Monday, March 26, 2007

இம்சை இளவரசன் சோனி எரிக்ஸன்

வேலை பார்க்கிற இடத்துல இந்தப் பயபுள்ளைக மொபைல் போனை வச்சிக்கிட்டு நம்மளைப்படுத்துறபாடு இருக்கே சொல்லி மாளாது. அவய்ங்க பாட்டுக்கு செல்ல வைப்ரேட் மோடுல போட்டுட்டு டீ குடிக்கப்போயிர்றாய்ங்க. அது கிடந்து கதறி ஊரைக் கூட்டுது. ஏதோ ரைஸ்மில்ல இருக்கிற மாதிரி மொத்த கியூபிக்கிளும் அதிருது.

இன்னொரு பிறவி நம்மளோட வேலை பாக்குது. ஃபிரஷ்ஷர்-ஆ காலேஜ்ல இருந்து நேரா கம்பெனியில சேர்ந்தது. அவன் மொபைலுக்கு எப்போ கால் வந்தாலும் "கோ சார்லி.. கோ சார்லி"-னு எவனையோ போகச் சொல்லி அலறி நமக்கு கிலியைக் கிளப்புது. எதாவது மெசேஜ் வந்தா பழய புல்லட்ட ஸ்டார்ட் பண்ற மாதிரி சவுண்ட் வுட்டுட்டு "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யு ஹேவ் அ மெசேஜ்"-ங்குது. "ஏண்டா, சவுண்டைக் குறைச்சு வைக்கக் கூடாதா?" ன்னு கேட்டா "ஒரு கெத்து வேணுங்க.. நாம இருக்கோம்னு எல்லாருக்கும் தெரியணும்"குறான் அந்த கலரிங் மண்டையன்.

இன்னொரு மாமா இருக்காரு. கல்யாணமாகி பல வருசம் கழிச்சு புத்தி வந்து டெஸ்டிங் படிச்சுட்டு இப்போ நம்ம உயிரை வாங்குறாரு. அவரு புள்ளைக்கு டொனால்ட் டக் புடிக்குங்கிறதுக்காக ஒரு ரிங்டோன் வச்சிருக்காரு. அது டொனால்ட் டக் வாய்ஸ்ல "லலலாவோயே லலலாவோயே இய்யகககா.." ன்னு எப்பப் பாத்தாலும் காமடி பண்ணுது. அவரு புள்ளயோட சேந்து அவரும் டூன் டிஸ்னி பாத்து ரொம்பக் கெட்டுப்போய்ட்டாரு.

அடுத்து நம்மளுக்கு எதுக்க ஒரு அக்கா உக்காந்திருக்காங்க. அவுங்க எப்பப் பார்த்தாலும் சத்தமே வெளிய வராம யார்கூடவோ பேசிக்கிறாங்க. ரொம்ப வேலையிருந்தா இயர்போன் மாட்டிக்கிட்டு வேலை பாக்குறாங்க. உத்துக் கேட்டதுக்கப்புறம்தான் புரிஞ்சுச்சு சும்மா வெட்டியாத்தான் பேசுறாங்கன்னு. காலையில பொடுகு சாம்பு போட்டு குளிச்சதுல இருந்து இப்போ நகம் வெட்டிக்கிட்டிருக்குறது வரைக்கும் பேசுறாங்க.

சரின்னு நம்ம செல்ல எடுத்துப் பார்த்தா நல்லாத் தூங்கிக்கிட்டிருக்கு. கிட்டத்தட்ட கால் வந்தே ஒரு வாரம் ஆகிப்போச்சு. போரடிச்சுப்போய் செல்லே தூங்க ஆரம்பிச்சிருச்சி. மத்தியானம் சாப்பிட்டுட்டு தூக்கக் கலக்கத்தில இருக்கிறப்ப எதோ ஒரு பய புள்ளயோட மொபைல் அடிச்சிக்கிட்டே இருக்கு எடுக்கவே மாட்டேங்குறான். நானும் பொறுமை இழந்து போய் சத்தமாவே "எவண்டா அது எடுத்துத் தொலைங்கடா" ன்னேன். எல்லாரும் என்னைய முறைக்கிறாய்ங்க. எதுக்க உக்காந்திருக்குற அக்கா எந்திரிச்சி நகவெட்டிய என் முன்னால நீட்டுது. "ஹி ஹி. ஐ டோண் வாண்ட்" ன்னேன். "ப்ச். பிக் யுவர் மொபைல் மேன் இட்ஸ் ரிங்கிங்". ஓ அது என்னுதுதானா. காலே வராம ரிங்டோன் கூட மறந்துபோச்சு. மெதுவா எடுத்து "ஹலோ" ன்னேன்.

"குட் ஈவ்னிங் சார். வி ஆர் காலிங் ஃபிரம் ...கிளப் சார். வெரி கங்குராட்ஸ் சார். உங்க போன் நம்பர் எங்களோட லக்கி டிராவில செலக்ட் ஆகியிருக்கு சார். அதுனால உங்களுக்கு உங்க வொய்ப்போட கோவா போக பிரீ டிக்கட் தர்றோம் சார்". "அப்புடியா, இந்த ஆபருக்கு எவ்வளவு நாள் வேலிடிடி?"."ஏன் சார்". "எனக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் கோவா போலாம்னு இருக்கேன்". "யு ஆர் நாட் மேரிட்? தென் யு கேனாட் அவாய்ள் திஸ் ஆஃபர் சார்". டொக். காதில் ரொய்ங்.

இந்தா அந்தான்னு பொழுதை ஓட்டிட்டு எப்படா ஆறு மணி ஆகும்கிறதையே ஆறு மணி நேரம் வேலையாப் பாத்துட்டு ஆறாகவும் ரூமுக்கு ஓடி வந்துட்டேன். உள்ள நுழைந்தவுடனே "தல வந்தாச்சு.தல வந்தாச்சு" ன்னு ஒரே அமர்க்களமாக்கெடக்கு. என்னடான்னு பாத்தா "உங்க செல்லக் குடுங்க. ஒரு கால் பண்ணிக்கிறேன். உங்களுது போஸ்ட் பெய்டு தான. ஏர்டெல் டு ஏர்டெல் பிரீ தான. குடுங்க" ன்னு புடுங்கிட்டான் ஒருத்தன். ரொம்ப நேரமா ஆளயே காணோம். "என்னங்க சார்ஜே போட மாட்டிங்களா. அதுக்குள்ள காலியாயிருச்சு. எதுக்குத்தான் நீங்க மொபைல் வச்சிருக்கீங்களோ"ன்னு ஒரு மணிநேரம் கழிச்சுக் கொண்டுவந்து கொடுத்தான். முடியல. செல்லுக்கு சார்ஜ் போட்டவுடனே வீட்ல இருந்து போன். "என்னடா எவ்வளவு நேரம் போன் பண்றது. எடுக்கவே மாட்டேங்கிற. யார் கூட பேசிக்கிட்டிருந்த". "இல்லம்மா. அது வந்து. சரிவிடுங்க. எதுக்கு போன் பண்ணீங்க". "சும்மாதான் என்ன பண்றன்னு கேட்கத்தான் பண்ணினேன். நீ பண்ற அக்கப்போர்ல நெனச்ச நேரத்துக்குக் கூட போன் பேச முடியல. நீயெல்லாம் எதுக்குத்தான் செல் வச்சிருக்கியோ". அம்மாவும் டொக்.

அன்னிக்கு ராத்திரி படுத்தா தூக்கம் வரவேயில்ல. அரைகுறைத் தூக்கத்தில யாரோ போன் பண்ணி நீ எதுக்கு செல் வச்சிருக்கன்னு கேட்கிறமாதிரி கனா வேற. டக்குன்னு முழிச்சி உக்காந்து நான் ஏன் செல் வச்சிருக்கேன்னு கண்டுபிடிச்சே ஆகணும்னு நானே என் மண்டையைத் தெறந்து எட்டிப் பாத்தேன். ஆறு மாசத்து முன்னால நடந்ததெல்லாம் வீடியோ பைலா ஸ்டோர் ஆகியிருந்துச்சு. டபுள் கிளிக் பண்ணி மீடியா பிளேயர்ல ஓப்பன் பண்ணிப் பாத்தேன்.

மொபைல் வாங்கணும் முடிவு பண்ணி ஷோரூம் போயி அங்க விலை கேட்டப்போ "பில் இல்லாம வாங்கினா அறுநூறு ரூபா கம்மி சார். பில்லோட வாங்கினா அதில போட்ருக்க வெல சார்". "அப்படியா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்". "பில் இல்லாம வாங்கினா பில் தர மாட்டோம் சார். பில்லோட வாங்கினா பில் தருவோம் சார்". என்ன தெளிவான விளக்கம். "பில்லுக்கே அறுநூறு ரூபா கம்மியா. அப்படின்னா இந்த அட்டைப் பெட்டியெல்லாம் எங்களுக்கு வேணாம் இதையும் வச்சிக்கிட்டு ஒரு இருநூறு ரூபா டிஸ்கவுண்ட் கொடுங்க". அவன் முறைத்த முறைப்பில் "இல்லங்க அப்படி எதாவது ஆபர், ஸ்கீம் இருக்குமான்னு.. இல்லன்னா விடுங்க ஒன்னும் பிரச்சனையில்ல". வாங்கியாச்சு. செல்லுக்கு கவர் வாங்கணுமே. "இங்க வேணாண்டா இவன் 15 ரூபா சொல்றான். சரவணா ஸ்டோர்ல கம்மியா இருக்கும்"ன்னு நண்பன் சொன்னான். சரின்னு பத்து ரூபா செலவழிச்சு அங்க போயி அஞ்சு ரூபாய்க்கு ஜிப் கவர் வாங்கினது, அஞ்சு ரூபாய்க்கு காசு கொடுக்க அரைமணி நேரம் கியூவில நின்னது, கவுண்டர்ல இருந்தவன் "இது மட்டும்தானா இது மட்டும்தானா"ன்னு திரும்பத்திரும்பக் கேட்டது, பிறகு மகா கேவலாமா ஒரு லுக்கு விட்டு கவரை டெலிவரி கவுண்டர்க்கு எறிஞ்சது, நல்லவேள கிரடிட் கார்டு குடுக்காமத் தப்பிச்சோம்னு நினைச்சதுன்னு எல்லாம் ஞாபகம் வருது ஆனா ஏன் செல் வச்சிருக்கேன்கிறதுக்கு மட்டும் காரணமே கண்டுபிடிக்க முடியல. சரி விட்டுத் தள்ளு. தூங்கப்போவோம். காலையில சீக்கிரமா எந்திருக்கணும். இரு இரு. என்ன சொன்ன. கொஞ்சம் பின்னால வா. காலையில சீக்கிரமா எந்திருக்கணும். திரும்பிச் சொல்லு. தலைநகரம் வடிவேலு மாதிரி மூணு தடவ சொல்லு. சீக்கிரமா எந்திருக்கணும் சீக்கிரமா எந்திருக்கணும் சீக்கிரமா எந்திருக்கணும். கண்டுபிடிச்சிட்டேன்யா. கண்டுபிடிச்சிட்டேன். நான் ஏன் செல் வச்சிருக்கேன்னா..... அலாரம் வைக்கிறதுக்கு.

Thursday, March 08, 2007

எங்கே நீ போனாலும் - 2

அவள் அலுவலகத்திற்கு மொபைல் போனுடன் வந்தது அவனுக்குப் பெரும் ஆச்சரியமாகப் போனது. தான் என்னவொரு சின்ன விசயமாய் இருந்தாலும் அவளிடம் சொல்லிவிட்டுதான் செய்கிறோம். ஆனால் இவள் நேற்று சாயங்காலம் வரை நம்முடன் தானே இருந்தாள் அப்போது கூட மொபைல் போன் வாங்குவது பற்றி ஏதும் சொல்லவில்லையே என மிகவும் வருத்தமடைந்தான். மொபைல் போன் பற்றி அவளிடம் எதுவும் கேட்கக்கூடாது என எண்ணிக்கொண்டான். அவளும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

பிறகுதான் பிரச்சனை தொடங்கியது. நித்யாவுக்கு நிறைய அழைப்புகள் அவளது மொபைலில் வரத்தொடங்கின. யார் என்றே தெரியவில்லை. நிறை நேரம் பேசிக்கொண்டே இருந்தாள். அதாவது பரவாயில்லை அவ்வப்போது வெட்கம் வேறுபட்டுக்கொண்டாள். முதன்முதலாக அவள் வெட்கப்பட்டு அப்போதுதான் பார்த்தான். கழுத்துக்கும் காதுக்கும் இடையில் போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தாள். அவர்களுக்குள் இடைவெளி விழத் தொடங்கியது. அவள் எதாவது கேட்டால் மட்டுமே பதில் சொன்னான். அவளும் அதிகம் பேசவில்லை. அவளுக்கு போனில் பேசவே நேரம் சரியாக இருந்தது. இப்போதெல்லாம் அவள் பேருந்தில் வருவதில்லை. என்ன செய்கிறாள் என்பது ஒரே மர்மமாக இருந்தது.சில மாதங்கள் இப்படியே கழிந்தன. அன்புவுக்கு இப்போதெல்லாம் ஒழுங்காகத் தூக்கம் வருவதில்லை. படுத்திருக்கும் போது அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? இன்னும் போனில் பேசிக்கொண்டுதான் இருப்பாளோ? என்றெல்லாம் எண்ணினால் தூக்கம் எப்படி வரும்?

ஒருநாள் காலையில் சீக்கிரம் அலுவலகத்திற்கு வந்துவிட்டான். அவள் அவனுக்கு முன்பே வந்தமர்ந்திருந்தாள். இவன் ஏதும் சொல்லாமல் மெளனமாய் தனது கணினியை இயக்கினான். "அன்பு, உன்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்றாள். "என்ன?" என்பதுபோல் பார்த்தான். "நான் இன்னிக்கு வேலையை விட்டுடப்போறேன்". அதிர்ச்சியடைந்தான். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. "ஏன் என்ன விசயம்?" என்றான். "வேற கம்பெனியில் கிடைச்சிருக்கு. டைடல் பார்க்கில் இருக்கு" என்றாள். "அப்போ இனிமே வரமாட்டியா?". "அடுத்த வாரம் அங்க சேரணும். இங்க இன்னிக்கு பேப்பர் போட்டால் ரிலீவிங்ஆர்டர் நாளைகழித்துதான் கிடைக்கும். சோ நாளைக்கு மட்டும் தான் வருவேன்". அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவள் தொடர்ந்தாள். "அன்பு, உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும். மதியம் லஞ்ச் அவர்ல ஸ்பென்சர் போலாமா?". "சரி" என்றான். அவள் அதற்கப்புறம் அவனருகில் இருக்கவேயில்லை. ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டு மேலதிகாரிகளிடம் பேசுவதிலேயே அவளது நேரம் கழிந்தது. மதியமும் வந்தது.

இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் ஸ்பென்சர்பிளாசாவை நோக்கி நடக்கத்தொடங்கினார்கள். "ஏன் எங்கிட்ட சரியா மாட்டேங்கிற?" என்றாள். இவன் பதில் சொல்லாமல் நடந்து வந்தான். "நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணினேன் தெரியுமா?" . இதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. "உண்மையைச் சொல். நீயும் தானே?" எனக் கேட்டாள். அவனுக்குக் கண்களில் கண்ணீர் நிறைந்தது. இவன் மெளனமாகத் தலையாட்டினான். "அப்போ இவ்வளவு நாள் ஏன் சும்மா இருந்த?" என கேள்விகேட்டாள். "ஏனோ சொல்லனும்னு தோணலை" என்றான். "ஆனால் நான் சொல்லனும்னு தான் நினைத்தேன். அதற்குள்.." அவள் விம்மத் தொடங்கினாள். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவளே தொடர்ந்தாள். "அதற்குள் கார்த்திக் சென்னைக்கு வந்துவிட்டான். கார்த்திக் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவன். கல்லூரியில் படிக்கும்போது இருவரும் காதலிக்கத் தொடங்கினோம். வேலை தேடிவரும் போது அவன் பெங்களூருக்கும், நான் சென்னைக்கும் வந்துவிட்டோம். கார்த்திக்கைப் பிரிந்து தனியாக இருக்கும்போது தான் உனது அறிமுகம். நான் என்ன சொன்னாலும் நீ சரி எனக் கேட்பதுவும், உன்னுடைய கேரக்டர், டீசன்சி எல்லாம் எனக்குப் பிடித்துப் போனது. ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் உன்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். உன்னிடம் காதலிப்பதைக் கூறலாமா வேண்டாமா அது கார்த்திக்கிற்குச் செய்யும் துரோகமா என்றெல்லாம் என் மனம் குழம்பியபோதுதான் கார்த்திக் அவனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகவும் இரண்டு நாட்களில் இங்கு வருவதாகவும் சொன்னான். அவன் வாங்கிக் கொடுத்ததுதான் இந்த மொபைல் போன். இப்போ அவன் ரெபரென்சில் தான் அவன் கம்பெனியில் வேலையில் சேரப்போறேன். அதற்குப் பிறகு நீ என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. எனக்குத் தெரியும் நான் மொபைல் போன் வாங்கிவிட்டு உன்னிடம் சொல்லாததும், எப்போ பார்த்தாலும் கார்த்திக்கிடம் மொபைல் போனில் பேசிக்கொண்டேயிருப்பதும்தான் நீ என்னிடம் பேசாமலிருப்பதற்குக் காரணம். உன்னை நான் அடிக்கடி நீ என் பிரண்ட் இல்லை என்று சொன்னதன் காரணம் நான் உன்னை ஜஸ்ட் பிரண்டாக மட்டும் நினைக்கவில்லை. ரொம்ப அன்னியோன்மமானவர்களுக்குள் செய்து கொள்ளும் உதவிக்கு தேங்ஸ் எதற்கு? அதான் நான் அடிக்கடி அவ்வாறு சொல்வேன்". அவனால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை.

மறுநாள் நித்யா ஒரு வாலிபனுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தாள். அவள் ராஜினாமா செய்துவிட்டதால் உள்ளே வர அனுமதியில்லை. வெளியில் இருந்து கைஅசைத்துக் கூப்பிட்டாள். இவன் வெளியே சென்றதும் "கார்த்திக், இது என் பிரண்ட் அன்பு.". "ஹாய்". "ஹலோ". அறிமுகம் முடிந்தது. "அன்பு, ரிலீவிங் லெட்டர் வாங்கியாச்சு. கிளம்பியாச்சு. என் மொபைல் நம்பர் குறிச்சுக்கோ.". "பிரண்ட்னு சொல்ற. உன் மொபைல் நம்பர் அவர்ட்ட இல்லயா?" இது கார்த்திக். அன்பு பதில் சொல்லமுடியாமல் முழித்தான். "இல்ல. இவன் இப்போ தான் மொபைல் வாங்கியிருக்கான்" அவள் சமாளித்தாள். "சரி. கண்டிப்பா கால் பண்ணு. வரேன்". இதற்குள் லிப்ட் வந்துவிட்டது. உள்ளே போகுமுன் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். கலங்கிய கண்களுடன் அவள் முகம் தெரிய லிப்ட் மூடியது.

பிறகு அன்பு மொபைல் நம்பர் மாற்றிவிட்டான். ஏனோ பிறகு அவளைத் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென்று தோன்றவில்லை. என்னத்தப் பேச? பிறகு எப்படியோ மின்னஞ்சல் முகவரியை ஞாபகம் வைத்து இப்போது பத்திரிக்கை அனுப்பி இருக்கிறாள். மீண்டும் ஒருமுறை பத்திரிக்கையைப் படித்துப் பார்த்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஐஆர்சிடிசி வெப்சைட்டில் கோயமுத்தூருக்கு முன்பதிவு செய்யத் தயாரானான்.

(முடிந்தது)

எங்கே நீ போனாலும் - 1


நன்றி: இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம், தேன்கூடு மற்றும் தமிழ்ப்பதிவுகள்

Tuesday, March 06, 2007

எங்கே நீ போனாலும் - 1

காலையில் மின்னஞ்சலைப் பார்த்ததும் அன்புவிற்கு ஏதோபோல் ஆகிவிட்டது. மீண்டும் பார்த்தான். நித்யா வெட்ஸ் கார்த்திக். அலுவலகத்திற்கு சீக்கிரமே வந்துவிட்டதால் வேறு யாரும் இல்லை. எல்லோரும் வருவதற்கு இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும். கண்களில் அவனை அறியாமல் நீர் துளிர்த்தது. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தவையெல்லாம் அவன் மனதில் தோன்றியது.

"எக்ஸ்கியூஸ் மி. உங்க மொபைல் நம்பர் தாரீங்களா?" இது தான் நித்யா அவனிடம் பேசிய முதல் வாக்கியம். "சாரி. என்கிட்ட செல் இல்லங்க. என் பிரண்ட் நம்பர் தான் இருக்கு. வேணும்னா குறிச்சுக்கோங்க" இது அவன். "இட்ஸ் ஓகே. என்கிட்டயும் மொபைல் போன் கிடையாது. வெளியிலிருந்துதான் பேசணும். சும்மா இண்டர்வியு ஸ்டேடஸ் கேட்கலாமேன்னுதான்". கொடுத்தான். குறித்துக் கொண்டாள். அவளை முதன்முதலில் சந்தித்தது ஒரு அலுவலகத்திற்கு நேர்காணலுக்காகச் சென்ற போதுதான். வந்திருந்தது இருவர் மட்டுமே. முதலில் அவளுக்கு நேர்காணல் முடிந்து அன்பு அவனது அழைப்புக்காக காத்திருந்த போது நடந்த உரையாடல் தான் மேலே கண்டது.

நம்பர் வாங்கிச் சென்றவள் ஏனோ தொடர்பு கொள்ளவே இல்லை. மறந்திருப்பாள் என எண்ணினான். இரண்டு நாட்களில் அந்த அலுவலகத்தில் வேலையில் அடுத்த ஒரு வாரத்தில் சேரச் சொல்லிக் கடிதம் வந்துவிட்டது. இவனும் அங்கே சென்ற போது அவனுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தாள் நித்யா. பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். "போன் பண்ணவேயில்லை?" என்றான். "ஆக்சுவலா நான் ஊருக்குப் போய் விட்டேன். நேற்று தான் வந்தேன். அதனால தான். என் சொந்த ஊர் கோயமுத்தூர். உங்களுக்கு?" என்றாள். "மதுரை" என்று பதிலளித்தான். இறைவனின் விருப்பத்தால் இருவரும் ஒரே குழுவில் பணிபுரிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இருவருக்கும் அடுத்தத்த இருக்கைகள்.

நிறையப் பேசினார்கள். நண்பர்கள், திரைப்படம், சி, யுனிக்ஸ் இப்படி. அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் அவளுக்கு?. தெரியவில்லை. அவளது பேச்சை வைத்து எதுவும் கணிக்க முடியாதவனாகவே இருந்தான். அவளிடம் அவனுக்கு பிடிக்காதது இரண்டு விசயங்கள் தான். ஒன்று அடிக்கடி "நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லை" என்பாள். முதல் முறையாக அவள் அப்படிச் சொன்ன போது அவன் மிகவும் சங்கடப்பட்டான். ஒருமுறை "என்ன பிரண்டுக்காக இது கூட செய்யமாட்டியா?" யோசிக்காமல், சிரிக்காமல் பதில் சொன்னாள் "நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லை". மற்றது "என்கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதே" என்பாள். "உனக்காக கஷ்டப்பட்டு நெட்டில் தேடி பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டுவந்திருக்கேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டியா?". "என்கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதே" என்று டக்கென்று கூறினாள். மற்ற சமயங்களில் நன்றாகத்தான் பேசினாள். அதற்காக சும்மா இருந்தான்.

அவன் அறையில் செய்யும் சாப்பாட்டையும், அவள் விடுதியில் இருந்து கொண்டு வரும் சாப்பாட்டையும் மதியம் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள். சில சமயங்களில் உணவை மாற்றியும் சாப்பிட்டார்கள். இவன் ஊருக்குச் சென்று திரும்பும்போது வீட்டிலிருந்து பலகாரங்களை இவளுக்காகத் தனியாக எடுத்துவந்தான். அவளும் அப்படியே. தீபாவளிக்குத் தன் அம்மாவிற்குப் புடவை எடுக்கவேண்டும் என்று கூறி அவளை ஆர்.எம்.கே.விக்கு அழைத்துச் சென்றான். அவளும் ஒரு நல்ல புடவையாக தேர்வு செய்தாள். பிறகு திநகர் பேருந்து நிலையம் அருகே சரஸ்பதி வாட்ச் சென்டரில் தன் தங்கைக்கு ஒரு கடிகாரம் தேர்வு செய்யச் சொன்னான். வீட்டில் கொடுக்கும்போது "இது என் கூட வேலை பார்க்கிற பொண்ணு செலக்ட் பண்ணினது. பேரு நித்யா. ஊரு கோயமுத்தூரு" என்று காதில் போட்டுவைத்தான். அவன் அம்மாவிற்கு சேலை மிகவும் பிடித்துவிட்டது. தங்கைக்கு வாட்சை மிகவும் பிடித்துவிட்டது மேலும் அண்ணனையும், அண்ணணுடன் வேலை பார்ப்பவர்களையும்.

ஒரு மழைநாளில் இவன் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது குடையில்லாததால் ஒதுங்கி நிற்க எண்ணினான். அவள் உடனே "ஏன் நிற்கிறே? வா என் குடையிலேயே போய்விடலாம்" என்று அழைத்தாள். சிறிய குடை. பெரிய மழை. இருவரும் நனையாமல் இருக்கவேண்டும். அவள் யோசிக்காமல் அவனை உரசியவாறே வந்தாள். அரைமணி நேரம் பேருந்து நிறுத்ததில் நின்றார்கள். ஏற இயலவில்லை. உடனே "ஆட்டோவில் போவோம்" என்று பதிலுக்குக் காத்திராமல் ஆட்டோவை அழைத்தாள். இருவரும் ஒரே ஆட்டோவில் சென்றார்கள். அவளை கோடம்பாக்கத்தில் அவளது விடுதியில் இறக்கிவிட்டு விட்டு தனது அறை இருக்கும் சாலிகிராமம் சென்றான். அன்று இரவு அவனுக்குத் தூக்கமே வரவில்லை. சென்னை முழுவதும் குடைகளால் மூடப்பட்டது போல் கனவு கண்டான். இப்படி எல்லாம் அருமையாகப் போய்க்கொண்டிருந்தது அவள் மொபைல் போன் வாங்கும் வரை.

(அடுத்த பதிவில் முடியும்)

எனது முதல் கதை முயற்சி. தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். :)

நன்றி: இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம், தேன்கூடு மற்றும் தமிழ்ப்பதிவுகள்