Thursday, August 02, 2007

தமிழக அரசுப் பேருந்துகளில் பட்டையைக் கிளப்பும் 'போக்கிரி' !
கடந்த வாரம் ஊருக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் ஐந்து முறை பேருந்தில் பயணம் செய்ததில் மூன்று முறை 'போக்கிரி' படத்தைப் பேருந்துகளில் பார்க்க நேர்ந்தது.முதலில் சேலத்திலிருந்து மதுரை வரும் போதும், பின்னர் திரும்பும் போது இராமநாதபுரத்திலிருந்து மதுரை வரும் போதும், பின் மதுரை-ஓசூர் பேருந்திலும் பார்க்க வேண்டிய நிலை. இது போதாதென்று உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் ஞாயிறன்று மதியம் சிறப்புப் படமாக ஒளிபரப்பி மகிழ்வித்தார்கள்.

மதுரை-ஓசூர் பேருந்தில் மக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க கொஞ்ச நேரத்தில் படம் நிறுத்தப்பட்டது. ஏனென்றால் எல்லோரும் சொன்ன காரணம் "எத்தனை தடவைங்க இந்தப் படத்தைப் பார்ப்பது?. எல்லா பஸ்ஸிலும் இதைத் தான் போடுறாங்க".

ம். சரி. ஏதோ நமக்கு லாபம். நான் இதுவரை போக்கிரி படம் பார்க்கவில்லை. நான் கடைசியாக திரையரங்கில் பார்த்த விஜய் படம் 'காதலுக்கு மரியாதை'. மத்ததெல்லாம் பைசா செலவில்லாமல் உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் அல்லது இப்படி பேருந்துகளில் பார்த்தது தான்.

படம் பார்க்கும் போது 'லொள்ளு சபாவின் பேக்கிரி' வேறு ஞாபகத்திற்கு வந்து சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பை வரவழைத்தது. தலைப்பிலிருந்து தொடங்குது இவர்கள் அட்டகாசம். 'பேக்கிரி - 100% ஒன்னுமில்ல'. படத்தை இவர்கள் நக்கலடிக்கவில்லை. ஐயோ பாவம் விஜய்யைத்தான்.

லொள்ளு சபாவின் பேக்கிரியில் சில காட்சிகள்.

ஜீவா (விஜய்) : ஏண்ணா! அந்தக் காலம் நம்பியார், அசோகன் படத்தில தான் பொம்பளைகளை வச்சு வில்லத்தனம் பண்ணுவாங்க. நீங்க என்னடானா இப்பவும் அதே மாதிரி பண்றீங்க?
சாமிநாதன் (குரு) : நீ கூடத்தான் ரொம்ப வருசமா ஒரே மாதிரி நடிச்சுக்கிட்டிருக்க.. நாங்க எதாவது சொல்றமா? வந்தா வந்த வேலைய மட்டும் பாரு!


ஜீவா அலிபாயைப் பார்க்க நடந்து வருகிறார்.
சேச்சு (அலிபாய்) : என்னடா, தமிழ், தமிழ்ன்னு ஓவரா பில்டப் குடுத்தீங்க .. சப்பையா நடந்து வர்றான்.
ஜீவா (விஜய்) : அண்ணா! பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லாததால அப்புடி இருக்குங்கண்ணா! இப்போப் பாருங்கண்ணா .. பேக் கிரவுண்ட் மியூசிக்கோட எவ்வளவு பில்டப்பா வர்றேன்னு ..
(பேக் கிரவுண்ட் மியூசிக்குடன் ஸ்டைல் பண்ணிக் கொண்டே வருகிறார் ஜீவா)
சேச்சு (அலிபாய்) : புரிஞ்சிபோச்சு. பேக்கிரவுண்ட் மியூசிக், எபெக்ட் எல்லாம் இருந்தாத் தான் நீ தமிழு.. இல்லன்னா டுமிலு.


ஜீவாவை அடிக்க வில்லன்கள் வருகிறார்கள்.
ஜீவா (விஜய்) : நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்
வில்லன் 1 : டேய்! உன் பேச்சை நீயே கேக்கலன்னா அடுத்தவன் எப்படிடா கேப்பான்?
வில்லன் 2 : அவ்வளவு கேவலமா பஞ்ச் டயலாக் பேசுறாண்ணே!


அப்புறம் விஜய் சண்டை போடும் போதும், பாடல் காட்சிகளிலும் வரும் போது, திரையரங்கில் ஆடியன்ஸ் தூங்குவது போலக் காட்டுவார்கள். விஜய் 'ஆடுங்கடா என்ன சுத்தி' பாட்டு பாடும் போது திரையரங்கில் எல்லோரும் எழுந்து வெளியே போவார்கள்.

ஜீவா : அண்ணா ! அண்ணா ! எங்கண்ணா போறீங்க?
பார்வையாளர் : இப்பத்தான் சண்டையை முடிச்ச.. அடுத்து எப்புடியும் பாட்டுத் தான். அதுக்குள்ள போய் ஒரு தம் போட்டுட்டு வந்துடுறோம்.
ஜீவா : அண்ணா ! அண்ணா ! இருங்கண்ணா ..
பார்வையாளர் : இருக்க முடியலன்னுதாண்டா போறோம்.. புரிஞ்சிக்கடா ..
ஜீவா : அண்ணா ! அண்ணா ! ப்ளீஸ்ண்ணா ..
பார்வையாளர் : என்னப்பா இந்தப் பையன் இந்த மாதிரி தொல்லை பண்றான். எல்லாரும் உக்காருங்கப்பா !
(எல்லோரும் தூங்குகிறார்கள்)

ஜீவா ஆடிப்பாடுகிறார்.

பார்வையாளர் : நிறுத்து.. நிறுத்து.. போன படத்துலயும் இந்த மாதிரி தான் பாட்டு பாடுன.. இந்த படத்துலயும் அதே பாட்டு தான் பாடுற.. ஏன் எப்பவுமே ஒரே மாதிரி பண்ற?
ஜீவா : எந்த பாட்டுன்னா?
பார்வையாளர் : எந்தப் பாட்டா? (சிவகாசியின் 'நீ எந்த ஊரு நான் எந்த ஊரு' பாடலைப் பாடுகிறார்)
ஜீவா : மெட்டு ஒன்னுதாண்ணா.. ஆனா பாட்டு வரியெல்லாம் வேற மாதிரி இருக்கில்ல?
பார்வையாளர் : டேய்! இதுக்குத் தாண்டா அப்பவே எந்திருச்சி வெளிய போறோம்னு சொன்னோம். நீ தாண்டா வலுக்கட்டாயமா எங்கள உக்காரச் சொன்ன..
ஜீவா : நீங்க போறதுன்னா போங்கண்ணா! நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன். ஆடி முடிச்சிட்டுத் தான் விடுவேன்.
பார்வையாளர் : நீ ஆடுறதுன்னா ஆடு. எல்லாரும் தூங்குறது தூங்குறதுதான்.

இப்படி ஒரே ரகளை தான் பேக்கிரியில்.

அடடா! என்னமோ சொல்ல வந்து என்னமோ ஆகிருச்சே! உள்ளூர்த் தொலைக்காட்சியை விடுங்கள். பேருந்துகள் அதுவும் அரசுப் பேருந்துகளில் திருட்டு விசிடியில் என்ன தைரியத்தில் ஒரு புதுப் படத்தை ஒளிபரப்புகின்றனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை கலைஞர் டிவிக்கு 'போக்கிரி' படத்தின் ரைட்ஸ் எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ? எது எப்படியோ அடுத்து சிவாஜி படத்தையும் இப்படி பேருந்துகளில் ஒளிபரப்பினால் ஒரு 50 ரூபாய் லாபம்.

லொள்ளு சபா பேக்கிரி YouTubeலும் இருக்கு. கொஞ்சம் சைடுல பாருங்கள்.

7 comments:

TBCD-2 said...

அதென்னமொ. நான் போகும் போதுல்லாம், படத்த போடவே மாட்டனுங்க...
அந்த பேக்கரி நிகழ்ச்சிக்கு, விஜய் குருப் பல போஸ்ல பயமுறுத்தி விஜய் டீ.வி மன்னிப்பு கேக்க வச்சாங்க...(விஜய காந்தன்னா அப்படி பன்னிருக்க மாட்டார் ஏன்னா அவர்க்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு..)
ஆனா, புன்னியத்தில, ஒரு தடவ இல்ல, 100 தடவ பாக்குறான்ஙக..அப்படி என்ன தான்யா கின்டலடிச்சாங்க.. அப்படின்னு..இத தான் சொல்லுறது..வேலியில போற ஒனான..

பொன்வண்டு said...

என்னது TBCD-2வா?

அப்ப நீங்க போலியா?

:)))

சும்மா விளையாட்டுக்குத்தாங்க .. கோவிச்சுக்காதீங்க :)

TBCD said...

அதெல்லாம் இல்லை..என் பிளாக்கில் ரென்டு பேருமே இருக்கும்...
ஒரு வசதிக்காக அப்படி வச்சிருக்கேன்..:))

K.R.Athiyaman ;13230870032840655763 said...

போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்
பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.

இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.

ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..

http://nellikkani.blogspot.com/

பொன்வண்டு said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதியமான்.

உங்கள் பதிவினை புக் மார்க் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். :)

வெங்கட்ராமன் said...

தல நான் போக்கிரி படத்த ஒரு தடவை கூட பார்க்கல.

ஆனா பேக்கரிய டவுன் லோடு பண்ணி குறைந்த பச்சம் 10 தடவயாவது பார்த்திருப்பேன்.

செம ரகளையா இருக்கும். . . .

ஞாபகப் படுத்தியதற்கு நன்றி.

பொன்வண்டு said...

வாங்க வெங்கட்ராமன் !

நான் கூட லொள்ளு சபா பேக்கிரியை என் மொபைலில் போட்டு வைத்திருக்கிறேன். எங்க ரூமில் விஜய் வெறியன் ஒருவன் இருக்கான். அவனுக்குக் கடுப்பேத்தனும்னா அதைப் போட்டுப் பார்ப்போம். :))