Tuesday, April 19, 2011

கிரிக்கெட் தோல்விக்காக பழிவாங்கப்பட்ட மீனவர்கள் - தொடரும் சோகம் !!!


இப்படியும் கூட நடக்குமா என எண்ணவைக்கிறது சமீபத்தில் நடந்திருக்கும் நான்கு மீனவர்களின் படுகொலை. ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்த அன்று இரவு காணாமல் போனார்கள்.

மறுநாள் அவர்களுடன் மீன்பிடித்த மீனவர்கள் சொல்லிய தகவல் மிகவும் அதிர்ச்சியானது.இலங்கை கடற்படையினர் தாங்கள் மீன்பிடிக்கும் போது வந்து மிரட்டியதாகவும், 'இன்றைய போட்டியில் இலங்கை தோற்றால் தொலைந்தீர்கள்' என நம் மீனவர்களை சம்பந்தமில்லாத விசயத்தைச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லியது போலவே 4 மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகியோர் அன்று கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும்பணியில் நம் கடலோரக்காவல் படையும் ஈடுபடவில்லை. பின்னர் தன்னார்வ மீட்புக்குழு அந்த மீனவர்களைக் கடலில் தேடினார்கள்.

இந்நிலையில் ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணம் அருகில் கரை ஒதுங்கியது. மற்ற இரு மீனவர்கள் உடல் தொண்டியிலும், இன்னொருவரின் உடல் புதுக்கோட்டையிலும் கரை ஒதுங்கியது. அவர்களது உடலில் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் அதிகமாகவே இருந்துள்ளன. ஒரு மீனவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்படி தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இலங்கை அணியின் கிரிக்கெட் தோல்விக்கு மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈழத்தமிழர்களை எக்காரணமின்றி பொழுதுபோக்குக்காக கொலை செய்து பழக்கப்பட்ட இலங்கை கடற்படையினர் இப்போது கை அரிப்பெடுத்து நம் மீனவர்களைக் கொலை செய்வதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

எப்போதும் மீனவர்கள் தாக்கப்படும் போது எழும் கோபமும், ஆத்திரமும் இப்பவும் எல்லோரிடமும் ஏற்படுகிறது. அதைத் தவிர நம்மால் என்ன செய்யமுடிகிறது?

தமிழக அரசு வழக்கம்போல 5 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் விட்டுவிட்டது.

இந்த விசயத்தை இப்போது பாஜக கையில் எடுத்திருப்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் தருகிறது. இவ்வளவு நாள் வரை தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை தனிநாட்டுப் பிரச்சினையாகப் பார்த்த வட இந்திய ஊடகங்கள் கொஞ்சம் இந்தப் பிரச்சினையைப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

என்ன நடந்து என்ன செய்ய? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழி சொல்பவர்கள் யார்? தினம் தினம் செத்துப் பிழைக்கும் மீனவர்களின் வாழ்வுக்கு வழி சொல்பவர்கள் யார்?

No comments: