Tuesday, February 20, 2007

ஏன் வருமானவ(லி)ரி கட்டணும்?

பிப்ரவரி மாதம் என்றாலே வேலை பார்க்கும் அனைவருக்கும் தொல்லை தான். வருமானவரி விலக்கு பெறுவதற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டுமே.


என்னுடன் வேலை பார்க்கும் அனைவரும் தபால் அலுவலகங்களை நோக்கிப் படையெடுத்தனர் சேமிப்புப் பத்திரங்களை வாங்குவதற்கு. இப்போது தான் வங்கிகள் தரும் பாண்டுகளுக்குத் தான் வரிவிலக்கு இல்லையே. இல்லையென்றால் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் நம்மிடம் "மியூட்சுவல் பண்டு-ல காசைப் போடுங்க" என்று காலைச் சுற்றுவர்.


வருமானவரி விலக்கிற்கான ஆவணங்களைத் தயார் செய்வதற்குள் ஒரே ரகளை தான். அனைவரும் பொதுவாகச் செய்யும் ஏமாற்று வேலை வீட்டு வாடகை ரசீதுகளைத் தாங்களே தயாரிப்பது. 2000 ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு அதுவும் ஐந்து பேர் சேர்ந்து தங்கிக் கொண்டு பத்தாம் தேதி வீட்டுக்காரர் கேட்கும் போதுதான் இது வாடகை வீடு என்றே ஞாபகம் வரும். ஆனால் 5000 ரூபாய்க்கு ஒவ்வொருவரும் ரசீது தயார் செய்வர். ரசீதிலே வீட்டுக்காரர் கையெழுத்து வேண்டுமே? என்ன செய்வது? வீட்டுக்காரரிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. சொத்தை எழுதி வாங்குவது போல் பயப்படுவார். அதனால் என்ன? நாமே ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டால் போச்சு. (ஹி ஹி நாங்களும் அப்படித்தான் செய்தோம்).


வருமானவரி என்பது அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் செலுத்தினால் போதுமா? என்றாவது நமது ஊரிலே கடை மற்றும் பல தொழில் நடத்துபவர்கள் வருமானவரி செலுத்தியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோமா? அதுவும் காய்கறி போன்றவைகளை விற்பனை செய்பவர்கள் எவ்வளவு பெரிய லட்சாதிபதியாக இருந்தாலும் அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் அழுகும் பொருள்களை வைத்து விற்பனை செய்கிறார்களாம். அதனால் வரி கிடையாதாம். என்ன நியாயம்?

அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தனர்? அவர்களுக்கு மட்டும் பைசா சுத்தமாக வருமானத்தைக் கணக்கிட்டு வரி விதிப்பது என்ன நியாயம்?


சரி. கட்டித் தொலைப்போம். எதற்கு இந்த வருமானவரி? செலுத்தும் பணம் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குச் சேர்வதற்குத் தான். ஆனால் அப்படித்தான் நடக்கிறதா? அவை உருப்படியான திட்டங்களுக்குத்தான் போய்ச் சேர்கிறதா? வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்துவதற்கும் (கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு) வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதற்கும் (ரொம்ப முக்கியம்!) தான் பயன்படுகிறது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே இரயில் செல்வதற்காக சாலையை அடைத்தால் 3-4 கிலோமீட்டருக்கு வண்டிகள் நிற்கும். அங்கு ஒரு மேம்பாலம் கட்ட யாருக்கும் துப்பில்லை.

என்ன புலம்பி என்ன செய்ய? அடுத்த மாதம் சம்பளத்தில் வரியைப் பிடித்துக் கொண்டுதான் கொடுக்கப்போகிறார்கள்.

அரசியல் செல்வாக்குடைய பதிவர்கள் மேம்பாலம் கட்ட ஏதாவது செய்யவும்.

நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு

2 comments:

செ. நாகராஜ் - C. Nagaraj said...

பொன்வண்டு, நீங்க எழுதியதில் ஒரு சின்ன திருத்தம், uluderpet chennai ரோடில் உள்ள levelcrossing Road Over Bridge ஆக‌ மாற போகிறது. BOT Project Alloட் ஆகி கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. என்ன இன்னும் 30 months அப்புறம் tindivanam to uludurpet 4 lane highway ஆக மாறிவிடும்.

Yogi said...

ஓ அப்படியா ! நான் இப்போது சென்னையிலிருந்து மாற்றலாகி விட்டதால் அந்தப் பக்கம் சென்று சுமார் 7 மாதங்கள் இருக்கும். ஒவ்வொருமுறையும் பேருந்து மணிக்கணக்கில் நிற்கும் போது எரிச்சல்தான் வரும்... தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நாகராஜ் .