Tuesday, April 19, 2011

கிரிக்கெட் தோல்விக்காக பழிவாங்கப்பட்ட மீனவர்கள் - தொடரும் சோகம் !!!


இப்படியும் கூட நடக்குமா என எண்ணவைக்கிறது சமீபத்தில் நடந்திருக்கும் நான்கு மீனவர்களின் படுகொலை. ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்த அன்று இரவு காணாமல் போனார்கள்.

மறுநாள் அவர்களுடன் மீன்பிடித்த மீனவர்கள் சொல்லிய தகவல் மிகவும் அதிர்ச்சியானது.இலங்கை கடற்படையினர் தாங்கள் மீன்பிடிக்கும் போது வந்து மிரட்டியதாகவும், 'இன்றைய போட்டியில் இலங்கை தோற்றால் தொலைந்தீர்கள்' என நம் மீனவர்களை சம்பந்தமில்லாத விசயத்தைச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லியது போலவே 4 மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகியோர் அன்று கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும்பணியில் நம் கடலோரக்காவல் படையும் ஈடுபடவில்லை. பின்னர் தன்னார்வ மீட்புக்குழு அந்த மீனவர்களைக் கடலில் தேடினார்கள்.

இந்நிலையில் ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணம் அருகில் கரை ஒதுங்கியது. மற்ற இரு மீனவர்கள் உடல் தொண்டியிலும், இன்னொருவரின் உடல் புதுக்கோட்டையிலும் கரை ஒதுங்கியது. அவர்களது உடலில் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் அதிகமாகவே இருந்துள்ளன. ஒரு மீனவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்படி தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இலங்கை அணியின் கிரிக்கெட் தோல்விக்கு மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈழத்தமிழர்களை எக்காரணமின்றி பொழுதுபோக்குக்காக கொலை செய்து பழக்கப்பட்ட இலங்கை கடற்படையினர் இப்போது கை அரிப்பெடுத்து நம் மீனவர்களைக் கொலை செய்வதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

எப்போதும் மீனவர்கள் தாக்கப்படும் போது எழும் கோபமும், ஆத்திரமும் இப்பவும் எல்லோரிடமும் ஏற்படுகிறது. அதைத் தவிர நம்மால் என்ன செய்யமுடிகிறது?

தமிழக அரசு வழக்கம்போல 5 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் விட்டுவிட்டது.

இந்த விசயத்தை இப்போது பாஜக கையில் எடுத்திருப்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் தருகிறது. இவ்வளவு நாள் வரை தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை தனிநாட்டுப் பிரச்சினையாகப் பார்த்த வட இந்திய ஊடகங்கள் கொஞ்சம் இந்தப் பிரச்சினையைப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

என்ன நடந்து என்ன செய்ய? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழி சொல்பவர்கள் யார்? தினம் தினம் செத்துப் பிழைக்கும் மீனவர்களின் வாழ்வுக்கு வழி சொல்பவர்கள் யார்?

Saturday, April 16, 2011

இலங்கைக்கு தமிழகம் மின்சாரம் - திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிவோம் !!!

காங்கிரஸ் அரசுக்கு தமிழர்களும், தமிழ்நாட்டவர்களும் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. தினம் தினம் எங்கள் ஊர் மீனவர்களைக் கொன்று கொண்டிருக்கும் சிங்களநாய்களுக்கு நம் தமிழ்நாட்டிலேயே மின்சாரம் எடுத்து அதைக் கடல் வழியாகவே இலங்கை கொண்டு செல்கிறார்களாம்.

பார்க்க - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=224804

!@#$. இதற்கு திமுகவும் துணை போவதுதான் கொடுமை. கருணாநிதி அவர்களே இதற்கு மேல் நீங்கள் செய்யும் இனத்துரோகம் என்னவாக இருக்கும்? சிங்களநாய்கள் ஈழத்தை முழுவதும் ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டிக் கொண்டிருப்பது பத்தாது என்று, கடைத்தேங்காயை எடுத்துக் கொடுத்தது போல இப்போதைய மீனவர் பிரச்சினைக்கு முழுக்காரணமாக இருக்கும் தமிழகத்தின் கச்சத்தீவை அப்பன் வீட்டுச் சொத்தைப்போல் எடுத்துக் கொடுத்துவிட்டு, இப்போது மீனவர்கள் கொல்லப்படும் போதும் காங்கிரஸ் பேய்கள் வாய்மூடி இருப்பதும், இப்போது தமிழ்நாட்டிலேயே மின்சாரம் எடுத்து அதை சிங்களநாய்களுக்கு வழங்குவதும் எவ்விதத்தில் நியாயம்?

கடல் மூலம் மின்சாரம் வழங்க முதல்கட்ட சோதனை முடிந்து, மண் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாம். இங்கிருப்பதை எடுத்து நம் எதிரிக்குக் கொடுப்பதில் காங்கிரஸ் !@#$$களுக்கு என்னதான் சந்தோசமோ?

இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதற்கு முழுவதும் துணை போகும் தமிழக அரசைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

எனவே தமிழக மீனவர்களைக் காக்க பதிவுலகம் போராடியது போல, நம்மால் முடிந்த அளவு பதிவுகள் எழுதி நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து பதிவர்கள் ட்விட்டர் மூலமும், நம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பேனர்களைப் பதிவில் இட்டும் தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

Friday, April 15, 2011

நீரா ராடியாவின் தமிழகத் தொடர்புகளை விளக்கும் படம்



படத்தைக் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்.


ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள், அவரது ஆடிட்டர் ரத்தினம், சாதிக் பாட்சா ஆகியோர் நீரா ராடியா மற்றும் அவர் மூலம் கொண்டிருக்கும் தொடர்புகளை விளக்கும் படம்.

இணையத்தில் ஸ்பெக்ட்ரம் குறித்துத் தேடியபோது, Outlookல் கிடைத்தது. திமுக சாராத பிற தமிழ் ஊடகங்கள் கூட இந்த மாதிரி ஏன் வெளிப்படையாக செய்திகள் வெளியிடத் தயங்குகிறார்கள்?

Thursday, April 14, 2011

ராடியா வாக்குமூலம் - சரத்பவார் சிக்குகிறார்


ஸ்பெக்ட்ரம் மெகா ஊழலில் அடுத்த குற்றவாளியாகும் கொடுப்பினை மத்திய அமைச்சர் சரத்பவாருக்குக் கிடைக்கும் போலிருக்கிறது.

இன்று நீரா ராடியா சிபிஐ விசாரணையில் சரத்பவாரின் குடும்பத்தினர் தான் ஸ்பெக்டரம் அலைவரிசையை குறைந்த விலைக்கு வாங்கிய 'டிபி ரியாலிட்டி' நிறுவனத்தை நடத்துகிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த சரத்பவார் தான் மத்திய அமைச்சர் பதவியை விட ஐசிசி தலைவர் பதவியைப் பெரிதும் விரும்பி தன் பணக்காரப் புத்தியைக் காட்டியவர். இன்றைய விலைவாசி உயர்வுக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களைத் தவிக்கவிட்டிருக்கும் முட்டாள் அமைச்சர். வீணாகும் தானியங்களை மக்களுக்குக் கொடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லியபோதும், 'அதெல்லாம் வாய்ப்பில்லை' என்று சொல்லி, 'நாங்கள் என்ன உனக்கு யோசனையா சொல்கிறோம்? இது கட்டளை' என்று நீதிபதிகள் செவிட்டில் அறைந்தபின் தானியங்களை மாநில அரசின் பொது விநியோகத்திட்டத்திற்கு வழங்கியவர்.

வயதானவர் என்பதற்காக இவர் செய்யும் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளவா இவரைத் தேர்ந்தெடுத்தார்கள்?

அடுத்தபடியாக ராடியா கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கொடுக்கப்பட்டது குறித்த தகவல்களையும் சொல்லியிருக்கிறார்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் கவலையெல்லாம் அன்னா ஹசாரே கஷ்டப்பட்டு கொண்டுவரத் துடிக்கும் ஜன லோக்பால சட்டம் இந்தப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவேண்டும். அதைவிடுத்து எதிர்க்கட்சிகள் சரத்பவார் மேல் நடவடிக்கை எடு என பாராளுமன்றத்தை முடக்கிவிடுமோ என்பதுதான்.

ஜன லோக்பால் வரட்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பெருசுகளும், நேற்று அரசியலுக்கு வந்த காளான்களும் தண்டிக்கப்படட்டும்.

Wednesday, April 13, 2011

சாமானியருக்கும் உதவும் Google Maps Mobile !!!



Google செய்து வரும் வித்தியாசமான முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டு வரவேற்கப்படுபவையே.

அந்த வகையில் Google இன் ஒரு சேவை சிறப்பான வகையில் அமைந்துள்ளது. அது தான் Google Maps.

நாம் கணினியில் Google Maps மூலம் ஒரு இடத்தையோ அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கும் செல்லும் சாலை வழியையோ அறிந்து கொள்ளமுடியும்.

இதைவிட இன்னொரு சிறப்பம்சம் Google Maps இன் Mobile Application இல் உள்ளது. அது நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைக் காட்டும். நம் அலைபேசியில் Google Maps வைத்திருந்தால் அது ஒரு நீலநிறப் புள்ளியாக நாம் இருக்கும் இடத்தைக் காட்டும்.

நாம் பயணம் செய்யும் போது அந்த நீலப்புள்ளி நம்முடன் நகர்ந்து கொண்டே வரும்.

இது எப்படி செயல்படுகிறது என்றால், நம் அலைபேசி தற்சமயம் தொடர்பு கொண்டிருக்கும் அலைபேசி கோபுரம் அமைந்திருக்கும் 'Latitude and Longitude' ஐ வைத்து நாம் இருக்கும் இடத்தை Maps இல் காட்டுகிறது. எனவே நாம் பயணம் செய்யும் போது தானாகவே மாறிக் கொள்கிறது.

என் அனுபவத்தில் இது முக்கியமாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் மிகவும் உதவியாக உள்ளது. நடுராத்தியில் பேருந்து அல்லது ரயில் எந்த ஊரில் இருக்கிறது என்பதை இதன் மூலம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.

எனவே இன்றே முயன்று பாருங்கள்.

அலைபேசி வழியாக http://m.google.co.in/maps

கணினி வழியாக http://www.google.co.in/mobile/maps

இந்த வசதியை உபயோகிக்க GPRS அவசியம்.

Monday, April 04, 2011

கொலைவெறி கவிதைகள்


ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !
--------------
வெயிலடித்தால்
நிழலில் ஒதுங்குகிறாய் - அந்த
நிழலும் அடித்தால்
என் மனதில் ஒதுங்கு
-------------
ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை
-------------
குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !
-------------
சிலந்தி பின்னிய வலையில்
விழும் விட்டில் பூச்சி போல
உன் கண்கள் பின்னிய வலையில்
குழிக்குள் விழுந்தேன் சாலையில்
---------------
அதிகார மய்யத்தின் மேல்
அமர்ந்திருக்கும் நீ
எப்போது வருவாய் கீழே இறங்கி?
அண்ணாந்து பார்த்து பார்த்து
கழுத்து வலிக்கிறது
------------------
தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
உன் தம்பியைப் பார்த்தால்
எனக்குத் தொடையும் நடுங்குகிறது
-----------------
தினமும் குளி என்று
அம்மா சொல்லியும் கேட்காத நான்
உனக்காக இன்று
தீக்குளிக்கவும் தயாராயிருக்கிறேன்
------------------
சுடிதார் போட்டு
சூப்பராகப் போகும் நீ
குழாயடியில் மட்டும் ஏன்
தலையில் கரகம்
இல்லாமல் ஆடுகிறாய்
------------------

இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.