால ..' எனத் தொடங்கும் பைரவர் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டு தெருவில் நடமாடவேண்டியது தான்.





0 Comments:
Post a Comment