Monday, August 13, 2007

இராமேஸ்வரம்-மானாமதுரை அகலரயில்பாதை துவக்கவிழா! மக்கள் உற்சாகம்! - வீடியோ மற்றும் படங்கள்


பணிகள் முடிவடைந்தும் நான்கு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இராமேஸ்வரம்-மானாமதுரை அகலரயில் பாதை அர்ப்பணிப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக இராமநாதபுரத்தில் ஒரு வாரமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இரயிலை வரவேற்கத் தயாரானார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் இராமநாதபுரம் இரயில் நிலையம் முழுவதும் ஒரே கூட்டம். மக்கள் மாலை 4 மணி முதல் இரயிலைப் பார்க்க வந்து குவிந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்ததால் சில இளசுகள் பெண்கள் இருக்குமிடத்திற்கு சென்று "இரயில் வந்துருச்சு.. இரயில் வந்துருச்சு.. " என்று கூவி விட்டு எஸ்கேப் ஆவதும், பெண்கள் ஓடிச் சென்று பார்த்துவிட்டு அசடு வழிந்து திரும்பிக் கொண்டுமிருந்தனர்.

பின்னர் இரயில் இராமேஸ்வரத்திலிருந்து மாலை 5:00 மணிக்குப் புறப்பட்டு சரியாக 6:15 மணியளவில் இராமநாதபுரம் வந்தடைந்தது. மக்களின் கொண்டாட்டத்துக்கு அளவேயில்லை. இதுவரை இரயிலையே பார்க்காதவர்கள் போல ஒரே அமர்க்களம். கட்சிக்காரர்கள் யாரும் இல்லாததால் தொல்லையில்லாமல் இருந்தது. எல்லோரும் மதுரைக்கு சோனியாவையும், கருணாநிதியையும் பார்க்க சென்று விட்டனர். இல்லையென்றால் வாழ்க கோசமும், தள்ளு முள்ளும் இருந்திருக்கும்.

ஏற்கனவே ஐந்து முறை ஒத்திப் போடப்பட்டு, ஆறாவது முறையாகத் திட்டமிடப்பட்டு முடிந்திருக்கிறது. இப்போதைக்கு சேது எக்ஸ்பிரஸ் மட்டும் மதுரை வழியாக சென்னைக்குத் தற்காலிகமாகச் செல்கிறது. திருச்சி-காரைக்குடி-மானாமதுரை அகலப்பாதை பணிகள் முடிந்ததும் வழக்கமான வழியில் செல்லும். மேலும் மதுரைக்கு இரண்டு பாசஞ்சர் இரயில்களும் விடப்பட்டுள்ளன. கருணாநிதி, சோனியா, லல்லு பிரசாத் போன்றோர் மதுரையிலிருந்து இரயிலைத் துவக்கி வைத்தார்கள்.

இந்த இரயில் துவக்கவிழாவிற்குத் தலைவர்களை அழைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம் இரயில்வே அதிகாரிகளுக்கு. முதலில் ஏப்ரல் 1ல் (சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்)துவக்கவிழா இருக்கும் என இணை அமைச்சர் வேலு தெரிவித்தார். இப்போது ஆகஸ்ட் ஆகிவிட்டது.

வதந்திகளுக்கும் பஞ்சம் இல்லை. அப்துல் கலாம் வருகிறார் என்றார்கள். சட்டமன்றப் பொன்விழாவில அவர் கலந்து கொள்ளாததால், கருணாநிதி அப்துல் கலாம் வந்தால் தான் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னதாகவும், இது தெரிந்து கலாம் விழாவைத் தவிர்த்து விட்டதாகவும், பின் சோனியா ஒப்புதல் பெற்று இராமேஸ்வரத்தில் ஏற்பாடுகளைச் செய்து விட்டு, பின்னர் பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும், 'இராமேஸ்வரம் சென்டிமென்ட்' - வந்தால் பதவி போய்விடுமாம் - காரணமாக மதுரைக்கு விழா மாற்றப்பட்டதாகவும் சொன்னார்கள். நல்லவேளை இவர்கள் யாரும் இராமேஸ்வரம் வரவில்லை. நகரம் தப்பித்தது.

134கிமீ தொலைவுள்ள ஒரு அகலப்பாதை திறப்புவிழாவுக்கு இவ்வளவு தடபுடல் தேவையா? இராமேஸ்வரம் வராமல் மதுரையிலிருந்து இரயிலைத் துவக்குவதற்கு, டெல்லியிலிருந்தே அதைச் செய்திருக்கலாம். எது எப்படியோ இரயில் வந்தாச்சு.

நம்ம ஊர் மக்கள் எத்தனையோ பேர் துவக்கவிழாவைப் பார்க்கமுடியாமல் போயிருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம். அவர்களுக்காக நான் எடுத்த வீடியோவும், சில படங்களும் கீழே. பார்த்து மகிழுங்கள்.


இராமேஸ்வரத்திலுருந்து இராமநாதபுரம் வரும் இரயிலை உற்சாகக் குரலெழுப்பி வரவேற்கும் மக்கள்இரயில் இராமநாதபுரத்திலுருந்து மதுரை கிளம்புகிறதுபுதிதாகக் கட்டப்பட்ட இராமநாதபுரம் இரயில் நிலையம்


இரயிலை வரவேற்கக் கூடியிருந்த மக்கள் கூட்டம்

8 comments:

முகவை மைந்தன் said...

மிக்க நன்றி,, பொன்வண்டு. தொடர்வண்டி நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் அமைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

ஊர் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவாய்த் தரும் ஆர்வம் வியக்கச் செய்கிறது.

பொன்வண்டு said...

நன்றி முகவை மைந்தன் ..!!

வவ்வால் said...

புகைப்படங்களும் , பதிவும் அருமையாக உள்ளது!

PRINCENRSAMA said...

நம்ம ஊரு நிகழ்வுகளை பார்க்கமுடியாதவற்றைப் பார்க்கச் செய்ததற்கு நன்றி!

நான் காரைக்குடிங்கோ!

பொன்வண்டு said...

நன்றி வவ்வால் !

பொன்வண்டு said...

மிக்க நன்றி பிரின்ஸ்.

// நான் காரைக்குடிங்கோ! //

தெரியும் பிரின்ஸ் !

எப்படிங்கிறீங்களா? நீங்க ஒருத்தன் தமிழில் கோவை குழுமத்தில் எழுதக்கூடாதுன்னு சொன்னதாக ஒரு பதிவில் போட்டிருந்தீங்களே .. அப்ப நான் கண்டனம் தெரிவித்து ஆர்குட்டில் ஒரு பின்னூட்டம் (Scrap??) போட்டிருந்தேன். அதை வைத்து நீங்கள் என் Profileஐ பார்த்திருந்திருக்கிறீர்கள். நானும் உங்கள் Profileஐ பார்த்தேன். அப்பத்தான். :)

Balaji said...

இத்தனை சாதாரண விசயத்திற்கேகூட மக்கள் பாராட்டுகிற அளவுக்கு அவர்களுடைய எதிர்பார்ப்புகள் குறைவாக இருப்பது வருத்ததிற்குரியது. பாவம் நம் மக்கள். மற்றபடி படங்களுக்கு நன்றி!

பொன்வண்டு said...

மிக்க நன்றி பாலாஜி !