Wednesday, February 28, 2007
ஜி-யின் காதல் கடிதம்
இந்நிலையில், எங்களுக்கு பருவ இடைத்தேர்வு வந்தது. தேர்வு மதியம் தான். ஆகவே காலையில் தனியாக விடுதியில் பேருக்கு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். ஒருநாள் நண்பகல் 12 மணிக்கு பொழுதுபோகமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். நான் மெஸ்ஸில் சாப்பாடு தயாராகி விட்டதா என்று பார்ப்பதற்காக கீழே சென்று பார்த்து விட்டு திரும்பும் போது 'ஜி'க்கு ஒரு கடிதம் வந்திருப்பதைப் பார்த்தேன். அனுப்புநர் முகவரியில் அவன் ஆள் பெயரும், ஊரும் இருந்தது. உடனே மேலே சென்று "நம்ம ஜி-க்கு அவன் ஆள் லெட்டர் போட்டிருக்கு" என்று கூவிக் கொண்டே சென்று ஜி-யிடம் கடிதத்தைக் கொடுத்தேன். ஜி-யின் காதலில் அக்கறை கொண்ட எங்கள் நண்பர்கள் அனைவரும் மொத்தமாக அவரவர் அறைகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். எதற்கு? அடுத்தவன் காதல் கடிதத்தை ஓசியில் படித்து ஜொள்ளு விடத்தான். ஏற்கனவே பொழுது போகாமல் மொக்கை போட்டுக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அவனைச் சுற்றி நின்று கொண்டு "ஏய் படிடா படிடா" என்று கெஞ்சிக் கொண்டிருந்தோம். கூட்டத்தையும், எங்கள் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்து பயந்து போன 'ஜி', கடிதத்தைப் படிப்பதற்காக உடனே குளியலறைக்குள் ஓடிச் சென்று கதவை மூடிக் கொண்டான். பதிவுலகக் கூற்றுப்படி 'தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டான்'.
காதல் கடிதத்தைப் படிக்க முடியாத ஆத்திரத்தில் ஜியைப் பழிவாங்க முடிவு செய்தோம். விடுதிக் குளியலறையின் மேல் பகுதி திறந்தவெளியாகத்தான் இருக்கும். மொத்தம் இருப்பது நான்கு குளியலறைகள் தான். ஆகவே மற்றவர்கள் குளிப்பதற்காக வெளியில் ஒரு தொட்டி நிறைய தண்ணீர் வைத்து இருப்பார்கள். நாங்கள் அனைவரும் அவரவர் வாளிகளில் தண்ணீரைத் தொட்டியில் இருந்து எடுத்து 'ஜி' ஒளிந்திருந்த குளியலறையின் மேல் பகுதி வழியாக ஊற்றத் தொடங்கினோம். அவன் வெளியே வரமுடியாமல் வெளியிலும் தாழ்ப்பாள் போட்டு கதவை மூடிவிட்டோம். ஜி "டேய் விடுங்கடா, விடுங்கடா" என்று கெஞ்சத் தொடங்கினான். சுமார் கால்மணி நேரம் அபிசேகம் செய்ததும் கதவைத் திறந்து விட்டோம். மழையில் நனைந்த கோழி மாதிரி ஆகியிருந்தான். எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜி-க்கும் தான்.
நாங்கள் வெளியில் வைத்து அவனை மொத்து மொத்தென மொத்தினோம். "ஏண்டா! உனக்கு உன் ஆள் உன்னிடம் பேசவில்லையென்றால் அதை எங்களிடம் சொல்லிப் புலம்பத் தெரியுது. லெட்டர் போட்டா எங்கள்ட்ட காட்டத் தெரியாதா?. எடுடா லெட்டரை" என்றோம். "என்னது லெட்டரா? டேய் அது எங்கனே எனக்குத் தெரியலடா" என்றான். இருபது பேர் சேர்ந்து தண்ணீரை ஊற்றியதில் கடிதம் கந்தலாகி அதுவும் தண்ணீரோடு சேர்ந்து போய்விட்டது. பிறகு சாயங்காலம் ஜி உடனடியாக அவனது காதலியைக் காண ஊருக்குக் கிளம்பினான். நாங்கள் அவனைப் படுத்தியபாட்டுக்குப் பிராயச்சித்தமாக டீ வாங்கிக் கொடுத்து ஊருக்கு வண்டி ஏற்றி விட்டு வந்தோம்.
நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு
Friday, February 23, 2007
கண்களை ஏமாற்றும் 3D ஓவியங்கள்
பிரச்சனையை நூல்பிடித்துச் சொன்ன பதிவர் சிந்தாநதிக்கு ஒரு ஸ்பெசல் 'ஓ'.
வெளிநாட்டில் ஒருவர் 3D முப்பரிமாண ஓவியங்களை சர்வசாதாரணமாக நடைபாதையில் வரைகிறாராம். ஓவியங்களில் நம் கண்ணை மறைக்கும் சில யுக்திகளைக் கையாளுகிறார். மின்னஞ்சலில் எனக்கு வந்த அந்தப் படங்களை கீழே கொடுத்திருக்கிறேன். ஏ.பா.பொ (ஏற்கனவே பார்த்திருந்தால் பொறுத்தருள்க). கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.
பி.கு: சிபி! உங்களாலதான் இந்தப் பதிவுல வரிசைஎண் குடுக்கல. ஏன்னா 'மின்னஞ்சலில் வந்த சிரிப்புச் சித்திரங்கள்' பதிவுல மொத்தமே 12 படங்கள் தான். ஆனா நீங்க 13வது படம் சூப்பர்னு பின்னூட்டம் போட்டதுனால.. நறநறநற :)
நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர்,தமிழ்மணம் மற்றும் தேன்கூடு
Wednesday, February 21, 2007
நகைச்சுவைத் துணுக்கு: அமெரிக்கா vs ரஷ்யா
அப்போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை. என்னவென்றால் செயற்கைக்கோளில் உள்ள சர்க்கியூட்களைக் காகிதத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். ஆனால் விண்வெளியில்தான் ஈர்ப்புவிசை கிடையாதே!. பிறகு எப்படி பேனாவில் இருந்து மை கீழே இறங்கும்? எப்படி காகிதத்தில் எழுதுவது? ஆகவே இதற்கென சிறப்புப் பேனாவை அமைக்க குழு அமைக்கப்பட்டது. சில மாதங்களில் அவர்களும் விண்வெளியிலும் செயல்படும் பேனாவை வடிவமைத்தார்கள். விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க வீரர்களும் அந்தப் பேனாவை உபயோகித்தார்கள். அமெரிக்காவும் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டதாம்.
ரஷ்யாவும் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முடிவு செய்தபோது இந்த விண்வெளியில் எழுதும் பேனாப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பேனாவுக்கென குழு எதுவும் அமைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் கொண்டு சென்றது பென்சில். :)
நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர்,தமிழ்மணம் மற்றும் தேன்கூடு
Tuesday, February 20, 2007
ஏன் வருமானவ(லி)ரி கட்டணும்?
பிப்ரவரி மாதம் என்றாலே வேலை பார்க்கும் அனைவருக்கும் தொல்லை தான். வருமானவரி விலக்கு பெறுவதற்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டுமே.
என்னுடன் வேலை பார்க்கும் அனைவரும் தபால் அலுவலகங்களை நோக்கிப் படையெடுத்தனர் சேமிப்புப் பத்திரங்களை வாங்குவதற்கு. இப்போது தான் வங்கிகள் தரும் பாண்டுகளுக்குத் தான் வரிவிலக்கு இல்லையே. இல்லையென்றால் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் நம்மிடம் "மியூட்சுவல் பண்டு-ல காசைப் போடுங்க" என்று காலைச் சுற்றுவர்.
வருமானவரி விலக்கிற்கான ஆவணங்களைத் தயார் செய்வதற்குள் ஒரே ரகளை தான். அனைவரும் பொதுவாகச் செய்யும் ஏமாற்று வேலை வீட்டு வாடகை ரசீதுகளைத் தாங்களே தயாரிப்பது. 2000 ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு அதுவும் ஐந்து பேர் சேர்ந்து தங்கிக் கொண்டு பத்தாம் தேதி வீட்டுக்காரர் கேட்கும் போதுதான் இது வாடகை வீடு என்றே ஞாபகம் வரும். ஆனால் 5000 ரூபாய்க்கு ஒவ்வொருவரும் ரசீது தயார் செய்வர். ரசீதிலே வீட்டுக்காரர் கையெழுத்து வேண்டுமே? என்ன செய்வது? வீட்டுக்காரரிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. சொத்தை எழுதி வாங்குவது போல் பயப்படுவார். அதனால் என்ன? நாமே ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டால் போச்சு. (ஹி ஹி நாங்களும் அப்படித்தான் செய்தோம்).
வருமானவரி என்பது அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் செலுத்தினால் போதுமா? என்றாவது நமது ஊரிலே கடை மற்றும் பல தொழில் நடத்துபவர்கள் வருமானவரி செலுத்தியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோமா? அதுவும் காய்கறி போன்றவைகளை விற்பனை செய்பவர்கள் எவ்வளவு பெரிய லட்சாதிபதியாக இருந்தாலும் அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் அழுகும் பொருள்களை வைத்து விற்பனை செய்கிறார்களாம். அதனால் வரி கிடையாதாம். என்ன நியாயம்?
அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தனர்? அவர்களுக்கு மட்டும் பைசா சுத்தமாக வருமானத்தைக் கணக்கிட்டு வரி விதிப்பது என்ன நியாயம்?
சரி. கட்டித் தொலைப்போம். எதற்கு இந்த வருமானவரி? செலுத்தும் பணம் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குச் சேர்வதற்குத் தான். ஆனால் அப்படித்தான் நடக்கிறதா? அவை உருப்படியான திட்டங்களுக்குத்தான் போய்ச் சேர்கிறதா? வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்துவதற்கும் (கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு) வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதற்கும் (ரொம்ப முக்கியம்!) தான் பயன்படுகிறது. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே இரயில் செல்வதற்காக சாலையை அடைத்தால் 3-4 கிலோமீட்டருக்கு வண்டிகள் நிற்கும். அங்கு ஒரு மேம்பாலம் கட்ட யாருக்கும் துப்பில்லை.
என்ன புலம்பி என்ன செய்ய? அடுத்த மாதம் சம்பளத்தில் வரியைப் பிடித்துக் கொண்டுதான் கொடுக்கப்போகிறார்கள்.
அரசியல் செல்வாக்குடைய பதிவர்கள் மேம்பாலம் கட்ட ஏதாவது செய்யவும்.
நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு
Thursday, February 08, 2007
மின்னஞ்சலில் வந்த சிரிப்புச் சித்திரங்கள்
நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர் மற்றும் தமிழ்மணம்