Wednesday, November 21, 2007

ஓசூர் - ராயக்கோட்டை - தர்மபுரி

பெங்களூரில் இருந்து ஊருக்குச் செல்லும் போது விழாக்காலங்கள் தவிர பிற நாட்களில் திட்டமிட்டெல்லாம் பயணம் செய்வதில்லை. வெள்ளிக்கிழமை மதியம் இங்கிருந்து பெங்களூர் - சேலம் - மதுரை - இராமநாதபுரம் என்று தமிழக அரசுப்பேருந்துகளில் மாறி மாறிப் பயணம் செய்வதுதான் வழக்கம். திரும்பி வருவதும் அவ்வாறே. முதுகு மற்றும் அதன் கீழிருக்கும் பகுதிகள் என்னவாகும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை :) . மாதம் ஒருமுறை இப்படித்தான் பயணம்.

அன்றும் அப்படித்தான் சில்க் போர்டு அருகில் சேலம் பேருந்துக்காக ரொம்ப நேரம் நின்றும் வந்தபாடில்லை. எனவே ஓசூர் சென்று அங்கிருந்து சேலம் சென்று விடலாம் என்றெண்ணி ஓசூர் சென்றேன். அங்கிருந்தும் சேலத்துக்குப் பேருந்து இல்லை. தர்மபுரி வரை செல்லும் பேருந்துகள் மட்டுமே இருந்தன. ஆனால் அவை செல்லும் வழி வழக்கமாக நான் செல்லும் வழி கிடையாது.

வழக்கமாக பெங்களூரிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழி இது தான். பெங்களூர் - ஓசூர் - கிருஷ்ணகிரி - தர்மபுரி - சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் - மதுரை - பரமக்குடி - இராமநாதபுரம். ஸ்ஸ்ஸ்ஸப்பா .. இப்பவே கண்ணைக் கட்டுதே :) . மொத்த பயண நேரம் 14மணி.

ஆனால் நான் ஏறிய பேருந்து கிருஷ்ணகிரி வழியாகச் செல்லாமல் இராயக்கோட்டை, பாலக்கோடு ஆகிய ஊர்கள் வழியே தர்மபுரி செல்வது. முதலில் யோசித்தாலும் சரி புதியதொரு வழியில் சென்றுதான் பார்ப்போமே என்று ஏறிவிட்டேன். வழக்கமாகச் செல்லும் வழியில் ஓசூர் தாண்டியதும் இருபது நிமிடங்கள் டீ குடிக்க நிறுத்தி விடுவார்கள். அதெல்லாம் நமக்குத்தான் தேவையில்லையே ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் :).

இந்த இரண்டு மணி நேரப்பயணத்தில் நான் பார்த்தவை நிறைய. முதலில் சமமான சாலையில் சென்றாலும் ஓசூர் தாண்டியதும் அழகாக மலையில் ஏற்ற இறக்கங்களில் பேருந்து சென்றது. மலையென்றால் கொடைக்கானல் அளவெல்லாம் கிடையாது. சும்மா சின்னகுன்றுகள் தான். இருபுறமும் பசுமையாக செடிகளும் மரங்களும் இருக்க நடுவில் ஏற்ற இறக்கமான சாலையில் பேருந்து விரைந்து சென்றது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

தமிழகத்தில் என்றுமே மொழிப்பாகுபாடு பார்ப்பது கிடையாது என்பதற்கு இந்த வழியில் இருக்கும் கிராமங்களே சாட்சி. சாலையோர வழிகாட்டிப் பலகைகளில் பெரும்பாலான கிராமங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழ் மற்றும் தெலுங்கிலும், சில கிராமங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் கன்னடத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. பள்ளிகள், வங்கிகள் அனைத்திலும் தமிழ், தெலுங்கு அல்லது கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

ஓசூர் தமிழ்நாட்டில் இருந்தாலும் அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் தெலுங்குதான் போலும். பேருந்தில் அனைவரும் தெலுங்கில் தான் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல் நகரப் பேருந்துகளிலும் தமிழ், கன்னடம், தெலுங்கில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.

ஒருமணி நேரம் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் ராயக்கோட்டை தாண்டியதும் காணாமல் போனது. தமிழகத்தின் தேசியமரமான கருவேலமரங்கள் கண்ணுக்குத்தெரிய ஆரம்பித்தன. சரி தான் போங்கப்பா எங்க போனாலும் இந்த உபயோகமில்லாத மரம்தானான்னு தூங்க ஆரம்பிச்சிட்டேன்.

No comments: